(Peer Reviewed) உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’
முனைவர் த. ராதிகா லட்சுமி இணைப் பேராசிரியர்-தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி
உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’
மனித மனமே இலக்கியத்தின் வற்றாத ஊற்றுக்கண்ணாகும். மனித மனம் நுண்மையான, விசித்திரமான போக்கினைக் கொண்டது. விலங்குகளிலிருந்து மனிதன் மாறுபட்டுச் சிந்திக்க, செயலாற்றுவதற்கு அடிப்படையான காரணம் மனவுணர்ச்சிகளாகும்.
‘மனித உள்ளத்தின் உணர்வே (Human psyche) எல்லா அறிவியல்களுக்கும், கலைகளுக்கும் கருவறையாக விளங்குவது. எனவே அத்தகைய உள்ளத்தின் வழிமுறைகளை ஆராய்கிற உளவியல், இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிக்கும் ஏற்புடையதாக இருக்க முடியும்’ என்று உளவியல் அறிஞரான யுங் குறிப்பிடுகிறார். இலக்கியத்தில் உளவியல் அணுகுமுறையைப் பின்பற்றுவதால் படைப்பாளரின் மனநிலை, கதைமாந்தர்களின் மனநிலை, கதை தோன்றிய சூழல், சமூக இயல்பு போன்றவற்றைத் தெளிவாக அறியலாம். உளவியலாளர் மனித மனத்தை நனவு மனம், நனவிலி மனம் என இரண்டாகப் பிரிப்பர். மனித மனத்தின் நனவுநிலைக்கு அப்பாற்பட்டவையே நனவிலி மனம். பல அனுபவங்களை மனிதன் உள்வாங்கிக் கொள்ள அவை நாளடைவில் மறந்து போகின்றன. அந்த மறந்து போன எண்ணங்கள், உள்ளத்திலேயே பதிந்து விடும். இத்தகைய உள்ளத்தின் எண்ணங்களே நனவிலியாக உருவெடுக்கின்றன.
பொதுவாக ஆண், பெண் மனங்களின் சிக்கல்களை அறிந்துகொள்ள இயலும். ஆனால் ஆண்,பெண் என்ற இருநிலையையும் கடந்து திருநங்கையாக வாழ்பவரின் மனநிலையை அவன்-அது = அவள் என்னும் நாவலின் வாயிலாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அவன் – அது = அவள்
இந்நாவல் உடலளவில் ஆணாகவும், மனதளவில் பெண்ணாகவும் மாற்றம் பெற்ற திருநங்கைகளின் அவல நிலையை எடுத்துரைக்கிறது. சமூகத்தில் பிறரைப் போல இயல்பான குடும்ப வாழ்க்கையை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு வாழ்பவர்களே திருநங்கைகள். குடும்பத்தினரின் நிராகரிப்பு, சமூகத்தினரின் புறக்கணிப்பு இவற்றைக் கடந்து தன்னிலையை அறிந்துகொள்ள இயலாமல் தவிக்கும் கோபி என்ற கோமதியின் மனப் போராட்டத்தை நுண்மையாக இந்நாவலில் எடுத்தாண்டுள்ளார் நாவாலாசிரியர் யெஸ்.பாலபாரதி.
குடும்பத்தின் கடைக்குட்டியாக, ஆறாவதாகப் பிறந்த கோபி பையனாக இருப்பினும் அத்தையரின் அணைப்பில் பெண்களுக்கான அலங்காரங்கள் புனையப்பட்டுச் சிறுமிகளுடன் பல்லாங்குழி, பாண்டி விளையாடி வளர்ந்தான். ஐந்தாம் வகுப்பு முடிந்தவுடன் முடி வெட்டப்பட்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க, தன்னுலகம் மாற்றப்பட்டதாக ஆண் என்னும் உருவம் விருப்பமில்லாமல் தன் மேல் திணிக்கப்பட்டதாக உணர்ந்தான். ஆண் எனும் புதிய உலகத்தில் சரவணனின் நட்புடன் பதினொன்றாம் வகுப்பு வரை கல்வி கற்க, மனம் மட்டும் பெண்களின் உடையிலேயே விருப்பம் கொண்டது. வீட்டில் யாருமில்லாத வேளையில் சகோதரியின் பாவாடை, தாவணி அணிந்து கண்ணாடி முன் ஆடி, பாடிய கோபியைக் கண்ட சங்கரபாண்டி, அவமானமாகக் கருதி அவனை அடித்து நையப் புடைத்தான்.
