அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

கீதாமதி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 232

  1. தழைக்க…

    பட்ட மரத்தில் பறவைகள் அமர்ந்தால்
    பளிச்சிடும் மரமும் பெற்றிடும் புத்துயிர்,
    கெட்ட குடியென ஒதுங்கிச் செலாதே
    கேடது நீங்கிடக் கூடிடு குடும்பமாய்,
    தொட்டதற் கெல்லாம் வேண்டாம் சண்டை
    தொடர்ந்திடு உறவை உதவிகள் செய்தே,
    எட்டிடும் தூரமே இன்ப வாழ்க்கை
    என்றும் செலாதே உறவைத் துறந்தே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. பட்டமரம் பசுமை பெற,
    பறவைகளின் பிராத்தனை கூட்டம்.
    உச்சிவெயில் உயிரை உருக்கையில,
    உல்லாசமா உன்மடியில் ஊசலாடினோமே!
    இரைத்தேடி இறைஞ்சும் இதழ்களுக்கு,
    இளைப்பாற இளங்கனி இழைத்தாயே!
    சிற்றின்ப சிந்தனைகள் சிலிர்ப்பூட்டும்போது,
    சிரங்களில் செவ்வண்ணமே சீராட்டினாயே!
    முத்தத்தின் முதல்கருவை முட்டையிடும்போது,
    முக்கிளையினைவை முதல்மடியாக முகமலர்ந்தாயே!
    தாய்மடி தீண்டா தருணமும்,
    தன்மடியில் தழைத்து துயிலெழுப்பினாயே!
    மூடர்களின் முன்னேற்ற முன்னுரையில்,
    முல்லையின் மூச்சுதான் முதல்பலியோ!
    மதிமுகம் மலர்ந்த மரங்களெல்லாம்,
    மலடாய் மாண்டது மானிடனாலோ!
    அன்னைகளின் ஆருயிர் அரும்ப,
    அழுகுரல் அறிந்து அருள்வாயா…!
    இறைவா….?

    இவன்
    ராவணா சுந்தர்

  3. வேடந்தாங்கிய பறவைகள்

    இயற்கையன்னை தானளித்த
    இன்பபுரி இவ்வையகத்தை
    நகரமயமாக்கி வைத்து
    நரகமதை உருவாக்கினோம்!

    நீர்வளத்தைக் கெடுத்துவிட்டோம்
    நிலமடந்தை வளமொழித்தோம்
    கால் வைக்கும் இடமெல்லாம்
    கட்டிடங்கள் உயர்த்திவைத்தோம்!

    பச்சைநிறத் தாயவளின்
    கச்சைமலை முகடழித்து
    மிச்ச மீதம் ஏதுமின்றி
    தாய்ப்பாலை வீணடித்தோம்!

    வான்பொழித்து மழையில்லை
    கதிரவனால் அதிவெப்பநிலை
    நில அதிர்வால் வீடில்லை–எனக்கூறி
    அப்பாவிப் பறவையென்ற
    வேடங்கொண்டு வாழ்ந்திருப்போம்!

    இயற்கை வளமழித்து
    கான்க்ரீட் மரக்கிளையில்
    வண்ணமெல்லாம் தானிழந்து
    வாட்டமுற்று வீற்றிருப்போம்

  4. மாற்றம் மனமாற்றம்

    இலைகள் உதிர்ந்து
    கிளைகள் மட்டும் இருக்க
    பட்ட மரமும் பறவைகளுக்கு
    புகலிடமாய் மாறும்
    உடைந்த கிளைகள் கூட
    விறகாய் பயன்படும்

    பயனற்ற பொருளாய்
    அவன் படைப்பில் ஏதும் இல்லை
    அத்தனையும் இழந்தாலும்
    அது முடிவல்ல, ஆரம்பம்
    முடியும் என்று முன்றிடு
    துறந்தவை யாவும் திரும்ப கிட்டும்
    வாழ்க்கை ஒரு சக்கரம் என்று
    அது உனக்கு என்றும் உணர்த்தும்

    பருவங்கள் மாறும்
    பட்ட மரமும் பூத்து குலுங்கும்
    காலங்கள் மாறும்
    கண்ட கனவு நனவாகும்
    அதுவரை காத்திருக்க கற்றுக்கொள்
    நம்பிக்கையோடு
    நல்ல காலம் பிறக்கும் என்று

    சூழ்நிலைகளும் துயரங்களும்
    அள்ளும் பாத்திரங்களின்
    உருவம் கொள்ளும்
    நீர்நிலை போல்
    பார்ப்பவரின் பார்வையை பொருத்தி
    சிறுது பெரிது என மாறும்
    சூழ்நிலைகளை மாற்ற இயலாது
    நம் சிந்தனையை மாற்ற முடியும்
    இதுவும் கடந்து போகும்
    என்று உன் சிந்தனையில்
    விதைத்திடு
    வெற்றிக்கனி தரும் செடி
    தானாய் முளைத்துடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *