-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் 

77.படை மாட்சி

குறள் 761:

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை

எல்லா  வகைப்படையும் கொண்டு எடஞ்சலுக்கு அசராம செயிக்க ஒதவுத படை ராசாவோட செல்வங்கள் எல்லாத்திலயும் ஒசந்தது.

குறள் 762:

உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது

போர்ல சேதம் ஏற்பட்டு பலம் கொறைஞ்சாலும் எந்தவித எடஞ்சலுக்கும் பயப்படாதநெஞ்சுறுதி பழம்பெருமை கொண்ட படைக்கு இல்லாம வேற எதுக்கு இருக்க முடியும். .

குறள் 763:

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை 
நாகம் உயிர்ப்பக் கெடும்

எலிகள் கூட்டமா சேந்து பகையக் காட்டினாலும் பாம்பு மூச்சு விட்டுச்சுன்னா அதுங்க கெட்டழிஞ்சு போவும். 

குறள் 764:

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை

எந்த நெலமயிலயும் அழிஞ்சு போவாம பகையாளியோட சதிக்கு தொணை போவாம பரம்பரையாவே பயமில்லாம உறுதியா இருக்கதுதான் படை. 

குறள் 765:

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை

உசிர எடுக்குத சாவே முன்ன வந்தாலும் பயப்படாம ஒண்ணாநின்னு எதித்து நிக்குத சக்தி உள்ளதே படை. 

குறள் 766:

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு

வீரம், மானம், நல்லவழில நடக்குதது, தலைவனோட நம்பிக்கையப் பெறுதது இந்த நாலும் படையைப் பாதுகாக்குத பண்புகள் ஆவும்.  

குறள் 767:

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து

சண்டயத் தடுக்குத மொறையத் தெரிஞ்சுக்கிட்டு மொதல்ல வருத படைய செயிச்சி பின்னால வருதவங்க தாக்காதமாரி தடுக்குதது படை.

குறள் 768:

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்

சண்டபோடுத வீரமும் எதித்து நிக்குத பலமும் இல்லன்னா கூட அது தன் அழகான அணிவகுப்பால் பெரும பெத்துக்கிடும். 

குறள் 769:

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை

தன் அளவுல கொறஞ்சு சிறிசாப் போவுதது, தலைவன வெறுக்குதது, வறுமை இது ஏதும் இல்லன்னா படை செயிச்சிக்கிடும். 

குறள் 770:

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்

நெறைய நாள் நெலச்சு நிக்குத வீரர்கள் ரொம்ப பேர் இருந்தாலும் தலைவன் இல்லன்னா அந்தப் படை நெலச்சி நிக்காது.

(அடுத்தாப்லையும் வரும்…) 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.