பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 23
63 நாயன்மார்கள் வரலாறு – 21. பெருமிழலைக் குறும்ப நாயனார்


கொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக்
கோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார்சீ
ரண்டர்பிரா னடியவருக் கடியா ராகு
மாதரவா லணுக்கவன் றொண்டர்க் காளாய்
மண்டொழுமெண் டருசித்தி வாய்த்து ளார்தாம்
வன்றொண்டர் வடகயிலை மருவு நாண்மு
னெண்டிகழு மறைமூல நெறியூ டேகி
யிலங்கொளிசேர் வடகயிலை யெய்தி னாரே.
இயற்கை அழகு களிக்கூத்தாடும் திருநகரில் தோன்றிய நாயனார் பெருமான் இவர். தற்போது புதுக்கோட்டை என்று அழைக்கப்படும் நகரின் அண்மையில் அமைந்துள்ள தொன்மையான நாடு மிழலை நாடு. பெருமிழலை என்பது இந்நாட்டின் தலைநகரம். மா, பலா, வாழை, தென்னை, பாக்கு போன்ற வளமான சோலைகள் சூழ்ந்த அழகிய நகரம். இத்தகைய சிறப்பு மிக்க பெருமிழலையில் வாழ்ந்த பெரியவர் மிழலைக் குரும்பனார். குரும்பர் என்ற மரபின் குறுநில மன்னர்கள் அக்காலத்தில் வாழ்ந்திருந்தனர். இவர்கள் வழி வந்தவரே மிழலைக் குரும்பனார். ஊர்ப்பெயரும், நாட்டின் பெயரும் இணைந்து பெருமிழலைக் குரும்பர் என்று இவர் பெயர் வழங்கலாயிற்று.
சூதம்நெருங்கு குலைத் தெங்கு
பலவும் பூகஞ்சூழ் புடைத்தாய்
வீதிதோறும் நீற்றின் ஒளிவிரிய
மேவி விளங்கு பதி
நீதிவழுவா நெறியினராய் நிலவும்
குடியால் நெடு நிலத்து
மீதுவிளங்கும் தொன்மையது மிழலை
நாட்டுப் பெரு மிழலை
சிவனடியார்களுக்குத் தேவையான தொண்டினை அவர்கள் கேட்காமலேயே அவர்தம் குறிப்பறிந்து தொண்டாற்றும் குணம் படைத்தவர் பெருமிழலைக் குரும்ப நாயனார். நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அச்சேவையின் இன்பத்தை தனது முதன்மையான கடமையாகக் கருதி நாடினார். நம்பியாரூரர் எனும் பெருமகனாரைத் தம் குருநாதராக ஏற்றிப் போற்றியவர். அவரை கையாற்தொழுது, வாயாற் புகழ்ந்து, கருத்தால் எண்ணி நெகிழ்ந்து வழிபடுபவர். நம்பியாரூரரின் திருநாமத்தை உச்சரித்தவாரே மணிகண்ட சேவடியைச் சேர்ந்து உய்யும் உயரிய நெறியைக் கண்டறிந்தவர். இதன் காரணங்கொண்டே அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டமாசித்திகளும் கைவரப் பெற்றார். சிவபெருமானின் திருநாமம் ஐந்தெழுத்தால் ஆனது போல் நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் ஐந்தெழுத்தால் ஆனது. குருபஞ்சாச்சரம் என்ற திருநாமத்தால் குறிப்பிடுவர். இவ்வரிய அட்டமாசித்திகளை, அப்பூதியடிகள் திருநாவுக்கரசு என்ற குருநாமத்தை எழுதியும், சொல்லியும், இடையறாது தியானித்தும் திருவருளைப் பெற்றார்.
நாளும் நம்பி ஆரூரர்
நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி
சித்தியான அணைந்த அதற்பின்
மூளும் காதலுடன் பெருக
முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம்
பரிசு வாய்ப்பக் கெழுமினார்.
இவ்வாறு அளவற்ற பக்தியுடன் குரும்ப நாயனார் அடியவர்களுக்குத் தொண்டு செய்தும், குருநாதர் திருவடிகளைத் தொழுதும் நிறைவாக வாழ்ந்துவந்தார். வன்தொண்டர் நம்பியாரூரர் சேரர் தலைநகரான, சேரமான் பெருமாள் நாயனாரால் ஆளப்பட்ட கொடுங்கோளூரை அடைந்தார். திருவஞ்சைக்களத்திலுள்ள இறைவனைத் தொழுது பதிகம் பாடினார். அப்பதிகம் பாடும்வரை தனக்கு நடக்கப்போகும் அற்புத நிகழ்வான திருக்கயிலை வாசம் கிடைக்குமென அறியார் ஆரூரர்.
அஞ்சைக் களத்து நஞ்சுண்ட
அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ் மாலைகள்
மொழியத்தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வடகயிலைப்
பொருப்பில் எய்தவரும் வாழ்வு
நெஞ்சில் தெளியஇங்கு உணர்ந்தார்
நீடு மிழலைக் குறும்பனார்.
தம் பதிகத்தின் எட்டாவது பாடலாக,
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்
விளங்கும் குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத்
தலை பத்தொடு தோள் பல இற்று விழக்
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம்
கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று
அறுத்தாய் கடலங்கரை மேல்மகோதை
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.
என்ற பாடலைப் பாடியபோது எம்பெருமான் கயிலைமால் வரையிலிருந்து வெள்ளானையை அனுப்பி வைத்தார். அந்த வெள்ளானையின் மீதேறி நம்பியாரூரர் கயிலைமால் வரைக்குச் சென்றார். பெருமிழலைக் குரும்பர் தம் யோகநெறியால் சுந்தரர் மறுநாள் கயிலை செல்வார் என்பதையும் உணர்ந்தார். தம் சீடர் அறிந்த இந்த அரிய செய்தி, சுந்தரர் பெருமானுக்கே தாம் மறுநாள் கயிலை செல்லப் போகிறோம் என்று அறியார். ஆனால் இதையறிந்த பெருமிழலைக் குரும்ப நாயனார் தமது குருவான நம்பிஆரூரர் இல்லாத ஊரில் தமக்கென்ன வேலை, கண்ணின் மணியிழந்து ஒளியின்றி வாழும் சில குருடர்களைப்போல தன்னால் வாழ முடியாது என்று உறுதி பூண்டார். தம் அகக்கண்களை இழந்து இருண்ட உலகில் வாழ முடியாது என்று எண்ணினார்.
மண்ணில் திகழும் திருநாவலூரில்
வந்த வன் தொண்டர்
நண்ணற்கு அரிய திருக்கயிலை
நாளை எய்தநான் பிரிந்து
கண்ணில் கரிய மணிகழிய
வாழ்வார் போலவாழேன் என்று
எண்ணிச் சிவன்தாள் இன்றேசென்று
அடைவன் யோகத்தால் என்பார்
இன்றே சிவன்தாள் சென்றடைவேன் என்று உறுதியாக நின்றார். தம் யோகப்பயிற்சியினால் பிரமநாடி வழி பிராணவாயுவைச் செலுத்தி நல்லறிவு மேற்கொண்டு மதிமண்டலத்தில் செலுத்திப் பிரவணத்தார் திறக்கப்பட கபால நடுவாயிலின் மூலம் முதல்வர் திருப்பாதங்களை அடைந்தார். சிவயோக நெறி நின்ற பெருமிழலைக் குரும்ப நாயனார் கருவி காரணங்களை ஒருமுகப்படுத்தி சுழுமுனை நாடி வழியே பிராணவாயுவைச் செலுத்திப் பிரம்மாந்திரம் வழியே சென்று மேலைப் பெருவழிச் சார்ந்து கபாலத்தினைத் திறந்து ஒளி வடிவாகத் திருக்கயிலையைச் சென்று அடைந்தார்.
நாலு கரணங்களும் ஒன்றாய்
நல்ல அறிவுமேல் கொண்டு
காலும் பிரமநாடி வழிக்கருத்துச்
செலுத்தக் கபால நடு
ஏலவே முன்பயின்ற நெறிஎடுத்த
மறை மூலம் திறப்ப
மூல முதல்வர் திருப்பாதம்
அணைவார் கயிலைமுன் அடைந்தார்
பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம் சொல்லும் கருத்து
குருவே சிவம்!
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனவடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே
தெளிவு குருவின் றிருமேனி காண்ட
றெளிவு குருவின்றிருவார்த்தை கேட்ட
றெளிவு குருவின் றிருநாமஞ் செப்ப
றெளிவு குருரூபஞ் சிந்தித்த றானே
எனத் திருமந்திரத்திற் கூறுமாற்றால் அறிகிறோம். பிரபஞ்சப் பேராற்றலின் திருவருளை எளிமையாகப் பெறக்கூடிய சிறப்பான சாதனம் குருவருள். குருவின் திருவருளால் வேண்டும் அனைத்தும் பெறலாம். குரு நேரடியாகத் தோன்றாவிட்டாலும், குருவை மனத்தால் நினைந்து வழிபட்டு பெறவேண்டியவற்றைப் பெறலாம். துரோணரை மானசீகமாகக் குருவாகக் கொண்ட ஏகலைவன் வித்தையில் அர்ச்சுணனைவிட ஆற்றல் மிக்கவனாக விளங்கினான்.
மின்சார விளக்கு எரிவதற்கும், எரியாமல் இருப்பதற்கும் அமுத்தான் (சுவிட்ச்) அவசியத் தேவையாக உள்ளது. நம் ஆன்மா எனும் விளக்கு இறையருள் எனும் ஒளியைப் பெற குருவருள் எனும் அமுத்தான் அவசியமாகிறது!
திருச்சிற்றம்பலம்
