63 நாயன்மார்கள் வரலாறு – 22 காரைக்கால் அம்மையார்

 

நம்பியாரூரர் தம் திருத்தொண்டத்தொகையில், ‘பெருமிழலைக் குறும்பர்க்கும், பேயார்க்கும் அடியேன்’ என்று குறிப்பிடுகிறார். நம்பியாரூரர் காரைக்கால் அம்மையாரை பேயார்க்கும் அடியேன் என்று சொல்வதன் காரணம் என்ன என்று அறிய வேண்டுமானால் அம்மையாரின் வரலாற்றை முழுமையாக அறிய வேண்டும். நம்பியாரூரருக்குப் பின் வந்த சேக்கிழார் பெருமான் காரைக்கால் அம்மையாரின் சுவையான வரலாற்றை சொற்சுவை, பொருட்சுவை, கவிதை நயம் என அனைத்து வகையிலும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் விரித்து விருந்து படைத்துள்ளார். காரைக்காலில் தோன்றிய அம்மையார் மகப்பேறு பெற்று தாய்மை அடையாமலே அனைவராலும் அம்மையே என்று அழைக்கப் பெற்றவர்.

நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு

மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ்

செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன்

கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே.

இறைவன் திருவருளை தமிழகமெங்கும் பரப்புவதற்கு காரைக்கால் அம்மையார் முன்னோடியாக விளங்கியவர். தற்போது புதுவை மாநிலத்தில் இருக்கும் சோழ மண்டலத்தின் துறைமுகப்பட்டினமான காரைக்கால் எனும் ஊரில், மிகச்சிறந்த வணிகர் குடியில், வணிகர் குலத்தலைவரான தனதத்தன் என்பவரின் அருமை மகளாகப் பிறந்தவர் இவர். புனிதவதி என்பது இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்.

தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க

    தனதத்தன் றரும்புனித வதியார் மாவின்

செங்கனிக டிருவருளா லழைப்பக் கண்டு

    திகழ்கணவ னதிசயித்துத் தேச நீங்க

வங்கவுட லிழந்துமுடி நடையா லேறி

    யம்மையே யெனநாத னப்பா வென்று

பொங்குவட கயிலைபணிந் தாலங் காட்டிற்

    புனிதனட மனவரதம் போற்றி னாரே.

புனிதவதியார் சிறுமணல் வீடு கட்டி விளையாடும் குழந்தைப் பருவத்திலேயே இறைவன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டும், அடியவரை அடிபணிந்து வணங்கியும் இருப்பாராம். அம்மையார் தமது ‘அற்புதத் திருவந்தாதி’ எனும் அரிய நூலில்,

பிறந்த மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்த நின் சேவடியே சேர்ந்தேன்நிறந்திகழும்

மைஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்பது இடர்

என்று குறிப்பிடுகிறார். மங்கைப் பருவம் அடையும்போது பேரழகுப் பெட்டகமாகத் திகழ்ந்த புனிதவதியார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாகப்பட்டினத்தில் வணிகர் குடியில் வாழ்ந்த நிதிபதி என்பவருக்கு பரமதத்தன் என்ற மகன் இருந்தான். இவனுக்கு புனிதவதியாரை பெண் கேட்டு வந்தனர். தனதத்தரும் இதற்கு இசைவளிக்க திருமணமும் உறுதியானது. செல்வச் செழிப்பு மிக்க தனதத்தனுக்கு ஒரே பெண் குழந்தை. வாழப்போகும் ஊர் மிக அருகில் இருந்தும், அருமை மகளைப் பிரிய மனமில்லை தந்தையாருக்கு. ஆனாலும் மகளை வீட்டோடு வைத்திருப்பது மரபன்று என்பதால் தனதத்தர் தம் வீட்டின் அருகிலேயே ஒரு தனி வீடு அமைத்தார்.  திருமணம் முடிந்த பின்பு பரமதத்தன் நாகப்பட்டினத்தினை விட்டு காரைக்காலுக்கே வந்து அந்த வீட்டில் புனிதவதியுடன் சேர்ந்து வாழ்ந்தான். புனிதவதியாரும், பரமதத்தனும் இல்லறத்தை இனிது நடத்தினர். அம்மையார் வாழ்ந்த அந்த வீடே தற்போது காரைக்காலில் உள்ள அம்மையார் திருக்கோயிலாகும். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்கு வரும் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன்னும், மணியும் புத்தாடையும் அளித்து வந்தார்.

இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனைக் காண வந்த வணிகர் ஒருவர் அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார். பரமதத்தன் அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான். மனைவியார் அவைகளை வாங்கி வைத்த பின்பு, சிவனடியார் ஒருவர் அந்த மாங்கனிக்காகவே வந்தவர்போல் பசியினால் வருந்திய நிலையில் அவர் வீட்டிற்குச் சென்றார். புனிதவதியார் அவரை வரவேற்று அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்தார். ஆனால் அந்நேரத்தில் கறியமுது குழம்பு தயாராகவில்லை. சிவனும் சிவனடியாரும் வேறு அல்ல என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் தயிர் சோறுடன் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, மகிழ்ந்து புனிதவதியாரை வாழ்த்திச் சென்றார். அங்குதான் இறைவனின் திருவிளையாடல் ஆரம்பித்துவிட்டது.

மதிய உணவிற்காக கடையிலிருந்து வீட்டிற்கு வந்த கணவருக்காக புனிதவதியார் உணவு படைத்து, காய்கறிகளுடன் கணவன் கொடுத்தனுப்பிய மாங்கனியையும் வைத்துப் பரிமாறினார். உணவோடு மாம்பழத்தை உண்ட பரமதத்தன் அதன் சுவையில் மயங்கியவன் தான் அனுப்பிய மற்றொரு மாங்கனியையும் எடுத்து வரும்படி கேட்கிறான். அம்மையார் பிரிதொரு கனியை அடியவருக்கு அளித்துவிட்ட நிலையில் கணவன் ஆசையோடு கேட்கும்போது தர இயலாத நிலை அவருடைய தாய்மை உணர்வு வேதனை கொள்ளச் செய்தது. இல்லை என்று சொன்னால் அவன் மனம் ஏமாற்றம் அடையுமே, என்ன செய்யலாம் என்ற தடுமாற்றத்துடன் அறைக்குள் சென்றவர், இறைவனை நோக்கி மனம் உருகி கண்ணீர் விட்டு அழுகிறார். அம்மையின் கண்ணீரைக் கண்ட எம்பெருமான் அம்மையாரின் கரத்தில் ஒரு அதிமதுரக் கனியை அருட்கனியாக அருளினார். அவரும் அக்கனியை எடுத்துச் சென்று மகிழ்வுடன் கணவனுக்குக் கொடுத்தார். அதனை வாங்கிச் சுவைத்த கணவனோ அதன் தேவாமிர்தச் சுவையில் மயங்கி, மூவுலகிலும் கிடைத்தற்கரிய இத்தகைய அற்புதக் கனி எப்படிக் கிடைத்தது, இது நான் அனுப்பிய கனியாக இருக்க வாய்ப்பே இல்லை. அமுதத்தை விட சுவை மிகுந்த இக்கனி உனக்கு எப்படி கிடைத்தது என்று அழுத்தமாகக் கேட்டான். கணவனிடம் உண்மையை மறைப்பது பெரும் பாவம் என்ற கொள்கையுடைய புனிதவதியார் இறையருளால் பெற்ற கனியே அது என்ற உண்மையைச் சொன்னால் கணவன் நம்புவானோ, மாட்டானோ என்ற தயக்கம் ஏற்பட்டாலும் ஈசனருளால் கிடைத்த கனி என்று கூறினார். ஆனால் அம்மையாரின் பெருமையை சற்றும் உணராத பரமதத்தனோ, ஈசனருளால் கிடைத்த கனி என்றால் இதே போன்று மற்றுமொரு கனியை வரவழைத்துக் கொடு பார்க்கலாம் என்றான்.

புனிதவதியார் கணவனிடம் தான் உரைத்தது பொய்யாகி விடுமோ என்று வருந்தி எம்பெருமானிடம் கண்ணீர் மல்க மீண்டும் ஒரு கனி அருளும்படி வேண்டி நின்றார். அப்போது அம்மையாரின் கரங்களில் மீண்டுமொரு கனி வந்து விழுந்தது. ஆனால் ஐயத்தின் பிடியில் சிக்கிக் கிடந்த கணவனின் கரங்களுக்குச் சென்ற அந்த மாங்கனி அடுத்த சில நொடிகளில் மாயமாய் மறைந்தது. அதிர்ச்சியடைந்த பரமதத்தனோ இப்புனிதவதி சாதாரண பெண் அல்ல. தெய்வப் பெண்ணான இவருடன் வாழ்வது தகாத காரியம் என முடிவு செய்தான்.

