ஓர் இளவரசர் இராஜாவாகிறார்

0

சக்தி சக்திதாசன்
லண்டன்

2023 மே மாதம் 6ஆம் தேதி பிரித்தானிய நாட்டின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். எமது வாழ்வில் கூட இது ஒரு முக்கியமான நாளாகிறது.

ஏன் என்கிறீர்களா ?

இன்றுதான் நாமனைவரும் ஒரு முடிசூட்டு விழாவினை நேரடியாகப் பார்க்கும், பங்குபற்றும் சந்தர்ப்பம் பெற்றவர்களானோம்.

இன்று ஓர் இளவரசர் இராஜாவாக உத்தியோகபூர்வமாக முடிசூட்டப்பட்டுள்ளார் . அதுவும் சமீபகால சரித்திரத்திலேயே வயதில் முதிர்ந்த இளவரசர் எனப் பெயர் பெற்ற இளவரசர் சார்ள்ஸ் இன்று தனது 74ஆவது வயதில் மூன்றாவது சார்ள்ஸ் மன்னராக முடிசூட்டப்பட்டுள்ளார் .

பிரித்தானியா நாட்டின் அரச கட்டிலில் அமர்ந்தவர்களில் அதிக காலம் கோலோச்சியவர் எனும் சரித்திரத்தை ஏற்படுத்தியவர் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் ஆவார்.

70 ஆண்டுக்காலம் ஆட்சி அரியணையில் அமர்ந்திருந்து விட்டு தனது 96ஆவது வயதில் மரணமடையும் வரை அரசியாக இருந்தவர்.

இன்று முடிசூட்டப்பட்ட சார்ள்ஸ், தனது நான்காவது வயதில் இருந்து பட்டத்துக்குரிய இளவரசராக தனது அன்னையின் நிழலில் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

70 வருடகால இளவரசர் அனுபவத்தைப் பெற்ற சார்ள்ஸ், வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்நோக்காமலில்லை.

இளவயதில் ஒரு பெண்ணைக் காதலித்திருந்தாலும் தனது பெற்றோரின் விருப்பத்தின்படி இங்கிலாந்து இராஜ பரம்பரை வழக்கத்திற்கு உட்பட்டு டயானா அவர்களைத் திருமணம் செய்து வில்லியம், ஹரி எனும் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையானார்.

இளவரசர் சார்ள்ஸ் அவர்களுக்கும், இளவரசி டயானா அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகளினால் பல சர்ச்சைகளுக்கு  உட்படுத்தப்பட்ட அவர்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் தனது முன்னைய காதலியுடனும், இளவரசி டயானா டோடி எனும் இஸ்லாமியருடனும் தமது காதல் வாழ்க்கையை நடத்தினர்.

பாரிஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளவரசி டயானா. தனது காதலன் டோடியுடன் மரணத்தைத் தழுவினார்.

ஏழு வருடங்களின் பின்னால் இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமிலா பார்க்கர் போல்ஸ் என்பவரை மணமுடித்தார்.

விவாகரத்து , மறுமணம் என்பது இராஜ பரம்பரையில் சர்ச்சைக்குரிய விடயமாகக் கருதப்பட்டதாலும், இங்கிலாந்தில் அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அது தவறென்று கருதப்பட்டதாலும் இளவரசர் சார்ள்ஸ் மன்னராவது சந்தேகத்துக்கு இடமாயிருந்தபோதும் அதனை ஏற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் இரண்டாவது புதல்வர் ஹரி, கறுப்பினக் கலப்புடைய  அமெரிக்க நடிகை ஒருவரை மணமுடித்தார்.

ஹரி அவர்களின் திருமணத்தைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் குடும்பத்தில் ஹரி தம்பதியுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது .

இளவரசர் ஹரி இராஜ வம்சத்தினால் தனக்குக் கிடைத்த பட்டங்கள் மற்றும் சலுகைகளைத் துறந்து அமெரிக்கா சென்று சாதாரண வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்து இராஜ குடும்பத்தினின்றும் தன்னை விலக்கிக் கொண்டார்.

அமெரிக்கா சென்ற ஹரி தம்பதியினர் அங்கு பிரபலமான ஓப்ரா வின்வரி எனும் தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கு இங்கிலாந்து இராஜ பரம்பரைக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய நேர்காணலை வழங்கினர்.

இத்தனை பிரச்சனைகளையும் எதிர்கொண்டபடியே தனது பட்டத்துக்குரிய இளவரசரின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினார் இளவரசர் சார்ள்ஸ்.

தந்தை எடின்பரோ கோமானைத் தொடர்ந்து இரண்டாவது எலிசபெத் மகராணியாரும் உயிர் நீத்தனர்.

கடந்த வருடம் தனது அன்னையின் மறைவினையடுத்து பிரித்தானிய நாட்டு இராஜாவாகப் பொறுப்பேற்ற இளவரசர் சார்ள்ஸ் இன்று அதாவது 2023 மே மாதம் 6ஆம் தேதி அதிகாரபூர்வமாக முடிசூட்டிக் கொண்டார்.

தனது கலாச்சார விழுமியங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் இங்கிலாந்துக்கு நிகர் இங்கிலாந்து என்றே சொல்ல வேண்டும்.

1953ஆம் ஆண்டு இரன்டாவது எலிசபெத் மகாராணியார் முடிசூட்டும் வைபவத்தின் போது நான் இவ்வுலகத்தில் பிறக்கவில்லை. ஆனால் அது எத்தகைய கலாச்சாரப் பின்னணியில் நடைபெற்றது என்பதைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்ததுண்டு.

இன்று மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் முடிசூட்டு வைபவத்தைத் தொலைக்காட்சி நேரலை மூலமாகக் கண்டு களிக்கக்கூடிய வசதியுடையவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் .

மன்னர் சார்ள்ஸ் அவர்களையும் அவரின் இராணியார் கமீலா அவர்களையும் நேரடியாகக் காண்பதற்காக அவர்கள் எவ்வழியாக அவர்களது இல்லத்திலிருந்து வைபவம் நடக்கும் தேவாலயத்துக்கு ஊர்வலமாகச் செல்வார்களோ அவ்வழிதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வந்து கூடாரமடித்துத் தங்கியது இந்நாட்டு மக்கள் தமது கலாச்சார விழுமியங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினைப் புலப்படுத்துகின்றது..

தரைப் படை, ஆகாயப் படை, கப்பற்படை என முப்படைகளைச் சேர்ந்த படை வீரர்களின் அணிவகுப்போடு பொதுநலவாய நாடுகளின் படைத்தளபதிகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து முடிசூட்டப்படப்போகும் இளவரசர் சார்ள்ஸ் அவரது துணைவியார் இருவரும் அழகிய வேலைப்பாடமைந்த குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

வைபவம் நடக்கவிருந்த வெஸ்ட் மினிஸ்டர் அபே சார்ச் மண்டபத்தில் அழைக்கப்பட்டிருந்த பொது மக்கள் , சர்வதேச நாட்டுத் தலைவர்கள் , அனைத்து மதத் தலைவர்கள் , முன்னைநாள் பிரதமர்கள் , முக்கியமான பிரஜைகள் எனப் பலரும் திரண்டு மன்னருக்காகக் காத்திருந்தனர்.

உறவினர்கள் புடைசூழ மன்னரும், அவரது துணைவியாரும் மண்டபத்தில் அவர்களுக்கான ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.

இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் முடிசூட்டப்படும்போது அமர்ந்திருந்த அரியணை, காலம் காலமாக இங்கிலாந்து அரசர்கள் உபயோகித்த அரியணை என்பது குறிப்பிடத்தக்கது ,

இதே தேவாலயத்தில் தான் முதன் முதலில் 1066ஆம் ஆண்டு முடிசூட்ட[ப்பட்ட மன்னரான வில்லியம் த கொன்கரர் தொடங்கி இன்றுவரை அனைத்து முடிசூட்டு விழாக்களும் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் இழைக்கப்பட்ட சிம்மாசனம். மிகவும் பிரபலமான தேவாலயப் பாடல்கள் புகழ் பெற்ற இசை வல்லுனர்களின் வழிகாட்டுதலில் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய குழுவினர்களினால் இசைக்கப்பட்டது .

இவ்விழாவிற்கு அமெரிக்காவில் இருந்து மன்னரின் இளைய மைந்தன் ஹரி கலந்து கொண்டிருந்தாலும் அவரது மனைவி மெகனும் குழந்தைகளும் கலந்து கொள்ளவில்லை.

ஆர்ச்பிஷப் ஆப் கண்டபெரி புரொட்டஸ்டண்ட் ஆங்கில சார்ச் இன் தலைமைக் குருவின் முன்னால் முடிசூட்டப்படும் மன்னர்களுக்கு உரித்தான பாரம்பரிய உறுதிமொழிகளை எடுத்த மன்னர் சார்ள்ஸ்க்கு முடுசூட்டப்பட்டு, ராணியார் கமீலாவுக்கும் அவருக்குரிய முடி சூட்டப்பட்டது..

முடியேற்றப்படும் முன்னால் மன்னரைச் சுற்றி ஒரு திரையிடப்பட்டது. மன்னர் மதச் சம்பிரதாயத்தின்படி இறைவனின் பிரதிநிதியாகத்தான் அங்கு முடிசூட்டப்படுகிறார் என்பதை அறிவிப்பதற்காக தலைமை மதகுருவினால் அவரது தலையில் பரிசுத்த எண்ணெய் வைக்கப்பட்டது, இதன்போது மன்னர் தனது ஆடம்பர அங்கிகளைக் களைந்து வெறும் துணி மட்டுமே அணிந்திருந்தார். இதனைப் பார்வையாளர்கள் காணக்கூடாது என்பதற்காகவே திரைக்குப் பின்னால் நிகழ்ந்தது.

அவரின் உறுதிமொழிகளின் போது ஒரு சிறுவன் மன்னரை நோக்கி ” நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் ” என்று கேட்டதும் “நீங்கள் எனக்குச் சேவை செய்வதற்காக இங்கு வரவில்லை உங்களுக்குச் சேவை செய்யவே வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார். இதுவும் ஒரு சம்பிரதாய வழக்கமே

தங்கம், வைரம், வைடூரியம் இழைக்கப்பட்ட முடியைத் தலையில் தாங்கி மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கிறிஸ்தவ வழிமுறைகளின் படி இவ்வைபவம் நடைபெற்றாலும் முடிசூட்டப்பட்ட மன்னர் அனைத்து மதத் தலைவர்கள் முன்னின்று அவர்களின் மதவழிகளில் ஆசிகளைப் பெற்றது பிரித்தானிய சரித்திரத்தில் முதன்முறையாக இடம்பெற்றது.

குறிப்பாக, தற்போதைய இங்கிலாந்துப் பிரதமரான ரிஷி சுனாக் இந்து மதத்தைச் சேர்ந்தவராவார். இவர் இவ்வைபவத்தின் போது கிறிகிறிஸ்தவ மதநூலான பைபிளில் இருந்து ஒரு பகுதியைப் படித்தது புதிய மன்னரின் போக்கின் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்ததைப் பலரும் அவதானித்ததைக் கண்டுகொள்ள முடிந்தது.

மன்னருக்கு முடிசூட்டப்பட்டதை அடுத்து நாட்டுப் பிரஜைகள் தமக்குப் பிடித்திருந்தால் புது மன்னருக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இது கட்டாயமாக்கப்படவில்லை .

முடிசூட்டப்பட்டதை அடுத்து மன்னரும் , ராணியாரும் தங்க ரதத்தில் வைத்து ஊர்வலமாக அவரகளது உத்தியோக வாசஸ்தலமான பக்கிங்காம் பலஸ் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் . அவர்கள் பின்னால் பட்டத்து இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேட் மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் மற்றொரு ரதத்தில் பின்தொடர்ந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து இராஜ குடும்பத்தின் உத்தியோகப்பூர்வமான அங்கத்தினர்கள் தொடர்ந்தார்கள்.. குறிப்பாக மன்னரின் தங்கை இளவரசி ஆன் அவர்கள் தனது உத்தியோகப்பூர்வமான அங்கிகளுடன் குதிரையில் அவ்வூர்வலத்தில் கலந்து கொண்டது அழகாக இருந்தது.

வழிதோறும் மழையைப் பொருட்படுத்தாது சாலையோரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று மன்னரை வாழ்த்திக் கோஷமிட்டது இந்நாட்டு மக்கள் தமது பாரம்பரியத்தை எவ்வளவு முக்கியமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டியது.

தமது உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற மன்னரும், இராணியாரும் தமது குடும்ப அங்கத்தினருடன் பால்கனிக்கு வந்து தம்மை வாழ்த்தக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கையசைத்துத் தமது நன்றியறிதலைத் தெரிவித்தார்கள்.

மன்னருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மரியாதை செய்யும் பொருட்டு வான்படையினர் வானூர்திகளில் ஊர்வலமாகப் பறந்து ஒரு கண்காட்சியை நிகழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து தமது மாளிகையின் பின் தோட்டத்தில் மன்னரும் அவர் குடும்பத்தினரும் பாதுகாப்புப் படையினருக்குத் தமது பிரத்தியேகமான நன்றிகளைத் தெரிவித்தார்கள்.

கிறிஸ்தவ மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிறிஸ்தவரான மன்னர் தாம் கிறிஸ்தவ மதத்தின் காவலர் மட்டும் அல்ல இந்நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் அனைத்து மதங்களின் பாதுகாவலர் என்பதைப் பல இடங்களில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மாணவனாக இந்நாட்டினுள் 48 ஆண்டுகளின் முன்னால் கால் பதித்தேன். எனது உயர் கல்வியை முடித்து, திருமணப் பருவத்தில் புகுந்து இன்று ஒரு பேத்திக்குத் தாத்தாவாக உள்ளேன்.

என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தில் நான் சந்தித்த மாற்றங்கள் அனைத்திலும் இந்நாட்டின் சட்டதிட்டங்கள் எனக்கு அனுகூலமாக இருந்தனவே தவிர என்றுமே முட்டுக்கட்டையாக இருந்ததில்லை.

ஜனநாயகம் என்பதன் உண்மை அர்த்தங்களைப் புரிந்துகொள்ள இந்நாட்டு வாழ்க்கை எனக்கு உதவியது, அத்தகைய நாட்டின் பாரம்பரிய தலைவராகக் கருதப்படும் மன்னரின் முடிசூட்டு விழாவின் பார்வையாளராக இருந்தது எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.

ஆமாம் எங்கோ பிறந்தேன், எங்கோ தவழ்ந்தேன், இங்கே மிதந்தேன். வந்த என்னை வாழவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பிரஜைகளில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

பல்லாண்டுகள் வாழ்க என்று மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *