ஐயப்பன் காவியம் – 6
-இலந்தை சு. இராமசாமி
மகன் வேண்டு படலம்
விளம் விளம் விளம் விளம் விளம் மா மா – எழுசீர் விருத்தம்
அரண்மனை எதிரிலே அமைந்தபூங் காவனம் அதனிலே அமர்ந்த வண்ணம்
விரல்நுனி கடித்தெதோ துயரினில் இருந்தபோல் வீற்றிருந் தாளி ராணி
அருகினில் மன்னவன் ஆதர வாகவே அவள்கரம் கையெ டுத்தான்
கருநிற விழிகளில் வழிந்திடும் நீரினைக் கைகளி னால்து டைத்தான். 53
அங்கொரு மரத்தினில் காகமொன் றாசையாய் அதன்குஞ்சுக் குணவை ஊட்டும்
பொங்கெழில் காட்சியைப் பார்த்ததும் வேதனை பொங்கிட அழுது தீர்த்தாள்
”இங்கெனக் கிப்பிறப் பில்மக வில்லையோ ஈசனே,”என்று நொந்தாள்.
சங்கடம் அதனையே பார்த்தவன் விழிகளும் தாமாகக் கசிந்த வன்றே! 54
“இன்னொரு திருமணம் என்னவ, விரைவிலே ஏற்புடன் செய்து கொள்க
அன்னவள் வழியினில் மகவினைப் பெறுவதும் ஆகலாம் செய்க” வென்றே
மன்னவ னிடத்திலே அரசியும் சொல்லிட மன்னவன் மறுத்து விட்டான்
இன்னமும் வாய்ப்புள திறைவனை வேண்டுவோம் ஏதுமோர் வழிபி றக்கும் 55
என்றனன் மன்னவன் , இருவரும் எழுந்திட எத்தனிக் கின்ற நேரம்
மன்னனின் குலகுரு குறுமுனி அவ்விடம் வந்தனர் ,வணங்கி னார்கள்
”என்னவோ மாதிரி இருக்கிறீர் என் குறை?” என்றவர் வினாயெ ழுப்ப
“என்றனின் குலம்விளங் கிடமக வில்லையே எனுங்குறை “ என்று சொன்னான் 56
சொக்கனைக் கேட்கலாம் சொல்லுவான், ஓர்வழி , துயரினை விடுக வென்றே
அக்கறை யாகவே சொல்லிய அகத்தியர் “அரசனே, நாளைக் காலை
தக்கதோர் வகையிலே தொழுகைகள் செய்துபொற் றாமரை வரவ ழைத்தே
இக்குறை தீரவென் செய்வதென் றொருமடல் எழுதியே கேட்ப மென்றார் 57
அடுத்தநாள் காலையில் முறைப்படி பூசைகள் அரனுக்குச் செய்த பின்னே
தொடுத்திடும் விழைவுடன் பொற்றா மரைக்குளம் தூயராய்ச் சென்று நின்றார்
எடுத்தவோர் ஓலையில் மன்னவன் கோரிக்கை எழுதினார் முனிவர் கோமான்
விடுத்தனர் வேண்டுகோள் அரியபொற் றாமரை மேலெழ வேண்டு மென்றே! 58
”அறந்தலை நிறுத்திடும் அரியபொற் றாமரை ஆக்கமே போற்றி போற்றி
சிறந்தநூல் ஏதெனத் தேர்ந்தளிக் கின்றதோர் தெய்வமே போற்றி போற்றி
மறைந்துநீ இருக்கிற இடத்தினை விடுத்திவண் வருகவே மேலெ ழுந்து
புறந்தலைப் பட்டுநீ ஓலையை ஏற்றருள் புனிதமே போற்றி போற்றி 59
என்றலும் நடுவிலோர் சுழலெழுந் தார்த்திட எங்கணும் மீன்கள் துள்ள
ஒன்றடுத் தொன்றெனப் பரவின சுழல்களும் ஒளிர்ந்தது பொய்கை வெள்ளம்
பொன்னிற மாகவோர் பொகுட்டெழுந் துயர்ந்தது பூத்த து கண்ப றிக்க
தன்னிரு கரங்களைத் தலைக்குமேல் தூக்கியே தவமுனி வணங்கி நின்றார். 60
மன்னனும் அவனது மனைவியும் வணங்கிட வந்தது கரையின் ஓரம்
மின்னொளிர் தாமரை நடுவிலே ஓலையை விடுத்தனர் முனிவர் நன்றே
தன்னிடம் தந்தவவ் வோலையைப் பெற்றபொற் றாமரை அங்கி ருந்து
சென்றது நடுவிலே நின்றது பின்னது சென்றது நீரி னுள்ளே. 61
“அரனிடம் சென்றது விடையினை பெற்றிவண் அடைவதற் காகும் நேரம்
பரவுக , அரனையே பாடுக , அவன்புகழ் பாங்குடன் போற்றி செய்க
உருகியே சொல்கிற உளமுணர் வேண்டுதல் உண்மையில் நலம்கொடுக்கும்
அரசனும் அரசியும் தொடங்குக” எனமுனி சொல்லவும் தொடங்கி னார்கள். 62
“ஆதியே, அநாதியே அருமறை மூலமே ஆண்டவா போற்றி போற்றி
சோதியே , தூயனே, சொற்பொருள் வேதியா, சொக்கனே போற்றி போற்றி
நீதியே, நிர்மலா, நிர்குணா, நாயகா, நேசனே போற்றி போற்றி
போதமே புண்ணியா, பூரண மானவா, புனிதனே போற்றி போற்றி 63
பைந்தமிழ்ப் புலவனே, பரமனே, புராரியே, பாண்டியா போற்றி போற்றி
நந்தியின் தலைவனே, நாதனே, ஞானியே, நம்பனே போற்றி போற்றி
சுந்தரா அங்கயற் கண்ணியின் துணைவனே, சூக்குமா, போற்றி போற்றி
சொந்தமே ஆனவா, சூத்திர தாரியே, சுடரொளி போற்றி, போற்றி 64
கயிலையின் நாதனே, காசியில் விஸ்வனே, காரணா போற்றி போற்றி
மயிலையின் ஈசனே மலைமகள் கேள்வனே, வானவா, போற்றி போற்றி
சுயம்புவே, தாணுவே, தொன்மையில் தொன்மையே தோன்றலே போற்றி போற்றி65
தயவுளோய், சங்கரா, சாமிக்குச் சாமியே, தத்துவா போற்றி போற்றி
விடையனே, சூலனே, விநாயகன் தந்தையே, வீரனே போற்றி போற்றி
சடையனே, சடையினில் கங்கையைக் கொண்டவா, சத்தியா போற்றி போற்றி
படமெடுத் தாடிடும் பாம்பினைப் பூண்டவா, பரிவுளோய் போற்றி போற்றி
சுடலையில் நடமிடும் நீலமணி கண்டனே, தொடக்கமே போற்றி போற்றி” 66
மா மா விளம்- அறுசீர் விருத்தம்
பாடு கின்ற போற்றிகள்
பண்ணில் தோய்ந்த நேர்த்திகள்
கூடு கின்ற போதிலே
குளத்தி ருந்து தாமரை
ஏடு தூக்கி வந்ததே
என்ன வென்றே ஆர்வமாய்
வாடி நின்ற மன்னவன்87
வாங்கிக் கண்ணால் நோக்கினான் 67
“மன்ன னுக்குப் புதல்வர்கள்
வாய்ப்பர் இரண்டு குழந்தைகள்
ஒன்று மன்னன் வழியிலே
ஒன்று மன்னன் வழியிலே
என்றி ருந்த வாசகம்
இன்பம் தந்த போதிலும்
மன்ன வன்றன் மனத்திலே
வந்த தங்கோர் ஐயமே! 68
வாங்கிப் பார்த்த மாமுனி
மன்ன வன்பால் கூறினார்
”ஏங்கி நின்றாய் மன்னவா
இரண்டு புதல்வர் வாய்ப்பரே
ஆங்கோர் செல்வன் வழியிலே
அரசே உனக்குக் கிட்டுவான்
பாங்காய் உன்றன் வழியிலே
பையன் ஒருவன் பிறப்பனே!” 69
என்று சொல்லி அகத்தியர்
எழுந்த ஐயம் தீர்த்தனர்
மன்ன னுக்கு மகிழ்ச்சியில்
வார்த்தை ஏதும் வரவிலை
தன்னுள் பொங்கும் மகிழ்ச்சியில்
தத்த ளித்தார் இராணியார்.
மன்னன் னோடி ராணியும்
வணங்கி னர் மா முனிவரை.. 70
இதற்கு முன்னர் தேவர் உலகில் என்ன நடந்த தென்பதனை
முதற்ப டிக்கு நானிங் குரைப்பன் முனிவர் அறிவார் வரலாறு
விதிர்வி திர்த்துத் தேவ ரெல்லாம் விசனம் கொள்ளும் படியாக
அதிர்வு தந்த மகிஷி பற்றி அடுத்த தாகக் கூறுவமே! 71
-தொடரும்.