அஞ்சலி: இராமச்சந்திரன் காளஹஸ்தி
களப்பணியில் சூரரின் நினைவைப் போற்றுவோம்.
அண்ணாகண்ணன்
நோக்கர் என்ற குழுமத்தை 2018 பிப்ரவரி 24 அன்று முகநூலில் (Facebook) தொடங்கினேன். மொழிச் சூழலில் உள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவதும், குறை-நிறைகளை விவாதித்துப் பரிந்துரைகள் வழங்குவதும் இந்தக் குழுமத்தின் முதன்மையான பணிகள். இதில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இராமச்சந்திரன் காளஹஸ்தி அவர்கள், 27.11.2019 அன்று தமது 57ஆவது வயதில் மறைந்தார். அவருடனான என் அனுபவங்கள் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.
சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர் இராமச்சந்திரன், இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்தார். அதற்குள் உலகிலிருந்தே ஓய்வு பெற்றது, ஆறாத் துயரளிக்கிறது.
ஓய்வு பெற்றதும் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டிருப்பார். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அடிக்கடி சென்று உதவுபவர். பலருக்கும் தேடிச் சென்று உதவியவர். இனிய பண்பாளர். செய்யும் பணியை அக்கறையுடனும் நேசித்தும் செய்தவர்.
செல்லும் இடங்களில் எல்லாம் எங்கே எந்தப் பலகையில், சுவரில், பதாகையில் பிழை கண்டாலும், உடனே படமெடுத்து, நோக்கரில் பகிர்ந்து வந்தார். அவரது தாய்மொழி தெலுங்கு என்றபோதும், தமிழில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்தார்.
இராமச்சந்திரன் காளஹஸ்தியிடம் நான் வியந்த இன்னோர் இயல்பு, அவரது அர்ப்பணிப்பு. முகநூலில் ஏழு ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் அவருடன் சற்று நெருங்கிப் பழகினேன்.
நோக்கரைத் தொடங்கிய பிறகு, எல்லோரையும் அழைப்பது போல் இவரையும் அழைத்தேன். இந்தக் குழுவின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட இவர், தாமாகவே கண்ணில் படும் பிழைகளை எல்லாம் படம் எடுத்துச் சுட்டிக் காட்டினார். நான் பல நேரங்களில் இணையத்தின் வழியாக இ-பேப்பர்களைப் படித்துச் சுட்டிக் காட்டுவேன். இவரோ, தாம் செல்லும் இடங்களில் காணும் பிழைகளை நேரடியாகக் களத்திலிருந்து படம் எடுத்துப் பதிந்தார். நானும் இப்படி எடுத்துப் போடுவது உண்டு என்றாலும், இதில் எல்லோரையும் வென்று இவர் முன்னணியில் நின்றார்.
இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, ஒரு பிழை தென்பட்டால், வாகனத்தை நிறுத்தி, உரிய கோணம் பார்த்துப் படம் எடுக்க வேண்டும். கடைக்காரர் அல்லது பக்கத்தில் இருப்பவர் எதற்காக எடுக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அவர்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டும். பிறகு உரிய இடத்திற்குச் சென்ற பிறகு, உட்கார்ந்து அதில் உள்ள பிழையைச் சுழிக்க வேண்டும். அதன் பிறகு நோக்கரில் பகிர வேண்டும். இவ்வளவையும் இவர் தானாகவே, யாரும் சொல்லாமலே செய்து வந்தார்.
அவருடைய பங்களிப்புகளைப் பார்த்த பிறகு, அவரை ஒரு நாள் அழைத்து, நீங்கள் நோக்கரின் நிர்வாகியாக இருந்து செய்யுங்கள் என்றேன். இன்னும், என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள் என்றார். இப்போது செய்வதையே தொடருங்கள் என்றேன்.
அடுத்து, இதில் உள்ள பெரும்பாலான இடுகைகளுக்கு அவர் விருப்பக் குறி அல்லது இதயக் குறி இடுவார். பதிவுகளுக்கு மட்டுமின்றி, அதில் உள்ள முக்கிய பின்னூட்டங்களுக்கும் இதே போல் சளைக்காமல் விருப்பக் குறி இடுவார்.
சில நாள்களில் நான் வேலைப் பளு காரணமாக ஏதும் இட முடியாத நிலையில், என்னிடமிருந்து பதிவு ஏதும் வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டு, நான் ஏதும் சொல்லாமலே, தாம் எடுத்து வந்த படங்களைப் பகிர்ந்து, குழுமத்தில் உரையாடலைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்.
நோக்கரை இன்ஸ்டாகிராமுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், யுடியுப் அலைவரிசை தொடங்க வேண்டும், நோக்கர் இணையத்தளத்தை உருவாக்க வேண்டும், சிறந்த விளம்பர வாசகங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்…. என நான் எதைச் சொன்னாலும் செய்துவிடலாம், நான் ஓய்வு பெற்றதும் எடுத்துச் செய்கிறேன் என்பார். மேலும், எந்தப் புதிய யோசனையை அவரிடம் சொன்னாலும் செய்துவிடலாம் நண்பரே என உற்சாகமாகச் சொல்லுவார். இந்தத் தொண்டுள்ளம் மிக அரியது.
அவருடைய நண்பர்கள் பலரை எனக்கும் பலருக்கு நோக்கரையும் அறிமுகம் செய்வித்தார். நோக்கரின் தொடக்கக் காலத்தில் அதில் அவரது தொடர்பிலிருந்து 100க்கும் மேலானவர்களை இணைத்தார்.
பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று நேரடிப் பயிற்சிகள் அளிக்கலாம். போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கலாம் என்றார்.
ஒரு நல்ல முயற்சிக்குத் தாமாக முன்வந்து தோள்கொடுக்கும் இராமச்சந்திரன் போன்றோர், இன்றைய சுயநலம் மிகுந்த உலகில் மிக அரிதானவர்கள்.
நோக்கரில் மட்டுமின்றி மத்யமர், சீர், வாசிப்போம் உள்ளிட்ட பல குழுமங்களில் துடிப்பாக இயங்கி வந்தார். அவரது மறைவு, தமிழுக்கும் நண்பர்களுக்கும் பேரிழப்பு. இராமச்சந்திரன், நம் நினைவுகளில் என்றென்றும் வாழ்வார். களப்பணியில் சூரரின் நினைவைப் போற்றுவோம்.