படக்கவிதைப் போட்டி – 237

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
லோகேஷ் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (22.12.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
உயிர்த் துணை…
பெற்றெடுத்துப்
பேணி வளர்த்துப்
படிக்கவைத்த பிள்ளைகள்,
போய்விட்டனர்
வெளிநாட்டுக்கு-
விமானம் ஏறி..
உற்ற துணையாயிருந்த
ஒருத்தியும்
போய்ச் சேர்ந்துவிட்டாள்,
ஒற்றை ஆளாய் இவரை
விட்டுவிட்டு..
மற்றவர்களும்
மறந்துவிட்டனர்..
உயிரே யற்ற
ஒரே துணை,
ஓட்டை மிதிவண்டியில்
வற்றிய உடலுடன்
வேலைக்குச் செல்கிறார்-
வயிற்றுப் பிழைப்புக்காக…!
செண்பக ஜெகதீசன்…
பயணங்கள் முடிவதில்லை
ஆதாரம் தேடித் தேடி
ஆண்டாண்டு அலையும் கொடிகள்!
சேதாரம் கிட்டாமல்
செழித்துக் காய்ந்த நிலங்கள்!
நீராதாரம் பொய்த்துப் போய்
காய்ந்த நிலமடந்தை!
ஏர்முனைத் தேய்ந்து போய்
மழுங்கிய மண்ணின் மைந்தர்!
ஒட்டிய தேகம் பட்டினி வயிறு
எலும்பு தெரியும் வெற்றுடம்பு
கந்தல் நிறை வேட்டி – என
உன்நிலைப் பார்த்தபின்பு
நூற்றாண்டு பல கண்டாலும்
காந்திக்கும் உடை மாறாது!
கண்ணில் கனவுகள் வண்ணம் இழந்து போனாலும்
கண்ணீர் வற்றிக் காய்ந்து போனாலும்
சுழலும் சக்கரம் சுற்றுவது நிற்பதில்லை – இவர்
வாழ்க்கைத் துயரங்கள் முடிவிற்கு வருவதில்லை!
இங்குப் பொய்த்தது பருவம் மட்டுமல்ல
பதவியிலிருப்போர் வாக்கும் தான்…
https://kaialavuman.blogsppot.com
காட்சிப் பொருள்
மாசு இல்லா வானவெளி!
தூசு இல்லா சாலை வழி!
ஓங்கி வளர்ந்து
மொட்டையான
ஒற்றைப் பனைமரம்!
ஆங்காங்கே
நிழல் மரங்கள்!
தண்ணீர் வண்டிகளும்
சரக்கு வண்டிகளும்
தடயங்கள் பதிக்காத சாலை!
அதில்
சுகமான மிதிவண்டிப் பயணம்!
இந்த கிராமத்தின்
அடையாளங்களெல்லாம்
இனி
படத்தில் மட்டுமே
பார்க்க முடியும்
காட்சிப் பொருளாய்
ஆகிடுமோ!
உள்ளம் – வயதறியாது
பொட்டவெளிக்காட்டில்
உச்சிவெயில் அடிக்கையில்
நட்ட நடு சாலையில்
பட்டமரமெல்லாம்
மூலைக்கு ஒன்றாய்
பேருக்கு நிற்கையில,
பட்ட கடனெல்லாம்
பலனற்று போனாலும்,
கருத்த மேனியில்
விழுந்த தழும்புகள்
பல கதைகள் கூறும்,
மேலாடை விடுத்து
உன் அங்கங்கள்
வடித்த கண்ணீரில்
கலந்த உதிரங்களை
என்றும் உன் தோள்களுக்கு
துணையான துண்டின் வாசமறியும்,
செருப்பாய் நீ
சிற்றுண்டி விடுத்து
உழைத்து சீராட்டிய உறவுகளெல்லாம்
சீமையில் செழிப்புற,
எழும்புகள் மேற்தோலில் எட்டிப்பார்த்தாலும்
ஒட்டிய வயிறுக்கு
உழைச்சாதான் சோறு
உடம்பில் ஒட்டும்னு,
உன்குருதி புடைக்க
நீ ஓங்கி மிதிக்கிற
மிதிவண்டிய பார்க்கும்போது,
தூர பறக்கும் விமானத்தையும்
சற்று ஏளனமா பார்க்க வைக்கும்.
ராவணா சுந்தர்
தோலை தூரத்து வெளிச்சம்
மெல்ல மிதிக்க
மிதிவண்டி சக்கரம்
மெல்ல சுழலுது முன்னே
நினைவு சக்கரமோ
மெல்ல சுழன்றது பின்னே
இனி ஒரு சுதந்திரம் வேண்டும்
என்று அன்று குரல் கொடுத்த அண்ணல்
சுதந்திரம் கிடைத்ததோ நாட்டுக்கு
ஆண்டாண்டு காலமாய்
அடிமைகளாய் வாழ்ந்ததால்
இன்றும் இருக்கிறோம் அடிமைகளாய்
மிதிவண்டியில் சங்கிலியால் இணைந்து
முன் சக்கரத்தோடு பயணம் செய்யும்
பின் சக்கரமாய்
தாலி சங்கிலியால் என்னோடு இணைந்து
வாழ்க்கை பயணத்தை அவளோடு துவங்கிட
உறவுக்கு அடிமையாய் ஆனேனே
உணர்வுக்கு அடிமையாகிட
உயிர்களை அவள் சுமந்திட
புது சொந்தங்களுக்கு அடிமையாய் ஆனேனே
உறவுகளும் சொந்தங்களும்
அன்பால் இணைந்திட
பந்தங்களுக்கு அடிமை ஆனேனே
அத்தனையும் இழந்து
தனிமரமாக நிற்கையில்
அடிமை சங்கிலிகள் அறுந்து போய்
தொடருது வாழ்க்கைப்பயணம்
வெளிச்சம் தரும் விடுதலை வேண்டி
இறைவா உன் திருவடி தேடி
இன்னும் ஒரு சுதந்திரம் வேண்டும்
வாழ்க்கை மிதித்து சலித்த தடங்களிலே… மிஞ்சியது மிதி வண்டி தான்…….. என சலித்துக்கொண்டாலும் இயற்கைக்கு எதிராக எரிபொருள் வாகனங்கள் செய்யும் இம்சைக்கு இது போதுமென்று , நீவிர் தேற்றிக்கொள்வது தெரிகின்றது. பாதைகள் செப்பமிடப்பட்டாயிற்று ……….. எனினும் இன்னும் பண்படாத வாழ்க்கையினை இரு சக்கர இடைவெளியில் மிதித்து மிதித்து மீள முடியாது.. மீண்டும் இன்றும் புறப்பட்டு விட்டாய்……… ஓய்வைத்தான் உள்ளம் வேண்டினாலும் உறங்கவிடா தேவைக்காக………