இஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு
நாகேஸ்வரி அண்ணாமலை
இஸ்ரேலில் ஏப்ரலில் ஒன்றும் செப்டம்பரில் ஒன்றுமாக இரண்டு தேர்தல்கள் நடந்தன. முதல் தேர்தலில் நேத்தன்யாஹுவின் கட்சிக்கு 35 இடங்களும் முந்தைய ராணுவத் தளபதி கேன்ட்ஸுக்கு 34 இடங்களும் கிடைத்தன. இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மற்றக் கட்சிகளோடு சேர்ந்து அரசு அமைக்க முயன்றனர். இவர்களோடு சேர்வதற்கு மற்ற எந்தக் கட்சியும் ஒத்துக்கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து அரசு அமைப்பதற்கு இருவரும் இசையவில்லை.
அதனால் செப்டம்பர் மாதம் இரண்டாவது தடவையாக தேர்தல் நடந்தது. அதிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேத்தன்யாஹுவின் கட்சிக்கு முதல் தேர்தலில் கிடைத்ததைவிட ஒரு இடம் குறைவாகத்தான் கிடைத்தது. கேன்ட்ஸுக்கு அதே எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தன. மறுபடி மற்ற எந்தக் கட்சிகளும் இவர்களோடு அரசு அமைக்க ஒப்புக்கொள்ளவில்லையாதலால் இரண்டாவது தேர்தல் முடிவுகளுக்கும் அர்த்தமில்லாமல் போனது.
இஸ்ரேல் ஜனாதிபதி டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு சாத்தியம் இல்லையென்றால் மறுபடி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இஸ்ரேல் சமூகம் கிட்டத்தட்ட இரண்டு பகுதிகளாகப் பிளவுபட்டிருக்கிறது. பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கொடுக்க வேண்டுமா என்று கேட்டால் இஸ்ரேல் மக்கள் அனைவரும் – ஒரு சிலரைத் தவிர – தேவையில்லை என்றுதான் கூறுவார்கள்.
ஆனாலும் பாலஸ்தீனர்களுக்கு எந்த உரிமைகளும் தேவையில்லை என்று நினைக்கும் பழமைவாத, சுயநலமிக்க யூதர்கள் ஒரு பக்கமும் ஏதோ சில உரிமைகள் கொடுக்கலாம் என்று கூறும் இஸ்ரேலியர்கள் இன்னொரு பக்கமும் இருப்பதால் நாடு பிளவுபட்டிருக்கிறது. இந்த இரண்டு பக்கத்தினரிடையேயும் ஒற்றுமை இல்லாததால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
நேத்தன்யாஹு மேல் பலவித ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவரும் அவருடைய மனைவியும் பெரும் பணக்காரர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகள் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு. அவருடைய மனைவி மேல் அடிக்கடி பிரதமர் மாளிகைக்கு வெளியிலிருந்து உணவு தருவித்ததாகத் தனியாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. வழக்கு நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனை கிடைப்பதாக இருந்த சமயத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு 75,000 டாலர் அரசுக்குக் கொடுத்து அந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்றார். இஸ்ரேலில் இருக்கும் இரண்டு பத்திரிக்கைகளில் ஒன்றிற்கு லஞ்சம் கொடுத்துத் தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதுமாறு செய்தார்.
இவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கியபோது கையூட்டு வாங்கயதாகக் குற்றம் சுமத்தப்பட்டார்கள். இன்னும் சில சிறிய குற்றங்களும் நேத்தன்யாஹு மேல் இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் விசாரணைக்குத் தகுந்தவை என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இவர் அமைச்சரவையில் எந்தத் துறைப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பிரதம மந்திரி பதவியை மட்டும் வகிக்கலாம் என்றும் ஜனாதிபதி ஆணையிட்டிருக்கிறார்.
இந்தக் குற்றங்கள் எல்லாம் நிரூபிக்கப்பட்டு இவருக்குத் தண்டனை கிடைத்தால் தேர்தலில் ஜெயித்து பிரதமராக இருந்தாலும் இவர் பதவி விலக வேண்டும் என்பது இப்போதைய சட்டம். பிரதம மந்திரியாகி எப்படியாவது அந்தச் சட்டத்தைத் திருத்தி பிரதம மந்திரிக்கு அந்த விதியிலிருந்து விலக்களிக்க இவர் முயன்று வருகிறார். ஆனால் இரண்டு தடவை நடந்த தேர்தல்களிலும் இவருடைய கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஏப்ரல் தேர்தலுக்கு முன் சிரியாவில் ஆக்கிரமித்திருக்கும் கோலன் ஹைட்ஸை இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் அங்கீகாரம் கிடைத்தது. அதனால் எப்படியும் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்தார். அப்படி நடக்கவில்லை.
மறுபடி செப்டம்பர் தேர்தலுக்கு முன் வெஸ்ட் பேங்கில் ஆக்கிரமித்திருக்கும் இடங்களை இஸ்ரேலோடு சேர்த்துக்கொண்டார். அதற்கு உலகம் முழுவதிலும் கண்டனம் எழுந்தாலும் இஸ்ரேல் மக்களிடம் ஆதரவு இருக்கும், அதனால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால், முதல் தேர்தலைவிட இதில் ஒரு இடம் குறைவாகத்தான் கிடைத்தது. இப்போது அடுத்த முறை தேர்தல் வந்தால் எப்படிப் பிரதம மந்திரியாகலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். அப்படி நடந்தால் பிரதம மந்திரி பதவியும் கிடைத்துவிடும், குற்றங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
இஸ்ரேல் மக்கள் இவரைப் போன்று அரசியலில் ஊழல் செய்தவர்களைச் சும்மா விடக்கூடாது. இவர் எப்படியும் தேர்தலில் தோற்றுப் பிரதம மந்திரியாகும் வாய்ப்பை இழப்பதோடு சிறைக்கும் செல்ல வேண்டும். இவர் பாலஸ்தீனர்களுக்கு எதிராக எத்தனையோ அநியாயங்கள் புரிந்திருக்கிறார்.
ஆஸ்லோ ஒப்பந்தம் முழுவதுமாக முறிந்து போனதற்கு இவர்தான் முழுக் காரணம். அதை அன்றைய அரசு உண்மையாக நிறைவேற்றியிருந்தால் பாலஸ்தீனர்களுக்கு ஓரளவு நியாயம் கிடைத்திருக்கும். இவர் தொடர்ந்து பிரதம மந்திரி பதவி வகித்து அவர்களுக்குப் பல அநீதிகளை ஒவ்வொன்றாக இழைத்தார். பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கிடைக்கும் என்ற அவர்களுடைய கனவையே முழுவதுமாகக் குலைத்துவிட்டார்.
இவரைப் போன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்காவிட்டால் உலகில் நீதி செத்துவிட்டதாகத்தான் அர்த்தம்.