அதற்கேற்ப சில நாட்கள் சென்றபின் பொருள் ஈட்டுவதற்காக வெளிநாடு செல்லப்போவதாகக் கூறிச் செல்கிறான். ஆனால் பெரும் பொருள் ஈட்டித் திரும்பியவன் மனைவி இருக்கும் இடத்திற்கு வராமல் பாண்டி நாட்டின் துறைமுகப் பட்டினமான தூத்துக்குடி சென்று அங்கு வேறு ஒரு பெண்ணை மணமுடித்து மகவு ஒன்றையும் பெற்றிருந்தான். தனதத்தன் உறவினர் மூலம் பரமதத்தன் தூத்துக்குடியில் இருப்பதை அறிந்து புனிதவதியாரை அவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். உறவினர்களுடன் சென்ற புனிதவதியாரும் ஒரு பொது இடத்தில் இருந்துகொண்டு பரமதத்தனுக்கு செய்தி அனுப்பினர். ஆனால் பரமதத்தனோ புது மனைவி, குழந்தையோடு வந்து நின்றான். வந்தவன் புதிய குடும்பத்துடன் புனிதவதியாரின் காலில் விழுந்து வணங்கினான். இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில், இதென்ன கூற்று, கட்டிய மனைவியின் காலில் விழுவதா, எங்களுக்கே அவமானமாக இருக்கிறது என்றனர். அதற்கு பரமதத்தனோ  புனிதவதியாரைப் பார்த்து, இவர் பெண் அல்லள், பெருந்தெய்வம் என்பதாலேயே வணங்குகிறேன். அதுமட்டுமல்ல என் குழந்தைக்கும் அம்மையாரின் பெயரான புனிதவதி என்றே சூட்டியிருக்கிறேன் என்றான். அனைவரும் வணங்க வேண்டியவர் இவர் என்றும் உறுதியாகக் கூறினான். இதனைக் கேட்ட புனிதவதியாரும்,

ஈங்கு இவன் குறித்த கொள்கை

  இது இனி இவனுக்காகத்

தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி

  கழித்து இங்கு உன் பால்

ஆங்கு நின் தாள்கள் போற்றும்

  பேய் வடிவு அடியேனுக்குப்

பாங்குற வேண்டும் என்று பரமர்

  தாள் பரவி நின்றார்.

அதுநாள் வரை தன் கணவனை தெய்வமாகப் போற்றி வந்த புனிதவதியார் அப்போது கணவன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, அடுத்த நொடியே புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, “சுவாமி! இவனுடைய கொள்கை இதுவாயின், இனி இவன் பொருட்டுத் தாங்கிய இந்த அழகு தசைப் பொதியை நீக்கிச் சொல்லும் மனமும் கடந்து திகழும் ஐயன் திருவடிகளைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தார். அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினால், மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். தன் பேய் வடிவு பற்றி அம்மையாரே தம் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்ற நூலில்,

கொங்கை திரங்கி நரம்பெழுந்து

  குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர்

  நீள்கணைக் காலோர்பெண்பேய்

தங்கி அலறி உலறுகாட்டில்

  தாழ்சடை எட்டுத் திசையும்வீசி

அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே. 

என்று பாடுகின்றார்.

எம்பெருமான் “தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு” என்று அருளிச்செய்தார். பேய்வடிவு பெற்ற அம்மையார் கயிலை சென்று கயிலைநாதனை வழிபட தலையினாலே நடந்து சென்றார். இறைவன் புனிதவதியாரை அம்மையே என்று அழைக்க அம்மையாரும் அப்பா என்று அவர் அடியில் வீழ்ந்து கயிலைநாதனிடம் வேண்டினார்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்

  பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு

  உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்

  நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும் போது உன்

  அடியின் கீழ் இருக்க என்றார். 

காரைக்கால் அம்மையார் அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடினார்.

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு    

என்று தம் நெஞ்சத்தில் சோதிவடிவாய் நீங்காதிருக்கும் அவர்பால் என் அன்பு ஒருபோதும் குறையாது, மாறவும் மாறாது என்ற நெஞ்சுறுதியுடன் நின்றார் காரைக்கால் அம்மையார்.

காரைக்காலம்மையார் புராணம் சொல்லும் கருத்து

சமயம் என்பது அறிவைச் சார்ந்தது அல்ல, இதயத்தோடு தொடர்புடையது என்பதை முதன் முதலில் உலகுக்கு எடுத்துக் கூறியவர் அம்மையார். வேள்விகள், விரதங்கள், கடுமையான தத்துவ விசாரணைகள் போன்ற எதுவும் தேவை இல்லை. பெருமானிடம் உண்மையான அன்பு செலுத்துவது மட்டும் போதும், வேண்டுவது அனைத்தையும் தருவான் என்ற கருத்தை உரக்கச் சொன்னவர் அம்மையார்.

ஓர் அருட்கனி புனிதவதியாரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாயம் மகப்பேறே பெறாத அவரை காரைக்கால் அம்மையாராக மாற்றிவிட்டது. ஆம். அம்மையின் கரத்தில் கிடைத்த அருட்கனியால் பேய் ஆனார். பின் தெய்வமானவர் எம்பெருமான் நடம் பயில அவன் திருவடிக்கீழ் இருந்து பாடும் பேறு பெற்றார். சிவபெருமான் “அம்மையே” என்று அழைத்தருளினமையானும், இவர் திருத்தலையாலே நடந்தருளிய திருவாலங்காட்டை மிதித்தற்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அஞ்சி யருளினமையானும் அறிய முடிகின்றது. காரைக்கால் அம்மையாரைத் தம் குருநாதர் என்கிறார் இவர். அம்மையார் தோன்றிய முந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னே தோன்றியவரான ஞானசம்பந்தப் பெருமான் இறைவன் திருவருள் தாங்கி அந்தணர் குலத்திலே அவதரித்தவர். மூவாண்டிலே உமையம்பிகையின் சிவஞான இன்னமுது உண்ணடிசில் என ஊட்டப்பெற்றவர்.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே       

என்று குலசேகர ஆழ்வார் வித்துவக் கோட்டுப் பெருமானிடம் கூறுவதும் ஈண்டு நோக்கத்தக்கது.

இறைவன் உமையவளிடம், எல்லா உலகங்களையும், உயிர்களையும் பேணிக் காக்கின்ற தம்மைப் பேணுவது தம் தாயாகிய இவ்வம்மையே என்கிறார். எம்பெருமான் அம்மையே என உய்ய அழைத்ததால்தான் இன்றும் சைவ உலகிலும், புதுவை மாநிலத்திலும் அம்மையார் என்றால் அது காரைக்கால் அம்மையாரையேக் குறிக்கும். உலகில் அனைவரும் தம்மிடம் அழகைக் கேட்க இவ்வம்மையார் மட்டும் பேய் வடிவை வேண்டிப் பெற்றாள் என்றார். இறைவனுக்கோ அவன் அடியாருக்கோ நாம் ஒன்று செய்தால் அது பன்மடங்காகத் திரும்பி நம்மை வந்தடையும் என்ற தத்துவத்தை சேக்கிழார் பெருமான் அருமையாக எடுத்துரைக்கின்றார். சமயக்குரவர்களான சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் ஆகியோருக்கு முன் பதிகம் என்ற வகையில் முதலில் அம்மையார் பாடியதால் அது மூத்த திருப்பதிகம் எனப்படுகிறது. ஆலயங்களில் இருபுறமும் மற்ற நாயன்மார்கள் நின்று கொண்டிருக்க, காரைக்கால் அம்மையார் மட்டும் அமரும் உரிமை பெற்றுத் தனிச் சிறப்புக்கு உரியவராகக் கருதப்படுகிறார். காரணம் இவர் தோன்றியிராவிடில் சைவம் இல்லை, மற்ற சிவனடியார்களும் இல்லை என்பதனால் தான். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப்பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார் என்றால் அது மிகையில்லை. அப்பர் முதலான சமயக்குரவர்கள் அம்மையார் வகுத்துக் கொடுத்த பாதையில்தான் சென்றுள்ளார்கள். தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் அம்மையார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறைவனை வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும், வெவ்வேறு வகையில் வணங்கினாலும் முழுமுதற் பொருள் ஒன்றே என்ற கருத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் தெரிவித்தவர் அம்மையார் என்பதே சிறப்பு. அம்மையார் வணிகர் குலத்தில் பிறந்திருந்தாலும் வேதத்தின் மெய்ப்பொருளை முழுமையாக உணர்ந்து, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவிலிகளை நோக்கி, எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் என்று கூறி, தெய்வங்களுக்குள்ளே வேறுபாடுகள் இல்லை, வழிபடு முறைகளிலும் உயர்வு தாழ்வு இல்லை, முழுமுதற் கடவுள் ஒன்றே என்ற வேத சாரத்தைத் தன் எளிய தமிழில் அறிவுறுத்தியவர் அம்மையார். சைவர்கள் திருமாலையும் வணங்குகிறார்கள். தொல் பழம் தெய்வங்களையும் வணங்குகிறார்கள் என்றால் இந்தப் பரந்த மனப்பான்மை வருவதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார் என்பதையும் மறுக்க இயலாது. சைவம் இன்று உலகளாவப் பரவி நிற்பதற்கு முதல் காரணமாக இருப்பவர் அம்மையார் என்பதும் மறுக்கவியலாது!

 

திருச்சிற்றம்பலம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.