மொழியறிஞர்களின் கவனத்திற்கு

அண்ணாகண்ணன்
முகநூலில் நோக்கர் என்ற மொழி ஆய்வுக் குழுவை நான் நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்தக் குழுவில், மொழியைப் பயன்படுத்தும்போது நிகழும் பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்தங்களைப் பரிந்துரைக்கிறோம். சிறப்பான மொழிப் பயன்பாடுகளைப் பாராட்டுகிறோம். அண்மையில் தினகரன் நாளிதழில் வெண்ணை உருண்டை கல் என இருந்த தலைப்பினை வெண்ணெய் உருண்டைக் கல் எனத் திருத்தப் பரிந்துரைத்தேன். அதன் மீது நண்பர்கள் கருத்துரை வழங்கியிருந்தார்கள். வெண்ணெய் உருண்டைக் கல் எனப் பிரித்து எழுதக் கூடாது, வெண்ணெயுருண்டைக்கல் எனச் சேர்த்து எழுத வேண்டும் என்று வலியுறுத்திய அன்பர்களுக்கு எனது பதிலை இங்கே தொகுத்து வழங்குகிறேன்:
நாம் பண்டிதர் கண்ணோட்டத்திலிருந்து, இலக்கணத்தை நிலைநாட்ட நோக்கரை நடத்தவில்லை. அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக, சரியாக எழுத வேண்டும் என்பதற்காகவே நடத்துகிறோம். அவ்வாறு அது இல்லையெனில், எழுதியவரும் அதை ஏற்றுப் பதிப்பித்தவருமே முதல் பொறுப்பாளிகள். இதை அவர்களின் தோல்வியாகவே நான் மதிப்பிடுவேன்.
சரியாகப் பொருள் உணர்த்துவதற்காகவே இலக்கணம். அதை இயன்ற வரை எளிமைப்படுத்தியே எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிடில், இலக்கணமே கடினமானது என மக்கள் கருதுவர். அது தமிழுக்கே கேடாக முடியும்.
யாப்பில் சீர்கள் அமைந்திருப்பதால் எல்லாப் பெரிய சொற்களும் இயல்பாகவே வகையுளிக்கு ஆட்பட்டிருக்கும். எனவே பிரித்துப் பிரித்தே படிப்பார்கள். அது சீரான மூச்சு ஓட்டத்திற்கும் உதவும்.
உரைநடைக்கு என வரும்போது தேவைக்கு ஏற்ப, பிரித்தே எழுத வேண்டும், படிக்க வேண்டும். சேர்த்துப் படிப்பதற்கு மூச்சை அதிகம் இழுக்க வேண்டும். இது, வாசகரை எளிதில் சோர்வடையச் செய்யும். மொழியை அறிவியல் அடிப்படையில் அணுக வேண்டும். எந்திரத்தனமாக இலக்கணத்தைத் திணிக்கக் கூடாது.
அடிப்படையில் இலக்கணம், மிகுந்த நெகிழ்வுத்தன்மை உடையது. இலக்கணத்தின் ஒவ்வொரு விதியும் ஒவ்வொரு தேவைக்காகவே உருவாக்கப்பெற்றவை. எல்லா விதிகளும் எல்லா இடங்களுக்கும் பொருந்தா. தமிழில் உரைநடைக்கு எனத் தனித்த விதிகள் உருவாகவில்லை. செய்யுள் இலக்கணத்தை அடியொற்றியே இது தீர்மானிக்கப் பெறுகிறது. காலந்தோறும் எழும் தேவைகளுக்கு ஏற்ப, இதை இற்றைப்படுத்த வேண்டும்.
புதிய புதிய திசைச்சொற்களை, ஒலிக்குறிப்புகளை, நீண்ட சொற்களை அணுகுவதற்குப் பண்டித நோக்கை விட, பாமர நோக்கு வேண்டும். அவர்கள் கோணத்திலிருந்து, அவர்கள் இடத்திலிருந்து அதைப் பார்க்க வேண்டும், பயன்படுத்த வேண்டும். அவர்கள் அறிந்த இடத்திலிருந்தே, அறிந்த ஒலியிலிருந்தே, புதிய சொற்கள் பிறக்க வேண்டும். இது தொடர் சங்கிலி போன்றது. இந்தத் தொடர்பைத் துண்டித்துப் புதிய இடத்திலிருந்து தொடங்குவோர், தீவாகச் சுருங்கிவிடுவர். மொழியைச் செம்மையுறச் செய்ய விரும்புவோர், மைய நீரோட்டத்திலிருந்து விலகவே கூடாது.
ஒரு விதியையோ, சொல்லையோ, நெறிமுறையையோ வழங்குவோர், தாம் முதலில் சொல்லிப் பார்த்து, தம் சுற்றத்தில் சிலரிடம் சொல்வதற்குக் கேட்டுக்கொண்டு, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன் பிறகே ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். சந்தையில் ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்த, எவ்வளவு மெனக்கெடுவார்களோ, அந்த அளவுக்கும் மேலே இதில் மெனக்கெட வேண்டும்.
மேலும், ஒரு விதி அல்லது சொல் பரந்தேற்பு பெறும் முன்னர், அது குறித்து வைக்கப்படும் அனைத்துக் கருத்துகளும் பரிந்துரைகளே. அவை தீர்மானங்கள் அல்ல. நான் சொல்கிறேன், நீ பின்பற்று என அதிகாரத்துடன் இதைச் சொல்லக் கூடாது. உனக்கு இதுகூடத் தெரியவில்லையே என்ற ஏளனமும் கூடாது. இவையனைத்தும் மொழிப் பயனாளரை நம்மிடமிருந்து மேலும் மேலும் விலக்கி வைத்துவிடும். இந்தத் தெளிவு இருந்தால், நமது அணுகுமுறையில் பெரிய மாற்றம் உண்டாகும்.
மொழியில் நமது பரிந்துரையை ஒருவர் கேட்பது, ஒரு மேசையில் பேச்சுவார்த்தைக்குச் சமநிலையில் உள்ள இருவர் கூடுவது போன்றது. அங்கே இருவருக்கும் ஒத்திசைவு பிறக்க வேண்டும். பயனாளரின் அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைக்க வேண்டும். ஒவ்வொரு சிக்கலையும் நுணுக்கமாகக் கேட்டு, அதைத் தீர்க்க முயல வேண்டும். அதன் பிறகே ஏற்பு என்ற நிலை உருவாகும். இந்தப் பொறுமையும் அணுக்கமும் தாமுறவாக்கலும் இல்லாவிட்டால், மொழி மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாகும். இந்தச் சிக்கலுக்கு மொழியறிஞரின் இயல்பே அடிப்படைக் காரணம். பயனாளரை அதட்டி, மிரட்டி, விரட்டியவர் அவரே.
மொழிக்கு அதைப் பயன்படுத்துபவரே முதன்மைத் தேவை. மொழியறிஞர் இங்கே உதவியாளர் மட்டுமே. தாமே மொழியை ஆக்கியவர், தாமே சொல்லை ஆக்கியவர், தாமே இலக்கணம் கற்றவர், தாமே பிஸ்தா என்ற எண்ணத்தை மொழியறிஞர் அறவே விட்டொழிக்க வேண்டும். தாயுள்ளம் கொண்ட தொண்டரின் மனநிலைக்கு அவர் வர வேண்டும். அப்போதுதான், அந்தச் செயலில் இருந்தே பிறர் ஊக்கம் பெறுவர். அப்போதுதான் பிறருக்கும் பற்றுதல் பிறக்கும். அலங்கார நடையும் அலட்டலும் புகழ் வேட்கையும் மமதையும் அவருக்கு மட்டுமின்றி, மொழிக்கும் பெரும் பின்னடைவைத் தந்துவிடும். ஏனெனில் அவர் அந்த மொழியின் பிரதிநிதியாகத் தம்மைக் காட்டிக்கொள்வதால், அவரது பெருமையும் சிறுமையும் அந்த மொழியையும் பாதிக்கும்.
இவற்றைக் கவனத்தில் கொள்வது, மொழியறிஞர்களுக்கு நலம் பயக்கும்.