குறளின் கதிர்களாய்… (468)

செண்பக ஜெகதீசன்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
-திருக்குறள் -987 (சான்றாண்மை)
புதுக் கவிதையில்…
தமக்குத்
துன்பம் தருவனவற்றைச் செய்தவர்க்கும்
சான்றாண்மை மிக்கவர்
தாம் இன்பம் தருவனவற்றைச்
செய்யாது போவாரானால்,
அவரது சால்பு
வேறென்ன பயனைத்
தர வல்லது…!
குறும்பாவில்…
துன்பம் தமக்குத் தந்தவர்க்கும்
சால்புடையோர் இனியன செய்யாதுபோனால் அவரது
சால்பினால் எந்தப் பயனுமில்லை…!
மரபுக் கவிதையில்…
துன்பம் தமக்குச் செய்தவர்க்கும்
தூய தான சால்புடையோர்
இன்பம் தன்னைத் தருகின்ற
இனிய வற்றைச் செயாதிருந்தால்,
அன்னார் வசமா யுள்ளதுவாம்
அரிய பொருளாம் சால்பதுதான்
என்ன வேறு பயனதைத்தான்
எடுத்துக் கொடுக்கப் போகிறதோ…!
லிமரைக்கூ…
தந்தாலும் பிறர்தமக்குத் துன்பம்,
சால்புடையோர் சால்பினால் பயனேது மில்லை
செயாவிடிலவர் பெற்றிட இன்பம்…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும் சான்றாண்ம,
ஓசந்த கொணமாம் சான்றாண்ம..
தனக்குத் துன்பம் செஞ்சவனுக்கும்
அவன் இன்பமடய
சான்றாண்ம உள்ளவரு
நல்லது செய்யாம இருந்தா
அவருகிட்ட இருக்கிற
சான்றாண்மயால யாருக்கும்
எந்தப் பயனுமில்ல..
அதால
வேணும் வேணும் சான்றாண்ம,
ஓசந்த கொணமாம் சான்றாண்ம…!