Tag: முனைவர் த. ராதிகா லட்சுமி

  • ஒப்பீட்டு நோக்கில் மகாகவிகளின் பாடுபொருட்கள்

    முனைவர் த. ராதிகா லட்சுமி
    இணைப்பேராசிரியர்-தமிழ்த்துறை,
    நல்லமுத்துக் கவுண்டா் மகாலிங்கம் கல்லூரி,
    பொள்ளாச்சி

    இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் சுப்பிரமணிய பாரதியார், இரவீந்திரநாத தாகூர் என்ற இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள். தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் பிறந்து ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ என்ற கொள்கையோடு கவிஞனாக வாழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார். இவர் நாமகளின் திருவருளால் சொல்வளத்தில் சிறந்தாரே தவிர திருமகளின் திருவருள் கிடைக்காததால் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடி தவித்தார்.  வங்காளத்தின் ஜெஸ்சூரில் பிறந்து நோபல் பரிசு பெற்றவர் இரவீந்திரநாத தாகூர். திருமகளின் செல்வத்துடன் நாமகளின் சொல்வளமும் ஒருங்கே பெற்றவர். தாகூரின் குடும்பம் சர்வதேச அளவில் கலையுலகத் தொடர்புடையது. தாகூர் பலமுறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

    பாரதி, தாகூரின் படைப்புகளில் தேசப்பற்று, பிரபஞ்ச சக்தி, தெய்வம் எங்கே?, இறைவேண்டல், ஒளி குறித்த வருணனை, பெண் முன்னேற்றம் யந்திரங்களின் வளர்ச்சி, மற்றும் காலனை மதித்தலும், மிதித்தலும் போன்ற சிந்தனைக் களங்களை ஒப்பீட்டு நோக்கில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தேசப்பற்று:

    சுப்பிரமணிய பாரதியார் மானிடத்தேவைகள் அனைத்திலும் மிக முக்கியமான சுதந்திரத்திற்காக அதிகமாகப் போராடுகிறார். இதற்காக போற்றுவதற்குரிய சுதந்திரதேவியின் பாதத்தில் எத்தகைய தியாகத்தைப் புரியவும் தயாராக இருக்கிறார். ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை’ என வருத்தமுற்றப் பாட்டிலும் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் சுதந்திர தாகத்தை உருவேற்ற முயலுகிறார்.

    ‘தேவி! நின்னொளி பெறாத
    தேயமோர் தேய மாமோ?
    ஆவியங் குண்டோ? செம்மை
    அறிவுண்டோ? ஆக்க முண்டோ?
    காவிய நூல்கள் ஞானக்
    கலைகள் வேதங்க ளுண்டோ?
    பாவிய ரன்றோ நிந்தன்
    பாலனம் படைத்தி லாதார்? ‘

    ‘சுதந்திர தேவியின் துதி’ என்ற பாடலில் தேசம், உயிர், அறிவு, ஆக்கம், காவியநூல்கள், கலைகள் என அனைத்தும் வேண்டுமென்றால் சுதந்திரம் வேண்டும் என்று தேசபக்தியை ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் விதைக்க முற்படுகிறார். ‘அச்சமில்லை! அச்சமில்லை!’ என்று அச்சத்தை நீக்கும் தாரக மந்திரத்தை முழங்குகிறார். ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே! இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு’ என நம்பிக்கையை மனதில் துளிர்விடச் செய்கிறார்.

    அச்சமின்றி தலைநிமிர்ந்து நிற்கும் இதயம், அறிவு வளர்ச்சிக்கான பூரணவிடுதலை, குடும்பத்தின் குறுகிய தடைகளால் குலையாத உலகின் ஒருமைப்பாடு, மெய்ந்நெறிகளின் அடிப்படையில் உருவாகும் வாய்ச்சொற்கள், விடாமுயற்சியுடன் பூரணத்துவத்தை நோக்கி செல்லுதல், தெளிந்த அறிவோட்டம், பாழடைந்த பழக்கத்தால் வறண்ட பாலையை நோக்காத, வழிதவறாத பயணம் என்பதுடன்

    ‘நோக்கம் விரியவும்
    ஆக்கவினை புரியவும்
    இதயத்தை எங்கே
    வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
    விடுதலைச் சுவர்க்க பூமியில்
    எந்தன் பிதாவே!
    விழித்தெழுக
    என் தேசம்’

    என்று தன் தேசம் குறித்த தன்னுடைய எதிர்பார்ப்பை இரவீந்திரநாத தாகூர். கீதாஞ்சலியில் பதிவுசெய்துள்ளார். விடுதலையான பூமி சுவர்க்க பூமியாக அதாவது மகிழ்ச்சியின் குறியீடாக அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு இதயமும் ஆக்கப்பூர்வமாக, தனித்துவமாக, அச்சமின்றி ஒருமைப்பாட்டுடன் செயல்படவேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்துகிறார்.

    பிரபஞ்ச சக்தி:

    பாரதியார் பிரபஞ்சத்தைச் சக்தியின் வடிவமாக நோக்கியவர். துன்பமில்லா நிலை, தூக்கமில்லாத கண்விழிப்பு, அன்பு கனிந்த கனிவு, இன்பமுதிர்வு, முக்திநிலையின் முடிவு, சொல்லில் விளங்கும் சுடர், தெய்வத்தை எண்ணும் நினைவு, பாட்டினில் வந்த களிப்பு, வாழ்வைப் பெருக்கும் மதி, மாநிலம் காக்கும் மதி, ஊழ்வினை நீக்கும் உயர்வு, உள்ளத்தில் ஒளிரும் விளக்கே சக்தி என்று சக்தியின் வடிவங்களை மனக்கண்ணில் நிறுத்துகிறார். இச்சக்தியிடமே பாரதியார் காணிநிலம் வேண்டும் என்றும், மோகத்தைக் கொன்றுவிடு என்றும் தன் வேட்கைகளை முறையிடுகிறார்.

    ‘விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
    வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்…
    அசைவறு மதிகேட்டேன் இவை
    அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?’

    என்று வினா தொடுக்கும் அளவிற்கு பாரதி பிரபஞ்ச சக்தியிடம் நெருக்கமானப் பிணைப்பைக் கொண்டிருக்கிறார். இவ்வுலகத்தை இயக்கும் சக்தியின் மேல் பாரதிக்கு இருந்த நிலைப்பாடு புலனாகின்றது.

    இயற்கையையும், ஐம்பூதங்களையும் சக்தியாக காணும் பாரதியார் ஓரிடத்தில் இவை அனைத்தும் மாயைகளோ? என்று தளர்ந்து போனதை ‘நிற்பதுவே நடப்பதுவே’ பாடலில் காணமுடிகிறது. சொற்பனங்களாக, தோற்ற மயக்கங்களாக, அற்பமான மாயைகளாக, கானல்நீராக, காட்சிப்பிழைகளாக, கண்முன் உள்ள காட்சிகள் மறைந்து தோன்றுவது ஏன்? என உலகை நோக்கி வினவுகிறார்.

    ‘காண்பதுவே உறுதி கண்டோம்
    காண்பதல்லால் உறுதி இல்லை
    காண்பது சக்தியாம் இந்தக்காட்சி நித்தியமாhம்’

    என்ற இறுதியடிகளின் வாயிலாக உலகின் இயக்கமாக சக்தியைக் காண்பது உறுதி என பாரதியார் கூறுவது திண்ணம்.

    இரவீந்திரநாத் தாகூர் இருபத்தைந்தாவது வயது வரை கங்கைக்கரையில் உள்ள படகு வீட்டில் தனிமையோடு வாழ்ந்தவர் என்பதால் இயற்கைக்கூறுகளே அவருக்கு துணையாக இருந்திருக்கின்றன. தனிமையில் அவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்ததன் விளைவாகவே கீதாஞ்சலி தோன்றியதாக தாகூர் குறிப்பிடுகிறார்.

    ‘சூரியன் மறையும் மாலை நேரங்களில் தனிமையில் அமர்ந்து நிழல்களைப் போல தோற்றமளிக்கும் மரங்களைக் கவனிப்பேன். மதிய நேரத்தின் அமைதியான தருணங்களில் குழந்தைகளின் கூச்சல் தொலைவில் இருந்து மெதுவாக எனக்கு கேட்கும். எனக்கு இந்த குழந்தைகளின் மகிழ்ச்சிக் குரல்களும், பாடல்களும் மரங்களை நினைவூட்டும். ஏனெனில் இந்த மரங்களும் அந்த மகிழ்ச்சியான பாடல்களைப் போன்று பூமியின் இதயத்தில் இருந்து ஏக்கங்கள் மற்றும் மகிழ்ச்சியின் மொத்த வெளிப்பாட்டின் குறியீடுகளாகிய நாமும் நம் ஏக்கக் குரல்களை விண்ணுக்கு அனுப்புகிறோம். இதை நான் என் இதயத்தின் அடித்தளத்தில் உணர்ந்ததால் கீதாஞ்சலி என்ற கவிதை நூலை எழுதினேன்.’

    என்ற தாகூரின் உரை அவர் இயற்கையை உள்வாங்கிய விதத்தை வெளிப்படுத்துகிறது. தனிமையில் இருந்தபடி இயற்கையை ரசித்து. அனுபவித்து, உண்டு அவற்றில் தன் பிரம்மச் சக்தியைக் கீதங்களின் வாயிலாக நிரப்பி கீதாஞ்சலியை உலகுக்கு அளித்துள்ளார்.

    காற்றினிலே வருமென் கீதம், வானத்து விண்மீன், புல்லின் இலை, புல்லாங்குழலின் ஓசை, அகண்ட கடல், ஆனந்தப்பறவை, நித்திய ஒளி, மெல்லிசை போன்ற சொற்களின் மூலம் தாகூர் இயற்கையின் ஆற்றலையே கடவுளாகக் காண்கிறார். அதன் வாயிலாக உலகை அறிய முற்படுகிறார். அதனால் சக்தியை நோக்கி வினாக்களைத் தொடுக்காதவராக அன்பு, கருணை, ரசனை என இன்பங்களை அமைதியாக உட்கொண்டவராக திகழ்வதைக் காணமுடிகிறது.

    தெய்வம் எங்கே? :

    பக்தியையும். மனிதாபிமானத்தையும் இணைத்து நோக்கிய பார்வையால் இரு மகாகவிகளுமே உழைப்பவர்களிடத்தில் தெய்வத்தின் திருவுருவைக் காணமுற்படுகின்றனர்.

    ‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
    யந்தி ரங்கள் வகுத்திடு வீரே
    கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
    கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
    அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
    ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
    பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
    பிரம தேவன் கலையிங்கு நீரே!’

    என்று பாரதியார் பிரமதேவனின் கலையாக தொழில் செய்பவர்கள் இருப்பதாக பாடுகிறார். தாகூர் ‘இறைவன் எங்கிருக்கிறான்’ என்ற பாடலில் துதி பாடி, சுலோகம் கூறி. ருத்திராட்சம், ஜெபமாலை உருட்டி, கோயிலில் சென்று காரிருளில் இறைவனைத் தேடாதே! இறைவன் அங்கில்லை!

    ‘மெய்வருந்தி
    இறுகிப் போன வயலை
    உழவன் எங்கே
    உழுது கொண்டு இருக்கிறானோ,
    வேர்வை சிந்தி
    நடைபாதை போடுபவன்
    எங்கே கல்லுடைத்து வருகிறானோ
    அங்கே உள்ளான் இறைவன்!
    வெட்ட வெயிலிலும்
    கொட்டும் மழையிலும்
    தூசி படிந்த ஆடையுடன்,
    உழைப்பாளி
    கூடவே குடியுள்ளான் இறைவன்!’

    தியானத்தை விடுத்து, நறுமணப்புகைகளைப் புறக்கணித்து விட்டு வியர்வையைச் சிந்திடும் உழைப்பாளியிடம் இணைந்து நில்! என்று பாடுகிறார். உழைப்பவர்களின் உருவில் தெய்வத்தைக் காணும் போக்கில் இருகவிகளிடமும் வேறுபாடு உண்டு. பாரதியார் உழைப்பாளர்களைச் சிருஷ்டி கர்த்தாக்களாக காண தாகூர் உழைப்பாளர்களை மனிதாபிமானத்தோடு அணுகுவதைக் காணமுடிகிறது

    இறைவேண்டல்:

    இரு மகாகவிகளுமே இறைவனை நேசித்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள். தாகூர், நெஞ்சில் உதிக்கும் தாழ்வான எண்ணங்களை வேரோடு அழிப்பாயாக! இன்பதுன்பத்தைத் தாங்கும் பொறுமையை அளிப்பாயாக! நற்பலன்களைத் தரும் பணிகளைச் செய்வேனாகுக! வழியோரை என்றும் மறக்காமல், நெறியற்ற மூர்க்கரை வணங்காதிருக்கும் வைராக்கியத்தைத் தந்திடுவாயாக! தெய்வமிடும் பணிக்கு நான் பாசமோடு உழைக்கும் சக்தியைத் தருவாயாக!

    ‘தினச் சச்சரவிலிருந்து விடுபட்டு
    மனம் அப்பால் சென்று
    எனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க
    மனத்தெளிவைத் தந்திடு!’

    என இறைவனிடம் வேண்டுவதில் தன் மனிதப்பண்பை மேம்படுத்த விரும்புவதை நோக்கமுடிகிறது. ஆனால் பாரதியோ,

              ‘எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லனவே எண்ணல் வேண்டும்
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்த நல்லறிவு வேண்டும்’

    என்பதில் எண்ணங்களின் தோற்றுவாய், உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம், நற்சிந்தனைக்கான நல்லறிவு போன்றவற்றை நல்கும்படி இறைவனிடம் இறைஞ்சுகிறார். இங்கு இருமகாகவிகளின் எண்ணவோட்டங்கள் ஒரே அலையில் பயணிப்பதைக் கண்கூடாக அறியமுடிகிறது.

    ஒளி குறித்த வருணனை:

    ‘ஒளியே நீ யார்?
    ஞாயிறின் மகளா?
    அன்று நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம்’

    ஞாயிற்றின் வடிவம் என்பது ஒரு உடல். ஓளியாகிய நீ தான் உயிர்? உன் தோற்றம் எப்போது?

    உன்னை யார் படைத்தார்? நீ அறிவின் மகளா? உறங்கிக் கிடக்கும் தெளிவா? உனக்கும், வானவெளிக்குமான பழக்கம் எத்தனை காலம்? எத்தகைய அன்பு? எவ்வாறு வானவெளியில் இரண்டறக் கலக்கிறாய். உன்னைப் படைத்த விந்தைக்கரிய மோஹினியைத் தொழுகிறோம் என பாரதியார் ஒளியைக் கண்டு வியப்படைந்து வினாக்களைத் தொடுக்கிறார். இறுதியில் சக்தியே ஒளியைப் படைத்ததாகக் குறிப்பிட்டு தலைவணங்குகிறார். ஓளியின் அழகைத் தாகூர் ஒளியின் நர்த்தனமாக உவமித்துப் பாடுகிறார்.

    ‘மின்னொளியே!
    என்னரும் ஒளியே!
    உள்ளத்துக் கினிய ஒளியே!
    விழிகள் முத்தமிடும் ஒளியே!
    உலகை மூழ்கடிக்கும் ஒளியே!
    நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள்
    என் கண்மணியே!

    வானத்தின் வெடிச்சிரிப்பே மின்னல், பட்டுப்பூச்சிகள் ஒளிக்கடலில் மிதக்கும் படகுகள், ஒளியலையில் அல்லியும், மல்லியும் ஊர்திகள், முகிலில் பொன்னிறக்கதிர்கள் என ஒளியை வருணிக்கிறார். உள்ளத்தின் களிப்பு ஆகாயக் கங்கையால் வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது என ஆனந்தத் தாண்டவமிடும் ஒளியின் அழகைக் குறிப்பிடுவதில் இருமகாகவிகளின் உள்ளமும் ஒளிக்கு அடிமையாகியிருப்பதை அறியமுடிகிறது.

    பெண் முன்னேற்றம்:

    ‘பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
    பெண் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமா?’

    என்று கேட்டதுடன் பெண்ணடிமையுற்றிருப்பதால் இந்திய மக்களும் அடிமையுற்றிருப்பதில் வியப்பில்லை. வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் இருப்பது இயல்பு. அதனால் வீட்டில் பெண்களின் அடிமை நிலை மாறவேண்டும் என்று பாரதியார் ‘தாய் மாண்பு’ என்னும் கவிதையில் பாடியுள்ளார்.

    ‘சமூகத்தில் தாங்களே முக்கியமானவர்கள், தங்கள் ஆதிக்கமே ஓங்கியிருக்க வேண்டும் என்று ஆண்கள் எண்ணி வந்தது … பெண்கள் அறியாமையிருளிலும், குருட்டு நம்பிக்கையிலும் ஆழ்ந்திருக்கும் வரை நம் இஷ்டம் போல் ஆடலாம். பெண்களுக்கு இடங் கொடுத்தால் நாம் நிம்மதியாக இருக்க முடியாதே என்பதே அவர்கள் கருத்து”

    என தாகூர் கூறியதில் ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக பெண்களை அடிமைப்படுத்தும் நிலையைச் சுட்டுகிறார். இருவருமே பெண்களை மதிக்கவேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்துகின்றனர். தாகூர் தன் பெரிய தமக்கை முதல்முதலாக பல்லக்கில் ஏறி பள்ளிக்குச் சென்றபோது பெரியமனிதர்கள் தங்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டதாக கருதியதைத் தாகூர் குறிப்பிடுகிறார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் என புதுமைப்பெண்ணிற்குரிய வரையறையாக பாரதியாரும் பெண்கல்வியை முன்னிறுத்துகிறார். இதன்வாயிலாக பெண்குல விடுதலையே மானிடகுல விடுதலை என்பதை இரு மகாகவிகளும் உணர்ந்து செயல்பட்டதை அறியமுடிகிறது.

    யந்திரங்களின் வளர்ச்சி:

    இன்றைய உலகின் தவிர்க்க முடியாத இயக்கச் சாதனங்களாக தொழில் வளர்ச்சியையும், எந்திரங்களையும் குறிப்பிடலாம். யந்திரத்தின் வருகையைப் பற்றி பாரதியும் தாகூரும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றனர். சுப்பிரமணிய பாரதியார் ‘கைத்தொழில் போற்று’ என்றும் ‘கூடித்தொழில் செய்’ என்றும் புதிய ஆத்திச்சூடியில் இயற்றியுள்ளார். ‘பாரததேசம்’ என்ற பாடலிலே பல தொழில்கள் குறித்துப் பாடுகிறார்.

    ‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்,
    ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்…
    வானையளப் போம், கடல் மீனையளப்போம்
    சந்திர மண் டலத்தியல் கண்டு தெளிவோம்’

    குடைகள், உழுபடைகள், இரும்பாணிகள், வண்டிகள், கப்பல்கள்   செய்வோம் என்று தொழிலுக்கு வந்தனை செய்கிறார். இன்று சந்திர மண்டலத்தில் விண்கலம் ஏவிவிடுதலை எதிர்நோக்கி அன்றே பாடியுள்ளார். புதிய இந்தியாவிலே கைத்தொழிலின் வளர்ச்சி, தொழில் செய்ய யந்திரங்கள் , அவற்றை இயக்கும் மனிதர்களின் அறிவு வளர்ச்சி சிறக்கவேண்டும் என ஆசைப்பட்டார். மேலும் எதிர்காலத்தை நோக்கி குறி சொல்லும் விதத்திலே

    ‘குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
    நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது…
    தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
    சாத்திரம் வளருது: சூத்திரம் தெரியுது:
    யந்திரம்; பெருகுது: தந்திரம் பெருகுது’

    என புதிய கோணங்கி பாடலில் தொழில் வளர்ச்சியையும், தொழிலாளியையும், யந்;திரங்களையும் குறித்து பேரானந்தத்தோடு பாடுவதை உணரமுடிகிறது. 1916 ஆம் ஆண்டு பாரதியார் எழுதிய ‘புதிய உயிர்’ என்ற கட்டுரையிலே உலகம் மேன்மையுற கைத்தொழில்கள் பெருகவேண்டும், இவற்றில் சாத்தியமில்லை என்றுரைப்பதில் பயனில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ‘ஜப்பான் தொழிற்கல்வி’ என்ற கட்டுரையிலே நம் இந்தியப் பிள்ளைகளை ஜப்பானிற்கு அனுப்பி பலவிதமான தொழில்களும், சாஸ்திரங்களும் கற்றுக் கொள்ளும்படி செய்யவேண்டும். மேலும் கைத்தொழில் வளர்ச்சிக்காக உழைப்போரும் உண்மையான தேசபக்தரே என குறிப்பிட்டிருப்பதில் பாரதியின் தேசபக்தியை அறியமுடிகிறது.

    யந்திரங்களை அணுகிய விதத்தில் பாரதிக்கு நேர்முரணான கருத்தைத் தாகூர் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் அவர் நிகழ்த்திய ‘இந்தியாவில் தேசியம்’ என்ற சொற்பொழிவில் பின்வருமாறு கூறுகிறார்.

    ‘இன்று உலகில் காணப்படும் பெரிய கைத்தொழில் ஸ்தாபனங்களிலே எனக்கு நம்பிக்கையில்லை, அவை குருபமாக இருப்பதே சிருஷ்டியமைப்புக்கு முரணாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இயற்கையின் மகத்தான சக்தியானது பயங்கரத்தில் தோற்றமளிப்பதில்லை. அழகிலேயே காட்சி தருகிறது. யந்திர நாகரிகமானது இன்பத்தைப் பலியிட்டுப் பணத்தைத் திரட்டுகிறது. தான் நிறுவும் (யந்திர) கருவிகளுக்கு அதிகபட்ச இடமளிப்பதற்காக மனிதன் தனது மனிதப்பண்பைக் குறைந்தபட்ச அளவு ஒடுக்கிக் கொள்கிறான். மனித உணர்ச்சிகள் யந்திரங்களை இலகுவில் ஏற்க மறுப்பதால் – யந்திரங்களின் பாதையை மறிப்பதால் – அந்த நல்லுணர்ச்சிகளை ஏளனம் பண்ணுகிறான் மனிதன்’

    என்பதில் இயற்கையின் மடியிலே பிறந்து வளர்ந்த தாகூர் இயற்கைக்கு முரணான யந்திரங்களையும், புகை கக்கும் ஆலைகளையும் விரும்பாதது இயல்பே. எனினும் வறுமையில் வாடும் மக்களின் வளர்ச்சிக்காக சிந்திக்காமல் யந்திரங்களை வேண்டாம் என்று கூறியது ஆச்சரியத்தையே அளிக்கிறது.

    பாரதியார் ஜப்பான் நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து நூல்களில் படித்தும், பிறர் சொல்ல கேள்விப்பட்டதையும் கொண்டு நம் இந்திய இளைஞர்கள் ஜப்பான் சென்று தொழில்நுட்பத்திறமை பெறவேண்டும் என்றார். ஆனால் தாகூரோ பல முறை ஜப்பானுக்கு சென்று அக்காட்சிகளையே நேரிலே கண்டவர். அதனால் ஜப்பான் நவீன மயமானதில் மானுடச்செல்வங்கள் அழிந்ததாக குறிப்பிடுகிறார். இரு மகாகவிகளின் இவ்வேறுபட்ட   சிந்தனைக்குக் காரணத்தை நுணுக்கமாக கவனித்தால் இருவரும் வளர்ந்த சூழல் மாறுபாட்டைக் குறிப்பிடலாம். பாரதியார் நாட்டின் வளர்ச்சிக்கு யந்திரங்களின் இன்றிமையாமையைக் கருத்தில் கொண்டு பாடியதில் அவருடைய இந்திய தேசியப்பற்றை அறியமுடிகிறது. ‘மனிதன் மனிதனே யந்திரம் யந்திரமே என்றுமே இணையமுடியாது’ என்ற கருத்துடைய தாகூர் நாட்டைவிட மனிதகுலப் பண்புகளையும், இயற்கையையும் நேசித்ததை அறியமுடிகிறது. யந்திரங்கள் உலகில் ஒருசிலரிடம் மட்டுமே இருந்து போட்டி, பொறாமைகளை உருவாக்கி மனிதனை அழிப்பதைக் கண்கூடாகக் கண்ட தாகூர் யந்திரங்களை நிராகரிக்க பாரதியார் சமத்துவம், வேலைக்குத் தகுந்த கூலி என்றதோடு யந்திரங்களை வரவேற்றதில் இருமகாகவிகளின் உள்ளுணர்வும் புலனாகின்றது.

    காலனை விரும்புதலும், எதிர்த்தலும்:

    மரணம் என்பது ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்படக்கூடியது. தவிர்க்கமுடியாதது என பாரதியார் பல பாடல்களில் குறிப்பிட்டிருப்பினும்,

    ‘பார் மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்
    சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி’

    என்பதில் பாரதியார் மரணபயத்தைத் தவிர்க்க விரும்புபவராகவும், சாகாவரத்தைத் தெய்வத்திடம் கேட்பவராகவும் காணப்படுகிறார். இதன் பொருட்டே பாரதியார் தமது இறுதியாண்டுகளின் போது மரணம் என்ற சிந்தனையில் உழன்று அலைக்கழிக்கப்பட்ட காலத்தில் ‘காலனுக்கு உரைத்தல்’ என்ற பாடலில்,

    ‘காலா உன்னைச் சிறுபுல்லென மதிக்கிறேன் – என்றன்
    காலருகே வாடா! சற்றே உன்னை மதிக்கிறேன்’

    என்று காலனின் மீது வெகுண்டெழுகிறார். ஆனால் தாகூரோ மரணதேவனை வரவேற்கிறார். இறைவனின் பணியாளான மரணதேவன் கடல்கடந்து என் வீட்டிற்கு வர காரிருள் சூழ்ந்த இரவில், நெஞ்சில் அகத்தடன் கையில் தீபமேந்தி வாசலைத் திறக்கிறேன்.

              ‘வரவேற்கிறேன் நான்
    சிரம் தாழ்த்தி
    மரணதேவனை!’

    நான் கரங்களைக் குவித்து, இதயத்தை அர்ப்பணிக்க மரணதேவன் ஒருநாள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றி செல்வான். என் தனி ஆன்மா மட்டும் இறைவனுக்கு இறுதிக்கொடை என தாகூர் ‘மரணதேவனுக்கு வரவேற்பு’ பாடல் பாடியுள்ளார். ஒவ்வொரு நாளும் மரணதேவனின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதாக ‘மரணதேவனுக்கு மணமாலை’ கவிதையில் குறிப்பிட்டுள்ளார். இங்கு இளம்வயதில் உயிரினைத் தொலைக்க முற்பட்ட சுப்பிரமணிய பாரதியார் காலனை மிதிக்க, முதுமைப்பருவத்தில் உயிரினைத் துறக்க முற்பட்ட தாகூர் மரணதேவனை வரவேற்று பரிசினையும் நல்குவதில் இரு மகாகவிகளின் இறப்பு குறித்த எண்ணங்கள் புலப்படுகின்றது.

    தொகுப்புரை:

    சமகால கவிஞர்களான பாரதியும், தாகூரும் ஒவ்வொரு இந்தியரிடத்தும் தேசப்பற்றை உருவாக்கவும், மனித மனதின் எண்ணங்களில் தெளிவை ஏற்படுத்தவும் விழைந்தனர். பிரபஞ்ச சக்தியிடம் பாரதி உரிமையுடன் வினாக்களைத் தொடுக்க தாகூர் இயற்கையை அமைதியுடன் உட்கொள்வராய் திகழ்கிறார். இருவருமே தெய்வத்தை உழைப்பாளரிடத்தில் வெவ்வேறு கோணங்களில் நோக்குகின்றனர். மனித குலப்பண்புகளை மேம்படுத்த இறைவனிடம் வேண்டுவதிலும், இயற்கையை ரசிப்பதிலும், பெண் முன்னேற்றத்திலும் ஒத்த சிந்தனையே கொண்டுள்ளனர். யந்திரங்களின் வளர்ச்சியை நாட்டின் முன்னேற்றப் பார்வையில் பாரதி நோக்க, தாகூரோ மானிடகுலப்பண்புகளை அழிப்பதாக கருதுகிறார். வாழ்க்கையை வாழ்ந்து முடித்த தாகூர் முதுமைப்பருவத்தில் காலனை வரவேற்க, தன் விருப்பங்கள் நிறைவேறாத பாரதியார் காலனை மிதிக்க எண்ணுகிறார்.

    பாரதியார் உலக அரங்குக்குள் போக வாய்ப்பேதும் கிட்டாத. வறுமையில் வாடினும் மிடுக்கான தமிழகக் கவிஞனாக வாழ்ந்து மறைந்தான். தாகூர் வங்காளத்தில் பிரபு வம்சத்தில் பிறந்து, பல வெளிநாடுகளுக்கு செல்கின்ற வாய்ப்புகள் பெற்றவர். ஆங்கிலமொழி பாண்டித்தியமும், வெளிநாட்டு மக்களின் தொடர்பும் நட்புறவும் பெற்றிருந்ததால் உலக அரங்கில் தன் கீதங்களை எடுத்து செல்லும் வல்லமை கிட்டியது. அதனால் நோபல் பரிசு வெல்லும் வாய்ப்பும் பெற்றார். பாரதியின் பாடல்கள் எழுச்சி மிக்கதாக, கோபத்துடன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குக் காரணம் அவர் வாழ்ந்த சூழலேயாகும். தாகூரின் பாடல்கள் கனிவுடன் மென்மையான இறகுகளால் வருடுவதைப் போன்றிருப்பதற்கு காரணமாக அவருடைய தனிமையையும், பொருளாதார நிறைவையும் குறிப்பிடலாம். இரு மகாகவிகளுமே தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்நோக்கி வழிகாட்டுபவராக திகழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. நோபல் பரிசு பெற்ற வங்கக்கவிஞரான தாகூருக்கு சற்றும் சளைத்தவரல்ல நம் தமிழகக்கவிஞர் பாரதியார் என்பது திண்ணம்.

    துணைநூல்கள்:

          1.பாரதியார் கவிதைகள் – ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

    1. பாரதியார் கட்டுரைகள் – பாரதி புத்தக நிலையம்
    2. கீதாஞ்சலி – இரவீந்திரநாத தாகூர் மொழிபெயர்ப்பு – ஜெயபரதன்
    3. ரவிந்திரர் கட்டுரைத்திரட்டு – தமிழாக்கம்- த.நா.குமாரஸ்வாமி
    4. பாரதி என்றென்றும் – தொகுப்பாசிரியர் பொன்னீலன்
    5. இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புக்கள் – பதிப்பாசிரியர்கள் முனைவர்அ.பிச்சை, முனைவர் பா. ஆனந்தகுமார்
    6. மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் – பதிப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    7. இரு மகாகவிகள் – க.கைலாசபதி
    8. மகாகவி பாரதியார் – வ.ரா

    Share
  • (Peer Reviewed) உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’

    (Peer Reviewed) உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’

    முனைவர் த. ராதிகா லட்சுமி
    இணைப் பேராசிரியர்-தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி

    உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’

    மனித மனமே இலக்கியத்தின் வற்றாத ஊற்றுக்கண்ணாகும். மனித மனம் நுண்மையான, விசித்திரமான போக்கினைக் கொண்டது. விலங்குகளிலிருந்து மனிதன் மாறுபட்டுச் சிந்திக்க, செயலாற்றுவதற்கு அடிப்படையான காரணம் மனவுணர்ச்சிகளாகும்.

    ‘மனித உள்ளத்தின் உணர்வே (Human psyche) எல்லா அறிவியல்களுக்கும், கலைகளுக்கும் கருவறையாக விளங்குவது. எனவே அத்தகைய உள்ளத்தின் வழிமுறைகளை ஆராய்கிற உளவியல், இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிக்கும் ஏற்புடையதாக இருக்க முடியும்’ என்று உளவியல் அறிஞரான யுங் குறிப்பிடுகிறார். இலக்கியத்தில் உளவியல் அணுகுமுறையைப் பின்பற்றுவதால் படைப்பாளரின் மனநிலை, கதைமாந்தர்களின் மனநிலை, கதை தோன்றிய சூழல், சமூக இயல்பு போன்றவற்றைத் தெளிவாக அறியலாம். உளவியலாளர் மனித மனத்தை நனவு மனம், நனவிலி மனம் என இரண்டாகப் பிரிப்பர். மனித மனத்தின் நனவுநிலைக்கு அப்பாற்பட்டவையே நனவிலி மனம். பல அனுபவங்களை மனிதன் உள்வாங்கிக் கொள்ள அவை நாளடைவில் மறந்து போகின்றன. அந்த மறந்து போன எண்ணங்கள், உள்ளத்திலேயே பதிந்து விடும். இத்தகைய உள்ளத்தின் எண்ணங்களே நனவிலியாக உருவெடுக்கின்றன.

    பொதுவாக ஆண், பெண் மனங்களின் சிக்கல்களை அறிந்துகொள்ள இயலும். ஆனால் ஆண்,பெண் என்ற இருநிலையையும் கடந்து திருநங்கையாக வாழ்பவரின் மனநிலையை அவன்-அது = அவள் என்னும் நாவலின் வாயிலாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    அவன்அது = அவள்

    இந்நாவல் உடலளவில் ஆணாகவும், மனதளவில் பெண்ணாகவும்  மாற்றம் பெற்ற திருநங்கைகளின் அவல நிலையை எடுத்துரைக்கிறது. சமூகத்தில் பிறரைப் போல இயல்பான குடும்ப வாழ்க்கையை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு வாழ்பவர்களே திருநங்கைகள். குடும்பத்தினரின் நிராகரிப்பு, சமூகத்தினரின் புறக்கணிப்பு இவற்றைக் கடந்து  தன்னிலையை அறிந்துகொள்ள இயலாமல் தவிக்கும் கோபி என்ற கோமதியின் மனப் போராட்டத்தை நுண்மையாக இந்நாவலில் எடுத்தாண்டுள்ளார் நாவாலாசிரியர் யெஸ்.பாலபாரதி.

    குடும்பத்தின் கடைக்குட்டியாக, ஆறாவதாகப் பிறந்த கோபி பையனாக இருப்பினும் அத்தையரின் அணைப்பில் பெண்களுக்கான அலங்காரங்கள் புனையப்பட்டுச் சிறுமிகளுடன் பல்லாங்குழி, பாண்டி விளையாடி வளர்ந்தான். ஐந்தாம் வகுப்பு முடிந்தவுடன் முடி வெட்டப்பட்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க, தன்னுலகம் மாற்றப்பட்டதாக ஆண் என்னும் உருவம் விருப்பமில்லாமல் தன் மேல் திணிக்கப்பட்டதாக உணர்ந்தான். ஆண் எனும் புதிய உலகத்தில் சரவணனின் நட்புடன் பதினொன்றாம் வகுப்பு வரை கல்வி கற்க, மனம் மட்டும் பெண்களின் உடையிலேயே விருப்பம் கொண்டது. வீட்டில் யாருமில்லாத வேளையில் சகோதரியின் பாவாடை, தாவணி அணிந்து கண்ணாடி முன் ஆடி, பாடிய கோபியைக் கண்ட சங்கரபாண்டி, அவமானமாகக் கருதி அவனை அடித்து நையப் புடைத்தான்.

