இளையராஜா, உங்கள் கர்வத்தைத் தொலையுங்கள்
பாஸ்கர்
மனோபாலா மரணம் இங்கு மறக்கப்பட்டு இன்று இளையராஜா அஞ்சலியில் சொன்னது பேசு பொருள் ஆகிவிட்டது. ராஜா முதிர்ந்தவர். அனுபவஸ்தர். பெரிய பிரபலம். அவரை இப்படித்தான் பேச வேண்டும் என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இப்படி எல்லாம் பேசக் கூடாது எனச் சொல்லலாம் என்று தான் தோன்றுகிறது.
இதற்கு மேல் அவருக்கும் என்ன பெரும் புகழும் பணமும் வேண்டும்? ரமணரை வணங்குபவர் அவர். அகந்தை பற்றி அவர் அறிந்ததும், புரிந்ததும் இவ்வளவு தான் எனில் யாரை இங்குக் குறை சொல்ல? அவர் தன்னை இன்னும் ஆழ்ந்து பார்க்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
நான் மிக்க சின்னவன் அவரை விட எல்லா வகையிலும். ஆனாலும் அவர் பேசிய தோரணை தவறு தான். நிஜமாகவும், இயல்பாகவும் இருப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அது இளையராஜாவிற்கும் பொருந்தும். அவரின் இசை அமுங்கி வசை தான் முன் நிற்கிறது. பெரிய நடிகர்களையும், அரசியல் தலைவர்களையும் விமர்சனம் செய்ய நமக்கு உரிமை இருக்கும் போது இளையராஜா விலக்கு அல்ல. அவரிடம் இன்னும் பெயருக்கும், புகழுக்கும் ஆசைப்படும் குணம் இன்னும் குறையவில்லை. அது தவறில்லை. ஆனால் மனோபாலாவின் அஞ்சலியில் காட்டியிருக்க வேண்டாம். சத்தியமாக எனது கருத்தில் அவரின் அரசியல் கலப்பை நினைக்கவில்லை.
அவருக்கு எங்கோ இன்னும் இன்னும் என்ற வலி உள்ளது. இனி இனி ஒன்றும் இல்லை என்று அவர் உணர வேண்டும். தத்துவம் தெரிந்த அவர் என்றோ அதனைக் கைகொண்டிருக்க வேண்டும். அன்புள்ள ராஜா சார், உங்களை இன்றும் உலகம் பெரிதும் மதிக்கிறது. உங்கள் புகழ் குடம் ஏன் இன்னும் நிரம்பவில்லை என்று நினைக்கிறீர்கள். ஆனால் அது தளும்புகிறது என்ற விஷயம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. அல்லது தெரிந்தும் உங்களுக்குப் போதவில்லை எனில் குறை குடத்தில் அல்ல. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி என்ற அவ்வையின் பாடலை நீங்கள் படித்து இருப்பீர்கள். இதற்கு மேல் மொள்ள இயலாது என தெரிவதும், தெரிந்து நகர்வதும் தான் தெளிவு . இன்னும் மொள்ள நினைப்பது தவறு.
உங்கள் கர்வத்தைத் தொலையுங்கள். இதற்கு மேல் சாதிக்கவும், பெயர் சம்பாதிக்கவும் உங்களுக்கு அவசியம் இல்லை இதைச் சொல்ல ஒரு கவிஞனோ, இசை அமைப்பாளரோ, ஒரு பிரபலமோ தேவையில்லை. இந்த மிகச் சாதாரணன் போதும். நீங்கள் செய்வீர்கள் எனில் உலகம் இன்னும் உம்மைக் கொண்டாடும்.
வணக்கம்! ஒருவரிடத்தில் கீழ்த்தரமான பண்பைப் பின்னாக்கி, அவருக்கிருக்கும் திறமையை முன்னிறுத்திப் பேசப்படும் புதுவகை ஒழுகலாறு ஒரு சமுதாய நெறியாக மாறிவிட்டது. இது அரசியல் வாதிகளுக்கும பொருந்தும். கவிஞர்களுக்கும பொருந்தும். அனைவருக்கும பொருந்தும். பொதுவாழ்க்கைக்கும் தனிவாழ்க்கைக்கும் வேறுபாடில்லாத வாழ்க்கையை வாழாத வரை இளையராஜாக்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். இது விதி! மாற்ற இயலாது. நன்றி!