இலக்கியம்சிறுகதைகள்

சட்டை

-சேஷாத்ரி பாஸ்கர்

”இப்ப இந்த செலவு தேவையா?”
மகன் பதில் சொல்லவில்லை

”இரண்டாயிரம் பெரிய தொகை என்பதே உனக்கு உறைக்கவில்லையா?”

”அப்பா ப்ளீஸ்! சில சுதந்திரம் எனக்கும் வேண்டும்”

”நான் தப்பு சொல்லலே. ஆனாலும் கொஞ்சம் யோசி ஒரு சொக்காய் இரண்டாயிரமா? என் கடைசி மாச சம்பளம் இதை விட கம்மி.”

”அதைத்தான் சொல்றேன்! அது அந்தக் காலம்! இப்ப என்ன மாதிரி யோசி. இது மொத மாச சம்பளம். நான் ஆசையாய் வாங்கினேன்.”

”சாரி. யூ ஆர் லாவிஷ்”

”அம்மா இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பா”

”ஒரு தகப்பன் மனசை நீ புரிஞ்சுக்கல. அப்புறம் உன் இஷ்டம்.”

”தப்பு! நீ தான் மகனோட மனசை தெரிஞ்சிக்கல.”

”கோபப்படாமல் இதை ஒரு தப்பாய் பார்த்து விட்டு மன்னித்து விடு. ஆனால் என் செயலில் இருக்கும் மனசைப் பார்.”

”உன் அகலக்கால் எனக்கு பயமாய் இருக்கு”

”தப்பாய் சொல்றப்பா! விசாலமா யோசிச்சு பாரு”

”நீ லட்ச ரூபாய் சம்பாதிச்சா கூட, இதைத்தான் சொல்வேன்”

தலைக்கவசம் அணிந்து கொண்டே சொன்னான்.
”அப்பா! இன்னும் ஒன்னு சொல்றேன். உன் கோபம் அதிகமாகும்.”

”சொல்லு. என்ன பேண்ட் மூவாயிரமா?”

”இல்ல! இந்தச் சட்டை உனக்கு தாம்பா!”

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க