மாறுமோ இந்த நிலை?
சக்தி சக்திதாசன்
வருமா? வராதா? வருமா? வராதா? எனும் கேள்வி இங்கிலாந்து மக்கள் அனைவரின் மனங்களிலும் இழையோடிக்கொண்டிருந்தது. அக்கேள்வியின் விடை பீரிட்டுக்கொண்டு வெளிவந்துவிட்டது.
எதை நான் சொல்ல வருகிறேன் என்று எண்ணுகிறீர்களா? கடந்த மூன்றரை வருடங்களாக இங்கிலாந்து அரசியல் களத்தில் நர்த்தனமாடிக் கொண்டிருந்த “பிரெக்ஸிட்” எனும் பூதாகரமான பிரச்சனையின் தீர்வு ஒரு பொதுத்தேர்தலினால்தான் தீர்க்கப்பட முடியும் எனும் நிலையை எட்டிய பின்பு அந்தப் பொதுத்தேர்தல் வருமா? வராதா? எனும் கேள்வியே ஊசலாடிக் கொண்டிருந்தது.
புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட போரிஸ் ஜான்சன், இந்த பிரெக்ஸிட் எனும் பிரச்சனையை அக்டோபர் மாதம் 31ஆம் திகதி முடித்து விடுவேன் என்று சூளுரைத்தே பதவியேற்றார். ஆனால் காலம் செய்த சதியோ, இல்லை அவரது போதாத காலமோ, பலவிதமான சாணக்கிய நகர்வுகளை மேற்கொண்டும் அவரால் அவரது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
பாராளுமன்றத்தில் அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்த அவரது கட்சி, ஒரு சிறுபான்மை அரசமைத்த நிலையில், அறுதிப் பெரும்பான்மை இழந்த ஒரு நிலையில் முடமாகி நின்றமையே அவரது இந்தத் தோல்விக்குக் காரணம்.
ஏற்கெனவே வட அயர்லாந்துக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் அரசு நடத்திக்கொண்டிருந்த போரிஸ் ஜான்சன் “ஆண்டவன் சோதனையோ, யார் கொடுத்த போதனையோ” தான் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள் அதாவது எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்றினார்கள் எனும் குற்றச்சாட்டில், இதுவரை கண்டிராத வகையில், தமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர்களைத் தமது கட்சியிலிருந்து விலக்கினார்.
விளைவு!
ஏற்கெனவே பெரும்பான்மை இழந்திருந்த அவரது கட்சியின் பலம், மேலும் குன்றியது. நொண்டி நொண்டி நடந்துகொண்டிருந்த அவரது அரசு, முடமாகி நின்றது. .
பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது சகாக்களும் தமது நிலையை மீள்பரிசீலித்துக் கொண்டார்கள். நாட்டில், பிரெக்ஸிட்டுக்கான ஆதரவு 50%க்கும் அதிகமாகவே இருக்கிறது என்று பொதுக் கருத்துக் கணிப்புகள் கூறின. எதிர்க் கட்சியான லேபர் கட்சி வெற்றியீட்டிய தொகுதிகளில் பல, பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் ஒரு நிலை, இங்கிலாந்து வட மாகாணங்களில் இருப்பதை அவர்கள் இனங்கண்டு கொண்டார்கள்.
இதற்கு ஏதுவாக, பிரெக்ஸிட் குறித்த, எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் நிலைப்பாடு தெளிவற்றே இருக்கிறது. மற்றொரு முக்கிய கட்சியான லிபரல் டெமகிரட்ஸ், பிரெக்ஸிட்டை முற்று முழுதாக எதிர்க்கிறார்கள். அனைத்துக்கும் மத்தியில் பிரெக்ஸிட்டுக்கு முழு ஆதரவான ஒரேயொரு கொள்கையை முன்வைத்து பிரெக்ஸிட் எனும் கட்சியை ஆரம்பித்து பலமான ஆதரவு பெற்று வருகிறார் நைஜல் வெராஜ் எனும், இங்கிலாந்துக்கான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற அங்கத்தினர்களுள் ஒருவர்.
இவையனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், பொதுத்தேர்தல் ஒன்றின் மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு அவருக்கிருப்பதாகப் போரிஸ் ஜான்சனும் அவரின் ஆதரவாளர்களும் நம்புகிறார்கள். இவற்றுக்கெல்லாம் முடிசூடிக் கொண்டாற்போல் அவர் திருத்தியமைத்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான உடன்படிக்கை, அவரது கட்சியில் கணிசமான ஆதரவினைப் பெற்றிருக்கிறது. அதன் அடிப்படையில் இவ்வுடன்படிக்கை, பொதுமக்களிடையேயும் கணிசமான ஆதரவினைப் பெறும் எனும் நம்பிக்கையும் அவர்களுக்குத் துணை நிற்கிறது.
பொதுத்தேர்தல் ஒன்றிற்கு இத்தனை சாதகமான காரணிகள் இருக்கும்போது, அவரால் ஏன் இதுவரை ஒரு பொதுத்தேர்தலை அறிவிக்க முடியவில்லை. இங்கேதான் அவருக்கு ஒரு சிக்கல் இருந்தது. முன்னால் பிரதமர் டேவிட் கமரன், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த போது அவ்வரசு விரைவில் கவிழ்ந்துவிடக்கூடாது என்பதில் இரு கட்சிகளும் குறியாக இருந்ததனால் ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஆட்சியைக் கலைப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும் என்றொரு சட்டத்தை இயற்றினார்கள்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவு இன்றிப் பாரளுமன்றத்தை அரசு தன்னிச்சையாக கலைக்க முடியாத நிலையிருந்தது. எதிர்க்கட்சிகளின் பிரதான நோக்கமே ஆட்சியைக் கவிழ்த்து தாம் ஆட்சியமைப்பதுதானே அப்படி இருக்கையில் ஏன் அவரது இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள முன்வரவில்லை ?
இங்கேதான் மீண்டும் பிரெக்ஸிட், பிரச்சனையாக உருவெடுக்கிறது. சாணக்கியத் தந்திரங்களில் ஊறிப் போனவர், போரிஸ் ஜான்சன். அவரை நம்பி அரசைக் கவிழ்த்துப் பொதுத்தேர்தலுக்கு உடன்பட்டுவிட்டால், இந்தத் தேர்தல் அமளியைப் பயன்படுத்தி, அக்டோபர் 31ஆம் திகதி வெளியேற வேண்டும் எனும் காலக்கெடுவினைத் தமக்குச் சாதகமாக்கி உடன்படிக்கையற்ற ஒரு பிரெக்ஸிட்டை அமல்படுத்தி விடுவார் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
அதற்காக, எதிர்க்கட்சிகள் ஒரு நிபந்தனையை முன்வைத்தன.
தாம் பொதுத்தேர்தலுக்கு உடன்படுவதானால் அக்டோபர் 31ஆம் திகதி விலகும் காலக் கெடுவினை நீட்டிப்பதற்கான ஆதரவினை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற வேண்டும் எனும் நிபந்தனையே அது.
பத்தும் பலதும் பண்ணிப் பார்த்தும் எதுவும் பலனளிக்காத பட்சத்தில் தான் எதை உயிர் போனாலும் நிறைவேற்றமாட்டேன் என்று சூளுரைத்தாரோ அதனை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார், போரிஸ் ஜான்சன். “எனதருமை நாட்டு மக்களே, உங்கள் ஆணையின்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தை வெளியேற்றுவதை அக்டோபர் 31ஆம் தேதி நிறைவேற்றத் தீர்மானித்த என்னைப் பாராளுமன்ற ஜனநாயகம் எனும் மந்திரக் கயிற்றால் கட்டிப்போட்டு இக்காலக்கெடுவை 2020 ஐனவரி 31 வரை நீட்டிக்க வைத்துவிட்டார்கள் எதிர்க்கட்சியினர்” என்று அறிவித்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். ஒன்று இக்கட்டான பிரெக்ஸிட் சிக்கலைக் கொஞ்சம் தள்ளி வைத்தது, இரண்டு அதற்கான பழியை எதிர்க்கட்சியினர் மீது சுமத்தியது.
அக்டோபர் 31ஆம் திகதி உடன்படிக்கையற்ற ஒரு பிரெக்ஸிட்டுக்கான சந்தர்ப்பம் முற்றாகத் தவிர்க்கப்பட்ட சூழலில், பொதுத் தேர்தலுக்குத் தமது ஆதரவினை எதிர்க்கட்சியினர் அளிக்க முன்வந்தனர். இந்த ஆதரவினை அளிக்க பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி பலவந்தப்படுத்தப்பட்டது என்றே கூறவேண்டும். ஏனெனில் மற்றைய எதிர்க்கட்சிகளான ஸ்காட்லாந்து தேசிய முன்னணி, லிபரல் டெமகிரட்ஸ் மற்றும் சில இதர சிறு எதிர்க்கட்சிகள் என்பன ஒன்றிணைந்து பொதுத் தேர்தலை ஆதரித்ததுவே லேபர் கட்சியின் மனமாற்றத்தைப் பலவந்தப்படுத்தியது.
விளைவாக, பல வருடங்களின் பின்னால் முதன்முறையாக ஐக்கிய இராச்சியத்தில் டிசம்பர் மாதத்தில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. . ஆமாம் 2019 டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இப்பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஓர் அதிமுக்கிய பொதுத்தேர்தல் இதுவென்றே அரசியல் அவதானிகள் பலரும் இதை நோக்குகின்றனர்.
அடுத்து வரும் கட்டுரையில் இப்பொதுத்தேர்தலின் தன்மைகளையும் கட்சிகளின் நிலையையும் விரிவாகப் பார்க்கவுள்ளோம்.
நடக்கப் போகும் இந்தப் பொதுத்தேர்தலினால் மாறுமோ இந்த நிலை?
சக்தி சக்திதாசன்
லண்டன்
14.11.2019