    மனிதனின் மனம் பலவீனமானது. அடிமனத்தை id என்னும் தூண்டல்,  Ego எனும் ஆணவம், Super Ego எனும் மனச்சான்று என மூவகையாகப் பிரிப்பர். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

    ‘id என்பது குழந்தை மனம் போன்றது. அது விரும்பியதை எல்லாம் அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. ஈட்டின் விருப்பங்களை ஈகோ பூர்த்தி செய்கின்றது. ஆனால் Super Ego-வின் அனுமதி பெற்று தான் எதையும் செய்யவேண்டும் என்ற நிலையில் உள்ளது’ என்பதற்கேற்ப கோபியின் மனம், பெண் உருவத்தின் மீது கொண்ட வேட்கையால் பெண்ணைப் போலவே உடையணிந்து மகிழ்கிறது. அதாவது மனச்சான்றின் அனுமதியோடு தூண்டல் ஏற்பட மனம் தான் விரும்பியதை அடைவதை அறிய முடிகிறது.

    ஏக்கம்

    மனித மனத்தில் வித்தாகத் தோன்றிய ஆசை பல நாட்களாகியும் நிறைவேறாமல் உறுத்திக்கொண்டிருக்க, அது ஏக்கத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு பெண்ணைப் போன்ற உறவுமுறைகளுடன் இயல்பான குடும்ப வாழ்க்கையைத் திருநங்கை வாழவியலாததால் ஏக்கம் உருவெடுக்கிறது. அவ்வேக்கத்தை நிறைவு செய்ய திருநங்கைகள் தங்களுக்குள்ளாகவே மகள், சகோதரி உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

    ‘நம்பள மாதிரி பொட்டைக்கு இன்னொரு பொட்டைதான் ஆதரவு. ஒரு பொட்ட இன்னொருத்தியைத் தத்து எடுத்துக்கிட்டு அவள மகளா சொந்தம் கொண்டாடுறது தான் மொற’ என்பதில் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்படும் திருநங்கை உறவுகளுக்காக ஏங்குவது தெளிவாகிறது. சுசீலா-கோமதியின் சகோதரி உறவு, தனத்தின் சேலா எனும் மகள் உறவுகளின் வாயிலாகத் திருநங்கைகள் பெண் உறவுகளிலேயே திருப்தியடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை அறிய முடிகிறது.

    மனப் போராட்டம் :

    ‘ஒரே நேரத்தில் நிறைவுற இயலாததும், ஒன்றற்கொன்று தனித் தனியானதுமான செயல்நோக்கமும் ஊக்கமும் உள்ளத்தில் இருப்பதனால் விளைவதே உள்ளப் போராட்டம்’ என்பதற்கேற்ப வளரிளம் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களால் கோபி மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கிறான். குடும்பமும் சமூகமும் தன்னை ஆணாகப் பார்க்க, தன் மனம் அதை ஏற்க முடியாமல் தவிக்கிறதே! பெண்ணாக நினைப்பதற்குக் காரணம் என்ன? தான் யார்? என்ற வினாவிற்கு விடை தெரியாமல் கோபியின் மனம் உள்ளப் போராட்டத்தில் சிக்குகிறது. வீட்டினர் கோபியின் உடை மாற்றத்துக்குக் காரணம் பெண்பேய் பிடித்திருப்பது எனக் கருதி அதையோட்டுவதற்கான பூசையை மேற்கொண்டனர்.

    ‘உண்மையில் தான் யார்? பெண் எனில் ஏன் அவர்களுக்கான உடல் இல்லாது போனது? ஆண் எனில் உடல்மொழியும், அந்த உணர்வுகளும் எப்படி வந்து சேர்ந்தது? கேள்விகள்… கேள்விகள்… கேள்விகள்… கண்களை இருட்டிக்கொண்டு வந்தது… விசும்பலற்ற அழுகை அது. ஏன் அழுகிறோம் என்று தெரியாமலேயே அழுது கொண்டிருந்தான்’ என கோபியின் மனம் சிந்திப்பதில் தன்னை அடையாளம் காண முடியாத மனப் போராட்டத்தை உணர முடிகிறது. பேயோட்டுபவராவது தன்னை யார் எனத் தெரிவிப்பாரா? என்று ஏங்கும் மனம், சிகப்பு பாவாடை, மஞ்சள் தாவணி, வளையல்கள் எனத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறது. திருநங்கைகளின் குடியிருப்புக்கு அருகே சென்ற கோபி, அவர்கள் ஆணுடையில் இருப்பினும் சராசரி ஆணாய்ச் செயல்படாததை உணர்ந்து பேசி, தன்னிலையை அறிந்துகொண்டான்.

    ‘நீ ஆம்பளையுமில்ல… பொம்பளையுமில்ல… ரெண்டும் கெட்டான்…

    கோபி மௌனமாக இருந்தான்.

    வெளங்கலையா ஆம்பளையா பொறந்துட்ட  பொம்பளைங்க தான்.. நம்மள அலின்னு சொல்றாங்க.. அடிக்கிறாங்க.’ என்பதன் வாயிலாக தன்னையறிந்து தன்னைப் போன்றவர்களும் உலகில் இருப்பதையறிந்து மகிழ்கிறான். திருநங்கைகளின் வீட்டில் பெண்ணுடையை அணிந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டு தன் வீட்டில் ஆண்மகனாக வேடமிட்டு வாழத் தொடங்குகிறான்.

    மனவடக்கமும் ஒடுக்கமும்:

    மனிதர்கள் மனத்தில் பல சோகங்கள் நிறைந்திருப்பினும் அவற்றை வெளிக்காட்டாமல் மனத்திற்குள் அடக்குவதும் ஒடுக்குவதும் உண்டு.

    ‘தொல்லை தரும் உள்துடிப்புகளையும் நினைவுகளையும் திட்டமிட்டு உணர்ந்து கவனத்தில்; களத்தினின்று அகற்றுவதை அடக்குதல் என்றும், அவற்றை முயற்சி இன்றி இயல்பாக நனவுநிலையினின்று நீக்கப்படுவதை ஒடுக்குதல்’ என்றும் பெசன்ட் கிரீப்பர் ராஜ் குறிப்பிடுகிறார்.

    பெண் என்ற உள்துடிப்பைச் சமூகத்திற்காக, கவனமாக மறைத்த கோபி, கல்லூரி விடுதியிலிருந்து வீட்டினர் அறியாமல் தன்னை ஒத்தவர்களைச் சந்தித்து மகிழ, கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்றான். பயணத்தில் கோபியின் நடத்தையில் மாற்றத்தை அறிந்த மூன்று ஆண்கள் பாலியல் வன்புணர்ச்சி புரிய, அவன் மயக்கமடைந்தான். திருநங்கை தனம் மருத்துவமனையில் சேர்த்து, தன்னைக் காப்பாற்றியதை அறிந்ததும் பெண்கள் மட்டுமல்ல, தன்னைப் போன்றவர்களும் இப்பாலியல் கொடுமையால் பாதிக்கப்படுவது வெளியுலகிற்கு ஏன் தெரிவதில்லை?

    ‘ஏனிந்த இழிபிறப்பு? பிறப்பு என்பது விரும்பி ஏற்க முடியாததாக இருக்க.. இப்படி பிறந்ததற்கு நானோ என்னைப் போன்றவர்களோ எப்படிப் பொறுப்பேற்க முடியும்? பிறகு ஏன் என்னைப் போன்றவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சட்டம் எல்லாருக்கும் பொது தானே… சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் என்ன?’

    என்னும் அகத்தனிமொழியின் வாயிலாக சமூகத்தினரால் புறக்கணிக்கப்படும் கிருநங்கையின் வலியை உணர முடிகிறது. பள்ளி, கல்லூரிக்குச் சென்று கல்வி கற்க முடியாத நிலை, இரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்வதால் சமூகத்தினர் ஏற்படுத்தும் அவமானம், உணவகத்தில் காலம் தாழ்த்திக் கொடுக்கப்படும் உணவு, திருநங்கையினரையே தவறாக உரைத்து வன்முறைக்கு உட்படுத்தும் காவல்துறை என வாழ்வின் பல இடங்களில் இப்பிறப்பின் சாபத்தை அனுபவிப்பதாகக் குறிப்பிடுவதில் மனவடக்கத்தையும் ஒடுக்கத்தையும்  காண முடிகிறது.

    குற்றவுணர்ச்சி:

    மனித மனம் கடந்த கால நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து தவறுக்கான காரணங்களைத் தீவிரமாக அலசுவதுண்டு. நிகழ்காலப் பிரச்சனையின் வேரைத் தேடும் மனிதனின் மனம் செய்த தவற்றினைச் சுட்டிக் காட்டுகிறது. அத்தருணத்தில் தோன்றும் உணர்ச்சியே குற்றவுணர்ச்சி. சூழ்நிலை மனிதனை முடிவெடுக்கத் தூண்டும்  நிலையில் அவன் சிந்தித்துச் சரியான முடிவை மேற்கொள்வது அவசியம். இல்லையெனில் துன்பமடைவது உறுதி என்பதைப் படைப்பாளரின் அவன்- அது அவள் புதினம் எடுத்துரைக்கிறது.

    காவல் துறையினரின் வன்முறையைத் தாங்கி, அவமானப்பட்டு மும்பைக்கு தனம், சுசீலாவுடன் பயணம் செய்ய முற்பட்ட கோமதி, தொடர்வண்டியில் பயணச்சீட்டு  பெறாமல் பயணிக்கிறோம் என்பதை அறிந்து பயந்தாள். ஒரு வயதான பெண்மணி திருநங்கை எனப் பாலியல் ரீதியாக இழிவாகப் பேச, அவமானப்பட்டாள்.

    ‘ச்சே.. என்ன வாழ்க்கை இது? ஒழுங்கா ஹாஸ்டல்லயே இருந்திருக்கலாம். சுயத்தோட வாழலாம்னு இவங்க கூட சேர்ந்த ஒரு வாரத்துக்குள்ள எத்தனை பிரச்சனைகளைச் சந்திச்சாச்சு… நிம்மதியா வாழக்கூட வேணாம்.. மனுசனாக்கூட வாழவிட மாட்டாங்க போலிருக்கே… வீட்டில் இருக்குற வரைக்கும்தான் உனக்குப் பாதுகாப்பு. உன் பாதுகாப்பு ஆயுசுக்கும் வேணும்னா… ஒழுங்கா படிச்சு பெரிய ஆளா வரணும் அப்பத்தான் நல்லது என்ற சங்கரண்ணனின் வார்த்தைகள் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைத்தது. விசும்பலாய் வெளிப்பட்டது.’

    வீட்டை விட்டு வெளியேறியதும் பட்ட துன்பங்கள், அவமானங்களால் கோமதியின் மனம் அகஸ்டின் சங்கரபாண்டியனின் அறிவுரைகளை மீறியதால் இந்நிலைக்கு ஆளானோமா? எனக்  குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவிப்பதை அறிய முடிகிறது.

    ஏமாற்றமும் தவிப்பும்:

    கோமதி, தனம், சுசீலா, சீத்தல், சுந்தரி போன்றவர்களின் வாயிலாகச் சமூகத்தில் உள்ள திருநங்கைகளின் வலியை நாவலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். கோமதி ஆணுறுப்பை நீக்கிய பிறகு இயல்பான பெண்ணின் வாழ்க்கையை ஒத்து, இல்லற வாழ்க்கையை வாழலாம் என எண்ணினாள். அன்பரசனின் மீது கொண்ட உண்மையான காதலால், நம்பிக்கையால் தனம், சுசீலா, சீத்தல் போன்ற உறவுகளின் அறிவுரையைக் கேட்காமல் அவனைக் கைப்பிடித்தாள். ஒரு வருடத்திற்கு பின் தோள்பட்டையின் இருபக்கங்களிலும் விளக்கேற்றும் அளவிற்கு இளைத்து கண்களில் பரிதவிப்புடன் நிற்கும் கோமதியைக் கண்ட சுசீலா பாசத்தால் தவித்து வினவினாள்.

    ‘சுசீலாவின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. வெளியில் சொல்ல முடியாத சோகம், பல நாட்கள் உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி இருந்தாகிவிட்டது. பல நாட்கள் மனசு சரியில்லாமல் போனாலும் அழுகை வராது. கோபமும் ஆத்திரமும் வெளிவருவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும்’ என்பதில் மனத்தின் வலி வெளிப்படுகிறது. கோமதி குடும்பத்தை விட்டு வெளியேறியபின் தாயாக, தமக்கையாக இருந்த தனம், சுசீலாவின் அன்பை அறிந்தவளாக ஏமாற்றத்தில் தவித்தாள். சுசீலா அவள் நிலை அறிந்து உணவு வாங்கித் தந்தாள். பசி நீங்கிய பின் கோமதி, அன்பரசு குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும் உடல் விருப்பத்தினை மட்டும் தீர்த்துக் கொள்வதாகவும் கடைகேட்டு பணம் சம்பாதித்து வருமாறு வற்புறுத்துவதாகவும் உரைத்தாள். கோமதி ஏமாந்ததை அறிந்த சுசீலா, மனம் நொந்தாள்.

    ‘இப்போது கண்ணைக் கசக்கிட்டு நிற்கும்போது மனசு வலிக்கிறது. வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத வலி. ஆணின் அடையாளத்தை இழக்கும் தருணத்தைவிட இந்த வலிக்குச்  சக்தி அதிகம். எதிர்பார்ப்பு, கனவுகள் என்ற எல்லா நம்பிக்கையையும் குலைக்கும் போது இப்படித்தான் வலியெடுக்கும். அதை உணரத்தான் முடியுமே தவிர விளக்கிச் சொல்லிவிட முடியாது’ என்பதில் வலியின் வேதனை புலனாகின்றது. குடும்பத்தினர் இழிபிறப்பாகக் கருதி, திருநங்கையினரை நிராகரிக்க, சமூகத்தினர் புறக்கணிக்க அன்பரசனின் காதல், கோமதிக்குப் பற்றுக்கோலாக இருந்தது. உடல்உறுப்பை நீக்கிப் பெண்ணாக உருமாறி, இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தவள், கணவனின் போக்கால் ஏமாற்றத்துடன் வேதனையடைந்தாள். முதலில் கணவனின் சந்தேகப் புத்தியைக் கண்டு தன்னையும் பெண்ணாகக் கருதிச் சந்தேகப்படுகிறானே என மகிழ்ச்சியுற்றாள். நாளடைவில் வன்முறை, வன்புணர்ச்சி, சந்தேகப் புத்தி எனக் கொடுமைப்படுத்தினும் கோமதி அவனை விட்டுப் பிரிய மறுக்கிறாள்.

    சுயம் தேடும் மனம்:

    பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாகவும், பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவிலேயே முதல் மாணவனாகவும் தேர்ச்சி பெற்ற கோபி, மதுரையில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்புக்குச் சேர்ந்தான். சக மாணவர்களின், ஆசிரியர்களின் ஏளனப் பேச்சு, தவறான செய்கைகள் மனத்தைத் துன்புறுத்த, வகுப்பிற்கு வராமல் நண்பன் சரவணனின் உதவியுடன் விடுதியில் இருந்தவாறே படிக்க முற்பட்டான்.

    மனம், உடல்ரீதியாக சில சிக்கல்களை அனுபவிப்பினும் கோபி கற்பதை நிறுத்தவில்லை. வாழ்வின் உயர்வுக்கு, சிறந்த வேலை பெறுவதற்குக் கல்வியின் இன்றிமையாமையை உணர்ந்து செயல்பட்டான். பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின் கோமதி, தன் மனவிருப்பத்திற்காக இயல்பாக வாழ ஒரு வாய்ப்பு என்ற நிலையில் திருநங்கை தனத்துடன் வாழ முற்படுகிறாள். எனினும் திருநங்கைகள் கடைக்குச் சென்று பிச்சை எடுப்பதற்கு அழைக்க, அவள் பணிக்குச் செல்வதாக உரைத்து மறுக்கிறாள். பிறரின் ஏளனச் சிரிப்பைக் கண்டதும் அழுதவளாக ஆதரவு தேடி தனத்தை நாடுகிறாள்.

    ‘பிச்ச எடுக்கத்தான் போகணும்னு அவங்க எல்லோரும் சொல்றாங்க. நா வேலைக்குப் போறேன்னு சொன்னதுக்கு சேர்ந்துக்கிட்டு சிரிக்கிறாங்க… எனக்கு அது புடிக்கலம்மா… நா வேலைக்கு போறேனேம்மா’ என்ற கோமதியின் சொற்களில் தன்மானம் வெளிப்படுகிறது. ஆனால் சமூகம், திருநங்கைகளுக்கு எத்தகைய வேலையும் தராமல் நிராகரிக்கும் என்ற நிதர்சனமான உண்மையை அவளே அனுபவத்தின் வாயிலாக உணரட்டும் எனத் தனம் எண்ணுகிறாள். தாய் பிச்சை எடுக்கச் செல்ல வேண்டாம் என்றுரைத்ததும் மகிழ்கிறாள்.

    அன்பரசுடனான காதலுக்காக உயிரைப் பணயம் வைத்து ஆணுறுப்பை நீக்கி, தாயின் அறிவுரையை ஏற்காமல் எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டாள் கணவனுக்கு வேலையில்லாத தருணத்தில் கோமதி பிச்சையெடுக்கச் செல்வதில் தன்மானம் தகர்ந்து அன்பு மேலோங்குகிறது. எனினும் கணவன் தொடர்ந்து பிச்சையெடுக்க வற்புறுத்த, சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.

    விரக்தி:

    ஒருவரது எண்ணங்கள் ஈடேறாத போதும், தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கும் போதும் மனத்தில் சலிப்பும் வெறுப்பும் உண்டாகின்றன. இத்தகைய மனநிலையே விரக்தியாகும்.

    ‘பொட்டயாப் பொறந்ததே தப்பு. அதுலையும் கல்யாணம் காட்சின்னு ஆசப்படுறது அதவிட தப்பு. பார்க்கலாம். இன்னும் எத்தனை காலத்துக்குன்னு .முடியிற வரைக்கும் சமாளிப்பேன். என்னைக்கு முடியாமப் போகுதோ. அன்னிக்கு ஏதாவது டிரெயினுக்கு முன்னால பாய்ஞ்சுடுவேன்..’ என்பதில் விரக்தியின் உச்சம் தற்கொலைக்குத் தள்ளும் என்ற உண்மை புலனாகின்றது.

    தொகுப்புரை:

    ஒரு புதினத்தின் முதன்மையான பாத்திரச் சித்திரிப்பில் மனித மனங்களின் வேட்கைகள், உயர்வு தாழ்வுகள், இலட்சியங்கள், நடத்தைகள் இடம் பெற்றிருப்பதில் உளவியலே வெளிப்படுகிறது. தான் யார்? என்பதறியாமல் துடிக்கும் இயலாமை, பாலியல் வன்புணர்ச்சியால் உடலும் மனமும் தளர்ந்து போதல், பிறப்பின் மீதான மனஒடுக்கம், குற்றவுணர்ச்சி, உறவுக்காக ஏங்கித் தவித்தல், குடும்ப அமைப்பை விரும்பி ஏமாறுதல், பெண் என்ற அங்கீகாரத்தை விரும்புதல், உயிரைப் பணயம் வைத்து ஆணுறுப்பை நீக்குதல், சமூகத்தினரின் இழிபேச்சிற்கு ஆளாகுதல், இல்லற வாழ்விற்காக தன்மானத்தைத் தகர்த்தல், வேதனையின் உச்சத்தில் தற்கொலையை நாடும் மனம் என இப்புதினம் திருநங்கைகளின் மனவுணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. சமூகத்தினரின் கேலி, ஏளனப் பேச்சிற்கு உள்ளாக்கப்பட்டு அவமானங்களையும், அநீதிகளையும் சந்தித்து மனம் துவண்டு வாழும் திருநங்கைகளின் வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம் என்ற முதன்மையான கருத்தை இப்புதினம் புலப்படுத்துகிறது.

     

    பார்வை நூல்கள்:

    1. அரவாணிகள் – முனைவர்.மு.அருணாசலம்
    2. அவன்-அது ஸ்ரீ அவள்- யெஸ்.பாலபாரதி;
    3. சங்க இலக்கியத்தில் உளவியல் – து.சிவராஜ்
    4. தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள் – முனைவர்.மு.அருணாசலம்
    5. தமிழும் பிற துறைகளும் – முனைவர்.உ.கருப்பத்தேவன்
    6. திறனாய்வுக் கலை – தி.சு.நடராசன்
    7. பெசன்ட் கிரீப்பர் ராஜ் – பிறழ்நிலை உளவியல்
    _________________________________________________________________________________________
    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
    ஆய்வாளர் இக்கட்டுரையில் திருநங்கைகளின் மனப் போராட்டத்தைச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். கோபி என்ற திருநங்கையின் வாழ்வியலை மையமாகக் கொண்டது இந்நாவல். ஒருவர் தன்னை மாற்றுப் பாலினமாக உணர்ந்து கொள்வதும்  அங்கீகரிக்க மறுக்கும் சமூக நிலையும் இக்கட்டுரையில் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. வாழ்தல் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் சமூகக் கட்டமைப்புகள் பெரும் தடையாகச் செயல்படுவதை இக்கட்டுரை எடுத்துக் காட்டுவது சிறப்பு.
    _________________________________________________________________________________________

     

    Share
  • பூலோக நரகமோ?

    முனைவர் த.ராதிகா லட்சுமி
    இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி

    பூலோக நரகமோ?

    நிதம் நிதம் போராட்டம்
    கனம் சுமந்து
    கட்டளைக்கு அடிபணிந்து
    மனத்திற்குள் குமைந்து, குமுறி
    பிறர் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து
    தம் கருத்துகளை மறைத்து
    சுயத்தை இழந்து
    தன்மானத்தைத் தொலைத்து
    உணர்வுகளைத் தவிர்த்து
    வளைந்து, நெகிழ்ந்து, அனுசரித்து, சுகித்துத்
    தலைகுனிகிறாள் பெண்
    எனினும்
    சுயம் நீருக்குள் அமிழ்ந்த பந்தாய்த் தலைதூக்க
    நிதம் நிதம் போராட்டம்
    இதுதான்
    பூலோக நரகமோ?

    Share
  • இருட்டடிப்பு ஏன்?

    முனைவர் த.ராதிகா லட்சுமி
                      
    இருட்டடிப்பு ஏன்?
    புகைப்படங்களாக
    மகிழ்ச்சியின் தருணங்கள்…
    நாட்குறிப்பாக
    நட்பின் நினைவுகள்…
    தேகத்தழும்பாக
    விளையாட்டின் சுவடுகள்…
    இவை இனிமையைப் பறைசாற்;ற
    துயரம் தந்த வலிகள்
    மட்டும்
    இருட்டடிப்பு
    செய்யப்பட்டது
    மனதில் வடுவாக…
    Share
  • குருவை நிந்தித்த இந்திரனின் துயரம்

    -முனைவர் த. ராதிகா லட்சுமி     

    பழங்காலத்தில் மாணவர்கள் குருவின் இல்லத்தில் தங்கி குருவிற்குப் பணிவிடை செய்து கல்வியை, வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தனர். தற்கால மாணவர்கள் குருவைக் கடமையைச் செய்பவராக கருதி கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவராக விளங்குகின்றனர்.

    ‘பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு:’

    என்ற வள்ளுவத்தின்படி பணிவின்மையால் குருவை நிந்தித்த இந்திரன் உயர்ந்த பதவியை இழந்து பிரமக்கொலை, பிரமகத்தி தோஷம் அடைந்து துன்புற்று ஓடி ஒளிந்தான். தேவருலகத் தலைவன் இந்திரன் தன் குருவான வியாழபகவானைப் பொருட்படுத்தாததன் விளைவைத் திருவிளையாடற்புராணத்தின் வழி அறியலாம்.

    அலட்சியப்போக்கு:

    முன்னர் கிருத யுகத்தில் தேவேந்திரன் தேவமகளிரின் அமுதம் போன்ற பாடலிலும், ஆடலிலும் மனம் திளைத்து மகிழ்ச்சி எனும் மதுக்கடலில் மூழ்கி இருந்தான். அப்போது இந்திரன் தன் குருவான சிவனையொத்த வியாழபகவானின் வருகையை உணராது, வழிபாடற்று வாளா இருந்தான். மகளிரின் மயக்கத்தில் வீழ்ந்தவர்களுக்கு நல்வாழ்வும் சாத்தியமோ? இதனை நன்குணர்ந்த  வியாழபகவான் அவ்விடம் விட்டு நீங்க, இந்திரனின் செல்வம் பொலிவில்லாமல் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. இது குருத்துரோகத்தால் ஏற்பட்ட கேடு என்பதைத் தெளிந்துணர்ந்த இந்திரன் தன் குருவைத் தேடிச் சென்றான். எங்குத் தேடியும் காணாதவனாய் அச்சத்துடன் நான்முகனை அடைந்து நடந்த நிகழ்வை எடுத்துரைத்தான். குருவை மதிக்காமல் நிந்தித்ததால் பாவம் கொழுந்துவிட்டு எரிவதையறிந்த நான்முகன் சூழ்ச்சியுடன் ‘உன் பழைய குருவைக் காணும் வரையில் துவட்டாவின் மகன் மூன்று தலைகளையுடைய அசுரர் குலத் தோன்றல் விச்சுவ உருவனைக் குருவாக கொள்க’ எனக் கூற  இந்திரனும் உடன்பட்டான்.

     இந்திரன் தேவர்களுக்கு நன்மை உண்டாக வேள்வி செய்யுமாறு புதிய குருவிடம் உரைக்க, விச்சுவனோ அசுரர்களுக்கு நன்மை புரியும்வகையில் வேள்வியைத் தொடங்கினான். இந்திரன் தன் ஞான திருஷ்டியால் விச்சுவனின் செயலில் வேறுபாட்டை அறிந்து வச்சிராயுதப் படையால் மோதி மூன்று தலைகளையும் தனித்தனியே பிளந்தான். அவை காடை, ஊர்க்குருவி, கிச்சிலியாக மாறிப் பறந்தன. அதன் ஊனுடன் கூடிய குருதியைப் பேய்களின் வாயில் புகட்ட இந்திரனுக்குப்  பிரமக்கொலை பாவம் வந்து சேர்ந்தது.

    பிரமக்கொலைப் பாவம்:

    தேவர்கள் இப்பாவத்தை நீர், மண், பெண்டிர், மரம் போன்றவற்றின் மேல் கூறு செய்து சுமத்தினார்கள். அவர்கள் இப்பாவம் நீங்க வழி யாது? என வினவினர். அதற்கு ‘நீரில் நுரையாகியும், நிலத்தில் உவர்ப்பாகியும், பெண்ணில் பூப்பாகியும், மரத்தில் பிசினாகியும் நீங்குக’ என்றுரைத்தனர். அதற்குப் பின்னும் ‘இப்பழி சுமந்ததற்கு உண்டான பயன் யாது?’ என வினவினர். நீர் இறைக்குந்தோறும் சுரந்து பொலிவடையும், மண்தோண்டிய குழியும் மண்ணினாலேயே வடுவொழிந்து நிரம்பும், சூலுற்ற பெண் கருவுயிர்க்கும் வரை கணவனுடன் வாழ்வர், மரம் வெட்டப்படினும் மீண்டும் தழைக்கும் என நீங்காத பலனை அளித்தார்கள். இதனால் இந்திரன் பிரமக்கொலை பாவத்தினின்று நீங்கினான். ஆனால் துவட்டா தன் மகன் விச்சுவனைக் கொன்ற இந்திரனைப் பழிவாங்குவதற்காக கொடும் வேள்வியினைச் செய்தான். இவ்வேள்விக் குண்டத்தினின்று ஆலகால விஷம் போன்ற தோற்றத்தைக் கொண்ட கையில் வெற்றிமிக்க வாட்படையினையுடைய விருத்திராசுரன் தோன்றினான். துவட்டா ‘தேவேந்திரனின் உயிரைப் போர் செய்து வாங்கி வா’ என  விருத்திராசுரனிடம் ஆணையிட்டான்.

    வலுவிழந்த வச்சிரப்படை:

    அறமும், பாவமும் போர் செய்தலைப் போன்ற யுத்தத்தில் இந்திரன் விருத்திராசுரனின் மேல் வச்சிரப்படையை வீசினான். விருத்திராசுரன் இரும்பு உலக்கையை எடுத்து இந்திரனின் புயத்தில் அடிக்க மூர்ச்சையுற்றான். சிறிதுநேரத்தில் தெளிந்த இந்திரன் ‘இப்பகைவனுக்கு எதிர்நின்று யான் போர்புரியும் வலிமைபெற்றவன் அல்லேன்’ எனக் கருதியவனாய் நான்முகனை அடைந்தான். பின்பு நான்முகனோடு சென்று திருமாலை வணங்க அவர் விருத்திராசுரனை அழிக்கும் வழியை எடுத்துரைத்தார். ‘உன் வச்சிரப்படை மிகவும் பழையதாகியதால் பகைவரின் உயிரை உண்ணும் வலிமையை இழந்துவிட்டது. அதனால் வேறு புதிய படைவேண்டும். நான் பாற்கடலைக் கடையும் நேரத்தில் அசுரர்களும், தேவர்களும் கொடிய படைக்கலன்கனோடு வருவது குற்றமென உரைத்து அவ்வாயுதங்களை ததீசி முனிவரிடம் சேர்ப்பித்தோம். பலவாண்டுகளாகியும் அசுரர்களும், தேவர்களும் ஆயுதங்களைக் கேட்காததால் ததீசி முனிவர் அவற்றை விழுங்கி விட்டார். அப்படைக்கலன்கள் அனைத்தும் திரண்டு முதுகெலும்பாய் பொருந்தி வச்சிரப்படையாயிற்று. நீ ததீசி முனிவரைக்கேட்டால் கருணைவடிவமான அவர் அதனை உனக்குத் தருவார் என்று கூறினார். ததீசி முனிவரிடம் சென்ற இந்திரன் நிகழ்ந்தவற்றைக் உரைத்து தேவர்களைக் காக்கவல்ல பொருள் நும் உடலில் உள்ள வச்சிரப்படையே’ என்று பகர்ந்தான்.

    என் உடலை வழங்கி அறமும், புகழும் பெறுவேன் எனில் இவ்வுடம்பினால் பெறும் பயனும் வேறுண்டோ? என்ற ததீசி முனிவர் சிவயோக சமாதியில் நின்று கபாலத்தைக் கிழித்து சிவவுலகை அடைந்தார். தேவதச்சன் அவ்வள்ளலின் முதுகெலும்பை வலிமைமிக்க வச்சிரப்படையாக்கி இந்திரனின் கையில் வழங்கப் போர் தொடங்கியது.

    பிரமகத்தி தோஷம்:

    தேவர், அசுரர்களுக்கிடையிலான இப்போரில் பூமியை மூடிய பிணக்குவியல் மலை போன்ற அண்டத்தைச் சிதைவுப்படுத்தியது.  இந்திரனின் கணைகளுக்கு எதிர்க் கணையை விடுக்கவியலாத விருத்திராசுரன் அஞ்சிக் கடலினுள் சென்று மறைந்தான். சினத்துடன் கடலினுள் சென்ற இந்திரனால் அசுரனைத் தேடிப்பிடிக்க இயலவில்லை. இந்திரன் மீண்டும் நான்முகனை நாட அவர் விந்தியமலையை அடக்கிய அகத்தியரைச் சென்று கண்டால் உபாயம் கிடைக்கும் என்று வழிப்படுத்தினார். அகத்தியரும் இந்திரனின் துயர் துடைக்க சிவனைத் தியானித்து விருத்திராசுரன் மறைந்திருந்த கடலை உளுந்தின் அளவாகக் குறுக்கி அதனைக் குடித்தார். நீரற்ற கடலில் தவம் புரியும் அசுரனைக் கண்ட இந்திரன் அவன் தலையை வெட்டியெறிந்தான். இந்திரனைப் பிரமகத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதனால் அச்சமுற்ற இந்திரன் ஒரு குளத்தில் இருந்த தாமரைத் தண்டின் நூலுள் மறைந்தான்.

    பெண்வேட்கை:

    தலைவன் இல்லாத இந்திரலோகம் பொலிவிழக்க தேவர்கள் அசுவமேதயாகம் புரிந்த நகுடனைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்திரப்பதவியேற்ற நகுடன் இந்திராணியை அழைத்து வருமாறு பணிக்க அவள் வியாழபகவானைப் பணிந்தாள். இந்திரனை விடுத்து வேறொருவனைத் துணையாகக் கொள்ளுதல் அறமோ? என வினவினாள்.  வியாழபகவானும், ‘அகத்தியன் முதலான ஏழுமுனிவரும் தாங்க மாமணிச் சிவிகையில் வருபவனே தேவர்களைக் காக்கும் தலைவன். அவனே உன் கணவன்’  என உரைக்க இந்திராணியும் உடன்பட்டாள். இந்திராணியின் தூதை அறிந்த நகுடன் பெண்வேட்கையால் பின்வரும் இடரினை நினையாது, சிவிகையைச்  சுமந்து வரும் முனிவர்களின் பெருமையை அறியாது விரைந்து செல்லுங்கள் எனும் பொருள் கொண்ட ‘சர்ப்ப’ என்று கூறினான். அகத்தியரும் அவன் சர்ப்பம் என்று கூறியதால் ‘சர்ப்பமாகவே மாறக் கடவாய்’ என சாபமிட்டார்.

    ஆற்றுப்படுத்திய குரு:

     பின்பு தேவர்கள் தங்கள் குருவான வியாழ பகவானைப் பணிந்து ‘மன்னன் இல்லாத இடரினைத் தீர்க்க வல்லீர்’ என வேண்டினார். குருவும் குளத்தில் மறைந்திருந்து இந்திரனை அழைத்து வந்தார். கொடிய பெரும்பாவத்தில் மூழ்கிய இந்திரன் வியாழபகவானைப் பணிந்து வணங்கி, ‘குருவே! என் பாவம் நீங்கும் வழி யாது?’ என வினவினான். வியாழபகவானும் கடம்பவன சிவனை வணங்கி பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை தன் மாணவனுக்கு எடுத்துரைத்தார்.

    இறைவனுக்குச் செய்த குற்றத்தை ஆசிரியரே ஆராய்ந்து தீர்க்கவல்லவர். ஆனால் ஆசிரியருக்குச் செய்த குற்றத்தை அவ்வாசிரியரே நீக்குதலின்றி வேறு எவராலும் நீக்கிடமுடியாது.

    ‘ ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிகன் எண்ணித் தீர்க்குந்
    தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்பதன்றிப்
    பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்த காரணத்தால் வந்த
    வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற ‘

    தன்னிடம் தவறு செய்தமையால் வந்த பழியை இந்திரன் தீர்ப்பதற்கு வியாழபகவானாகிய அக்குரவனே வழியையும் வகுத்துரைத்தான்.

    குருவிடம் செய்த தவற்றினால் இந்திரன் விச்சுவனை அழித்து துவட்டாவின் பகையை ஈட்டினான். துவட்டாவினால் விருத்திராசுரனுக்கு அஞ்சும் நிலை ஏற்பட்டது. ததீசி முனிவர், அகத்திய முனிவர்களின் உதவியால் விருத்திராசுரனை அழித்த நிலையிலும் நிம்மதி கிட்டாமல் பிரமகத்தி தோஷமே பிடித்தது. இப்பாவத்திற்கு அஞ்சிய இந்திரன் தாமரையில் ஒளிய  இந்திராணியை நகுடன் கைக்கொள்ள நினைக்கிறான். இவ்வாறு இந்திரன் பல்வேறு துன்பங்களை அடைய குருவான வியாழபகவானே பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை வகுத்துரைக்கிறார். இப்புராணத்தின் வாயிலாகக் குருவை நிந்திப்பவன் துன்பம் அடைவது உறுதி என்பது புலனாகின்றது.

    குறிப்புகள்

    1. திருவிளையாடற்புராணம்; (இந்திரன் பழி தீர்த்த படலம்) – உரையாசிரியர் பி.ரா.நடராஐன்
    2. தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ்கௌதமன்
    3. குறள்நெறி அறம் – புலவர் கே.ஏ.ராஜீ

    *****

      கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

     

    Share