மனிதனின் மனம் பலவீனமானது. அடிமனத்தை id என்னும் தூண்டல், Ego எனும் ஆணவம், Super Ego எனும் மனச்சான்று என மூவகையாகப் பிரிப்பர். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
‘id என்பது குழந்தை மனம் போன்றது. அது விரும்பியதை எல்லாம் அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. ஈட்டின் விருப்பங்களை ஈகோ பூர்த்தி செய்கின்றது. ஆனால் Super Ego-வின் அனுமதி பெற்று தான் எதையும் செய்யவேண்டும் என்ற நிலையில் உள்ளது’ என்பதற்கேற்ப கோபியின் மனம், பெண் உருவத்தின் மீது கொண்ட வேட்கையால் பெண்ணைப் போலவே உடையணிந்து மகிழ்கிறது. அதாவது மனச்சான்றின் அனுமதியோடு தூண்டல் ஏற்பட மனம் தான் விரும்பியதை அடைவதை அறிய முடிகிறது.
ஏக்கம்
மனித மனத்தில் வித்தாகத் தோன்றிய ஆசை பல நாட்களாகியும் நிறைவேறாமல் உறுத்திக்கொண்டிருக்க, அது ஏக்கத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு பெண்ணைப் போன்ற உறவுமுறைகளுடன் இயல்பான குடும்ப வாழ்க்கையைத் திருநங்கை வாழவியலாததால் ஏக்கம் உருவெடுக்கிறது. அவ்வேக்கத்தை நிறைவு செய்ய திருநங்கைகள் தங்களுக்குள்ளாகவே மகள், சகோதரி உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
‘நம்பள மாதிரி பொட்டைக்கு இன்னொரு பொட்டைதான் ஆதரவு. ஒரு பொட்ட இன்னொருத்தியைத் தத்து எடுத்துக்கிட்டு அவள மகளா சொந்தம் கொண்டாடுறது தான் மொற’ என்பதில் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்படும் திருநங்கை உறவுகளுக்காக ஏங்குவது தெளிவாகிறது. சுசீலா-கோமதியின் சகோதரி உறவு, தனத்தின் சேலா எனும் மகள் உறவுகளின் வாயிலாகத் திருநங்கைகள் பெண் உறவுகளிலேயே திருப்தியடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை அறிய முடிகிறது.
மனப் போராட்டம் :
‘ஒரே நேரத்தில் நிறைவுற இயலாததும், ஒன்றற்கொன்று தனித் தனியானதுமான செயல்நோக்கமும் ஊக்கமும் உள்ளத்தில் இருப்பதனால் விளைவதே உள்ளப் போராட்டம்’ என்பதற்கேற்ப வளரிளம் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களால் கோபி மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கிறான். குடும்பமும் சமூகமும் தன்னை ஆணாகப் பார்க்க, தன் மனம் அதை ஏற்க முடியாமல் தவிக்கிறதே! பெண்ணாக நினைப்பதற்குக் காரணம் என்ன? தான் யார்? என்ற வினாவிற்கு விடை தெரியாமல் கோபியின் மனம் உள்ளப் போராட்டத்தில் சிக்குகிறது. வீட்டினர் கோபியின் உடை மாற்றத்துக்குக் காரணம் பெண்பேய் பிடித்திருப்பது எனக் கருதி அதையோட்டுவதற்கான பூசையை மேற்கொண்டனர்.
‘உண்மையில் தான் யார்? பெண் எனில் ஏன் அவர்களுக்கான உடல் இல்லாது போனது? ஆண் எனில் உடல்மொழியும், அந்த உணர்வுகளும் எப்படி வந்து சேர்ந்தது? கேள்விகள்… கேள்விகள்… கேள்விகள்… கண்களை இருட்டிக்கொண்டு வந்தது… விசும்பலற்ற அழுகை அது. ஏன் அழுகிறோம் என்று தெரியாமலேயே அழுது கொண்டிருந்தான்’ என கோபியின் மனம் சிந்திப்பதில் தன்னை அடையாளம் காண முடியாத மனப் போராட்டத்தை உணர முடிகிறது. பேயோட்டுபவராவது தன்னை யார் எனத் தெரிவிப்பாரா? என்று ஏங்கும் மனம், சிகப்பு பாவாடை, மஞ்சள் தாவணி, வளையல்கள் எனத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறது. திருநங்கைகளின் குடியிருப்புக்கு அருகே சென்ற கோபி, அவர்கள் ஆணுடையில் இருப்பினும் சராசரி ஆணாய்ச் செயல்படாததை உணர்ந்து பேசி, தன்னிலையை அறிந்துகொண்டான்.
