நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

அண்ணனின் அரவணைப்பில் தன் அச்சத்தைத் துச்சமெனத் தொலைக்க முயலும் சிறுமியாகத் தெரிகின்றாள் இவள். அண்ணனின் முகத்திலோ யாமிருக்க பயமேன் எனும்படியான மந்தகாசப் புன்னகை மந்தார மலராய் இதழ் விரித்திருக்கின்றது.

கவியுள்ளம் ஊற்றெடுக்கக் கனிமழலை ஒன்றின் வசீகரக் காட்சியே போதுமானது; இங்கோ இருவர்! எனவே பஞ்சமின்றிக் கவிபாடக் கவிநெஞ்சங்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

*****

”இச்சிறுமி, அன்னையையும் தந்தையையும் அண்ணன் உருவில் கண்டாள்; அவன் அரவணைப்பில் அமைதி கொண்டாள் ” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

அம்மையப்பனாய்…

அன்னை தந்தை சேர்ந்தேதான்
அண்ணன் உருவம் ஆனதுவோ,
அன்பைக் கொடுப்பதில் அன்னையாக
ஆசையாய் வளர்ப்பதில் தந்தையாக,
என்றும் காப்பான் நன்றாக
என்னும் உறுதி தங்கைக்கே,
இன்னும் என்ன பயமென்றே
இறுக்கிப் பிடித்தாள் அண்ணனையே…!

*****

”உயரப் பறக்கும் பட்டத்திற்கு உதவிடும் வாலாய், நூலாய் உதவிடுவேன் உனக்கு நான்; உயரப்பறந்திடவே எனை நம்பிக்கையோடு பற்றிக்கொள்!” என்று பொன்மொழி உதிர்க்கும் உயர்ந்த சிறுவனைக் காண்கிறோம் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜின் கவிதையில்.

அன்பே ஆருயிரே!

மொட்டு விட்ட மலரே!
இருள் சூழ்ந்திருக்கக் கண்டு பயந்தாயோ?
இருளெனச் சூழ்ந்திருக்கும்
இன்னல்கள் கண்டு பயந்தாயோ?
வெளிச்சம் தரும் விளக்காய் நான்
அணையாமல் என்னைக் காக்கும்
உதவும் கரங்களாய் நீ!

அஞ்சாதே, அச்சம் தவிர், நெஞ்சம் நிமிர்
இரவென்று இருள் சூழ்ந்த வானம்
வெளிச்சம் எனும் விடியல் வந்து
நீலமாய் நிறம் மாறும்
உறங்கி இருக்கும் இயற்கை கூட
விழித்தெழும் விடியலாய்
வெளிச்சம் வந்ததும்!

குஞ்சுகளை இறகுகளில் மறைத்துக்
காத்து நிற்கும் தாய்ப் பறவை!
இறகுகளாய் நான் இருப்பேன்
உன் இறகுகளை விரித்துப் பறக்க முயன்றிடு
அந்த வானம் உனக்கு வசப்படும்!

உயரப் பறக்கும் பட்டத்திற்கு
உதவிடும் வாலாய் நூலாய்
உதவிடுவேன் உனக்கு நான்
உயரப்பறந்திடவே
நம்பிக்கையோடு பற்றிக்கொள்!
உன்னை ஏற்றிவிடும் ஏணியாய்
நான் இருப்பேன்!

அம்மை அப்பன் இன்றி
இங்கு யாரும் பிறப்பதில்லை!
உதவிக்கரம் நீட்டும் உருவங்களில்
அண்ணனாய், தந்தையாய், தாயாய்,
தோழனாய், தோழியாய், துணையாய்
அன்பைப் பொழியும் உறவுகளைக் கண்டால்
அனாதைகள் அழிந்து
அன்பும் பாசமும் பொழியும்
உள்ளங்களால் இவ்வுலகம் நிறைந்திடுமே!
உறவாய் மாறி உள்ளங்கள் போற்றிடுமே!

*****

சிறுமிக்கு அன்னையாய் அத்தனாய் அத்தனையுமாய் நிற்கும் சிறுவனின் மனமுதிர்ச்சியை அழகிய கவிதைகளில் வார்த்தெடுத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

பிஞ்சு (நெ)நஞ்சு!

கனியமுதுக் குழந்தையென்றால்
கள்ளமில்லாப் புன்சிரிப்பும்
வெள்ளைத் தும்பைப்பூ மனதும்
கண்முன்னே நின்றதொரு காலமம்மா – அது
கனவாகப் போனதிந்த காலமம்மா!

வஞ்சமில்லாப் பிஞ்சு நெஞ்சில்
சூதானமாய் இருக்கச் சொல்லி
நஞ்சதனைக் கலந்திட்டோம்
வெம்பியிங்கு நிற்க வைத்தோம்

வெள்ளாவியில் விதைநெல்லால் பொங்கல் வைத்தோம்!

இன்ப துன்பமெல்லாமே
இரு நொடியில் மறந்துவிடும்!
கள்ளமில்லா நெஞ்சதனில்
தந்திரத்தைப் புகுத்திவிட்டோம்!
நம்பிக்கையின்மையை நிலைக்கவிட்டோம்!

பஞ்சு போன்ற நெஞ்சதனைப்
போட்டி பல போடச் சொல்லி
ஊடகச் சோதியிலே
எரிபானையாக்கி விட்டோம்!

ஏய்த்துப் பிழைப்பதைக் கற்க வைத்தோம்!

அறிவு வளர்க்கும்
கல்வியதைக் கற்பிக்காமல்
வெற்று வெற்றியே குறிக்கோளாய்
முற்றிப்போகச் செய்துவிட்டோம்!
முளைக்குருத்தை முட்செடியாய் ஆக்கிவிட்டோம்!

பெற்றோர் தம் பேராசையால்
பிஞ்சினிலே பழுத்து
சுயநல ஆழ்துளையில் வீழ்ந்து
மறைந்ததுவே அவர்தம் குழந்தைத்தனம் – இதில்
வெற்றுக் கொண்டாட்டமே மழலையர் தினம்!

”வஞ்சமில்லாப் பிஞ்சுநெஞ்சில் நாம் நஞ்சதனைக் கலந்து விட்டோம்; வெள்ளாவியில் விதைநெல்லால் பொங்கல் வைத்தோம்! ஊடகச் சோதியிலே மழலையின் நெஞ்சதனை எரிபானை யாக்கிவிட்டோம்!” என்று  இன்றைய பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் குழந்தைத்தனத்தைத் தொலைத்து, பிஞ்சிலேயே பழுத்து வெம்பிப்போகும் மழலையருக்காக வேதனைப்படுகின்ற இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க