போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)
-சி. ஜெயபாரதன், கனடா.
மூலம் ஆங்கிலம் : ஜான் மெக்ரே
(கனடா போர்த் தளபதி)
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
போர்த் தளங்களில் அணி அணியாய்ப்
பூத்துக் கிடக்கும்,
எண்ணிலா
செந்நிறப் பாப்பி மலர்கள்
சிலுவைகளுக்கு இடையே!
நெஞ்சை உலுக்கும் காட்சி!
மேலே பாடிப் பறக்கும் குயில்கள்
பயம் ஏதுமின்றி,
கீழே பீரங்கிச் சத்தம் மெதுவாய்க்
கேட்டுக் குறையும்!
செத்துப் போனது நாங்கள்!
சில நாட்களுக்கு முன்பு பூமியில்
சீராய் வசித்தவர் நாங்கள்!
காலைப் பொழுதை உணர்ந்தோம்!
மாலைப் பொழுதில் மங்கிச்
செங்கதிர் மறைவதைக் கண்டோம்.
நேசித்தோம்,
நேசிக்கப் பட்டோம் நாங்கள்!
இப்போது
போர்த்தளப் புழுதியில்
வீழ்ந்து கிடக்கிறோம்!
பகைவரோடு
எம் போரைத் தொடர்வீர் !
தளரும் எமது கைகள்
தருவது
உமது கைக்கு
எரியும் தீப்பந்தங்கள்!
ஏந்திக் கொண்டு தாக்குவீர்.
இறந்தவர் நம்பிக்கை
நிறைவேறாது போனால் ,
உறக்கம் வாராதெமக்கு!
போர்த் தளம் யாவும்
எண்ணிலா
செந்நிறப் பாப்பி மலர்கள்
செழித்துக் குலுங்கினும்!