-மேகலா இராமமூர்த்தி

திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த நிழற்படமிது. இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 236க்கு வழங்கியவர் திருமதி. சாந்தி மாரியப்பன். நிழற்பட நிபுணருக்கும் தெரிவாளருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

பட்டாசுச் சுற்றிக்கொண்டே மத்தாப்புப் புன்னகையைச் சிதறவிடும் இவ் ஆரணங்குகள், ஆபத்தான தொழிலையும் அச்சமின்றி ஆனந்தத்தோடு செய்வதைக் காணும்போது, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துயரெனும் பகைவெல்ல, முகத்திலே மலரும் நகை பெரிய ஆயுதம் என்ற உண்மை புரிகின்றது.

இனி, கவிதைச் சரவெடிகளைக் கொளுத்திப்போடக் காத்திருக்கும் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கிறேன்.

*****

தெய்வங்களும் வெடிவிபத்திலிருந்து எம்மைக் காப்பதில்லை; இத்தொழிலை விட்டால் பிழைப்புக்கு வேறு வழியுமில்லை என்று வேதனையோடு சிரிக்கும் மாதரிவர் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

வெடிக்கும் உண்மைகள்…

செய்யும் வேலை சிரமந்தான்
சிரித்தே அதையும் செய்கின்றோம்,
உய்யும் வழிதான் வேறில்லை
உயிரைப் பணயமாய் வைக்கின்றோம்,
தெய்வ மெல்லாம் வெடிகளிலே
தீயில் எம்மைக் காப்பதில்லை,
பெய்யும் மழையால் பிழைப்பில்லை
பெரிதிலை பெற்றிடும் துன்பங்களே…!

*****

”வீட்டின் வறுமையால் பெண்கள் வெடி தயாரிக்கும் பணிசெய்வது நாட்டின் வறுமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு” என்று வருந்துகின்றார் திரு. கோ. சிவகுமார்.

நலிவுற்ற பொருளாதாரம்

அடுப்பங்கரையில்
சமையல் பணி
செய்யும் வேளையில்
ஆபத்தான வெடிகள் தயாரிக்கும் வேலையில்
வீட்டுப் பெண்கள்!
வேலை முடிந்ததென்று வெளியே சிரித்தாலும்
நாளைய பொழுதுகளைப் பற்றிய பயம்
இருக்கத்தான் செய்யும் இதயத்தின்
எங்கோ ஓர் மூலையில்!
வீட்டின் வறுமையும்
வாட்டும் வேதனைகளும்
கூட்டி வந்து
விட்டதோ வேலைக்கு
என்றால்
நாட்டின் பொருளாதாரம்
நலிவுற்றிருக்கிறது
என்று தானே பொருள்!

*****

”வெடித் தயாரிப்பால் சுற்றுப்புறத்துக்குச் சீர்கேடு” என்று வெற்றுமுழக்கம் செய்வோரால் வயிறு நிறைவதில்லை. திரியினில் வைத்த தீயால் வறுமை கருகுமென்றால் முகத்தில் முறுவல் பூக்கும் என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

வெடிச்சிரிப்பு

சுற்றுப்புறத்தைப் பாழ்படுத்தும் என
வெற்றுக் கோஷம் போட்டிடுவார்
மாற்றுத்துணிக்கோர் வழிசெய்யார்;
தேற்று நிலையும் தானுரையார்!
குளிர்பதனப் பெட்டியிலும்
குளிர்சாதனச் சூட்டினிலும்
பாழுறும் சீதளச் சூழ்நிலையைக்
கண்டும் காணாமல் ஒதுங்கிடுவார்!

பணம்படைத்தோர் பாழாக்கும் நிகழ்வெல்லாம்
தினந்தினந்தான் நடந்தாலும் சிந்தைசெய்யார்!
வலியோர் தம் வாய்ச்சொல்லும் சட்டமாகும்
எளியார் தம் வாழ்க்கையையார் எண்ணிடுவார்?!

சுற்றும் வெடிக்கட்டினிலே
வெற்று வயிறு நிரம்பிடுமே…
கட்டும் தீப்பெட்டியிலே
கிட்டிய சில்லறை கொண்டிங்கே
வாடிய வயிறும் குளிர்ந்திடுமே…

திரிதனில் வைத்திட்ட தீயினாலே
வறுமை நீங்கி வயிறு நிறைந்தால்
இறுகிய முகத்திலும் வெடிச்சிரிப்பு
மத்தாப்புப் பூவாய்ப் பூத்திடுமே…

*****

மணமாலை கழுத்தில் ஏறச் சரவெடி மாலை தொடுத்துப் பணம் சேர்க்கும் கன்னியவள் என்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். மணமுடிக்க ஆடவர்க்குத் தட்சிணை கொடுக்கும் அவலநிலை இந்திய மாதர்க்கு என்று தீரும்? ஆடவர் மனம் என்று மாறும்?

இனி எல்லாம் சுகமே!

கழுத்தில் பூ மாலை விழக்
காத்திருக்கும் கன்னி இவள்!
காளையர் வீட்டில்
கட்டணம் கேட்கச்
சிக்கனமாய் இவள்
சில்லறையைச் சேர்த்தாள்
கொட்டிச் கிடந்த வெடிகளைப்
பூ மாலையாய்க் கட்டியே!

பூவாய் இந்தப்
பூவை சிரித்துப் பேசச்
சோர்வின் களைப்பும்
நெஞ்சின் கவலையும்
கலைந்து போனதே!
கொடுத்த வேலையை
விரைந்து முடித்திட
புது வேகம் பிறந்ததே!

சரம் சரமாய் வீதியில்
வெடித்து மகிழ்ந்திடும்
மழலைகளின் முகம் கண்டு
மகிழ்ந்திடும் அன்னை தந்தையர்
இவர்களின் அன்பு உள்ளம் கண்டு
தான் தொடுத்த பூ மாலை
இறைவனடி சேர்ந்த
இன்பம் பொங்கும் இவர்கள் நெஞ்சில்
அதில் பஞ்சாய்ப் பறந்து மறந்து போகும்
தான் பட்ட துன்பம் எல்லாமே!

*****

எழுதுகோல் ஏந்தும் வயதில் ஏழ்மையை ஏந்தியது ஏனடா? புன்னகைப் பூக்கள் தொழிற்சாலையில் கருகுதல் கொடுமையடா! என்று ஏந்திழையரின் பரிதாபநிலை கண்டு இரங்குகின்றார் திரு. ராவணா சுந்தர்.

ஏழ்மையின் புன்னகை

பாரடா பாரடா
பைந்தமிழ் நாட்டைப் பாரடா!
பயிலும் பருவத்தில்
சிறுமியின் சிரங்களைப் பாரடா!
எழுதுகோல் ஏந்தும் வயதில்
ஏழ்மையை ஏந்தியது ஏனடா?
மலர்கள் தொடுக்கும் விரல்களில்
பட்டாசு திரள்வது கேடடா!
புன்னகையின் பூக்களெல்லாம்
தொழிற்சாலையில் கருகுவது கொடுமையடா!
நாளைய பாரதம் மலர்வதற்கு
இன்றைய விதைகள் பலிகளா?
சட்டங்கள் இயற்றுவது
வெறும் கண்துடைப்புத் தானடா?
சூழ்ச்சியின் அரசியலில்
இளஞ்சிறகுகளைப் பறிப்பது பாவமடா!
பணமுதலைகளும் பதவி வெறியர்களும்
உலவும் பூவுலகில் பிறந்தது விதியடா!
பள்ளிகளின் பட்டறையில்
உன்னை மெருகேற்றாமல்
ஏழ்மை இருளை அகற்றமுடியாது!

******

நிழற்படத்துக்குப் பொருத்தமான விழிப்புணர்வுக் கவிதைகளைத் தீட்டித் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது இனி…

கந்தக மலர்!

ஏன் கந்தகபூமியில் இவள் பிறந்தாள்?
எந்த வறுமையிலும் வளமாய்ச் சிரிப்பாள்!
வெடிகளை, மருந்து என்பதை மறந்தாள்!
மருதாணியாய் விரல் முழுக்கத் தரித்தாள்!

வெடி மலர்களைக் கொட்டிக் குவித்துவிட்டால்
அறியாமையிலே கட்டிக் கட்டிக் கோத்துவிட்டால்
சரம்சரமாய் விஷப்பூக்களைச் சேர்த்துவிட்டால்
தகதகவென எரிந்திடுமே தீக்குச்சி தலைப்பட்டால்!

வேறு தொழில்கள் அரசு கொண்டுவந்தால்
அல்லது பயிருக்காவது கொஞ்சம் நீர்தந்தால்
உயிருக்கும் வயிற்றுக்கும் பசி தீர்ந்திடாதா?
வாழ்வைப் பணயமாக்கும் இத்தொழில் மாய்ந்திடாதா?

இந்தப் பூவுடன் சேர்த்தால் நாரும் எரியும்
சில சமயத்தில் நாருடன் சேர்ந்து ஊரும் எரியும்!

வெடி மருந்துகளை மருதாணியாய்த் தரித்து, சரம்சரமாய் விஷப்பூக்களைக் கோக்கும் வறுமையிலும் வளமாய்ச் சிரிக்கும் வனிதையரின் நிலைகண்டு, ஏழையர் வாழ்வைப் பணயமாக்கும் இத்தொழில் மாய்ந்திடாதா? என்று வேதனையில் நனைந்த சொல்மலர்களால் கவிமாலை தொடுத்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.