‘நீ ஆம்பளையுமில்ல… பொம்பளையுமில்ல… ரெண்டும் கெட்டான்…
கோபி மௌனமாக இருந்தான்.
வெளங்கலையா ஆம்பளையா பொறந்துட்ட பொம்பளைங்க தான்.. நம்மள அலின்னு சொல்றாங்க.. அடிக்கிறாங்க.’ என்பதன் வாயிலாக தன்னையறிந்து தன்னைப் போன்றவர்களும் உலகில் இருப்பதையறிந்து மகிழ்கிறான். திருநங்கைகளின் வீட்டில் பெண்ணுடையை அணிந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டு தன் வீட்டில் ஆண்மகனாக வேடமிட்டு வாழத் தொடங்குகிறான்.
மனவடக்கமும் ஒடுக்கமும்:
மனிதர்கள் மனத்தில் பல சோகங்கள் நிறைந்திருப்பினும் அவற்றை வெளிக்காட்டாமல் மனத்திற்குள் அடக்குவதும் ஒடுக்குவதும் உண்டு.
‘தொல்லை தரும் உள்துடிப்புகளையும் நினைவுகளையும் திட்டமிட்டு உணர்ந்து கவனத்தில்; களத்தினின்று அகற்றுவதை அடக்குதல் என்றும், அவற்றை முயற்சி இன்றி இயல்பாக நனவுநிலையினின்று நீக்கப்படுவதை ஒடுக்குதல்’ என்றும் பெசன்ட் கிரீப்பர் ராஜ் குறிப்பிடுகிறார்.
பெண் என்ற உள்துடிப்பைச் சமூகத்திற்காக, கவனமாக மறைத்த கோபி, கல்லூரி விடுதியிலிருந்து வீட்டினர் அறியாமல் தன்னை ஒத்தவர்களைச் சந்தித்து மகிழ, கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்றான். பயணத்தில் கோபியின் நடத்தையில் மாற்றத்தை அறிந்த மூன்று ஆண்கள் பாலியல் வன்புணர்ச்சி புரிய, அவன் மயக்கமடைந்தான். திருநங்கை தனம் மருத்துவமனையில் சேர்த்து, தன்னைக் காப்பாற்றியதை அறிந்ததும் பெண்கள் மட்டுமல்ல, தன்னைப் போன்றவர்களும் இப்பாலியல் கொடுமையால் பாதிக்கப்படுவது வெளியுலகிற்கு ஏன் தெரிவதில்லை?
‘ஏனிந்த இழிபிறப்பு? பிறப்பு என்பது விரும்பி ஏற்க முடியாததாக இருக்க.. இப்படி பிறந்ததற்கு நானோ என்னைப் போன்றவர்களோ எப்படிப் பொறுப்பேற்க முடியும்? பிறகு ஏன் என்னைப் போன்றவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சட்டம் எல்லாருக்கும் பொது தானே… சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் என்ன?’
என்னும் அகத்தனிமொழியின் வாயிலாக சமூகத்தினரால் புறக்கணிக்கப்படும் கிருநங்கையின் வலியை உணர முடிகிறது. பள்ளி, கல்லூரிக்குச் சென்று கல்வி கற்க முடியாத நிலை, இரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்வதால் சமூகத்தினர் ஏற்படுத்தும் அவமானம், உணவகத்தில் காலம் தாழ்த்திக் கொடுக்கப்படும் உணவு, திருநங்கையினரையே தவறாக உரைத்து வன்முறைக்கு உட்படுத்தும் காவல்துறை என வாழ்வின் பல இடங்களில் இப்பிறப்பின் சாபத்தை அனுபவிப்பதாகக் குறிப்பிடுவதில் மனவடக்கத்தையும் ஒடுக்கத்தையும் காண முடிகிறது.
குற்றவுணர்ச்சி:
மனித மனம் கடந்த கால நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து தவறுக்கான காரணங்களைத் தீவிரமாக அலசுவதுண்டு. நிகழ்காலப் பிரச்சனையின் வேரைத் தேடும் மனிதனின் மனம் செய்த தவற்றினைச் சுட்டிக் காட்டுகிறது. அத்தருணத்தில் தோன்றும் உணர்ச்சியே குற்றவுணர்ச்சி. சூழ்நிலை மனிதனை முடிவெடுக்கத் தூண்டும் நிலையில் அவன் சிந்தித்துச் சரியான முடிவை மேற்கொள்வது அவசியம். இல்லையெனில் துன்பமடைவது உறுதி என்பதைப் படைப்பாளரின் அவன்- அது அவள் புதினம் எடுத்துரைக்கிறது.
காவல் துறையினரின் வன்முறையைத் தாங்கி, அவமானப்பட்டு மும்பைக்கு தனம், சுசீலாவுடன் பயணம் செய்ய முற்பட்ட கோமதி, தொடர்வண்டியில் பயணச்சீட்டு பெறாமல் பயணிக்கிறோம் என்பதை அறிந்து பயந்தாள். ஒரு வயதான பெண்மணி திருநங்கை எனப் பாலியல் ரீதியாக இழிவாகப் பேச, அவமானப்பட்டாள்.
‘ச்சே.. என்ன வாழ்க்கை இது? ஒழுங்கா ஹாஸ்டல்லயே இருந்திருக்கலாம். சுயத்தோட வாழலாம்னு இவங்க கூட சேர்ந்த ஒரு வாரத்துக்குள்ள எத்தனை பிரச்சனைகளைச் சந்திச்சாச்சு… நிம்மதியா வாழக்கூட வேணாம்.. மனுசனாக்கூட வாழவிட மாட்டாங்க போலிருக்கே… வீட்டில் இருக்குற வரைக்கும்தான் உனக்குப் பாதுகாப்பு. உன் பாதுகாப்பு ஆயுசுக்கும் வேணும்னா… ஒழுங்கா படிச்சு பெரிய ஆளா வரணும் அப்பத்தான் நல்லது என்ற சங்கரண்ணனின் வார்த்தைகள் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைத்தது. விசும்பலாய் வெளிப்பட்டது.’
வீட்டை விட்டு வெளியேறியதும் பட்ட துன்பங்கள், அவமானங்களால் கோமதியின் மனம் அகஸ்டின் சங்கரபாண்டியனின் அறிவுரைகளை மீறியதால் இந்நிலைக்கு ஆளானோமா? எனக் குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவிப்பதை அறிய முடிகிறது.
ஏமாற்றமும் தவிப்பும்:
கோமதி, தனம், சுசீலா, சீத்தல், சுந்தரி போன்றவர்களின் வாயிலாகச் சமூகத்தில் உள்ள திருநங்கைகளின் வலியை நாவலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். கோமதி ஆணுறுப்பை நீக்கிய பிறகு இயல்பான பெண்ணின் வாழ்க்கையை ஒத்து, இல்லற வாழ்க்கையை வாழலாம் என எண்ணினாள். அன்பரசனின் மீது கொண்ட உண்மையான காதலால், நம்பிக்கையால் தனம், சுசீலா, சீத்தல் போன்ற உறவுகளின் அறிவுரையைக் கேட்காமல் அவனைக் கைப்பிடித்தாள். ஒரு வருடத்திற்கு பின் தோள்பட்டையின் இருபக்கங்களிலும் விளக்கேற்றும் அளவிற்கு இளைத்து கண்களில் பரிதவிப்புடன் நிற்கும் கோமதியைக் கண்ட சுசீலா பாசத்தால் தவித்து வினவினாள்.
‘சுசீலாவின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. வெளியில் சொல்ல முடியாத சோகம், பல நாட்கள் உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி இருந்தாகிவிட்டது. பல நாட்கள் மனசு சரியில்லாமல் போனாலும் அழுகை வராது. கோபமும் ஆத்திரமும் வெளிவருவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும்’ என்பதில் மனத்தின் வலி வெளிப்படுகிறது. கோமதி குடும்பத்தை விட்டு வெளியேறியபின் தாயாக, தமக்கையாக இருந்த தனம், சுசீலாவின் அன்பை அறிந்தவளாக ஏமாற்றத்தில் தவித்தாள். சுசீலா அவள் நிலை அறிந்து உணவு வாங்கித் தந்தாள். பசி நீங்கிய பின் கோமதி, அன்பரசு குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும் உடல் விருப்பத்தினை மட்டும் தீர்த்துக் கொள்வதாகவும் கடைகேட்டு பணம் சம்பாதித்து வருமாறு வற்புறுத்துவதாகவும் உரைத்தாள். கோமதி ஏமாந்ததை அறிந்த சுசீலா, மனம் நொந்தாள்.
‘இப்போது கண்ணைக் கசக்கிட்டு நிற்கும்போது மனசு வலிக்கிறது. வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத வலி. ஆணின் அடையாளத்தை இழக்கும் தருணத்தைவிட இந்த வலிக்குச் சக்தி அதிகம். எதிர்பார்ப்பு, கனவுகள் என்ற எல்லா நம்பிக்கையையும் குலைக்கும் போது இப்படித்தான் வலியெடுக்கும். அதை உணரத்தான் முடியுமே தவிர விளக்கிச் சொல்லிவிட முடியாது’ என்பதில் வலியின் வேதனை புலனாகின்றது. குடும்பத்தினர் இழிபிறப்பாகக் கருதி, திருநங்கையினரை நிராகரிக்க, சமூகத்தினர் புறக்கணிக்க அன்பரசனின் காதல், கோமதிக்குப் பற்றுக்கோலாக இருந்தது. உடல்உறுப்பை நீக்கிப் பெண்ணாக உருமாறி, இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தவள், கணவனின் போக்கால் ஏமாற்றத்துடன் வேதனையடைந்தாள். முதலில் கணவனின் சந்தேகப் புத்தியைக் கண்டு தன்னையும் பெண்ணாகக் கருதிச் சந்தேகப்படுகிறானே என மகிழ்ச்சியுற்றாள். நாளடைவில் வன்முறை, வன்புணர்ச்சி, சந்தேகப் புத்தி எனக் கொடுமைப்படுத்தினும் கோமதி அவனை விட்டுப் பிரிய மறுக்கிறாள்.
சுயம் தேடும் மனம்:
பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாகவும், பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவிலேயே முதல் மாணவனாகவும் தேர்ச்சி பெற்ற கோபி, மதுரையில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்புக்குச் சேர்ந்தான். சக மாணவர்களின், ஆசிரியர்களின் ஏளனப் பேச்சு, தவறான செய்கைகள் மனத்தைத் துன்புறுத்த, வகுப்பிற்கு வராமல் நண்பன் சரவணனின் உதவியுடன் விடுதியில் இருந்தவாறே படிக்க முற்பட்டான்.
மனம், உடல்ரீதியாக சில சிக்கல்களை அனுபவிப்பினும் கோபி கற்பதை நிறுத்தவில்லை. வாழ்வின் உயர்வுக்கு, சிறந்த வேலை பெறுவதற்குக் கல்வியின் இன்றிமையாமையை உணர்ந்து செயல்பட்டான். பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின் கோமதி, தன் மனவிருப்பத்திற்காக இயல்பாக வாழ ஒரு வாய்ப்பு என்ற நிலையில் திருநங்கை தனத்துடன் வாழ முற்படுகிறாள். எனினும் திருநங்கைகள் கடைக்குச் சென்று பிச்சை எடுப்பதற்கு அழைக்க, அவள் பணிக்குச் செல்வதாக உரைத்து மறுக்கிறாள். பிறரின் ஏளனச் சிரிப்பைக் கண்டதும் அழுதவளாக ஆதரவு தேடி தனத்தை நாடுகிறாள்.
‘பிச்ச எடுக்கத்தான் போகணும்னு அவங்க எல்லோரும் சொல்றாங்க. நா வேலைக்குப் போறேன்னு சொன்னதுக்கு சேர்ந்துக்கிட்டு சிரிக்கிறாங்க… எனக்கு அது புடிக்கலம்மா… நா வேலைக்கு போறேனேம்மா’ என்ற கோமதியின் சொற்களில் தன்மானம் வெளிப்படுகிறது. ஆனால் சமூகம், திருநங்கைகளுக்கு எத்தகைய வேலையும் தராமல் நிராகரிக்கும் என்ற நிதர்சனமான உண்மையை அவளே அனுபவத்தின் வாயிலாக உணரட்டும் எனத் தனம் எண்ணுகிறாள். தாய் பிச்சை எடுக்கச் செல்ல வேண்டாம் என்றுரைத்ததும் மகிழ்கிறாள்.
அன்பரசுடனான காதலுக்காக உயிரைப் பணயம் வைத்து ஆணுறுப்பை நீக்கி, தாயின் அறிவுரையை ஏற்காமல் எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டாள் கணவனுக்கு வேலையில்லாத தருணத்தில் கோமதி பிச்சையெடுக்கச் செல்வதில் தன்மானம் தகர்ந்து அன்பு மேலோங்குகிறது. எனினும் கணவன் தொடர்ந்து பிச்சையெடுக்க வற்புறுத்த, சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.
விரக்தி:
ஒருவரது எண்ணங்கள் ஈடேறாத போதும், தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கும் போதும் மனத்தில் சலிப்பும் வெறுப்பும் உண்டாகின்றன. இத்தகைய மனநிலையே விரக்தியாகும்.
‘பொட்டயாப் பொறந்ததே தப்பு. அதுலையும் கல்யாணம் காட்சின்னு ஆசப்படுறது அதவிட தப்பு. பார்க்கலாம். இன்னும் எத்தனை காலத்துக்குன்னு .முடியிற வரைக்கும் சமாளிப்பேன். என்னைக்கு முடியாமப் போகுதோ. அன்னிக்கு ஏதாவது டிரெயினுக்கு முன்னால பாய்ஞ்சுடுவேன்..’ என்பதில் விரக்தியின் உச்சம் தற்கொலைக்குத் தள்ளும் என்ற உண்மை புலனாகின்றது.
தொகுப்புரை:
ஒரு புதினத்தின் முதன்மையான பாத்திரச் சித்திரிப்பில் மனித மனங்களின் வேட்கைகள், உயர்வு தாழ்வுகள், இலட்சியங்கள், நடத்தைகள் இடம் பெற்றிருப்பதில் உளவியலே வெளிப்படுகிறது. தான் யார்? என்பதறியாமல் துடிக்கும் இயலாமை, பாலியல் வன்புணர்ச்சியால் உடலும் மனமும் தளர்ந்து போதல், பிறப்பின் மீதான மனஒடுக்கம், குற்றவுணர்ச்சி, உறவுக்காக ஏங்கித் தவித்தல், குடும்ப அமைப்பை விரும்பி ஏமாறுதல், பெண் என்ற அங்கீகாரத்தை விரும்புதல், உயிரைப் பணயம் வைத்து ஆணுறுப்பை நீக்குதல், சமூகத்தினரின் இழிபேச்சிற்கு ஆளாகுதல், இல்லற வாழ்விற்காக தன்மானத்தைத் தகர்த்தல், வேதனையின் உச்சத்தில் தற்கொலையை நாடும் மனம் என இப்புதினம் திருநங்கைகளின் மனவுணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. சமூகத்தினரின் கேலி, ஏளனப் பேச்சிற்கு உள்ளாக்கப்பட்டு அவமானங்களையும், அநீதிகளையும் சந்தித்து மனம் துவண்டு வாழும் திருநங்கைகளின் வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம் என்ற முதன்மையான கருத்தை இப்புதினம் புலப்படுத்துகிறது.
பார்வை நூல்கள்:
- அரவாணிகள் – முனைவர்.மு.அருணாசலம்
- அவன்-அது ஸ்ரீ அவள்- யெஸ்.பாலபாரதி;
- சங்க இலக்கியத்தில் உளவியல் – து.சிவராஜ்
- தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள் – முனைவர்.மு.அருணாசலம்
- தமிழும் பிற துறைகளும் – முனைவர்.உ.கருப்பத்தேவன்
- திறனாய்வுக் கலை – தி.சு.நடராசன்
- பெசன்ட் கிரீப்பர் ராஜ் – பிறழ்நிலை உளவியல்
ஆய்வாளர் இக்கட்டுரையில் திருநங்கைகளின் மனப் போராட்டத்தைச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். கோபி என்ற திருநங்கையின் வாழ்வியலை மையமாகக் கொண்டது இந்நாவல். ஒருவர் தன்னை மாற்றுப் பாலினமாக உணர்ந்து கொள்வதும் அங்கீகரிக்க மறுக்கும் சமூக நிலையும் இக்கட்டுரையில் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. வாழ்தல் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் சமூகக் கட்டமைப்புகள் பெரும் தடையாகச் செயல்படுவதை இக்கட்டுரை எடுத்துக் காட்டுவது சிறப்பு.