மெய் வாழ்க்கை
-ராதா விஸ்வநாதன்
வாழ்க்கையே முடிந்து விட்டது
வாழ்வது எப்படி என்ற தேடலில்!
வாழ்ந்தவரை வழி கேட்டேன்
வந்தது பதில் வாழ்ந்து பாரென!
குழந்தையின் முகத்தில் தேட
குறைகளைக் காணாதே எங்கும்
நிறைதனை எதிலும் பாரடா
நிம்மதி உன் காலடியிலே என்றது
சாதித்தவர்களைக் கேட்டேன்
சாதிப்பதற்கு எல்லையே இல்லை!
சாதிக்க வேண்டியது என்ன என்று
சோதித்துப் பார் உனை என்றனர்!
மனத்தைச் சோதனைக் கூடமாக்கி
எண்ணங்களை வேள்வித் தீயிலிட்டு
என்னையே இழந்ததும் புரிந்தது,
தன்னை இழப்பதே பூரணம் என்று!
பூரணத்தில் நிற்பவன் மெய்ஞானி
புரிந்தவனைத் தேடுபவன் மெய்யன்பன்
புரிந்ததைக் காட்டுபவர் நல்லாசான்–அப்
புரிதலில் வாழ்தலே மெய் வாழ்க்கை!!