-மேகலா இராமமூர்த்தி

வாழ்வின் உறுதிப்பொருள்களாகக் கருதப்படுபவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன. வீடு என்பது உலக வாழ்வில் பற்றறுத்தவர்கள் அடையும் நிலைத்த இன்பம் நல்கும் இடமாய்க் கருதப்படுவது. ”அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்பார் நம்மாழ்வார். ஆனால், உலகப்பற்றை விட்டுவிட இயலாத சாமானிய மக்களுக்கு வீடுபேற்றுக்கான வழியைவிடவும் உலக வாழ்க்கையைச் செம்மையாக நடாத்துதற்கான வழிகாட்டலே தேவையானது. அவர்கள் கவனம் செலுத்தவேண்டியவை அறம், பொருள், இன்பம் எனும் மூன்றுமே. இம்மூன்றிலும் எது சிறந்தது என்று கேட்டால் ஒவ்வொருவரும் அவரவர்க்கு எது சிறந்தது என்று தோன்றுகின்றதோ அதற்கேற்ப விடை பகர்வர்.

வாழ்வினைத் தம் அறிவாலும் அனுபவத்தாலும் நன்கறிந்த அறிஞர் பெருமக்கள் இதுகுறித்து என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம்.

ஈரடியில் வாழ்க்கையின் நீள அகலங்களை அளந்தவரான வான்புகழ் வள்ளுவர்,

”அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்”
(754) என்றும்

”ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு”
(760)

என்றும் கூறித் தீதில்லா நல்வழியில் ஈட்டிய பொருளாகிய செல்வத்தைக் கொண்டு ஒருவன் அறத்தைச் செய்யலாம்; இன்பத்தையும் அடையலாம் என்று நமக்குத் தெரிவிக்கின்றார்; மனத்தைத் தெளிவிக்கின்றார். ஆக, நாம் அறத்தைச் செய்வதாக இருந்தாலும் இன்பத்தைத் துய்ப்பதாக இருந்தாலும் இரண்டுக்குமே அடிப்படைத்தேவை பொருளே என்பதனை இக்குறட்பாக்கள் வலியுறுத்துகின்றன.

ஈரடிக் குறட்கருத்தை நாலடியில், சற்று விரிவாய், விளக்கும் நாலடியார் எனும் நன்னூலும், ”குற்றமில்லா இவ்வுலகில் இன்றியமையாத மூன்றாய்த் திகழ்கின்ற அறம் பொருள் இன்பம் என்பவனவற்றுள் நடுவில் நின்றதான பொருளை ஒருவன் அடைவானாகில் அதன் இரு பக்கத்தனவான அறம் இன்பம் இரண்டையும் அவன் அடைவான். அவ்வாறு நடுவணதை எய்தானாகில் கொல்லன் உலையில் இரும்பையிட்டுக் காய்ச்சுவதுபோல் வறுமைத் துன்பத்தில் நலிவான்” என்று வள்ளுவரின் கருத்தையே வழிமொழிந்து பேசுவதனைக் காணலாம்.

வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலுந் துயர்.
(நாலடி – 114)

பொருட்செல்வமே அறத்துக்கும் இன்பத்துக்கும் ஆதாரம் என்பதனை வள்ளுவமும் நாலடியும் தெளிவுபடுத்தக் கண்டோம்.

அதன் தொடர்ச்சியாய், ”பொருள் மட்டுந்தான் செல்வம் என்ற பெயருக்கு உரியதா?” என்று வள்ளுவரைக் கேட்டால், ”இல்லை, வேறு செல்வங்களும் உள” என்றுரைத்து ஒரு பட்டியலைத் தருகின்றார். அவை வருமாறு:

1) பணிவென்னும் அடக்கமுடைமை அனைவர்க்குமே நன்மை பயப்பது; அவருள்ளும் செல்வம் படைத்தவர்க்கு மற்றொரு செல்வமாய்த் திகழ்வது என்கிறார் குறளாசான்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
(125)

2) பொருளென்னும் செல்வம் இழிந்தோரிடத்திலும் காணக்கிடைப்பது; [அதனால்தான் பொருளல்லவரையும் பொருளாகச் செய்வது இந்தப் பொருட் செல்வம் என்றார் ஆசான் பிறிதோர் இடத்தில்.] ஆனால், அருட்செல்வம் உயர்ந்தோரிடத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் உயரிய செல்வமாகும் என்று அதன் மேன்மையை எடுத்தியம்புகின்றார்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
(241)

3) மனிதர்க்கு அழிவில்லாத சிறந்த செல்வமாய்த் திகழ்வது கல்வியே; மற்றவையெல்லாம் செல்வங்கள் ஆகாவென்பது கல்வி என்னும் அதிகாரத்தில் பொய்யில் புலவர் பதிவுசெய்திருக்கும் மெய்ம்மொழியாகும்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
(400)

ஈண்டுச் செல்வம் என்பதற்கு மாற்றுச் சொல்லாக ’மாடு’ என்பது பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்க.

மாடு என்றால் செல்வமா?

ஆம்! மாடுகளே ஒரு காலத்தில் மக்களின் செல்வமாய்த் திகழ்ந்தன. மாந்தர்களின் நாடோடி வாழ்க்கை முடிவுற்று அவர்கள் தமக்கென வாழிடங்களை உருவாக்கிக்கொண்டு வாழக் கற்றுக்கொண்டபின் ஆடு மாடுகளை வீட்டு விலங்குகளாய்ப் பழக்கினர். பசு, எருமை போன்றவற்றின் பாலிலிருந்து கிடைத்த பால்படு பொருட்களை விற்றுப் பொருளீட்டினர். இவர்களையே நாம் முல்லை நிலத்தவர் என்று திணை அடிப்படையில் அடையாளப்படுத்துகின்றோம். இத்திணை மாந்தர்களை ஆயர், ஆய்ச்சியர் என்று தொழிலடிப்படையில் வகைப்பாடு செய்துள்ளது தமிழிலக்கண நூலான தொல்காப்பியம்.

ஒரு குடும்பம் எத்துணை மாடுகளைச் சொந்தமாய் வைத்துள்ளது என்பதன் அடிப்படையில் அவர்களின் செல்வ வளம் தீர்மானிக்கப்பட்டது. அதை மனத்தில் வைத்தே தம் குறட்பாவிலும் ’மாடு’ என்ற சொல்லைச் செல்வத்துக்கு மாற்றாய்ப் பயன்படுத்தியுள்ளார் ஐயன் வள்ளுவர்.

செல்வத்தைக் குறிக்க ’மாடு’ என்ற சொல்லைத் திருமூலரும் திருமந்திரத்தில் பயன்படுத்தியிருக்கக் காணலாம்.

”தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
…” (திரு: செல்வம் நிலையாமை – 214)

”வெயிலால் ஏற்படும் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளத் தமது நிழல் உதவாமை கண்டும், அறிவிலார், தமது செல்வம் (மாடு) தம் துன்பத்தைப் போக்கிக்கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர்” என்று மக்களின் அறிவின்மையையும் செல்வப்பற்றையும் இப்பாடலில் ஏளனம் செய்கின்றார் திருமூலர்.

இனி, வள்ளுவர் பட்டியலிடும் பிற செல்வங்களையும் நோக்குவோம்.

4) கல்வி எனும் செல்வத்தைப் பெற விரும்பும் அனைவர்க்கும் அதற்கான வாய்ப்பும் வசதியும் அமைந்துவிடுவதில்லை; அப்படிப்பட்டோர் தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுவது (செவியால் கேட்டலாகிய) கேள்விச் செல்வம். அதனால் அதுவே செல்வங்களுள் தலையாய செல்வம் என்பது வள்ளுவரின் கருத்து.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
(411)

கேள்வி என்பது காதால் கேட்டலை (hearing by ear) குறிக்கும் சொல்லாகவே அந்நாளில் பயன்பட்டது; இந்நாளில் அது வாயால் கேட்பதற்கும் (oral questioning) உரிய சொல்லாகப் பொருள்விரிவு கண்டிருக்கின்றது. எனினும், வாயால் கேட்பதைக் ’கேள்வி’ என்று சொல்வதைவிட ’வினா’ என்று சொல்வதே பொருத்தம்.

5) வாழ்வின் வெற்றிக்கு அடிப்படையான செல்வம் ஒன்றுண்டு. அதுதான் தோல்வியிலும் நிலைகுலையாத ஊக்கம். அவ்வூக்கமே ஒருவனுக்கு உண்மையான உடைமையாகும் (சொத்து); பொருட்செல்வமாகிய உடைமை நிலைத்திருக்கும் இயல்புடையது அன்று; (போகூழ் வந்தால்) அது நில்லாது நீங்கிவிடும் தன்மைத்து என்று ஊக்கத்திற்கு உயர்வு தருகின்றார் வள்ளுவர்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
(592)

மேற்கண்டவை எல்லாம் உலகியல் பற்றுடையோர்க்குத் தேவையான செல்வங்கள். இதனினும் மாறுபட்ட செல்வம் ஒன்றுண்டு. அதுதான் அவாவின்மை எனும் அருஞ்செல்வம். எதன்மீதும் பற்றற்ற பெருஞ்செல்வம். அதற்கு இணையான செல்வம் இங்குமில்லை; வேறெங்குமில்லை என்பது வள்ளுவப் பெருந்தகையின் துணிபு.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.
(363)

அருளாளராகவும், சிறந்த அறிஞராகவும் திகழ்ந்த குமரகுருபரர், தம்முடைய சிதம்பர மும்மணிக் கோவையில், ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே; அல்கா நல்குரவு அவா எனப்படுமே” என்றுரைக்கின்றார்.

தம் பெயரில் நோபல் பரிசுகளை உருவாக்கிப் பல்துறை அறிஞர்களுக்கும், சமாதான விரும்பிகளுக்கும் அளித்த சுவீடன் நாட்டு அறிவியலாளரும் பெருங்கொடையாளருமான ஆல்பிரட் நோபலும் (Alfred Nobel) இதே கருத்தை, ”Contentment is the only real wealth” என்று மொழிந்திருக்கின்றார்.

ஆனால், இருப்பதே போதுமென்ற நிறைவும் அவாவின்மையும் இல்லறத்தில் உள்ளோனுக்கு எளிதில் சாத்தியப்படாது; அவன் வாழுங்காலம்வரை தன் ஆசைகளையும் தன்னைச் சார்ந்தோரின் ஆசைகளையும் நிறைவேற்ற ஓடிக்கொண்டேதான் இருந்தாகவேண்டும். அதனால் இல்லறம் கடந்து, மனத்துறவு கொண்டுவிட்டவனுக்கே வேண்டாமை எனும் விழுச்செல்வம் கிட்டும்.

சங்க அகநூல்களுள் ஒன்றான நற்றிணையும் செல்வம் என்பதற்கு அழகானதொரு விளக்கத்தைத் தருகின்றது. அதனை அடுத்துக் காண்போம்.

தலைவியோடு இல்லறத்தில் ஈடுபட்டிருந்த தலைவன் சிறிது காலத்திற்குப் பிறகு பரத்தையரை நாடிச் சென்றான்; மீண்டும் மனந்திருந்தித் தலைவியைத் தேடி வருகின்றான். தலைவன்மீது ஊடல் கொண்டிருந்த தலைவி அவனிடம் முகங்கொடுத்துப் பேசவில்லை; அதுகண்ட தலைவன் தோழியிடம் சென்று எப்படியாவது தலைவியை மறுபடியும் தன்னோடு சேர்த்துவைக்க வேண்டும் என்று இரந்து வேண்டுகின்றான். தலைவன் தன்னிடமிருக்கும் செல்வத்தின் செருக்கினால்தானே மனம்போன போக்கில் நடக்கின்றான் என்றெண்ணிய தோழி உண்மையான செல்வமென்பது என்ன என்பதை அந்தச் செல்வனுக்கு உணர்த்த விரும்பியவளாய்,

