அச்சகத்திலிருந்து ஆட்சிமன்றம்வரை உயர்ந்தவர்!
-மேகலா இராமமூர்த்தி
எழுத்தாளர், சிந்தனையாளர், அறிவியலாளர், அரசியலறிஞர், சுதந்திர அமெரிக்காவை வடிமைத்த தந்தையருள் ஒருவர் எனப் பன்முகத் திறனாளராக (polymath) திகழ்ந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin).
1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்திலுள்ள பாஸ்டனில் (Boston, Massachusetts), 17 பிள்ளைகள் கொண்ட எளிய குடும்பத்தில் 15ஆவதாகப் பிறந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின். பள்ளிக்கு அனுப்பும் வசதியற்ற குடும்பச்சூழல் காரணமாக அவருக்குக் கிடைத்த முறையான கல்வி என்பது பத்து வயதுவரை மட்டுமே.
பெஞ்சமின் பிராங்க்ளினின் அண்ணன்களுள் ஒருவரான ஜேம்ஸ் பிராங்க்ளின் (James Franklin) அச்சகம் வைத்து ’தி நியூ இங்கிலாந்து கூரண்ட்’ (The New-England Courant) எனும் நாளிதழை வெளியிட்டுவந்தார். அங்கே தமது 12ஆவது வயதில் வேலைக்குச் சேர்ந்து அச்சுக்கோத்தல், பிழைதிருத்தல், பத்திகள், கட்டுரைகள் எழுதுதல் முதலியவற்றைக் கற்றுக்கொண்டார் பெஞ்சமின் பிராங்க்ளின். அவரைப் பொறுத்தவரை அந்த அச்சகமே அவருக்குத் தொடக்க காலத்தில் கல்வி கற்பித்த பல்கலைக்கழகமாயிருந்தது.
கட்டுரைகள் எழுதக் கற்றுக்கொண்ட பெஞ்சமின் பிராங்க்ளின், அத்தோடு நிற்கவில்லை. ’சைலன்ஸ் டோகுட்’ (Silence Dogood) எனும் புனைபெயரில் தாமே இரகசியமாகக் கட்டுரைகள் எழுதி அண்ணனின் நாளிதழில் வெளியிட்டுவந்தார். அவரின் கட்டுரைகள் பரவலாக வாசகர்களின் பாராட்டுக்களைப் பெறலாயின. தம்பி புனைபெயரில் ஆக்கங்கள் வெளியிடுவதை ஒருநாள் அறிந்துகொண்டுவிட்டார் அண்ணன் ஜேம்ஸ் பிராங்க்ளின்.
தம்பியைப் பாராட்டி, எழுத ஊக்குவித்தாரா என்றால் இல்லை! ”தம்மிடம் அச்சுக்கோக்கக் கற்றுக்கொண்ட சிறுவன் எழுத்தாளராகிப் பொதுமக்களின் பாராட்டைப் பெறுவதா?” எனும் அழுக்காறு அவருள் பொங்கியெழுந்தது. கட்டுரைகள் எழுதி வெளியிடக்கூடாது என்று பெஞ்சமின் பிராங்க்ளினுக்குத் தடைவிதித்தார். அதனால் வருத்தமுற்ற பெஞ்சமின், தம்முடைய 17ஆவது வயதில் பாஸ்டன் நகரத்தைவிட்டே வெளியேறினார். பதின்ம வயதில் அவரெடுத்த மிகத் துணிச்சலான முடிவு அது என்றே கூறவேண்டும். சுதந்திரமாகத் தாம் விரும்பியதைச் செய்வதற்கு அவருக்கு அப்போது வேறு வழியேதும் இருக்கவில்லை. எனவே தம்மிடமிருந்த சொற்பப் பணத்துடன் பாஸ்டனிலிருந்து வெளியேறி இலண்டனுக்குச் சென்று அங்குக் கிட்டத்தட்ட இரண்டாண்டுக் காலம் தங்கி அச்சகங்களில் பணியாற்றியும், அப்பணிசார்ந்த திறன்களை மேம்படுத்திக்கொண்டும் பென்சில்வேனியா மாகாணத்திலிருந்த பிலடெல்பியாவுக்குத் திரும்பினார்.
அச்சுத்துறையில் தமக்கிருந்த அனுபவம் காரணமாக விரைவிலேயே ஓர் அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். முதலாளியிடம் நல்ல பெயர் வாங்குவதே அப்போது அவரின் முதன்மையான நோக்கமாக இருந்தமையால் தம் எழுத்தாற்றலை வெளிப்படுத்த அவர் முனையவில்லை; கடுமையாய் உழைத்தார்; கையில் ஓரளவுக்குக் காசு சேர்ந்தபின் 1728இல் ஓர் அச்சகத்தை விலைக்கு வாங்கினார். விற்பனையில் தடுமாறிக்கொண்டிருந்த ’பென்சில்வேனியா கெஜட்’ (Pennsylvania Gazette) எனும் நாளிதழையும் 1729இல் வாங்கினார். அதில் தாமே பல கட்டுரைகளை, பத்திகளைப் பல்வேறு புனைபெயர்களில் எழுதி வெளியிடவே அந்நாளிதழின் விற்பனை சூடுபிடித்தது.
’ரிச்சர்டு சாண்டர்ஸ்’ (Richard Saunders) எனும் புனைபெயரில் பெஞ்சமின் பிராங்க்ளின் ஆண்டு வெளியீடாகக் கொண்டுவந்த ’Poor Richard’s Almanack’ எனும் வானியல் குறிப்புகள், பொன்மொழிகள், அறிவுரைகள் அடங்கிய பதிப்பு அக்காலத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று மிக அதிக அளவில் விற்றுத் தீர்ந்தது. இவ்வாறு 26 வெளியீடுகள் (1732–1758) வந்தன. இப்பதிப்புகளால் பெஞ்சமினின் பொருளாதார நிலை உயர்ந்தது. தமக்குக் கிடைத்த வருவாயைப் புதிய அச்சு எந்திரங்கள் வாங்குவது, அறிவியல் ஆய்வுகளுக்கான கருவிகள் வாங்குவது போன்ற பணிகளுக்குச் செலவிட்டார் அவர்.
அறிவியல் ஆய்வுகளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?
குழந்தைப் பருவம் முதலே சுற்றுச்சூழலைக் கூர்மையாக அவதானித்தல், இயற்கைத் தத்துவம், மின்சாரம், எந்திரவியல் சார்ந்த நூல்களை ஆர்வத்துடன் கற்றல் போன்றவை பெஞ்சமின் பிராங்க்ளினின் இயல்புகளாக இருந்தன. இவற்றால் அவரின் அறிவியல் ஆய்வு மனநிலை தூண்டப்பட்டாலும் அப்போதைய வாழ்க்கைச் சூழலும், பொருளாதார நெருக்கடிகளும் அவரை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட அனுமதிக்கவில்லை. ஆதலால் தேர்ந்த எழுத்தாளராகித் தம் படைப்புகள் நன்கு விற்பனையாகவே அவ்வருமானத்தைக் கொண்டு அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டார்.
வீட்டை வெப்பமாக்குவதற்கு உதவும் பிராங்க்ளின் அடுப்பு (The Franklin Stove – 1740s), இடிதாங்கி (Lightning Rod-1752), இரட்டைக் குவியக் கண்ணாடி (Bifocal Glasses – 1784) போன்றவை அவரின் அறிவியல் கண்டுபிடிப்புகளுள் சில. இவ்வாறு அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி உலகப் புகழ்பெற்றார் பெஞ்சமின் பிராங்க்ளின். தம் அறிவுசார் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் பயனளிக்கவேண்டும் எனும் உயர்ந்த நோக்கில் அவை எவற்றுக்குமே அவர் காப்புரிமை (patent) பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த காலமது. 1730களில் மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்தார் பெஞ்சமின் பிராங்க்ளின். 1751இல் பென்சில்வேனியா சட்டமன்றத்தின் உறுப்பினராக அவர் தெரிவுசெய்யப்பட்டார். தற்சார்புள்ள காலனிய ஆட்சியை உருவாக்குதல், இங்கிலாந்து அமெரிக்காவை நியாயமான வகையில் நடத்துவதற்கான செயல்களில் ஈடுபடுதல், காலனித்துவ நலன்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் வகையில், காலனித்துவ முகவராக (a colonial agent) 1757 முதல் 1775 வரை, அவர் இலண்டனில் வசித்தார்.
ஆனால் இங்கிலாந்து தொடர்ந்து அமெரிக்கக் காலனிகள்மீது கடுமையாக வரி விதிப்பது, காலனிகளில் வசித்த மக்களின் குறைகளைப் புறக்கணிப்பது, கடுமையான தண்டனைகளை வழங்குவது போன்ற முறையற்ற அடக்குமுறைகளில் ஈடுபடவே, காலனிகள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அவை இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெறவேண்டும் எனும் முடிவுக்கு வந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.
1775இல் இங்கிலாந்துக்கும் இங்கிலாந்தின் செயற்பாடுகளால் அதிருப்தியுற்ற அமெரிக்கக் காலனிகளுக்குமிடையே அமெரிக்கப் புரட்சிப் போர் (American Revolutionary War) தொடங்கியது.
1775இல் பெஞ்சமின் பிராங்க்ளினும் அமெரிக்கா திரும்பிவிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான சுதந்திரப் பிரகடனத்தை (Declaration of Independence) ஜூன், 1776இல் அமெரிக்கா உருவாக்கத் தொடங்கியது. அந்தப் பிரகடனத்தை உருவாக்க நியமிக்கப்பட்டிருந்த தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson), ஜான் ஆடம்ஸ் (John Adams), ரோஜர் ஷெர்மன் (Roger Sherman), இராபர்ட் லிவிங்ஸ்டன் (Robert R. Livingston) ஆகிய நால்வரோடு இணைந்து பெஞ்சமின் பிராங்க்ளினும் (Benjamin Franklin) பணியாற்றினார். இவர்களை ஐவர் குழு (the Committee of Five) என்பர். சுதந்திரப் பிரகடனத்தின் பெரும்பான்மையான பகுதிகளை தாமஸ் ஜெபர்சன் எழுத, அவற்றில் திருத்தங்கள் செய்வது, தெளிவுக்காகச் சிலவற்றைச் சேர்ப்பது போன்றவற்றை பிராங்க்ளின் மேற்கொண்டார்.
1776, ஜூலை 4இல் அமெரிக்கச் சுதந்திரத்திற்கான பிரகடனம் முறையாக காண்டினெண்டல் காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெஞ்சமின் பிராங்க்ளின் பிரான்சுக்கான அமெரிக்கத் தூதராக அதே ஆண்டு திசம்பரில் நியமிக்கப்பட்டார். பிரான்சுடன் நல்லுறவைப் பேணி அந்நாட்டிடமிருந்து அமெரிக்கப் புரட்சிப் போருக்கான ஆதரவையும், படையுதவி, பொருளாதார உதவி, போர்த்தளவாடங்கள் முதலியவற்றையும் பெற்றார். பிப்ரவரி 6, 1778இல் அமெரிக்கா பிரான்சுடனான கூட்டணி ஒப்பந்தமும் (The Treaty of Alliance with France) செய்துகொண்டது.
அமெரிக்காவுடன் பிரான்சும் கைகோத்து இங்கிலாந்துக்கு எதிரான போரில் இறங்கியதால் அமெரிக்கா இங்கிலாந்தை வீழ்த்துவது எளிதானது. 1783இல் அமெரிக்காவைச் சுதந்திர நாடாக இங்கிலாந்து ஏற்றுக்கொண்டது.
இவ்வாறு அமெரிக்கா சுதந்திர நாடாவதற்கு பெஞ்சமின் பிராங்க்ளின் இராஜதந்திரத்தோடு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அதனைத் தொடர்ந்து 1787இல் அமெரிக்காவுக்கான அரசியலமைப்பு (constitution), ஜேம்ஸ் மேடிசனின் (James Madison) முதன்மையான பங்களிப்பில் வடிவமைக்கப்பட்டது. ஜேம்ஸ் மேடிசனை ’அமெரிக்க அரசியலமைப்பின் தந்தை’ என்பர்.
பிராங்க்ளின் உள்ளிட்ட 39 பிரதிநிதிகள் செப்டம்பர் 17, 1787 அன்று அதில் கையெழுத்திட்டுப் புதிய தேசத்தின் அடித்தளத்தை முறையாக நிறுவினர்.
அமெரிக்கா இங்கிலாந்துக்கு எதிரான புரட்சிப்போரில் வெற்றிபெற்றுச் சுதந்திர நாடாவதற்கும், அதன் அரசியலமைப்பு உருவாக்கத்திற்கும் பெரும் பங்களிப்புச் செய்தமையால் அமெரிக்க உருவாக்கத் தந்தையருள் ஒருவராக (One of the Founding Fathers of America) போற்றப்படுகின்றார் பெஞ்சமின் பிராங்க்ளின்.
1749இல் அவர் உருவாக்கிய பிலடெல்பியா கலைக்கழகம் (Academy of Philadelphia) என்று பென்சில்வேனியாப் பல்கலைக்கழகமாக (University of Pennsylvania) உயர்ந்து நிற்கின்றது. அமெரிக்காவின் முதல் பொதுநூலகத்தை, சிறுதொகையைச் சந்தாவாகக் கட்டி மக்கள் பயன்பெறும் வகையில், 1731இல் பிலடெல்பியாவில் அவர் நிறுவினார் (America’s first subscription library).
கடின உழைப்பு, விடாமுயற்சி, தடைகளுக்கு அஞ்சாத் துணிவு, தொடர் கற்றலில் ஆர்வம், எழுத்தாற்றல், சமூக முன்னேற்றத்தில் நாட்டம், நாட்டுப்பற்று போன்ற திறன்கள் ஒருவரை எத்தகு மாமனிதராக உயர்த்தும் என்பதற்கு பெஞ்சமின் பிராங்க்ளினின் வாழ்க்கை வரலாறு தெளிவான சான்றாகும்.
*****
கட்டுரைக்கு உதவியவை:
1. britannica.com/biography/Benjamin‑Franklin
2. https://www.bbc.co.uk/history/historic_figures/franklin_benjamin.shtml
3. https://en.wikipedia.org/wiki/Benjamin_Franklin
