ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசனும் – 6

வாழ்க்கை என்பது நாம் அனைவரும் எண்ணியது போல நடப்பது இல்லை.
ஏதேதோ இலட்சியங்களை வகுத்துக்கொண்டு எமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாலும் அது அனைத்தையும் அடைந்துவிடுவது என்பது முடியாத காரியம்.
ஓட்டப் போட்டியில் ஓடும்போது இருவர் ஒரே கோட்டில் ஆரம்பித்தாலும் ஓட்டத்தில் திறமை மிக்கவர் யாரோ அவர் வென்று விடுகிறார்.
வென்றவர் திரும்பி, தோற்றுப் போனவரைப் பார்த்து எள்ளி நகையாடுவது ஓட்டப் பந்தயத்தில் வேண்டுமானல் நிகழலாம் ஆனால் வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் ஒருமுறை ஜெயித்தவர் எப்போதும் ஜெயித்துக் கொண்டிருப்பார் என்பதுவோ இல்லையானால் தோற்பவர் எப்போதும் தோற்றுப் போவது என்பதோ விதி அல்ல.
வாழ்க்கை எனும் பயணத்தில் அனுபவங்களை அள்ளிப் பருகியவர் எமது கவியரசர்.
வாழ்வின் பாடங்களை ஆன்மீகப் பார்வை கலந்து எமக்கு அள்ளித் தருவதில் கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவரே தான்.
ஆன்மீகத்தின் உண்மை வடிவம் இனம், மதம், மொழி எனும் அனைத்துப் பேதங்களுக்கும் அப்பாற்பட்டது.
வாழ்வின் நிகழ்வுகளின் யதார்த்தமும் அத்தகைய எல்லைக் கோடுகளைக் கடந்த ஒரு ஆன்மீகப் பயணத்தை ஒத்ததே.
நாமனைவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக இவ்வுலகத்தில் பிறப்பெடுக்கிறோம்.
பிறப்பின் நோக்கத்தை பிறந்ததும் மறந்து விடுகிறோம். மறந்ததை நினைவூட்ட மூச்சின் துணை கொண்டு தியானத்தின் துணையோடு ஆன்மாவைத் தொடவேண்டும்.
இந்தத் தேடலின் வழி செல்லும்போது கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல்களில் ஏதாவது ஒரு வரியிலாவது ஆன்மீகத்தைப் புதைத்து வைத்திருப்பார்.
அந்த முத்துகளைக் குடைந்து அவர் பாடல்களுக்குள் தேடுவதற்கான தேடல் கூட ஆன்மீகப் பாதையே !
எதிர்காலம் எனும் 1970ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.
ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த படம்.
கவியரசர் வரிகளுக்கு எம்.எஸ்.வி. ஐயா உயிரூட்ட, டி.எம்.எஸ். ஐயா அவர்களின் குரல் வளத்தில் ஒலித்த அற்புதமான பாடலிது.
ஆன்மீகப் பாதயின் இலக்கின் திசைகாட்டும் பலகை போல எமக்குள் எம்மைப் பயணிக்க வைக்கும் வரிகள்.
சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி எம்மை நாமே புடம் போட்டுப் பார்க்க வைக்கும் ஆழ்ந்த கருத்துக் கனத்துடன் நெஞ்சத்தை நிறைக்கும் வரிகள்.
கவியரசருக்கே உரித்தான காட்சிக்கான பாடலிது என எண்ணத் தோன்றும் வகையில் யாத்திருக்கிறார் இவ்வரிகளை
அள்ளித் தருகிறார் பாருங்கள் அவர்தம் வரிகளை.
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது – வெண்
கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது – உன்
பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது
உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல
ஓட்டப் பந்தயத்தில் ஜெயிப்பது போலல்ல வாழ்வில் இன்று நீ ஜெயித்தது போல் தென்படலாம் ஆனால் பொறுத்திரு மகனே எனக்கும் ஒரு காலம் வரும் என்று கூறுவது மட்டுமல்ல பாவத்தின் மூலம் அடையும் வெற்றி என்பதன் உதாரணமாக என்னவெல்லாவற்றையும் எடுத்து வீசுகிறார் பாருங்கள்.
வாழ்வின் உச்சத்திலிருக்கும் போது கீழேயிருப்பவர்களை உதாசீனம் செய்யக் கூடாது என்று அழகாகப் புரிய வைக்கிறார்.
ஆற்றுக்குள் நாணல் இட்டால்
காட்டுக்குள் ஆட்டை விட்டால்
என்னவென்று முடிவாகும்
ஆசையை முன்னே வைத்துத்
தர்மத்தை பின்னே வைத்தால்
என்னென்ன விளைவாகும்
ஆற்றிலே வீசப்பட்ட நாணல் அவ்வாற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவது போலத்தான் ஆசை எனும் வெள்ளத்துக்கு முதலிடம் கொடுப்போர் அடித்துச் செல்லப்படுவார்கள் என்பதையும், காட்டுக்குள் தனியே விடப்பட்ட ஆடு எப்படி ஒரு புலிக்கோ அன்றிச் சிங்கத்துக்கோ இரையாவது போல் தர்மத்தை மதிக்காமல் அதர்மம் எனும் காட்டுக்குள் நுழைபவரும் அவ்வாட்டின் நிலையை அடைவார்கள் என்று சொல்கிறாரோ எம் வித்தக வினைஞர்.
வாழ்வென்பது ஒரு ஆறானால் அதிலே காலத்தின் கோலத்தால் நாணலைப் போல நாம் வீசப்படலாம் அப்போ மனிதாபிமானம் மிக்கவர்களின் கடமையென்ன என்று சிந்திக்க வைக்கும் முயற்சியாக உதிக்கப்பட்ட வரிகளிவை.
நாடகமேடை ராஜாவானால்
அங்கென்ன அதிகாரம்
நாணயமாக வாழ்வதில்தானே
யாருக்கும் எதிர்காலம்
உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல
நாளுக்கு நாள் மாறிடும் இவ்வுலகம் எனும் நாடகமேடையில் நான் செல்வந்தன் என்று எப்படி இறுமாப்புக் கொள்வது ? அதுகூட ஒரு நாடக மேடையில் ராஜா வேஷம் போடுவது போல ஒரு மாயைதானே ! அகங்காரம் கொண்டவர் தான் இந்த வேசத்தில் கூட அதிகாரத்தைக் காட்டுவார்கள் என்கிறார் எம் கவியரசர். ஒரு மனிதனின் செல்வாக்கும் செல்வந்தத்தனமும் அவன் காட்டும் நாணயமிக்க நடத்தையில் என்கிறார் தமிழன்னையின் தவப்புதல்வன்
ஓடத்தைப் பார்த்த பின்னும்
வெள்ளத்தில் நீந்திச் சென்றால்
சொந்தத்தில் அறிவேது ?
பட்டுத்தான் தேறுமென்றால்
கெட்டுத்தான் மாறுமென்றால்
புத்திக்கு விலையேது
ஒரு மன்னிதனுக்கு இதுதான் சரியான வழி என்று காட்டலாமே தவிர அவனை அவ்வழியில் தள்ளி விட முடியாது. அதை அழகாக எவ்வளவு எளிமையாக ஓடத்தைக் கண்டும் நீந்தித்தான் போகிறான் என்று எடுத்தியம்புகிறார் கவியரசர். இத்தகைய வரிகள் அவர் எண்ணத்திலிருந்து சுரக்க வேண்டுமானல் எத்தனை குடம் குடமாக அனுபவநீரை அவர் அள்ளிக் குடித்திருக்க வேண்டும் ?
“ இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்குண்டு ஏனெனில் எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்” என்று சொல்லும் தைரியம் கொண்டவர் எம் கவியரசர். அதனால் தான் என்னவோ அவர் சிந்தையெல்லாம் அனுபவ முத்துகளாய் முதிர்ந்திருக்கின்றன.
உள்ளத்தில் கோழை
ஊருக்கு வீரன்
இது உந்தன் நிகழ்காலம்
உண்மையைத் தேடி
ஓர்நாள் வந்தால்
ஒளிவிடும் எதிர்காலம்
உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல
ஆகா ! எத்தனை யதார்த்தமான ஒரு கருத்தை இத்தனை எளிமையாய்க் கூறுகிறார். வாழ்வில் நான் கண்ட அனுபவங்களில் வீரனைப் போல் ஜனத்துக்கு மத்தியில் கத்துவோர் பலரின் உள்ளக் கோழைத்தனத்தைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தனது உள்ளத்துக்கு உண்மையை மறைத்து பொய்மையாய் வாழ்பவரே முதல் கோழைகள் என்பதை ஆணித்தரமாகச் சொல்லக்கூடியவர் “வனவாசம்” , “மனவாசம்” என்று தன்னை பகிரங்கமாக அலசி எடை போட்ட கவியரசர் ஒருவரே.
காதல் மன்னன் ஜெமினி கணேசன், பத்மினி அவர்களின் நடிப்பில் வெளிவந்த எதிர்காலம் எனும் திரைப்படத்தில் அமரர்கள்~ டி.எம்.எஸ். இன் குரலிலும், எம்.எஸ்.வியின் இசையிலும் உருவான பாடலுக்கு வரிகளைக் கொடுத்து வண்ண ஓவியத்துக்குக் கண்ணைத் தீட்டுவது போல வடித்துக் கொடுத்தவர் எம் கவியரசர்.
என் இனிய அன்பு உள்ளங்களே ! கவியரசரின் மற்றொரு முத்துடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.
மீண்டும் அடுத்த பாகத்தில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்