”நெல்லறுத்து முடித்த அழகிய அகலமான வயலில் மறுபடியும் உழுத ஈரமுடைய சேற்றில் விதைப்பதற்காக விதையோடு சென்ற கடகப் பெட்டியானது, பிடித்துப் போடப்பட்ட மீன்களோடு வருகின்ற புதிய வருவாயினை உடைய ஊரைச் சேர்ந்தவனே! அரசனால் விருதளித்துப் பாராட்டப்படுதலும், விரைந்து செல்லக்கூடிய குதிரையிலும் தேரிலும் யானையிலும் பெருமிதத்தோடு செல்வதும் செல்வம் அல்ல. அவையெல்லாம் ஒருவன் முற்பிறவியில் செய்த நல்வினைகளின் பயனால் கிடைப்பன. [வடமொழியில் இதனைப் ”பதவி பூர்வ புண்யானாம் என்பர்.] ஆனால், சான்றோர்கள் செல்வம் என்று சிறப்பித்துக் கூறுவது எதைத் தெரியுமா?” என்று கேட்டாள்.

தலைவன் திருதிருவென விழித்தான்.

”சொல்கிறேன் கேள்!” என்றவள், ”தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு அஞ்சி, அவற்றைப் போக்கி அவர்களைக் கைவிடாமல் இரக்கத்தோடு நடந்துகொள்ளும் பண்பே சான்றோர் போற்றும் செல்வம்” என்றாள்.

தன்னை நம்பிவந்த தலைவியைக் கைவிட்டுச் சென்ற தன் இழிசெயலைத்தான் தோழி இங்ஙனம் குத்திக்காட்டுகின்றாள் என்றுணர்ந்த தலைவன் தன் செயலுக்காக வெட்கித் தலைகுனிந்தான்.

இப்பாடல் நமக்குத் தரும் செய்தி, பதவிகளும் பிற ஆடம்பரங்களும் ஒருவனுக்கு நிலையான செல்வங்கள் அல்ல; தன்னைச் சார்ந்தோர் மனவருத்தம் அடையா வண்ணம் அவர்கள்பால் கருணையோடு நடந்துகொள்வதே சான்றோர் போற்றும் உயரிய செல்வம் என்பது.

இவ்வினிய பொருள்பொதிந்த பாடலை இயற்றியவர் மிளைகிழான் நல்வேட்டனார் எனும் புலவர். இனி, பாடலைக் காண்போம்.

அரிகால் மாறிய அம்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே.
(நற்: 210)

செல்வம் குறித்து இதுகாறும் கண்ட விளக்கங்களின் அடிப்படையில் நாம் நம் வாழ்வை கீழ்க்கண்ட வகையில் அமைத்துக் கொள்ளலாம்:

இளம் பருவத்தில் கல்வியெனும் செல்வத்தையும், அதைத் தொடர்ந்து பொருளென்னும் செல்வத்தையும் மனிதர்களாகிய நாம் தேடவேண்டும்; செல்வத்தினால் செருக்கடையாமல் பணிவோடிருப்பது சிறப்பு; முறையான கல்விபெற இயலாதவர்கள் கேள்விச் செல்வத்தால் தம் அறிவை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். வாழ்வில் துன்பங்கள் தோல்விகள் ஏற்படுங்காலை அவற்றுக்காகச் சோர்ந்துவிடாமல் ஊக்கமெனும் செல்வத்தின் துணையோடு அவற்றை வென்று முன்னேற வேண்டும். எவ்வுயிரையும் தம்முயிர்போல எண்ணியொழுகும் அருளென்னும் செல்வத்தை மனிதர்கள் தொலைக்காது எப்போதும் வைத்திருக்கவேண்டும்.

இளமை கழிந்து முதுமையின் வாயிலுக்கு வந்துவிட்டவர்கள் மெல்லமெல்லப் பற்றுக்களையும் ஆசைகளையும் விட்டொழித்து அவாவின்மை எனும் தன்னேரிலாத செல்வத்தை அடைந்து தம் வாழ்க்கைப் பயணத்தை நன்முறையில் நிறைவுசெய்ய வேண்டும்.

சான்றோர் காட்டிய இப்பாதையில் பயணித்தால் பயணம் சுகமாகும்; வாழ்க்கை இனிதாகும்.

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

2. நற்றிணை மூலமும் பின்னத்தூர் அ. நாராயண சாமி ஐயர் உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *