வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 2

தி. இரா. மீனா   

வசன இலக்கியமென்பதை ஒர் இலக்கியவகை என்று சொல்வதை விட அதை ஒரு பரம்பரை எனக் கூறலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இலக்கியவகை என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற் குட்பட்டது. ஆனால் பரம்பரை என்பது காலத்தைத் தாண்டி நிற்பதாகும். வகை என்பதற்குப் பின்னால் குறிப்பிட்டதொரு முறை இருக்கும். அது முழுமை அடையும் போது  முறை அல்லது வகை என்பது முற்றுப்பெறும். ஆனால் பரம்பரை என்பது எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவகையில் தன் பாணியை மொழியோடு இணைத்துக்  கொண்டு  தொடரும் என்பது அதற்கு அவர்கள் தரும் விளக்கமாகும். வசனங்கள் வெறும் வடிவமாக மட்டுமின்றி முன்னோக்கிச் செல்லும் தன்மையுடைய பரம்பரையாக வளர்வதற்குக் காரணம், சரணர்கள் ’இயற்கைக்கு அழிவுண்டு; ஜங்கமத்துக்கு அழிவில்லை” என்ற எண்ணமுடையவர்களாக இருந்ததேயாகும்.

ஏற்றத்தாழ்வற்ற சமூகநிலையைப் பற்றி பலர்  பேசியிருந்தாலும் வெகுஜன சமூக சித்தாந்த நிலை என்பது வசனக்காரர்களால் உருவாக்கப்பட்டது. அதனால் அவர்கள் தொழில் சித்தாந்தத்தை தாம் வாழும் சமூகத்தில் நிலைநாட்டினர். அவர்கள் காட்டும் அதன் தொழில் சித்தாந்த இயல்புகளென்பது கட்டாயக் காயகம், தொழிலே தெய்வம், தொழில் வேறுபாடின்மை, விருப்பமான தொழில், அதிகபலனை விரும்பாத தன்மை, உணவோடு கூடிய காயகம் ஆகியவையாகும். உணவு தேவனாகும் போது உணவைத் தேடித்தரும் தொழில் தெய்வமாக வேண்டியுள்ளது. ”உழைப்பில்லாத சரணன் முட்டாள்” என்ற சென்ன பசவன் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. சரணர் கொள்கையானது மனிதனு்க்கு தீட்சை வழங்கும் போது லிங்கத்துக்கு ஒரு பெயரையும் [முத்திரை] பக்தனுக்கு ஒரு தொழிலையும் கட்டாயப்படுத்தித் தருவதாகும் .அவரவர்  விருப்பத்திற்கு ஏற்றபடி தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதால், தொழில் ஏற்றத்தாழ்வைப் போக்கிய காரணத்தால் தம்மைத் தொழிலின் பெயரால் அறிமுகம் செய்து கொள்வது  அவர்களுக்கு மிகப் பெருமையாக இருந்தது. சான்றாகத் துணி ‘நெய்யும் தாசிம்மையா, என்று இயற்பெயரோடு தொழில் பெயரையும் சேர்த்து அறிமுகப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதான தொழில் தெய்வம் என்பதில் தொழில் என்பது வெறும் வேலையை மட்டும் குறிப்பதில்லை. வெளியில் வேலை, ஆத்மாவிற்குள் அறிவு என்ற பார்வையில் தொழில் செய்பவன் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். அந்த ஒன்றிணைப்பு வழிபாட்டை மறக்கச் செய்தாலும் அதில் தவறில்லை. அதனால் ’காயகவே கைலாசா [உழைப்பே கைலாசம்] என்பது அவர்கள் கொள்கையானது.

தொழில் வேறுபாடில்லாத தன்மை உருவாக வேண்டுமெனில் பொருளை வைத்துச்செய்யும் தொழில் உயர்வானது; உடலுழைபபு இழிவானது என்ற எண்ணம் நீங்க வேண்டும் என்ற சிந்தனையில் உழைப்புச் சமன்பாட்டை சரணர் உருவாக்கினர்.” தறி போட்டு நெசவாளியானான்”, வெளுத்து சலவைத் தொழிலாளியானான்” என்று அறிவார்ந்த உழைப்பை முன்னிறுத்திச் சமன்பாட்டை ஏற்படுத்தினர்.

பரம்பரையான தொழிலைச் செய்து வந்ததால் சமுதாயத்தில் சாதி வேறுபாடு ஆழமானதாக இருந்தது. சரணர்கள் இந்த சாதிக்கொடுமையை அழித்தனர். சரணர்கள் அவரவர் வசதி, விருப்பத்திற்கு ஏற்றபடி எந்தச் சாதியானாலும் எந்தத் தொழிலானாலும் தாம் விரும்பியதைச் செய்தனர். சான்றாக மோளிக மாரையா என்ற சரணர் நாட்டை ஆள்வதை விட்டுவிட்டு மரம் வெட்டுவதைத் தன் தொழிலாகக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சரியான கூலியைத் தரும் தின நித்தியத் தொழில் மகிழ்ச்சி வேண்டும்” என்று [நுலிய சந்தய்யா] சொல்லி வசனக்காரர்கள் புது தர்மத்தை அறிமுகம் செய்தனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வசனக்காரர்கள் கூறிய புதுதர்மம் உயர்ந்த சிந்தனையாகும்.

உழைப்பு உணவோடு  கூடியது என்ற பார்வையை சரணர்கள் வலியுறுத்துகின்றனர். குருவிற்கு உடலாலும், லிங்கத்திற்கு மனத்தாலும், ஜங்கமனுக்குப் பொருளாலும் தானம் செய்ய வேண்டுமென்று  சரணர்கள் வழிகாட்டுகின்றனர். செல்வத்தில் சமன்பாடு வந்துவிட்டால் சமுதாயச் சமன்பாடு தானாகவே ஏற்படும் என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்துகின்றனர். இவ்வகையில் அவர்களின் தொழில் சித்தாந்தம் மிக உயர்வானது.

வசன இலக்கிய கர்த்தாக்களாக இருநூறுக்கும் மேற்பட்டோர் இருந்திருக்கின்றனர். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் கிடைத்திருக்கின்றன. வசன இலக்கிய ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்த இடம், தெய்வம், ஆளுமை அடிப்படையில் தங்கள் வசனங்களுக்கான முத்திரையை [அடையாளம்] அமைத்துக் கொண்டனர், பொதுவாக நான்கு அடி தொடங்கி பதினைந்து அடி வரையில் வசனங்கள் அமையும். ஒவ்வொரு வசமும் படைப்பாளியான சரணர் வாழுமிடக் கடவுளின் முத்திரையை அடையாளமாகக் கொண்டிருக்கும்.

ஆனந்தய்யா :

வசனக்காரர்கள் வரிசையில் முதலாவதாக இடம் பெறும் ஆனந்தய்யா என்னும் சரணர் ஆனந்தசிந்து  ராமேஸ்வரன் என்னும் முத்திரையில் சிவனை வழிபட்டவர். இரண்டு வசனங்கள் அவருடைய பெயரில் இடம் பெற்றிருப்பினும் ஒரு வசனம் முழுமையானதாகக் கிடைத்திருக்கிறது.

“கல்லைப் பிடித்து மாரியுடன் நட்புக் கொள்வீர்
 துன்பப்பட்டுப் பல பிறவிகள் எடுப்பீர்.
 சிவனைக் கண்டேன் என்று  சொல்வது வெற்றாசைதான்.
 அவ்வகை குற்றமுடைய மனிதர்களை வெறுப்பவன்
 ஆனந்தசிந்து ராமேஸ்வரன் “

ஆயதக்கி மாரையா:

ஆயதக்கி மாரையா ராய்ச்சூர் மாவட்டம் லிங்காசுரு தாலுகாவைச் சேர்ந்தவர். லக்கம்மா அவருடைய மனைவி. கல்யாண் நகர வீதிகளில் சிதறிக் கிடக்கும் தானியங்களைப் பொறுக்குவது அவர் தொழிலாகும். உடல் உழைப்பு மற்றும் சிவ வழிபாட்டிற்காகத் தம்மை அர்ப்பணம் செய்து கொண்டவர்களில் மிக முக்கியமானவராகப் போற்றப்பட்டவர். உழைப்பே தெய்வம் என்பது அவர் வாழ்வின் குறிக்கோள். உழைப்பின் தத்துவத்தைப் பேசுவதாக அவர் வசனங்கள் அமைகின்றன. அங்குள்ள அமரேஸ்வரர் அவருடைய வசனங்களின் முத்திரையாகும். இவருடைய வசனங்கள் காயகத்தின் தத்துவத்தை பெரிய அளவில் பேசுகின்றன. சில வசனங்கள் இங்கே;

1. “உழைப்பில் ஈடுபட்டிருக்கும் ஒருவன்
     குருவைப் பார்ப்பதை மறந்து விடவேண்டும்
     லிங்கத்தை வணங்குவதைக் கூட மறந்து விடவேண்டும்
     ஜங்கமர்  காத்திருப்பினும் கவலைப்படக்கூடாது
     உடலுழைப்பே  கைலாசம் என்பதால்.
     அமரேஸ்வரலிங்கர் கூட உடலுழைப்பிற்குட்பட்டவர்.”

 2. “சந்திரகாந்தக் கற்சிலையில் நீர்த்துளிஅடங்கி்யிருப்பது போல
      பசுக்களில் கோரோசனை அடங்கி்யிருப்பது போல
      கல் விறகுகளில் நெருப்பு அடங்கியிருப்பது போல
      உண்மையுடையோரின் நெஞ்சங்களில்
      நீரின் முத்துபோல அடங்கியிருக்கின்றாயன்றோ
      அமரேஸ்வரலிங்கமே”

3. “அழியாத செல்வத்தைத் திரட்டுவோருக்கு
      களஞ்சியத்தின் தயவேன்?
      பற்றற்றவனைப் பாதுகாப்போருண்டோ?
      தொழில் செய்பவரை அந்தணர் துன்புறுத்துவதேன்?
      அக்குணம் அமரேஸ்வரலிங்கத்துக்குத் தொலைவானதாம்”   

4. “கனியும்வரை பழம் வேரின் விருப்பப்படியிருக்க வேண்டும்
     அதுபோல மனிதனாக இருந்து வாழ்ந்து முடிக்கும்வரை
     உண்மைச் சரணரின் நட்பும் ஜங்கமரின் சேவையும்
     தொடரும்போதுதான் அமரேஸ்வரலிங்கரை அறியமுடியும்”

5. “சபதமேற்று காயகம் விட்டு
     பக்தரின் வீடு சென்று
     பொன்னும் பொருளும் இரப்பது
     உயர் பக்தனுக்கு நற்செயலன்று
     அக்குணம் அமரேஸ்வரலிங்கருக்குத் தொலைவானதாம்”

6. “பிச்சை எடுத்துக் கொண்டு வந்த உணவை வைத்து
      வழிபாடு செய்வதென்பது முடவனின் பயணம் போன்றது
      பக்தன் பிச்சைக்காரனாக இருக்க முடியுமா?
      பக்தனாகப் பிறந்து வழிபாட்டிற்காகப் பிச்சையெடுப்பது
      மோட்சத்தைத் தேடும் வழியல்ல. அவ்வகை
      முயற்சிகளில் அமரேஸ்வரனை அடைய முடியாது.”

7. “பக்தனுக்கு வறுமையுண்டோ?
     உண்மையுடையோருக்கு வினையுண்டோ?
     மனமொன்றிச் செயல்படும் தொண்டனுக்கு
     மண்ணுலகு விண்ணுலகு என்றுண்டோ?
     அவனிருக்கும் இடம் புனிதமானது
     அவனுடல் அமரேஸ்வரலிங்கத்துடன் சங்கமமாகும்.’

8. “சிறியதொரு பணிசெய்து பெரியதொரு
     கூலி கேட்பது நேர்மையான காயகமாகுமா?
     குறைத்துக் கொடு என பக்தன் சொல்வது
     அமரேஸ்வரலிங்கத்துக்கு தூய்மையின் காயகமாம்”

                                                                                                                                     – தொடரும்       

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *