Tag: ப்ரெக்ஸிட்

  • நதியினில் வெள்ளம்! கரையினில் நெருப்பு!

    நதியினில் வெள்ளம்! கரையினில் நெருப்பு!

    சக்தி சக்திதாசன் 

    (இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302)

    அக்டோபர் 31! இங்கிலாந்து அரசியல் காலண்டரில், இதுவும் முக்கியமான நாளாக ஐக்கிய இராச்சிய மக்கள் மத்தியில் மட்டும் அல்லஐரோப்பிய ஒன்றிய நாட்டு மக்களின் மத்தியில் மட்டும் அல்லஉலக மக்கள் அனவரினதும் மனங்களிலேயும் அழுத்தமாகப் பதிந்துவிட்ட தேதி.

    ஐக்கிய இராச்சியம்ஐரோப்பிய ஒன்றியம் எனும் ஒரு கூட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயலும் தேதி .

    சுதந்திரமாகதமது இறைமையைத் தமது கைகளிலே கொண்டுள்ள நாடாக வாழ வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே முடியும் என்று வாக்களித்தோரில் பெரும்பான்மையான ஐக்கிய இராச்சிய மக்கள் எடுத்த ஏகோபித்த முடிவு.

    ஐக்கிய இராச்சியம்குறிப்பாக இங்கிலாந்து நாட்டு மக்களின் மனத்தில் கொஞ்சம்கொஞ்சமாகத் தமது நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம்வாழ்க்கை முறை என்பன முற்றாக தமது நாட்டில் மாறி வருகிறது எனும் எண்ணம் வளர்ந்து வந்தது.

    அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லைசுகாதாரச் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதாவது சிகிச்சைகளுக்காகக் கால அவகாசத்தின் நீட்சிவைத்தியர்கள்தாதிமாரின் பற்றாக்குறை என்பன.

    பாடசாலைகளில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இடப் பற்றாக்குறைஒரு இடத்தில் பலகாலமாக வசித்து வந்தவர்களின் குழந்தைகளுக்கே அவர்களது அருகில் உள்ள பாடசாலைகளில் இடம் கிடைக்காத நிலை.

    வெளிநாடுகளில், அதுவும் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததும் அந்நாட்டுப் பிரஜைகள் இலகுவாக ஐக்கிய இராச்சியத்தினுள் நுழைந்ததால் உள்நாட்டுப் பணியாளர்களின் ஊதியத்துக்குக் குறைவாகப் பெற்று அவர்களது பணிகளை இவர்கள் பெற்றுக்கொண்டதால் எழுந்த விரக்தி.

    இப்படியான காரணங்கள் இங்கிலாந்து மக்களின் மனத்தில் எழுந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான அதிருப்திக்கு வழிவகுத்த காரணங்களில் முக்கியமானவை.

    ஐக்கிய இராச்சியப் பிரஜைகளின் இளம் சந்ததியினரில் பலர் வைத்தியத்துறைதாதித்துறைமற்றும் சரீர உழைப்பின் அடிப்படையில் அமைந்த பணிகளின் மீதான ஈர்ப்பின்மையால் ஏற்பட்ட அத்தகைய துறைகளின் பணியாளர்களின் பற்றாக்குறையை இக்கிழக்கு ஐரோப்பிய பணியாளர்கள் பூர்த்தி செய்வதும் மறுக்கப்பட முடியாத உண்மை.

    இவர்களின் சேவையின் தேவை ஐக்கிய இராச்சியத்துக்கு அத்தியாவசியமானது எனும் ஒரு நிலையே காணப்படுகிறது.

    எனது கண் சம்பந்தமான வைத்தியத்துக்காக நான் வைத்தியசாலைக்குச் செல்வது உண்டுஅப்போது அங்கே ஒரு பதாகையில் அன்று அங்கு பணிபுரிவோரின் பட்டியல் (டாக்டர்கள்தாதிமார்) எழுதப்பட்டிருக்கும்அப்பட்டியலில் பத்துப் பெயர்கள் இருந்தால் அதில் இரண்டு அல்லது மூன்று பெயர்களே ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

    இங்கிலாந்து மக்களின் இவ்விரக்தியும் அதற்குக் காரணம் என்று எளிமையாக அவர்கள் கருதும் வெளிநாட்டவரின் வருகை என்பதும் இன்றைய இங்கிலாந்து மக்களின் மனநிலைக்குக் காரணம் என்பதும் உண்மை.

    இந்த வெளிநாட்டவர் கட்டுப்பாடின்றி ஐக்கிய இராச்சியத்தினுள் நுழைவதற்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றியம் என்பதுவே பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கிறது.

    இங்கு ஒரு விடயம் என்னவென்றால் இந்த வெளிநாட்டவர் வருகை என்பது ஐக்கிய இராச்சியத்தில் குறிப்பாக வெள்ளை இனத்தவரிடையேதான் பிரச்சனையாக இருக்கிறது என்று எண்ணுவதே இயல்பாகும்.

    என்னே ஆச்சரியம் !

    புலம்பெயர்ந்த மக்கள் பலர்  கூட இத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதுவே உண்மைநான் சந்தித்த ஆசிய இனத்தவர் பலர் கூட இவ்வெளிநாட்டவர் வருகையை விரும்பாததை அறிந்திருக்கிறேன்தாம்கூட ஒரு காலத்தில் இங்கு வந்த வெளிநாட்டவர் எனும் நிலை இருந்தபோதும் இப்போது ஐக்கிய இராச்சிய பிரஜை எனும் நிலைக்குத் தம்மை உயர்த்திக்கொண்டதை உணர முடிந்தது.

    அதைத் தவறு என்று சொல்ல முடியாதுஏனெனில் அவர்கள் தம்மையும் ஐக்கிய இராச்சியம் எனும் தராசில் அந்நாட்டு மக்களுடன் சரிசமமாக எடையிட்டுக் கொள்வது காலத்துக்கேற்ற மாற்றம் என்பதை மறுக்க முடியாதுஅது காலத்தின் தேவையும் கூட .

    இந்த ஒரு பின்னணியில் இன்று அதாவது அக்டோபர் முதலாம் தேதி இங்கிலாந்து அரசியல் நிலை என்ன வடிவம் கொண்டுள்ளது?

    பிரதமரோ இன்னும் 30 நாட்களில் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது வெளியேறுவதுதான் எனும் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் அசைவதாகத் தெரியவில்லை.

    ஆனால் அத்தேதி வெளியேறுவதற்கான ஓர் ஒழுங்கான வெளியேற்றத்துக்கான உடன்படிக்கையை எட்டுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை.

    அதேநேரம் அத்தகைய உடன்படிக்கையற்ற வெளியேற்றம் சட்டத்துக்கு முரணானது எனும் வகையில் ஒரு சட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அமுலாக்கியுள்ளார்கள்.

    கைகட்டப்பட்ட நிலையில் போர்க்களத்தில் நிற்பதைப் போல நிற்கும் பிரதமர் தனது கைக்கட்டுக்களைத் தளர்த்திக்கொள்ளச் சிறிது அவகாசம் தாருங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்பதுவே கூட்டாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சட்டப் பிரேரணை.

    ஒரு சேற்றுக் குழியில் பிணமாக இருந்தாலும் இருப்பேனேயொழிய (சும்மா ஒரு பேச்சுக்காகஅக்டோபர் 31ஆம் தேதி வெளியேறுவதில் எந்தவிதமான அவகாசமும் கேட்கமாட்டேன் என்று சூளுரைத்திருக்கிறார் பிரதமர்.

    ஆயினும் ஓர் உடன்படிக்கையை எட்டுவேன் என்று பலதரப்பான ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுகளில் தன்னையும்தன்னைச் சார்ந்தவர்களையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர்.

    உடன்படிக்கை எட்டுவதற்கான பேச்சுகளைத் தாம் இன்னமும் எதிர்கொள்ளவில்லை என்று நம்பிக்கையின்மையோடு பேசுகிறார்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினர்.

    தமது அடுத்த கட்ட நகர்வுக்கான தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

    இந்த இழுபறி நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள, இது பாராளுமன்றத்துக்கும்மக்களின் ஐனநாயக உரிமைக்கும் இடையிலான போராட்டம் எனவும் இப்போராட்டத்தில் தான் மக்கள் பக்கம் என்று மக்கள் ஆதரவில் குளிர்காய்கிறார் பிரதமர்.

    சில பொதுக் கருத்துக் கணிப்புகளின்படி பிரதமருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

    எனது நடவடிக்கைகளில் அதிருப்தி என்றால் நான் விடுத்த அழைப்பினை ஏற்று ஒரு பொதுத் தேர்தலை நடத்த ஆதரவு தாருங்கள்மக்கள் யார் பக்கம் என்று பார்த்து விடுவோம் என்று எதிர்க்கட்சிக்குச் சவால் விடுகிறார் பிரதமர்.

    தேர்தலுக்கு நாம் தயார் ஆனால் உடன்படிக்கையற்ற ஒரு விலகலை தவிர்த்துவிட்டோம் என்று உறுதிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திடம் கால அவகாசம் பெற்று அக்டோபர் 31ஆம் தேதி வெளியேற்றம் என்பதை அகற்றுங்கள். அதன் பின்னால் தேர்தலுக்கு நாம் தயார் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

    போச்சுடாஒரு கயிறிழுக்கும் போட்டியைப் பார்ப்பது போலல்லவா இருக்கிறது.

    இது இப்படியிருக்க பிரதமர் பொரிஸ் ஜான்சன் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு முனையிலிருந்து சராமாரியாக வீசப்படுகின்றன.

    அவரும்அரச தரப்பும் இந்த ப்ரெக்ஸிட் விவகாரத்தில் உபயோகிக்கும் பதங்கள் மக்கள் மத்தியில் துவேஷ உணர்வுகளை வளர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன என்கிறார்கள்.

    அத்தோடு ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் ஒரு ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வாக இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு பிரதமரின் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் செயல் சட்ட விரோதமனாது என்று தீர்ப்பளித்ததை அடுத்து பிரதமர் தனது அதிகாரத்தை இழந்து விட்டதனால் பதவி விலக வேண்டும் எனும் கூப்பாடு ஓரத்தில் எழுகிறது.

    பிரதமர் லண்டன் நகர மேயராக இருந்த சமயம் அவருக்கும் ஒரு தொழிலதிபரான இளம்பெண்ணுக்கும் இடையில் தகாத உறவு இருந்ததாகவும் அவ்வுறவின் அடிப்படையில் அப்பெண்ணின் நிறுவனத்துக்கு மக்கள் பணத்தில் இருந்து நிதி உதவி செய்தார் என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

    அதே நேரம் 20 வருடங்களுக்கு முன்னால் ஒரு விருந்தின் போது இப்போதைய பிரதமர், தன் மீது கை வைத்தார் என்று அப்போதைய பெண் நிருபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இவையெல்லாம் பிரதமர் மீது எதிரிகள் சுமத்தும் அபத்தமான குற்றச்சாட்டுகள்இதை மக்கள் ஒருபோதும் பெரிதுபடுத்தப் போவதில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

    தொடர்ந்திருந்து பார்ப்போம் ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம் நெருப்பு இரண்டில் ஒன்றுக்குள் அகப்படப் போகிறாராஇல்லை தனது புத்தி சாதுரியத்தால் அவ்வெள்ளத்தை அந்நெருப்பை நோக்கித் திசைதிருப்பி நெருப்பை அணைக்கப் போகிறாரா?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (300)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (300)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    காலவோட்டம் தமக்குள் எத்தனையோ நிகழ்வுகளைப் புதைத்துக் கொண்டு செல்கின்றன. அவற்றை வெறும் நிகழ்வுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாக மட்டும் நாமிருந்து விட முடிகிறதா? இல்லையே! புதையும் நிகழ்வுகளுக்குள் எமது வாழ்வினைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் அடங்குகிறதே ! சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் நிலையை நிர்ணயிக்கும் பல முடிவுகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் அவர்களின் பெயரால் எடுக்கப்படுகிறது. இதனால் பல சமயங்களில் விரும்பாமலே பார்வையாளர்களாக ஆக்கப்பட்டு விடுகிறோம். இதற்கு நியாயமாக ஜனநாயகம் எனும் முத்திரையும் குத்தப்படுகிறது. இது ஒரு நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளில் நிகழ்ந்து வரும் ஒரு நடைமுறை நிகழ்வு என்பதுவே கசப்பான உண்மை.

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக திரு.பொரிஸ் ஜான்சன் அவர்கள் பதவியேற்று சுமார் ஒரு மாத காலமாகிறது. இவ்வொரு மாத காலத்தில் அவரால் தனது அரசு நடைமுறைப்படுத்தப் போகும் திட்டங்கள் எனப் பல அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் பல சராசரி மனிதர்கள் மனதில் குடி கொண்டிருந்த எண்ணங்களின் பிரதிபலிப்புகள் போலவும் தென்படுகின்றன. இவை மக்களின் செவிகளில் ஒரு இனிமையான செய்தியாக விழுவதற்காக மட்டும் கூறப்பட்டவையா? இல்லை அது நடைமுறைபடுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய வாதமாகவே இருக்கிறது. ஆனால் அனைத்துக்கும் ஆணிவேராக, அடிப்படைப் பிரச்சனையாக இன்றைய ஐக்கிய இராச்சிய மக்கள் முன்னல் இருப்பது “ப்ரெக்ஸிட்” எனும் பிரச்சனைக்கான தீர்வே ! மக்களின் அபிலாஷைகளை அறியும் பொருட்டு நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடிப்பின் படி 4% வீதமான அதிகப்படியான வாக்குகளினால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றமே தெரிவு செய்யப்பட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

    இது ஒரு பக்கமிருந்தாலும், வாக்களித்த மக்கள் எவ்வகையான ஒரு தீர்வை எதிர்பார்த்து வாக்களித்தார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதே சமயம் “ப்ரெக்ஸிட்”க்கு ஆதரவானவர்கள் என்ன கூறுக்கிறார்கள்? எந்தவிதமான உடன்படிக்கையும் எட்டப்படாத பட்சத்தில் உடன்படிக்கையற்ற ஒரு வெளியேற்றம் என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மைதானே! எனவே வாக்களித்த மக்கள் உடன்படிக்கையற்ற வெளியேற்றத்திற்கு வாக்களிக்கவில்லை எனும் வாதம் நியாயமற்றது எனபதுவே அவர்களது வாதம். இங்கிலாந்துப் பாராளுமன்றம் பல அபிப்பிராயங்களின் அடிப்படையில் சிதறி நிற்கிறது. எந்த விதமான ஒரு தீர்வுக்கும் ஏகோபித்த ஆதரவு இல்லை. அதேசமயம் எதுவித உடன்படிக்கையுமற்ற வெளியேற்றத்துக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது. இதுதான் இன்றைய நிலை. இந்த நிலையில் நாம் நாட்டின் நலனைக் கருதியே நாம் உடன்படிக்கையற்ற ஒரு வெளியேற்றத்தை எதிர்க்கிறோம் என்றும் கூறும் பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி ஒரு கேள்விக்கணையைத் தொடுக்க வேண்டித்தான் உள்ளது.

    2017ம் ஆண்டுத் தேர்தலை அடுத்து 2016 சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளின்படி மக்கள் தீர்ப்பே ! மகேசன் தீர்ப்பு ! என்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் எனும் அறிவிப்பை அப்போதைய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விடுத்தார். அதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவை வழங்கும் போது ஏனிந்த நாட்டின் நலன் எனும் நிலைப்பாடு அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றவில்லை? அப்படித் தோன்றியிருந்தால் உடன்படிக்கையற்ற வெளியேற்றத்துக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று அப்போதே முடிவெடுத்திருந்தால் அவ்வறித்தலை அவசரம், அவசரமாக விட்டிருக்காமல் செய்திருக்கலாம் அல்லவா? அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கையை சட்ட மூலமாக்கும் போதும் இதை அவர்கள் எண்ணவில்லையா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இதற்கான காரணம் என்று இப்போது ஊகிக்க முடியுமானால் ஒரேயொரு விடயம் மட்டுமே புலப்படுகிறது. அன்றைய சூழலில் “ப்ரெக்ஸிட்” எனும் வாதம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருந்தது.

    அன்றைய நிலையில் அனைத்துக் கட்சிகளும் மக்களின் ஆதரவைப் பெற ஒரே வழி நாட்டின் நலன் கருதிய உண்மைகளை விட அன்றைய பெரும்பான்மை மக்களின் ஆதரவினைப் பெற்ற “ப்ரெக்ஸி”டை அதரிப்பதை ஒரேவழியாக அதனைத் தேர்ந்தெடுத்ததுவே அக்காரணம் என்றே புலப்படுகிறது. இந்த “ப்ரெக்ஸிட்” எனும் பூதம் கண்ணாடிக் குவளையில் இருந்து திறந்து விடப்படதன் முக்கிய காரணம் இன்றைய அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி தனது கட்சியின் பிளவைத் தடுப்பதற்காகவே என்பதுவே உண்மை. ஜரோப்பிய ஒன்றியத்தில் பல புனரமைக்கப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்பதை யாரும் மறுத்து விட முடியாது. நடைமுறை நிர்வாகச் சிக்கல்களும், பல அதிருப்தியான நிகழ்வுகளும் நடப்புகளும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருப்பது மறுக்கப்பட முடியாத உண்மை. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகள் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்குள் தங்கு தடையின்றிப் பிரவேசிக்கலாம், பணிகளில் அமரலாம் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டம் ஐக்கிய இராச்சியத்தில் பல பிரச்சனைகளைத் தோற்றுவித்தது.

    இதற்குக் காரணமாக பல்வேறு நோக்கங்கள் கொண்ட கட்சிகளின் பிரச்சாரமும், சில இனத்துவேஷ அமைப்புகளின் தொடர் கருத்துக்களும் இருந்தன என்பதும் உண்மையே. இது மக்களின் அபிப்பிராயத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக திசை திருப்பியது. அதன் விளைவே 2016ம் ஆண்டின் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு. சரி இனி இன்றைய சூழலைப் பார்ப்போம். கன்டர்வேடிவ் கட்சியை அழுங்குப் பிடியாகப் பிடித்திருப்பவர்கள் “ஐரோப்பிய ஆய்வுக் குழு” அதாவது ஆங்கிலத்தில் இ.ஆர்.ஜி எனப்படும் அவர்களது உட்கட்சியின் ஒரு பிரிவு. இவர்களின் கொள்கை ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஐக்கிய இராச்சியத்தின் தொடர்பை முழுமையாகத் துண்டிப்பது. இதற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதுவித உடன்படிக்கையுமற்ற ஒரு வெளியேற்றத்தையே இவர்கள் விரும்புகிறார்கள். பதவி விலகிய தெரேசா மே இவர்களது கொள்கையை ஆதரிக்காமையே அவரது வீழ்ச்சிக்குக் காரணமானது. இன்றைய பிரதமரும், அவரது அமைச்சரவையும் இந்த அமைப்பினரின் ஆதரவைப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிரதிபலிப்பாகத்தான் இன்றைய பிரதமரும், அவரது அமைச்சரவையும் கீறு விழுந்த இசைத்தட்டினைப் போல காலக்கெடுவான அக்டோபர் 31ம் தேதி  உடன்படிக்கையோ இல்லையோ வெளியேறுவது உறுதி என்று கூறி வருகிறார்கள். உடன்படிக்கையற்ற வெளியேற்றம் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தையும், சராசரி மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் என்று பல தொழில் அமைப்புக்களும் பொருளாதார நிபுணர்களும் கூறி வருகிறார்கள். இவையெல்லாம் வெறும் பயமுறுத்தல்களே , இவற்றில் ஒன்றுகூட உண்மையல்ல என்று ப்ரெக்ஸிட் ஆதரவாளர்கள் பலர் கூறி வருகிறார்கள். தெரேசா மே கைச்சாத்திட்ட உடன்படிக்கை அற்றுப் போய்விட்டது புதியதோர் உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் இல்லையானால் அக்டோபர் 31ம் தேதி உடன்படிக்கையில்லாமல் வெளியேற நாம் தயார் என்று திரும்பத் திரும்பக் கூறுக்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன்.

    இது ஜரோப்பிய ஒன்றியம் வேறு வழியில்லாமல் ஒரு புதிய உடன்படிக்கைக்கு உடன்படும் எனும் நம்பிக்கையில் சொல்கிறாரா? இல்லை உடன்படிக்கையில்லாமல் வெளியேறுவதே அவரது நோக்கமா? என்பதைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. இச்செய்தியைச் சுமந்து கொண்டு பிரான்சு, ஜேர்மனி ஆகிய நாடுகளின் அதிபர்களைச் சந்திக்கச் செல்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன். ஜரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளே இவை. இச்சந்திப்பின் பலாபலன்களை நாம் சிறிது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. எது எப்படி இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்தில் ஒரு நாடு உத்தியோகபூர்வமாக வெளியேறுவது என்பது இதுவே முதற்தடவை. வெளியேற்றத்தின் பிரதிபலிப்புகள் வெளியேறும் நாட்டிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் எப்படி இருக்கும் என்பதும் இதுவே முதற்தடவை. ஆக மொத்தம் ஆழம் தெரியாமல் காலை விடுகிறோம் கடந்து சென்று விடுவோமா? இல்லை மூழ்கி விடுவோமா? என்பதை அனுபவித்தேதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share