படக்கவிதைப் போட்டி 223-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி
செம்மறியை அன்போடு தழுவியிருக்கும் அம்மணியின் சிற்பத்தைத் தன் புகைப்படக் கருவிக்குள் பாசத்தோடு பதுக்கிவந்திருப்பவர் கீதா மதிவாணன். படக்கவிதைப் போட்டிக்கு உகந்த படமிது என்று இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வு செய்து தந்திருப்பவர் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை நவில்கின்றேன்.
மனிதர்கள் மெல்ல மெல்ல இழந்துவருகின்ற அருங்குணம் இந்த அருட்குணம். அந்த அருளை இந்தப் பெண்ணரசியின் பேதமற்ற கண்கள் ஆட்டின் மாட்டும் காட்டுவதைக் காண்கிறேன்.
நெஞ்சுதொடும் இச்சிற்பத்துக்குக் கொஞ்சுதமிழில் கவியெழுதித் தந்திருக்கின்றார் கவிஞர் ஒருவர்.
****
உயிரோவியம்…
கலைஞனின் காலம் முடிந்தாலும்
கால மெல்லாம் நிலைத்திருக்கும்
கலைஞனின் தரமிகு படைப்பெல்லாம்
காட்சிப் பொருளாய்த் திறமைக்கே,
விலையிலா உயிரைச் சிலைக்களித்தே
வியக்க வைத்தான் உலகோரை,
சிலையில் தெரியும் அழகெல்லாம்
சிறந்த சிற்பியின் இன்னுயிரே…!
”கலைஞனின் காலம் முடிந்தாலும் மலைக்கவைக்கும் அவனது கலைப்படைப்பில் என்றும் அவன் உயிர் வாழ்கின்றான் நிலையாக!” என்று அருமையாய்ச் செப்பியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன். படக்கவிதைப் போட்டிக்கு விடாது பங்களிப்பு செய்துவரும் அவருக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.