-திருச்சி புலவர் இராமமூர்த்தி
—————————————————-

திருவாரூர்த் திருக்கோயிலில் பரவையாரைக் கண்டு காதல் கொண்ட சுந்தரர், அப்பரவையார் விரைந்து தம்மில்லம் சார்ந்தபின் அவரைத் தேடினார். தம்முள்ளத்தைக் கொள்ளை கொண்ட பரவையாரை மீண்டும் காண விரும்பினார். முன் யாவரோடும் உரை இயம்பாதிருந்த நம்பிகள், தனிமையாகக் காதல் மேன்மேற் படர்ந்து பெருகியபோது அக்காதலைத் துன்பமயமாக்கும் பொருள்களை நோக்கி, இயம்பும் உரைகளைக் கூறுகின்றார். காதற்றுன்பமிகுதியால் இவ்வாறு தனிமையில் இயம்புவது இயல்பு. அது அத்துன்ப மிகுதிப் பாட்டைக் காட்டும். இதனைத் தொல்காப்பியம், களவியலில்,

‘’காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி
வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்’’

என்று கூறும். அதன்படி மன்மதன் தம் முன் வந்து நின்று மலரம்புகளை எய்து தம் காமத்தைத் தூண்டுவதை உணர்ந்து வேட்கையால் மயங்கிச் செய்வதறியாது நின்றார். தாம் சிவபெருமானின் நெருங்கிய தோழர் என்பதை உணர்ந்தும், மன்மதன் மலரம்புகளைத் தொடுக்கலாமோ? என்றெல்லாம் கலங்கினார்.

முன்பு முருகப்பிரான் திருவவதாரம் நிகழ , சிவபிரான் யோகத்திலிருந்த போது, மன்மதன் அவர் முன் நின்று மலரம்புகளை எய்தான். அப்போதே இறைவனின் நெற்றியிலிருந்த ஒற்றைக் கண்ணால் மன்மதன் எரிந்து, உருவழிந்தான். அத்தகைய சிவபெருமானுடன் தோழமை கொண்ட சுந்தரர், ஆரூரில் பரவையார் மேல் காதல் கொண்டதை அவரே வியந்து கொள்கிறார். அதனால்தான், சிவபெருமான் திருவருளையே சிந்தித்துக் கொண்டிருந்த தமக்குக் காதல் உண்டானது எவ்வாறு ? என்றெண்ணிய அவர் அக்காதலை ‘’அற்புதமோ, சிவனருளோ,’’ என்றெல்லாம் சிந்தித்தார். இப்போது மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த சிவபெருமான் தோழராகிய என் கண்முன் மன்மதன் தோன்றியதும், அவன் வில்லை எடுத்ததும், மலரம்புகளைத் தொடுத்ததும், நிகழக்கூடியவை அல்லவே. எரிந்ததன் பின் அவன் மீண்டும் தன் உருவத்தை அடைய மாட்டான் என்று சுந்தரர் எண்ணி யிருந்தார். ஆனால் திருவாரூரில் பரவையார் மேல் கொண்ட காமத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அவர் முன் வந்து, நின்று கரும்பு வில்லுடனும், ஐந்து மலர்களாகிய அம்புகளுடனும் மன்மதன் தோன்றினான். வெந்த காமன் பின்னர் உயிர் பெற்றா னாயினும் உருவிலனேயாவன். ஆனால் இவன் அவ்வாறன்றி உருவத்துடன் கூடினன் அதாவது, செயல் மிகுதியால் உருத் தோன்றுதல். என் முன்னால் வரவுங்கூடாத இவன் என் முன்னரும் வரவல்லவனாகி விட்டானே! அவ்வாறு என் முன் வருதலே பெருங் காரியம்; என் முன். வருதலேயன்றி என்மேல் அம்புகளையும் எய்கிறானே! ‘’ என்கிறார் சுந்தரர்! இதனைச் சேக்கிழார்,

‘’வெந்த காமன் வெளியே உருச்செய்து
வந்து என்முன் நின்று வாளி தொடுப்பதே ‘’

என்று பாடுகிறார். மன்மதன் எரிந்தபின் சிவனடியார் முன் காமனும், காலனும் தோன்ற மாட்டார்கள் என்றே உலகம் கருதியது! ஆனால், திருவாரூரில் சுந்தரரின் காதல், மன்மதன் செயலால் படர்ந்து வளர்ந்தது.

‘’சுற்றும் அமரர் சுரபதி நின்திருப் பாதம் அல்லால்
பற்று ஒற்ற இலோம்என்று பரவையுள் நஞ்சை உண்டான்
செற்றங்கு அநங்கனைத் தீவிழித்தான் தில்லை அம்பலவன்
நெற்றியில் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே!’’

என்று, சிவனடியார் முன் மன்மதன் தோன்றாத சிறப்புக் குறித்து அப்பரடிகளே பாடியுள்ளார். அச்சிவபிரானின் நெற்றிக் கண்ணின் ‘எரிதழல்’ அடியார்கள் முன் குளிர்ச்சி செய்து காக்கும். இக்கண்ணின் தழலுக்கு எரிக்காது குளிர்ச்சி செய்து காக்கும் குணமுமிருத்தலின் அதனின்றும் பிரித்து வேறு தன்மையைக் கொண்ட தழல் என்றார். அடுக்களையின்கீழ் வைத்த தழல் பாகம் செய்தும்,, கூரையில் வைத்த தழல் வீட்டை எரித்தும் தொழில் செய்தல்போலக் காண்க.. ஆனாலும் தீ சுடும் என்று கூறும் பொருளியல்புக்கும் மாறுபாடிலாமையுங் காண்க. இதனைச் சேக்கிழார் ,

‘’தம் திருக்கண் எரிதழலில் பட்டு’’ என்ற தொடரால் குறித்தார். மேலும் சுந்தரர், ‘’எமது தலைவனாருடைய திருவருளும் இவ்வாறாவதொன்றோ? திருவருளின் முன் வரவும், நிற்கவும், வாளிதொடுக்கவும் மாட்டாதவன் மதனன்! அவன் தம்பிரான் தம்மையே தோழனாகத் தந்த திருவருள் நிரம்பிய என்முன் வந்து நின்று வாளி தொடுப்பதாயினன். அவனன்றி ஓர் அணுவு மசையாதாதலின் இதுவும் அவர் திருவருளின் ஒரு வண்ணமோ? எந்தையுடைய ஆரருளோ? இதனை,

எந்தையார் அருள் இவ் வண்ணமோ?” என்பார்.
என்று சேக்கிழார் பாடுகிறார். இனி, நாம்முழுப்பாடலையும் பயில்வோம்.

“தந்திருக் கண் எரிதழலிற் பட்டு
வெந்த காமன் வெளியே உருச் செய்து
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
எந்தையார் அருள் இவ் வண்ணமோ?” என்பார்.

என்பது பாட்டு! சிவனடியார் ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொள்ளுவதும், அது குறித்துச் சிந்திப்பதும் , மேலும் அக்காதல் நிறைவேறச் சிவபெருமானே அருள வேண்டும் என்று சுந்தரர் வேண்டுவதும் , முன்பு திருக்கயிலையில் நிச்சயிக்கப் பெற்ற சிவசங்கல்பமே என்பதை நமக்கு இப்பாடல் உணர்த்துகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.