இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (300)

0

-சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள்.

காலவோட்டம் தமக்குள் எத்தனையோ நிகழ்வுகளைப் புதைத்துக் கொண்டு செல்கின்றன. அவற்றை வெறும் நிகழ்வுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாக மட்டும் நாமிருந்து விட முடிகிறதா? இல்லையே! புதையும் நிகழ்வுகளுக்குள் எமது வாழ்வினைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் அடங்குகிறதே ! சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் நிலையை நிர்ணயிக்கும் பல முடிவுகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் அவர்களின் பெயரால் எடுக்கப்படுகிறது. இதனால் பல சமயங்களில் விரும்பாமலே பார்வையாளர்களாக ஆக்கப்பட்டு விடுகிறோம். இதற்கு நியாயமாக ஜனநாயகம் எனும் முத்திரையும் குத்தப்படுகிறது. இது ஒரு நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளில் நிகழ்ந்து வரும் ஒரு நடைமுறை நிகழ்வு என்பதுவே கசப்பான உண்மை.

இங்கிலாந்தின் புதிய பிரதமராக திரு.பொரிஸ் ஜான்சன் அவர்கள் பதவியேற்று சுமார் ஒரு மாத காலமாகிறது. இவ்வொரு மாத காலத்தில் அவரால் தனது அரசு நடைமுறைப்படுத்தப் போகும் திட்டங்கள் எனப் பல அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் பல சராசரி மனிதர்கள் மனதில் குடி கொண்டிருந்த எண்ணங்களின் பிரதிபலிப்புகள் போலவும் தென்படுகின்றன. இவை மக்களின் செவிகளில் ஒரு இனிமையான செய்தியாக விழுவதற்காக மட்டும் கூறப்பட்டவையா? இல்லை அது நடைமுறைபடுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய வாதமாகவே இருக்கிறது. ஆனால் அனைத்துக்கும் ஆணிவேராக, அடிப்படைப் பிரச்சனையாக இன்றைய ஐக்கிய இராச்சிய மக்கள் முன்னல் இருப்பது “ப்ரெக்ஸிட்” எனும் பிரச்சனைக்கான தீர்வே ! மக்களின் அபிலாஷைகளை அறியும் பொருட்டு நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடிப்பின் படி 4% வீதமான அதிகப்படியான வாக்குகளினால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றமே தெரிவு செய்யப்பட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

இது ஒரு பக்கமிருந்தாலும், வாக்களித்த மக்கள் எவ்வகையான ஒரு தீர்வை எதிர்பார்த்து வாக்களித்தார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதே சமயம் “ப்ரெக்ஸிட்”க்கு ஆதரவானவர்கள் என்ன கூறுக்கிறார்கள்? எந்தவிதமான உடன்படிக்கையும் எட்டப்படாத பட்சத்தில் உடன்படிக்கையற்ற ஒரு வெளியேற்றம் என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மைதானே! எனவே வாக்களித்த மக்கள் உடன்படிக்கையற்ற வெளியேற்றத்திற்கு வாக்களிக்கவில்லை எனும் வாதம் நியாயமற்றது எனபதுவே அவர்களது வாதம். இங்கிலாந்துப் பாராளுமன்றம் பல அபிப்பிராயங்களின் அடிப்படையில் சிதறி நிற்கிறது. எந்த விதமான ஒரு தீர்வுக்கும் ஏகோபித்த ஆதரவு இல்லை. அதேசமயம் எதுவித உடன்படிக்கையுமற்ற வெளியேற்றத்துக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது. இதுதான் இன்றைய நிலை. இந்த நிலையில் நாம் நாட்டின் நலனைக் கருதியே நாம் உடன்படிக்கையற்ற ஒரு வெளியேற்றத்தை எதிர்க்கிறோம் என்றும் கூறும் பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி ஒரு கேள்விக்கணையைத் தொடுக்க வேண்டித்தான் உள்ளது.

2017ம் ஆண்டுத் தேர்தலை அடுத்து 2016 சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளின்படி மக்கள் தீர்ப்பே ! மகேசன் தீர்ப்பு ! என்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் எனும் அறிவிப்பை அப்போதைய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விடுத்தார். அதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவை வழங்கும் போது ஏனிந்த நாட்டின் நலன் எனும் நிலைப்பாடு அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றவில்லை? அப்படித் தோன்றியிருந்தால் உடன்படிக்கையற்ற வெளியேற்றத்துக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று அப்போதே முடிவெடுத்திருந்தால் அவ்வறித்தலை அவசரம், அவசரமாக விட்டிருக்காமல் செய்திருக்கலாம் அல்லவா? அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கையை சட்ட மூலமாக்கும் போதும் இதை அவர்கள் எண்ணவில்லையா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இதற்கான காரணம் என்று இப்போது ஊகிக்க முடியுமானால் ஒரேயொரு விடயம் மட்டுமே புலப்படுகிறது. அன்றைய சூழலில் “ப்ரெக்ஸிட்” எனும் வாதம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருந்தது.

அன்றைய நிலையில் அனைத்துக் கட்சிகளும் மக்களின் ஆதரவைப் பெற ஒரே வழி நாட்டின் நலன் கருதிய உண்மைகளை விட அன்றைய பெரும்பான்மை மக்களின் ஆதரவினைப் பெற்ற “ப்ரெக்ஸி”டை அதரிப்பதை ஒரேவழியாக அதனைத் தேர்ந்தெடுத்ததுவே அக்காரணம் என்றே புலப்படுகிறது. இந்த “ப்ரெக்ஸிட்” எனும் பூதம் கண்ணாடிக் குவளையில் இருந்து திறந்து விடப்படதன் முக்கிய காரணம் இன்றைய அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி தனது கட்சியின் பிளவைத் தடுப்பதற்காகவே என்பதுவே உண்மை. ஜரோப்பிய ஒன்றியத்தில் பல புனரமைக்கப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்பதை யாரும் மறுத்து விட முடியாது. நடைமுறை நிர்வாகச் சிக்கல்களும், பல அதிருப்தியான நிகழ்வுகளும் நடப்புகளும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருப்பது மறுக்கப்பட முடியாத உண்மை. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகள் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்குள் தங்கு தடையின்றிப் பிரவேசிக்கலாம், பணிகளில் அமரலாம் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டம் ஐக்கிய இராச்சியத்தில் பல பிரச்சனைகளைத் தோற்றுவித்தது.

இதற்குக் காரணமாக பல்வேறு நோக்கங்கள் கொண்ட கட்சிகளின் பிரச்சாரமும், சில இனத்துவேஷ அமைப்புகளின் தொடர் கருத்துக்களும் இருந்தன என்பதும் உண்மையே. இது மக்களின் அபிப்பிராயத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக திசை திருப்பியது. அதன் விளைவே 2016ம் ஆண்டின் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு. சரி இனி இன்றைய சூழலைப் பார்ப்போம். கன்டர்வேடிவ் கட்சியை அழுங்குப் பிடியாகப் பிடித்திருப்பவர்கள் “ஐரோப்பிய ஆய்வுக் குழு” அதாவது ஆங்கிலத்தில் இ.ஆர்.ஜி எனப்படும் அவர்களது உட்கட்சியின் ஒரு பிரிவு. இவர்களின் கொள்கை ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஐக்கிய இராச்சியத்தின் தொடர்பை முழுமையாகத் துண்டிப்பது. இதற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதுவித உடன்படிக்கையுமற்ற ஒரு வெளியேற்றத்தையே இவர்கள் விரும்புகிறார்கள். பதவி விலகிய தெரேசா மே இவர்களது கொள்கையை ஆதரிக்காமையே அவரது வீழ்ச்சிக்குக் காரணமானது. இன்றைய பிரதமரும், அவரது அமைச்சரவையும் இந்த அமைப்பினரின் ஆதரவைப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிரதிபலிப்பாகத்தான் இன்றைய பிரதமரும், அவரது அமைச்சரவையும் கீறு விழுந்த இசைத்தட்டினைப் போல காலக்கெடுவான அக்டோபர் 31ம் தேதி  உடன்படிக்கையோ இல்லையோ வெளியேறுவது உறுதி என்று கூறி வருகிறார்கள். உடன்படிக்கையற்ற வெளியேற்றம் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தையும், சராசரி மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் என்று பல தொழில் அமைப்புக்களும் பொருளாதார நிபுணர்களும் கூறி வருகிறார்கள். இவையெல்லாம் வெறும் பயமுறுத்தல்களே , இவற்றில் ஒன்றுகூட உண்மையல்ல என்று ப்ரெக்ஸிட் ஆதரவாளர்கள் பலர் கூறி வருகிறார்கள். தெரேசா மே கைச்சாத்திட்ட உடன்படிக்கை அற்றுப் போய்விட்டது புதியதோர் உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் இல்லையானால் அக்டோபர் 31ம் தேதி உடன்படிக்கையில்லாமல் வெளியேற நாம் தயார் என்று திரும்பத் திரும்பக் கூறுக்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன்.

இது ஜரோப்பிய ஒன்றியம் வேறு வழியில்லாமல் ஒரு புதிய உடன்படிக்கைக்கு உடன்படும் எனும் நம்பிக்கையில் சொல்கிறாரா? இல்லை உடன்படிக்கையில்லாமல் வெளியேறுவதே அவரது நோக்கமா? என்பதைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. இச்செய்தியைச் சுமந்து கொண்டு பிரான்சு, ஜேர்மனி ஆகிய நாடுகளின் அதிபர்களைச் சந்திக்கச் செல்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன். ஜரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளே இவை. இச்சந்திப்பின் பலாபலன்களை நாம் சிறிது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. எது எப்படி இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்தில் ஒரு நாடு உத்தியோகபூர்வமாக வெளியேறுவது என்பது இதுவே முதற்தடவை. வெளியேற்றத்தின் பிரதிபலிப்புகள் வெளியேறும் நாட்டிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் எப்படி இருக்கும் என்பதும் இதுவே முதற்தடவை. ஆக மொத்தம் ஆழம் தெரியாமல் காலை விடுகிறோம் கடந்து சென்று விடுவோமா? இல்லை மூழ்கி விடுவோமா? என்பதை அனுபவித்தேதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *