இலக்கியம்கட்டுரைகள்

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

ஒற்றாடல்

குறள் 581:

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்

நேர்மையான தெறமையான உளவாளியும் (ஒற்றரும்) நீதியச் சொல்லுத அற நூல்களும் ராசாவுக்கு ரெண்டு கண்ணு கணக்கா.

குறள் 582:

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

எல்லா இடத்திலயும், நடக்குதத எல்லாத்தையும் எப்பமும் உளவு பாக்க உளவாளி வச்சி வெரசலா தெரிஞ்சிக்கிடவேண்டியது ராசாவோட வேலை.

குறள் 583:

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்

நாட்டு நடப்ப உளவாளிய வச்சி தெரிஞ்சுக்கிட்டு நடத்தாத ஆட்சி நெலச்சி நிக்குததுக்கு வேற வழியே இல்ல.

குறள் 584:

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையும் ஆராய்வ தொற்று

உளவு பாக்குத உளவாளி தனக்கு வேண்டப்பட்டவங்க, வேண்டாதவங்க, சொந்தக்காரங்க னு பாக்காம வேலை செஞ்சாத்தான் அவங்கள நேர்மையான உளவாளிகள் னு சொல்ல முடியும்.

குறள் 585:

கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

மத்தவங்களுக்கு சந்தேகம் வராத வேசத்தோட போயி, ஒருக்க சந்தேகப் பட்டு பாத்தாலும் பயப்படாம இருந்து, எந்த நேரத்திலயும் மனசுல இருக்கத வெளிய சொல்லாம இருக்க நெஞ்சுறுதி உள்ளவந்தான் உளவாளியா இருக்கதுக்கு லாயக்கு..

குறள் 586:

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று

துறவி வேசத்துல போக முடியாத இடத்துக்கெல்லாம் போயி வேண்டியத தெரிஞ்சிக்கிட்ட பொறவு பிடிபட்டா என்ன சங்கடம் வந்தாலும் ரகசியத்த சொல்லாம மறைக்கவன் தான் உளவாளி..

குறள் 587:

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று

ரகசியமா செய்யுத செயல்களையும் போட்டுவாங்கி தெறிஞ்சுக்கிடுத தெறம உள்ளவனாவும் கேட்ட பொறவு அது எம்புட்டு உண்ம னு தெளிவா புரிஞ்சுக்கிடுதவனும் தான் உண்மையான உளவாளி.

குறள் 588:

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்

ஒரு உளவாளி தன் தெறமையால தெரிஞ்சுக்கிட்டு வந்த விசயத்தப் பத்தி , இன்னொரு உளவாளியையும் தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்லி சரி பாத்துக்கிடணும்.

குறள் 589:

ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்

ஒருத்தருகொருத்தர் அறிஞ்சுக்கிடாம மூணு உளவாளிங்கள அனுப்பி உளவு பாத்து மூணுபேரு சொல்லும் ஒண்ணுபோல இருந்தா அத உண்மனு ஒத்துக்கிடலாம்.

குறள் 590:

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தான் ஆகும் மறை

ஒரு உளவாளிக்கு திறமசாலினு பரிசு கொடுக்க நெனச்சா ஊரறிய குடுக்கக்கூடாது அப்டி செஞ்சா ஒளிவுமறைவா இருக்க வேண்டியத தானே வெளியவிடுதது போல ஆவும்.

(அடுத்தாப்லையும் வரும்)

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க