சேக்கிழார் பா நயம் – 59 (மன்பெரும்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
திருவாரூரில் பரவை நாச்சியாரைச் சந்தித்து மகிழ்ந்த சுந்தரர், இறைச் சிந்தனையுடன் ஆரூர்ப் பெருமானின் திருக்கோயில் நோக்கி நடந்தார். அத்திருக்கோயில் வாயிலில் அடியார்கள் விளங்கும் தேவாசிரிய மண்டபம் விளங்கியது! பெருமானாகிய தேவதேவரை அடியார்கள் ஆசிரயித்த தேவாஸ்ரய மண்டபம் அது. அங்கிருந்த அடியார்களை வணங்கி, அவர்களின் தொடர்பைப் பெறுவது என்றோ, என்றெண்ணி மிகுந்த பணிவுடன் அவர்களைக் கடந்து திருக்கோயிலுள் புகுந்தார்.
‘நான் இந்த அடியார்களுக்கு அடியேனாவேன்’ என்னும் அன்பு தமது திருவுள்ளத்திலே மேலிட்டெழக், கொடிகள் கட்டியதாய், நெடியதாய், வெற்றியேதருவதாய் உள்ள உட்கோபுரத் திருவாயிலைப் பணிந்து, கைகளைச் சிரமேற் கூப்பிக்கொண்டு, திருக்கோயிலினுள்ளே நம்பிகள் புகுந்தார். அப்போது அழகிய, மணமிக்க கொன்றை மாலையை அணிந்த தோற்றத்துடன் தியாகேசர், சுந்தரர் எதிர்க்காட்சி காணும் வகையில் எழுந்தருளினார். கண்ணெதிரே காட்சி யருளிய பெருமானின் திருப்பாதங்களைக் கண்கொண்டு கண்ட மகிழ்ச்சியில் திளைத்த சுந்தரர், அவற்றைச் சிரமேற்கொண்டு நான்கு திருப்பாடல்களால் துதித்தார். அவற்றுள் முதல் திருப்பாட்டு,
மன்பெ ருந்திரு மாமறை வண்டுசூழ்ந்து
அன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை
நன்பெ ரும்பர மானந்த நன்மது,
என்த ரத்தும் அளித்துஎதிர் நின்றன.
என்பதாகும். சிவனடியாரின் உள்ளமாகிய தாமரையைச் சுற்றி வண்டுகள் சூழ்ந்து வேதங்களை ஒலித்து ரீங்காரம் செய்யும். அப்போது அவர்களின் உள்ளக் கமலத்தில் பரமானந்தமாகிய தேன் ஊறித் ததும்பும். அத்தகைய தகுதியைப் பெறாத எளியேனுக்கும் அதனை வழங்க என் கண்முன் இறைவனின் திருப்பாதங்கள் தாமாக எதிரே வந்து காட்சியளிக்கின்றன.
விளக்கம் :
உலகியற் செல்வங்கள் எல்லாம் மிகுந்த முயற்சியால் கிட்டலாம். அவை நம்மை அறவழியில் செலுத்தமாட்டா. விரைவில் அழியும். ஆனால் இறைவன் திருவருளாகிய, அளவிடற்கரிய நிலைத்த பெருஞ் செல்வத்தை தகுதியால் பெரிய வேதங்கள் எளிதாக நமக்கு அளிக்கும்! வேதம் அளிக்கும் செல்வம் செம்மைக்கு ஏதுவான செல்வமாகும். இதனை தேவாரம் ‘’சென்றடையாத திரு‘’ என்று போற்றும். விரிந்த மறை, நிலைத்த மறை, பெருந்திருவைத் தருகின்ற மறை, அளவில்லாத மறை என்ற நான்கு அடைமொழிகள் நான்கு மறைகளைக் குறித்தன. யசுர் வேதத்தின் இடையில் ‘சிவ’ என்னும் அட்சரத் துவயமாகிய தேன் விளங்குவதாகப் பெரியோர் கூறுவர். அவற்றை வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கின்றன. சூழ்ந்து என்பதற்கு ஆராய்ந்து என்றும் பொருள்.
பாதத் தாமரையை எண்ணி மகிழும் மனத்துள் சிவத்தேன் தானாக ஊறிப் பெருக, மனம் அதனையே உண்ணும். வண்டுகளோ புறத்தில் சூழ்ந்து கிடக்கும். இதனைச் சேக்கிழார்,
“மன்று ளாடும்மது வின்னசை யாலே
மறைச்சு ரும்பறைபுறத்தின் மருங்கே“
என்று முன்னரே பாடினார். பட்டினத்தடிகள் ,
“கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என் சிந்தைப்
பாழ் அறை உனக்குப் பள்ளியறை ஆக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு
எந்தை நீயிருக்க விட்டனன்..”
என்று பாடினார். மேலும் அப்பர் பெருமான்,
“அன்புடைத் தொண்டர்க்கு அமுதருத்தி, இன்னல் களைவன“
“சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன், முந்திப் பொழிவன“
என்று பாடியுள்ளார். இவ்வலர்ந்த தாமரையிலே ஊறுவது இறைவனது திருவடியாகிய மது – தேன். அது தருவது பரமானந்த அநுபவமாம். இவ்வாறன்றிச் சிந்தையிலே அலர்ந்த செந்தாமரை எனக் கொண்டு சிந்தையை அந்தத் தாமரைபூக்கும் நீர் நிலையாகக் கூறுவாருமுளர். அவர்கள்,
“……..அன்பர் இதய மென்னும், செழுமலரோ டையின்மலர்ந்து
சிவானந்தத் தேன்றதும்பு தெய்வக் கஞ்சத், தொழுதகு சிற்றடி…..“ (விருத்தகுமார பாலரான படலம்) என்று திருவிளையாடற் புராணமுடையார் இதற்குப் பொருள் கூறியிருத்தலைக் கூறுவர்; அன்றியும் மது தாமரையினுட்கலந்து அது அலர, அலர உள்ளே ஊறுவதுபோலச் சிந்தையுட் கலந்த திருவடியே அன்பு முதிர முதிர ஆனந்தமாய் ஊற்றெடுப்பதாம். எனவே திருவடியையே மதுவாகக் கூறினர் என்பது.
நன் பெரும் பரமானந்த நன்மது – வேதத்திலே ஏனைத் தேவர்கள் பெயரோடு சேர்த்து விஷ்ணுவானந்தம் – அக்கினியானந்தம் – இந்திரானந்தம் முதலியன கேட்கப் பெறாமையானும், சிவானந்தம் ஒன்றே கேட்கப்பெறுதலானும், சிவானந்தமே பரமானந்தம் என்க. ஆதலின் பிரமானந்தம் என்பதிற் பிரமசத்தமானது பிரமனைக் குறிக்காது பரப்பிரமமாகிய சிவத்தையே குறிப்பதாம் என்றுங் காண்க. நல் – என்ற இரண்டில் முன்னையது ஆனந்தத்திற்கும், பின்னையது மதுவுக்கும் அடைகளாம். பரமானந்தமாவது – உயர்வு ஒப்பு இல்லாததும் அழிவில்லாததும் ஆகிய சிவத்துவ விளக்கமாம். அதனை அழுந்தியறிதலே அநுபவமெனப்படும். “இன்பமே எந்நாளுந் துன்பமில்லை“ என்றது திருவாக்கு. பெருமானது அருளிப்பாடுகள் தம்மிடம் வெளிப்பட நிகழக் கண்டபோது தமது சிறுமையையும், அவரது அளவிறந்த பெருமையையும் எண்ணி எண்ணி ஆராமைப்பட்டு அநுபவித்தல் பெரியோரியல்பு. ஆகவே பெறச் சிறிதும் தரம் இல்லாத என்னிடத்திலேயும், கருணையினால் கொடுத்து எனவும் குறிப்பிட்ட அழகு நினைந்து மகிழ்தற்கு உரியது
‘’இத்தனையும் எம்பரமோ ஐய, ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே ‘’
என்ற அப்பர் பெருமான் தேவாரமும்,
‘’யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை – யாவரும்
பெற்றரியா இன்பத்துள் வைத்தாய்க்கு …..’’
என்ற திருவாசகமும் காண்க . இனி முழுப்பாடலையும் படித்துப் பயன் பெறுவோம்.
மன்பெ ரும்திரு மாமறை வண்டுசூழ்ந்து
அன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை
நன்பெ ரும்பர மானந்த நன்மது
என்த ரத்தும் அளித்தெதிர் நின்றன!
இத்திருவடிச் சிறப்பை அடுத்த வரும் பாடல்கள் கூறும்.