இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(274)

-செண்பக ஜெகதீசன்

கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினு மில்.
-திருக்குறள் -1005(நன்றியில் செல்வம்)

புதுக் கவிதையில்…

பிறர்க்கு ஈவதுமின்றித்
தானும் துய்க்காமலிருப்பவன்,
ஈட்டும் செல்வம்
அடுக்கடுக்காய்
எத்தனைக் கோடியிருந்தாலும்,
எவ்வித
பயனுமில்லை அதனால்…!

குறும்பாவில்

கோடிகோடியாய்ச் செல்வம் சேர்த்தாலும்,
பிறர்க்கும் கொடுத்துத் தானும் அனுபவிக்காதவனுக்கு
அதனால் பயனேதும் இல்லை…!

மரபுக் கவிதையில்…

அடுத்தவர் மகிழக் கொடுக்காமலும்
ஆசை தீர அனுபவித்திட
எடுத்துச் செலவும் செய்யாதவன்
ஏங்கிச் சேர்த்த செல்வமதும்
அடுக்காய்ப் பற்பல கோடிகளாய்
அவனிடம் குவிந்தே இருந்தாலும்,
கொடுக்கா ததுவே பயனெதுவும்
கொள்வீ ரிதனைக் கருத்தினிலே…!

லிமரைக்கூ…

சம்பாதிப்பான் அடுக்கடுக்காய் கோடி,
பிறர்க்கதைக் கொடுக்காமல் தானும் துய்க்காதவனுக்கு
வராதே பயனெதுவும் தேடி…!

கிராமிய பாணியில்…

பயனில்ல பயனில்ல
சேத்துவச்ச செல்வத்தால பயனில்ல,
அடுத்தவனுக்குக் குடுத்து அனுபவிக்காத
செல்வத்தால பயனில்ல..

அடுத்தவனுக்குக் குடுத்து ஒதவி
தானும் அனுபவிக்காதவன்,
அசராமப் பாடுபட்டு
அடுக்கடுக்கா
கோடிகோடியா சம்பாதிச்சாலும்,
அதுனால
எந்தப் பயனும் கெடயாதே..

தெரிஞ்சிக்கோ,
பயனில்ல பயனில்ல
சேத்துவச்ச செல்வத்தால பயனில்ல,
அடுத்தவனுக்குக் குடுத்து அனுபவிக்காத
செல்வத்தால பயனில்ல…!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comment here