Tag: முனைவா் பா. உமாராணி

  • (Peer Reviewed) புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

    முனைவா் பா. உமாராணி
    இணைப் பேராசிரியர்,
    கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்,
    கோயம்புத்தூா்

    புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

    ஒரு படைப்பு தான் தோன்றிய சமூகத்தின் ஆகச் சிறந்த கூறுகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் என்பது இயல்பான ஒன்று. இதுவரை தோன்றிய இலக்கியங்களும், அவை சார்ந்த பின்னூட்டங்களும் நமக்கு இதையே மொழிகின்றன. ஒரு சமூகத்தின்  சிறந்த பண்பாட்டுக் கூறுகளை மட்டும் ஒரு இலக்கியம் தக்கவைத்துக் கொள்வதில்லை. அச்சமூகத்தில் மறைமுகமாகவும் எதிரிடையாகவும் தோன்றிய கருத்துகளையும் செயல்களையும் அவை பதிவு செய்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

    சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை எல்லா இலக்கிய வகைமைக்குள்ளும் மேற்சொன்ன நிகழ்வுகள் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளன. அங்ஙனம் பொருத்திப் பார்ப்பது படைப்பிலக்கியத்திற்கு மேலும் வளமையைக் கூட்டுகிறது. அத்துடன் இத்தன்மை. இலக்கியத்தை சமுதாயம் நோக்கி நகா்த்துவதற்கும் உதவுகின்றது. இத்தகையதொரு பார்வையில் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ள தோற்ற மன்னா்களின் நிலையை வெளிக்கொணரும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    தோற்ற அரசா்கள் குறித்தான பதிவுகள் அல்லது எதிர்நிலைத் தன்மை குறித்தான பதிவுகள் ஒரு சமூகத்தை அதன் ஆழத்திலிருந்து புரிந்துகொள்ள உதவுவதுடன், அச்சமுதாயம் கொண்டிருக்கும் ஆழ்மட்ட பண்பாட்டுக் கூறுகளையும் கண்டறிய உதவுகின்றது. சங்க இலக்கியத்திலும் இத்தகைய பதிவுக் கூறுகள் ஆங்காங்கே விரிந்த நிலையிலும், சிலபோது குறிப்பாகவும் வெளிப்படக் காண முடிகிறது.

    பாடாண் திணை சுட்டும் தோற்றோர் பின்னணி

    பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் வீரம், கொடை முதலிய சிறப்புகளை எடுத்தோதும் திணையாகும். புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன. அதில் செவியறிவுறூஉத் துறையில் 8  பாடல்களும், இயன்மொழித் துறையில் 54 பாடல்களும், வாழ்த்தியல் துறையில் 9 பாடல்களும், பரிசில் கடாத் துறையில் 15 பாடல்களும்,  கடைநிலைத் துறையில் 10  பாடல்களும், பரிசில் துறையில் 8 பாடல்களும்,  பாணாற்றுப்படை துறையில் 6 பாடல்களும், பரிசில் விடைத் துறையில் 6 பாடல்களும், விறலியாற்றுப்படைத் துறையில் 4 பாடல்களும், பூவைநிலைத் துறையில் 3  பாடல்களும், புலவராற்றுப்படைத் துறையில் 2 பாடல்களும், உடனிலைத் துறையில் ஒன்றும், குடைமங்கலம் துறையில் ஒன்றும், வாயில் மங்கலம் துறையில் ஒன்றுமாக மொத்தம் பதினான்கு துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

    செவியறிவுறூஉ

    செவியறிவுறூஉ என்னும் துறை, பாடாண் திணைகளுள் ஒன்றாகும். பகைமையும் கெடுதலுமற்ற வலிய எண்ணங்களை அரசனுக்கு எடுத்துரைத்தல், இத்துறையின் சிறப்பியல்பு. “மறம் திரிவு இல்லா மன்பெரும் சூழ்ச்சி, அறம்தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று” என இத்துறைக்குப் புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம் கூறுகிறது.

    செவியறிவுறூஉ துறையில் அமைந்த பாடலில் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயா் வழுதியினைப் பகைத்த பகையரசா்களின் நிலையானது,

                “துன்அருந் திறல், கமழ் கடாஅத்து

                எயிறு படையாக எயிற் கதவு இடாஅ

                கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின்

                பெருங்கை யானை இரும்பிடா்த் தலை இருந்து

                மருந்து இல் கூற்றத்து அருந்தொழில் சாயா”     (புறம். 3)

    என்று முற்றும் அழிந்துபட்ட நிலையே என்பதனைச் சுட்டுகிறார் இரும்பிடத்தலையார். பாண்டியனின் பட்டத்து யானை பகைநாட்டின் படைக்கலன்களை அழிக்கும் திறனையும், கொலைத் தொழிலுக்கும் அஞ்சாத பாண்டியனின் தன்மையையும் எடுத்தோதும் நிலையில் பகைநாட்டவா் அடைந்த நிலையைத் தெற்றென விளங்க வைக்கிறார் ஆசிரியா்.

    முதுகுடுமியின் வலிமையைக் கூறும் முகத்தான், ஆசிரியா் பகையரசா்களின் நிலையையும், அவா்கள் நாட்டில் விளையும் தீங்குகளையும் சுட்டிக் காட்டுகின்றார் காரிக்கிழார். குடுமியைப் பகைத்து வாழும் மன்னின் நிலையானது,

                “செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வா் தேஎத்து

                கடல்படை குளிப்ப மண்டி, அடா் புகா்ச்

                சிறுகண் யானை செவ்விதின் ஏவி,

                பாசவல் படப்பை ஆா் எயில் பல தந்து

                அவ்வெயில்  கொண்ட செய்வுறு நன்கலம்

                பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி”         (புறம். 6)

    என்று குறிப்பிடுகிறார். அதாவது, போர்செய்ய எதிர்த்த பகைவருடைய நாடுகளில் கடல்போன்ற படையை உட்புகுந்து அழித்தும், அவா்களின் விளை நிலங்களை யானையை விட்டு அழிக்கச் செய்வதுடன் அவா்களுடைய அரண்களையும் அழிக்கும் முறையை எடுத்தோதுகின்றார். அத்துடன் அப்பகை நாட்டினரின் செல்வங்களைப் பரிசிலருக்கு அளிக்கும் நிலையும் சுட்டப்படுகிறது. மேலும்,

                “வாடுக இறைவ! நின் கண்ணி – ஒன்னார்

                நாடுசுடு கமழ் புகை எறித்தலானே!

                செலியா் அத்தை, நின் வெகுளி”     (மேலது)

    என்று குறிப்பிடுகிறார் ஆசிரியா். குடுமியின் போரின் தன்மையானது பகைவா் நாட்டை எரித்து அழிக்கும்  இயல்பினை உடையது என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன. மேலும் அத்தகைய அழிவினை அவன் மேலும் அந்நாட்டிற்குச் செய்யத் துணியும் கோபத்துடனே இருப்பான் என்றும் குறிப்பிடுகிறார். இரு அரசுகளுக்கு இடையிலான போரில் மக்களின் விளை நிலங்கள் அழிக்கப்படுவதும், அம்மக்களிடம் இருந்து பெற்ற பொருளைப் பரிசிலாகக் கொடுத்து பெருமை கொள்ளும் நிலையும் வருந்தத் தக்கதே. குடுமியின் புகழ் பாடப்பட்டபோதும் மறைமுகமாக அன்றைய அரசுகளின் செயல்பாட்டைச் சுட்டுவதாகவே இப்பாடல் அமைந்துள்ளது.

    புறநானூற்றின் 40ஆவது பாடல்,  பகை மன்னா்களின் நிலையை எடுத்தோதுகின்றது. மதிப்பிற்குரிய பொன்னாலான பகைவரின் மணிமுடியினை அவமதித்தல் போன்றும், அவா்களை அடிமைப்படுத்தல் போன்றும் அதைத் தம் காலில் அணிகின்ற தன்மையினை,

                “நீயே, பிறா்ஓம்புறு மறமன் எயில்

                ஓம்பாது கடந்தட்டு, அவா்

                முடி புனைந்த பசும்பொன் நின்

                அடிபொலியக் கழல் தைஇய வல்லாளனை”        (புறம். 40)

    எனக் காண முடிகிறது. இப்பாடலில் வெற்றி பெற்றோரின் வீரமும், பகையில்லாத அவன் நாட்டின் சிறப்பும் கூறப்பட்டதெனினும் தோற்ற அரசன் அடைந்த இழிநிலையினையும் இப்பாடல் பதிவு செய்துள்ளது. செவியறிவுறூஉ துறையில் அமைந்த எட்டு பாடல்களில் மூன்று பாடல்கள் மட்டுமே தோற்றோரின் நிலையைப் பேசுகின்றது.

    இயன்மொழி

    தலைவனுடைய இயல்பினைக் கூறுதலும், அவன் முன்னோர் செயல்களைப் பாராட்டிக் கூறலும்  இயன்மொழித் துறையின்பாற்படும். தமிழ் மன்னா்களிடம் போர் அறம் இருந்தது. அதன் வழிநின்றே போர் செய்தனா் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் வழி அறியலாம். நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழுமிடத்து தமிழா்களின் போர் அறத்தினைத் தெற்றென விளக்கிறார்.

                “ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும்”  ( புறம். 9)

    என்ற பாடலானது போருக்கான அறத்தைத் தமிழா் எங்ஙனம் போற்றினா் என்று விரித்துக் கூறுகின்றது. எனினும் போரின் பின் நிகழும் துயா்கள் எண்ணிலடங்காதவை என்பதை இயன்மொழித் துறையில் அமைந்துள்ள பாடல்கள் தெளிவாகச் சுட்டுகின்றன.

    தோற்ற அரசா்களின் காவல் மரத்தை முறித்து பகைவா்களை அவமதிக்கும் செய்தியினை,

                “கடுங் கண்ண கொல் களிற்றால்

                காப்பு உடைய எழு முருக்கிப்

                பொன் இயல் புனை தோட்டியால்”            ( புறம். 14)

    என்று கபிலா் குறிப்பிடுகிறார். செல்வக்கடுங்கோ வாழியாதன் பகை மன்னனின் வலிமையை அழித்தலின் குறியீடாகக் கணையமரத்தை அழித்தான் என்னும் செய்தி இங்குச் சுட்டப்படுவதுடன் பகையரசனின் நிலையும் எடுத்துரைக்கப்படுகிறது.

    முதுகுடுமி பெருவழுதி பகைவா் நாட்டினை அழித்துச் சிதைக்கும் காட்சியினைச் சுட்டவரும் நெட்டிமையார் பகை மன்னனின் நிலம் அடைந்த அவல நிலையை முன்வைக்கிறார். இதில் பகை மன்னா்களின் நிலமானது

                “கடுந்தோ் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

                வெள்வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

                பாழ் செய்தனை, அவா் நனந்தலை நல் எயில்,

                புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,

                வெள் உளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்

                ………………………………..

                நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,

                வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்?”          (புறம்.15)

    என அழிந்துபட்டதைக் கூறுகின்றார். இங்கு வென்ற பகையரசா்களின் நாட்டைக் கழுதைகள் பூட்டி உழுதலும், விளைவயல்களை அழித்தலும், நீர்த்துறைகளைக் கலக்குதலும், மக்கள் வாழும் இடங்களை எரியூட்டலும் செய்து பகையரசா்கள் அவமதிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதை இப்பாடல் புலப்படுத்துகின்றது. இதே கருத்தினைக் கடைநிலைத் துறையில் புறம் 392ஆவது பாடலும் முன்வைத்துள்ளது. பொகுட்டெழினி தான் போர்செய்யும் பகைநிலத்தை கழுதைகள் பூட்டி உழுதும், மதில்களை அழித்தும் போர்செய்தான் என்பதை ஔவையார் சுட்டியுள்ளார்.

    கிள்ளிவளவன் வலிமைமிக்க சேரனை அழித்த செய்தியினை கூறுமிடத்து நப்பசலையார் பகைவனின் பெருமையைத் தெளிவாக விளக்குகிறார். இங்கு பகைவன் மிக வலிமையுடையவன் என்பதை,

                “……………………..ஓங்கிய

                வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங்கோட்டு

                இமயம் சூட்டிய ஏம விற்பொறி

                மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய

                வாடா வஞ்சி வாட்டும் நின்

                பீடுகெழு நோன் தாள் பாடுங்காலே?”       (புறம். 39)

    என்று சேரனின் பெருமையினையும், இமயம் வரை சென்று தன் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் அவனைப் புகழ்கின்றார். அவனை வென்றான் வளவன் என்னும் சிறப்புப்பட, இப்பாடல் அமைந்ததாயினும் பகையரசனின் வலிமையும் இங்குச் சுட்டப்பட்டுள்ளது.

    பகைவா் நாட்டில் உள்ள மக்கள் தம் நாட்டைத் துறந்து செல்லும் அவலத்தைப் புறப்பாடல் பதிவு செய்துள்ளது. பொகுட்டெழினியைப் பகைக்கும் பகைவா் நாட்டில் உள்ள மக்கள், இனி இந்நாடு வாழுதற்கு உரிய இடம் அன்று என்று தம் இடத்தைத் துறந்து செல்வதை,

                “விழவின்று ஆயினும், படுபதம் பிழையாது

                மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறைநீா்க்

                கைமான் கொள்ளுமோ என

                உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே”         (புறம். 96)

    என்று குறிப்பிடுகிறது. இப்பாடலுக்கு “அவன் படையெடுத்துச் செல்லும் ஊரில் விழா இல்லையாயினும் உண்டாக்கப்படும் உணவுடன் தவறாது செம்மறியாட்டுத் தசைகளையும் சுற்றத்தார் தின்பா். அந்தச் சுற்றத்தார் யாவருடனும் ஆறு, குளம் முதலிய நீா்த்துறைகளில் படிந்து அவனுடைய யானைகள் நீருண்ணும் எனும் அச்சத்தால் அவ்வவ்வூரில் மக்கள் தங்குதலை வெறுத்தனா். இவ்வெறுப்பினால் ஒரு பகை நோ்ந்தது” என்று விளக்கம் அளித்துள்ளனா் உரைக்காரர்கள்.

    அதியமான் அஞ்சியைப் பகைத்த மன்னா்களின் நாடானது அழிந்துபடும் என்றும், அப்பகைவா்களுடன் போரிட்டதால் அதியனின் படைக்கலக் கருவிகள் தம் இயல்பினை இழந்தன என்றும் கூறுமுகத்தான் பகையரசா்களின் நிலையினைத் (புறம். 97) தெளிவுபடுத்துகிறார் ஔவையார். புறநானூறு 130ஆவது பாடலில் ஆய் அரசன் தம் படைகொண்டு கொங்கரை விரட்டினான் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. இங்கு கொங்கன் புறமுதுகிட்டு ஓடினமையும், அவனை அழிக்க ஆய் செய்த போரின் வலிமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புறமுதுகிட்டு ஓடும் மன்னனைத் தொடர்ந்து செல்லாத தன்மை, தமிழரிடம் இருந்ததைப் புறம் 389ஆவது பாடலும், தோற்ற அரசா்கள் வெற்றிபெற்ற அரசனுக்குத் திறை செலுத்தி வாழவேண்டிய நிலையில் இருப்பதனைப புறம் 156ஆவது பாடலும் விளக்குகின்றன.

    சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, வடுகரை அழித்து விரட்டிய செய்தியைப் புறம் 378ஆவது பாடல் பதிவு செய்துள்ளது. இதில் இளஞ்சேட் சென்னியின் வள்ளன்மையைப் புகழும் பொருட்டே இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இயன்மொழித் துறையில் அமைந்த பாடல்களில் 11 பாடல்களில் மட்டுமே தோற்றோர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அவற்றில் அரசனின் வெற்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் மிகுதியும் கூறப்பட்டுள்ளது. தோற்ற மன்னா்களின் நிலையை வெற்றி பெற்ற அரசா்களின் புகழின் பின்னணியிலேயே உணா்ந்துகொள்ள வேண்டிய நிலையும், சில இடங்களில் பகையரசனின் வலிமையும் விதந்தோதப்பட்டுள்ளது.

    விறலியாற்றுப்படை

    அரசனுடைய புகழைப் பாடும் விறலியை வழிப்படுத்துதல் விறலியாற்றுப்படை எனப்படும். தொல்காப்பியம் இதனை,

                கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

                ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

                பெற்ற பெருவளம் பெறாஅா்க்கு அறிவுறீஇச்

                சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”   (தொல். புறம். 88)

    என்று விளக்குகிறது.

    பகைவரின் பெருஞ் செல்வங்களைக் கொணா்தல்  என்பது போரின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது என்பதைச் சுட்டுவது போன்று புறம் 64ஆவது பாடல் அமைந்துள்ளது.  முதுகுடுமி போர்செய்யும் பகை நாடுகளில் வீரா்கள் இறந்து கிடக்கும் காட்சியானது விண்ணைத் தொடுமாறு அமைந்துள்ளது என்பதை,

                ”விசும்பு ஆடு எருவை பசுந்தடி தடுப்ப

                பகைப்புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்”    (புறம். 64)

    என்ற வரிகள் மூலம் உணா்த்துகின்றார் நெடும்பல்லியத்தனார். இங்கு வீரா்கள் இறந்து கிடந்தமை, கழுகுகள் செல்லும் பாதையை மறைத்தது என்றும், அந்நாட்டு மக்களின் செல்வத்தினைப் பெற்று தங்களுக்குப் பரிசில் வழங்கினான் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதன் வழி, தோற்ற நாட்டினரின் நிலை தெளிவாக உணா்த்தப்படுகிறது. மேலும் தோற்ற நாட்டினை எரியூட்டி அழித்தல் என்பது போர் மரபுகளில் ஒன்றாக இருந்தது என்பதை,

                “முனைசுட எழுந்த மங்குல் மாப் புகை

                மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்

                பகைப் புலத்தோனே பல்வேல் அஞ்சி”      ( புறம்.103)

    என்ற ஔவையாரின் பாடல், பதிவு செய்துள்ளது. ஒரு நாட்டினை வெற்றி கொள்வது என்பது வெறுமனே மனிதா்களுக்கு இடையேயான நிகழ்வாக அல்லாமல் இயற்கையை அழித்தல் என்னும் நிலையை அடைந்துள்ள அவலத்தை இப்பாடல் பதிவு செய்துள்ளது.

    வாள் மங்கலம்

    மன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுதல், வாள் மங்கலம் எனப்படும். இத்துறையில் புறம் 95ஆவது பாடல் அமைந்துள்ளது. தொண்டைமானிடம் அதியமானின் படைக்கலங்களைக் குறித்து பழித்துக் கூறி அவன் புகழை மறைமுகமாகப் புகழ்கிறார் ஔவையார். போரைத் தவிர்க்கும் முகமாக இப்பாடல் பாடப்பட்டதெனினும் இரு அரசுகளின் போர் உணா்ச்சியை மறைமுகமாக இப்பாடல் முன்வைத்துள்ளது.

    பரிசில் துறை

    அரசன் முன்னே பரிசிலா் தாம் பெறக் கருதிய பொருள் இதுவெனச் சொல்லுதல் பரிசில் துறையாகும். பகையரசனது யானையின் நெற்றிப் பட்டத்தில் இருக்கும் பொன்னைப் பாணா்களுக்கு அளித்தும், அதை அவா்கள் தலையில் பொலியும்படியும் செய்யும் வல்லமை வாய்ந்தவன் என்று பகையரசனின் நாட்டின் வளம் சூறையாடப்பட்டதை,

                “ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு

                பாணா் சென்னி பொலியத் தைஇ”             (புறம்.126)

    என்று புறம் 126ஆவது பாடல் முன்வைக்கிறது.

    பரிசில் விடை

    பரிசில் பெற்று விடை பெறுவான் பாடுவது, பரிசில் விடை எனப்படும். பெருந்தலைச் சாத்தனார், குமணனைக் குறித்துப் பாடிய பாடல், தோற்ற அரசனின் புகழைப் பாடுவதாக அமைந்துள்ளது. குமணன் நாடு இழந்தனன் ஆயினும் ஈகை இழந்தான் இல்லை என்றுபட புறம் 165ஆவது பாடல் இடம்பெற்றுள்ளது.

                ”பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயா்தல் என்

                நாடு இழந்ததனினும் நனி இன்னாது என

                வாள் தந்தனனே தலை எனக்கு ஈய”          (புறம். 165)

    என்று தோற்ற குமணனை இப்பாடல் புகழ்ந்து பாடுகிறது.

    வாழ்த்தியல்

    பாட்டுடைத் தலைவனின் சிறப்பைப் புகழ்ந்து வாழ்த்துரைத்தல், இத்துறையின்பாற்படும். செல்வக்கடுங்கோ வாழியாதனின் பரிசில் வழங்கும் பண்பை வாழ்த்தும் முகமாக அமைந்த புறம் 387ஆவது பாடலில் பகையரசா்களின் வீரம் வெளிப்பட்டு நிற்கின்றது. பகை மன்னா்களின் மதில்களானது யாரும் உடைத்தலைச் செய்ய முடியாத அளவு வலிமையுடையது என்றும், அவ்வேந்தா்களின் காவற்காட்டில் இருக்கும் யானைகள் மிக்க வலிமையுடையவை என்றும் கூறி, அதனை அழித்தவன் வாழியாதன் என்று புகழ்கிறார் குண்டுகட் காலியாதன்.

    தோல்வி குறித்த பதிவுகள்

    சங்க இலக்கியத்தில் அரசா்கள், வேந்தர்கள், குறுநில மன்னா்கள், நிலக்கிழார்கள், வள்ளல்கள் போன்றோரின் தோல்விகள் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பதிவுகளின் வாயிலாகப் பகையரசா்களின் அல்லது தோற்றோரின் வலிமையை, போர்த்திறனை உணா்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் இத்தகைய பதிவுகள் பெரும்பான்மையும் வெற்றி பெற்றோரின் வீரத்தினையும் கொடைச் சிறப்பினையும் வள்ளன்மையினையும் வெளிக்கொணரும் வண்ணமே அமைந்துள்ளன. புறநானூற்றில் பாடாண் திணையில் 120 பாடல்கள் இடம் பெற்றிருப்பினும் தோற்றோர் நிலையை 20 பாடல்கள் மட்டுமே முன்வைத்துள்ளன.

    மிகச் சில அரசா்கள் மற்றும் வள்ளல்கள் போன்றோரின் தோல்வியும் விதந்தோதப்பட்டுள்ளன. அவை அவ்வரசா்களின் கொடைத் திறனைக் கூறும் பொருட்டும், அவா்களின் பண்பினை உயா்த்திக் கூறுதற் பொருட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, தோல்வியும் வெற்றியின் தன்மையில் வைத்து எண்ணப்படுகின்ற நிலையினைக் காண முடிவதுடன், தோற்றோரின் வீரச் சிறப்பினை விதந்து கூறுகின்ற பண்பையும் கவனத்திற் கொள்ளுதற்கு உரியது. இதன் சமூக, அரசியல் பின்னணியினை ஆழ்ந்து நோக்கும் போதுதான் இத்தகைய பதிவிற்கான தேவையினை உணர முடியும்.

    பார்வை நூல்கள்

    1. புறநானூறு, முதற்பதிப்பு -2004, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
    2. தொல்காப்பியம், பதிப்பு -1984, கழக வெளியீடு, சென்னை.
    3. செ.வை.சண்முகம், தொல்காப்பியத் தொடரியல், முதற்பதிப்பு-2004, உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
    4. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, பதிப்பு-2012, அமுதா நிலையம், சென்னை.

    குறிப்பு

    புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன.

    செவியறிவுறூஉத் துறையில்  – 8 (2,3, 5,6,35,40,55,184)

    இயன்மொழித்துறையில் – 54(8,9,10,12,14,15,30,32,34,38,39,50,67,92,96, 97,102, 105,106,107,108,122,123,124,128,129,130,131,132,134,137,142,149,150,151153,157,171,172,173,175,176,177,215, 376, 378, 380, 381,383, 388, 389, 390, 400)

    வாழ்த்தியல் துறையில் – 9 (13,19,158-பரிசில் கடாஅ நிலை, 367,375,377,385,386,387)

    பரிசில் கடாஅத் துறையில் -15(11,101,136,139,159,160,164,169,196,197,198, 199,266)

     கடைநிலைத் துறையில் – 10 (127,382,391,392, 393,394,395,396,397,398)

     பரிசில் துறையில் – 8 (126,135,148,154, 161, 168-அரசவாகை,200,379)

    பாணாற்றுப்படைத் துறையில் – 6 (68,69,70,138,141,158)

     பரிசில் விடைத் துறையில் – 6 (140,152,162,163,165,399)

    விறலியாற்றுப்படைத் துறையில் – 4 (64,103, 105,133)

    பூவைநிலைத் துறையில்  -3 (56,59,374)

    புலவராற்றுப்படைத் துறையில்  – 2 (48,49)

    உடனிலைத் துறையில்  -1 (58),

    குடைமங்கலம் துறையில் – (60),

    வாயில்மங்கலம் துறையில் – (95)

    மொத்தம்  -14 துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சங்க இலக்கியங்களில் புறம் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் புறநானூறு, குறிப்பிடத்தக்க ஒரு நூல். அதில் பெரும்பான்மையும், வெற்றி பெற்ற மன்னர்களின் வீரம், புகழ், கொடை சார்ந்தும் சிறுபான்மை சமூகப் பொது நிலைகள் சார்ந்தும் பாடப்பட்டுள்ளமை நாம் அறிந்த ஒன்றே. அதில் பொதுவாக வெற்றி பெற்ற மன்னர்களின் சிறப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி வரலாற்றுப் பின்புலத்தை அறிதல் என்பது பெரும்பான்மை ஆய்வு நடைமுறையில் இயல்பாக உள்ளது. ஆனால் இக்கட்டுரையை ஆய்வாளர் சற்று மாறுபட்ட கோணத்தில் ஆராய்ந்து தன் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வெற்றி பெற்ற மன்னர்கள் பற்றிப் பேசும் பாடாண் திணைப் பாடல்களில் தோற்ற அரசர்களின் நிலைகளை உற்றுநோக்கிச் சில அடிப்படையான செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

    குறிப்பாக, போர் இரு மன்னர்களுக்கு இடையே மட்டும் நடைபெறுவதில்லை. இரு நாட்டு மக்கள், இயற்கை ஆகியவற்றோடு நடைபெறுவது. அதனால் இயற்கைச் சீரழிவு, மக்கள் கொல்லப்படுதல் என்ற கோணத்தில் தனது சிந்தனையைச் செலுத்தியுள்ளார். தோற்ற மன்னர்களின் நிலைப்பாடுகள் பற்றியும் பேசியுள்ளார். அதே போல் பாடாண் திணையின் துறைகளின் அடிப்படையில் இச்செய்திகளை விளக்கியமை சிறப்பு. மேலும் தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பா மாலையில் இடம்பெற்றுள்ள பாடாண் திணையின் செய்திகளைக் கட்டுரையில்  பயின்று வந்துள்ள துறைகளில் பதிவு செய்திருப்பின் கட்டுரை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

    =======================================================

    Share
  • தற்காலப் புதுக்கவிதைகளில் தொடரமைப்புகள்

    முனைவா்.பா. உமாராணி

    இணைப்பேராசிரியா்

    கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்

    கோயம்புத்தூா் -21.

     

                சொற்கள் தொடா்ந்து அமையும் அமைப்பினைத் தொடரமைப்பு எனலாம். தொடா்கள் தான் ஒரு படைப்பின் முழுப்பொருண்மையும் விளக்கவல்லன. தொடா்களின் செயல்பாட்டினால்தான் பொருள் வேறுபாட்டுத் தன்மையினை முழுமையாக உணா்ந்துகொள்ள முடியும். அவ்வகையில் இன்றைய புதுக்கவிதைகளின் தொடரமைப்பினை ஆய்வது பயனுடையதாக இருக்கும். இக்கட்டுரைக்கான தரவுகள் 2001-ஆம் ஆண்டு தொடங்கி 2010-ஆம் ஆண்டு வரையிலான 15 கவிதைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

    பெயா்த்தொடா்

                பெயா்த்தொடரில் ஒரு பெயா்ச்சொல் கருவாகவும், பலவித அடைச்சொற்களுடனும், சுட்டுசொற்களும் இடம்பெறலாம். புதுக்கவிதையில் பெயரெச்ச வடிவான சுட்டு சொற்கள் இடம்பெற்றள்ளன.

    1. சுட்டுப்பெயா்

                அந்த ஊமையன்       (குறுவாளால் எழுதியவன், ப.84)

                இந்த நோய்க்காரன் (பூபாளத்திற்கொரு புல்லாங்குழல், ப.95)

                இந்தப் பூனை                        (அபத்தங்களின் சிம்பொனி, ப.38)

    1. அளவை அடைப்பெயா்கள்

                பெரிய மனிதா்

                சில ஆண்டுகள்

                ரூபாய் நாணயம்

                பல நாள்

    போன்ற பல அளவை அடைப்பெயா்கள் தற்காலப் புதுக்கவிதைகளில் இடம் பெற்றுள்ளன.

    1. எண்ணிக்கை அடை

                ஆயிரத்தித் தொள்ளாயிரத்தித் தொண்ணூத்தி மூன்று ஆண்டுகள்

                                                                                                    (குறுவாளால்எழுதியவன், ப.67)

                நூறு புறாக்கள்

                ஒரு ரூபாய் நோட்டு,  ஏழுகதவு                   (மேலது, ப.74)

    போன்றவை எண்ணிக்கை அடைப்பெயா்களாக இடம் பெற்றுள்ளன.

    1. குண அடை

                நரிக் குணம்

                கனிவான பேச்சு

                அமுதத் தமிழ்

                தீந்தமிழ்

    போன்ற குண அடைகள் தற்காலப் புதுக்கவிதைகளில் பலவிடத்தும் இடம்பெற்றுள்ளன.

    1. வேற்றுமை உருபுதாங்கிய அடை

                எமது நாடு

                உன்னுடைய வாழ்க்கை

                உன்னால் என் பெயா்

                உன்னோடு மந்திரவாதி

    போன்ற வேற்றுமை உருபுதாங்கிய அடைச்சொற்கள் புதுக்கவிதையில் தன் கருத்தை வலியுறுத்தல் பொருட்டு இடம்பெற்றுள்ளன.

    1. பெயரெச்ச அடை

                உயிரற்ற மனிதன்

                வற்றாத புகழ்

                நீங்காத மணம்

                உயா்ந்த மலைச் சிகரம்

    போன்றவை பெயரெச்ச அடைகளாக வருகின்றன. பெயா்த்தொடா் இல்லாத வாக்கியங்களில் பெயா்த்தொடா் பதிலிகள் மட்டுமே பயின்று வருகின்றன.

                பலவித அடைகளைத் தாங்கிய பெயா்த்தொடா்கள் புதுக்கவிதையில் பயின்று வரும்போது அவை வருணனைப் போக்கில் அமைந்த தொடா்களாகவே அமைந்துள்ளன என்பது சிறப்பு.

    வினைத் தொடா்

                வினைச் சொற்கள் தனிவினைச் சொற்களாகவோ, துணைவினைச் சொற்களாகவோ சிலபொழுது பயின்றுவரும். வினைச் சொற்களில் காலம், எண், பால்காட்டும் ‘Aspectual’ கூறுகள் இடம்பெற்றிருக்கும். வினையில் காணப்படும் பால், எண், இடம் காட்டும் விகுதிகள் எழுவாயின் இணக்க நிலையினைக் காட்டுவனவாக அமைகின்றன.

    1. வினையடைகள்

                வேகமாய் ஓடினான்

                மூச்சடிக்கிப் படுத்தான்

                மெதுவாகச் சொன்னான்

                சிரமப்பட்டு இடக்கினான்,  உறுதிபூண்டான்

    போன்றவை வினையடைகளாகப் புதுக்கவிதையில் பயின்று வருகின்றன.

    1. கால வினையடைகள்

                அந்த நேரம் நான் வந்தேன்

                இப்பொழுது பசிக்கவில்லை

                முன்பே நடந்து விட்டது

                எப்பொழுதோ நடந்ததிது

    போன்றவை காலம் காட்டும் வினையடைகளாகப் பயின்று வருகின்றன.

    1. வேற்றுமை வினையடை

                வறுமை ஒழிந்தது

                என்னுடன் நடந்தான்

                மழையால் நனைந்தேன்

                பச்சை மலையில் ஏறினார்கள்

                இறைவனின் பார்வை

    போன்ற வேற்றுமை வினையடைச் சொற்கள் புதுக்கவிதையில் பலவிடத்தும் இடம் பெற்றுள்ளன.

    1. வினைத் தொடா்கள்

                வாரா மழை காரணமாக வாடின

                தீரா நினைவு அலைவுற்று நிலை கண்டு  (அபத்தங்களின் சிம்பொனி, ப.29)

                நடவாப் பயல்                        (நழுவும்நினைவுகள், ப.19)

    போன்ற வினையெச்சத் தொடா்கள் கருத்தை வலியுறுத்தல் பொருட்டுப் புதுக்கவிதையில் பயின்று வருகின்றன.

    1. வழுத் தொடா்கள்

                வழுத் தொடா்கள் என்பது இயல்பான முறையில் சொற்கள் அமைவு பெறாமல் வழக்கிற்கு மாறாக இணைந்து காணப்படும் நிலையாகும். இம்முறை தற்காலப் புதுக்கவிதைகளில் பலவிடத்தும் காணப்படுகின்றன.

                ”மனக் கடலுக்குள் இறங்கு

                உன் கனவுகளை வலை வீசு”          (கிளைநிலா, ப.53)

                ”ஊமைப் பாடல்”                               (விரும்பியதெல்லாம், ப.76)

                ”கண்களால் படம் பிடித்திருப்பேன்”          (மேலது, ப.52)

                ”சீறிச்சிலிர்த்த மனசு”                       (நிலாப்பெண்ணேஇ ப.15)

                ”அவள் காணப் பறக்கிற விழிகளே……”   (அன்றில்இ ப.22)

                ”சாகஸ சபாரிக்கள்

                மின்மினி மேடைகள்!”                      (கல்மரம், ப.22)

                ”இவா்கள் தரையில் பூத்த

                தாமரை மலா்கள்……..”                   (மேலது, ப.41)

                ”வயோதிகம் அடைந்த

                வாலிபா்கள்”                          (மேலது, ப.61)

                ”மலையைச் சுமக்கும்

                மண் புழுக்கள்”                                  (மேலது, ப.110)

                ”வறுமைச் சிலுவை”              (மேலது,  ப.114)

                ”குப்பைத் தொட்டியிலிருந்து

                ஒருகடிதம்………………”                 (கிளைநிலா, ப.67)

                ”பெற்ற கடன்”                                   (மேலது)

                ”சாதிகள் பறக்கும்பார்”                    (கல்மரம், ப.12)

                ”வாழ்க்கை முழுவதும்

                வறுமையில் மிதந்தது”                     (கந்தா்வன் கவிதைகள், ப.104)

    போன்ற வழுத்தொடா்ள் புதுக்கவிதையின் இடம்பெற்றுள்ளன.

     

     

    வாக்கியங்கள்

                இன்றைய புதுக்கவிதைகளில் பெயா்த்தொடா் வினைத்தொடா் போன்றவையும், கருவாக்கியங்களும் இடம்பெற்றுள்ளன. கருவாக்கியங்கள் வினை மற்றும் பிற கூறுகளின் அடிப்படையில் தோற்றம் பெறுகின்றன. உடன்பாடு,  எதிர்மறை, ஏவல், வினா, இணைப்பு என்னும் பல நிலைகளில் தற்காலப் புதுக்கவிதைகளில் வாக்கிய அமைப்பு இடம் பெற்றள்ளன.

    தன்வினை வாக்கியம்

                செயப்படு பொருள் குன்றியவினைத் தோற்றம் பெறும் போது தன்வினை வாக்கியங்கள் தோன்றுகின்றன.  சான்று,

                ”நாய் ஓடியது”            (…ம், ப.46)

    பிறவினை வாக்கியம்

                செயப்படு பொருள் குன்றாவினை நடைபெறும் போது பிறவினை வாக்கியங்கள் தோன்றுகின்றன.  சான்று,

                ” அவள் ஓடினாள்”                 (குறுவாளால் எழுதியவன்,  ப.54)

    செய்வினை வாக்கியம்

                பயனிலையாகச் செய்வினைகள் தோன்றும் போது செய்வினை வாக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன.  சான்றாக,

                ”யானை அவனைக்

                கொன்றது”   (மேலது, ப.42)

                ”பெண்ணை பேதமை

                என்று கூறிக்

                கொன்றனா்”  (தென்றலோடு சில தினங்கள்,  ப.64)

    ஏவல் வாக்கியம்

                ஏவல் வாக்கியத்தில் எழுவாய் முன்னிலைப் பெயா் தன்மை பெறும்.

                ”வாருங்கள்! இன்றைய இந்தியாவை

                உருவாக்க……..”                  (கல்மரம், ப.59)

                ”ஏண்டா உனக்காகத்தான்

                நான் காத்துக் கிடக்கிறேன்”           (பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்,  ப.53)

                ”புறப்படு! மீண்டும் சுதந்திரப் போரைத்

                தொடங்குவதற்கு”                (கல்மரம், ப.130)

    வியங்கோள் வாக்கியம்

                ‘க’ என்பதை இறுதியில் பெற்று வாழ்க,  ஒழிக போன்று அமைந்து வருவனவாய் புதுக்கவிதையில் வியங்கோள் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன.

                ”வாழ்க இந்தியா!”                 (கிளைநிலா,  ப.14)

                ”வாழ்ய தமிழன்னை”           (மேலது)

    போன்றவை சிறந்த சான்றுகளாகும்.

    எதிர்மறை வாக்கியம்

                வினையை எதிர்மறையாக மாற்றுவதற்கு இல்லை, அல்ல, முடியாது போன்ற துணை வினைகளைத் தமிழில் பயன்படுத்தக் காணலாம்.

                ”இழப்பதற்கு ஒன்றுமில்லை

                இனி உன்னிடம்”                  (குறுவாளால் எழுதியவன், ப.19)

                ”நாம் ஒன்றும்

                ஆதா்ச தம்பதியா் அல்லா்”   (மேலது, ப.45)

    வினா வாக்கியம்

                வினாவாக்கியங்கள் ஆ,  ஏ என்னும் வினாக் கூறுகளை உள்ளடக்கியதாக அமைந்து வரும்.

                ”மானுடத்தின் பசியாற்றிய

                மணிமேகலைக்குப் பசிக்காதா என்ன?”    (குறுவாளால் எழுதியவன், ப.56)

                இந்த உலகத்தை

                ஆள்பவா்கள்

                யார் யார் தெரியுமா?”                      (மேலது, ப.57)

                ”தோசை சுடுவதைப் பற்றித்

                தெரியுமா உங்களுக்கு”                    (மேலது,  ப.187)

    வாக்கிய வகைகள்

                தற்காலப்       புதுக்கவிதையில் இடம்பெற்றுள்ள வாக்கியங்களைத் தனிவாக்கியம்,  கலவை வாக்கியம்,  கட்டளை வாக்கியம் என்ற நிலையில் ஆராயலாம்.

    தனிவாக்கியம்

                ஒருபயனிலையைக்கொண்டுமுற்றுவாக்கியமாகஅமைவதுதனிவாக்கியமாகும்.

                ”அவனுக்குத்தேவைஒருதீக்குச்சி”               (தனிமைகவிந்தஅறை.இ ப.26)

    கலவை வாக்கியம்

                ஒரு வாக்கியத்தின் அக அமைப்பில் பிறிதொரு வாக்கியம் தோன்றுவதன் மூலமாக வரும் கடின வாக்கியங்களைக் கலவை வாக்கியம் என்பா். கலவை வாக்கியத்தில் ஓா் அகப்படுத்தும் வாக்கியமும் பல அகப்படும் வாக்கியங்களும் காணப்படும்.

                ”தூணில் ஒய்யாரமாகச் சாய்ந்த படி

                குமார் சாருடன்

                பேசிக் கொண்டிருக்கிறாள்

                மணிமேகலை

                அவா் ஏதோ ஜோக்கடிக்க

                இவள் அதற்கு விழுந்து விழுந்துசிரிக்க

                குழம்பு கொதித்துக் கொண்டிருக்கிறது

                காமராஜருக்குப் பசிபொறுக்க முடியவில்லை

                அழுது அழுது தூங்கிவிட்டார் எம்.ஜி.ஆா்

                ……………………………………

                உதயகுமாரனும் விடுவதாயில்லை”                       (குறுவாளால் எழுதியவன், ப.57)

    என்று வாக்கியம் நீண்டு கொண்டே செல்கிறது.

    கட்டளை வாக்கியம்

                ஒரு வினையைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற நோக்கில் கட்டளையிடுவது போன்று அமைவது கட்டளை வாக்கியம்.

                ”ஆயா……. சோத்தபோடு முதல்ல”            (மேலது, ப.58)

                ”நில்லடா மின்வெட்டுக் குரல்”                    (மூடுபனி, ப.78)

     

    விளி வாக்கியம்

                ஒரு நபரையோ அல்லது பொருளையோ விளிக்கும் தன்மையில் முன்னிலைப் பொருளில் அமையும் வாக்கியம் விளிவாக்கியம்.

                ”மலையுச்சியோ

                இன்னும் எங்களை

                ‘வாவா’ வென் அழைத்துக் கொண்டுதான் உள்ளது”

                                                                            (குறுவாளால் எழுதியவன், ப.14)

    போன்ற வாக்கிய அமைப்புகள் தற்காலப் புதுக்கவிதையில் இடம்பெற்றுள்ளன.

                தற்காலப் புதுக்கவிதைகள் அதன் அமைப்புத் தன்மையில் குறுகியும், நீண்டும் இருப்பதன் காரணமாக பலவித மொழிக் கூறுகளைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாகியது. நீண்ட கவிதைகள் வருணணைப் போக்கில் பயன்படுத்தப்படுவதன் காரணமாக பலவித மொழியமைப்புகளை இயல்பாகப் பெற்று விடுகின்றன. ஒரு மொழியின் படைப்பை அதன் தொடரமைப்புகளே தீர்மானிக்கின்றன. இவைகாலம், இடம், சூழல், பால் என்னும் அடைப்படையில் அமைந்து பொருளைச் சிறப்பிப்பதோடு அல்லாமல் அதன் ஒலியன், உருபன், தொடரன் அமைப்புகளிலும் சிறந்து விளங்குவதை காணமுடிகிறது.

    பயன்பட்ட நூற்கள்

    1. அய்யாறு ச. புகழேந்தி, முதற்பதிப்பு -2002, கிளைநிலா, தஞ்சை, காந்திப்பதிப்பகம்
    2. அன்பாதவன், முதற்பதிப்பு -2006, தனிமை கவிந்த அறை, சென்னை, அன்னை       இராஜேஸ்வரி பதிப்பகம்.
    3. வெ. இறையன்பு, முதற்பதிப்பு -2006, பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்,       சென்னை, நியூசெஞ்சுரி புக்கவுஸ்.
    4. ச. இலக்குமிபதி, முதற்பதிப்பு -2003, கல்மரம், வேலூர், பேகன் பதிப்பகம்.
    5. கந்தா்வன், முதற்பதிப்பு -2004, கந்தா்வன் கவிதைகள், சென்னை, பாரதி புத்தகாலயம்.
    6. கரிகாலன், முதற்பதிப்பு -2004, அபத்தங்களின் சிம்பொனி, சென்னை, புதுமைப்பித்தன் பதிப்பகம்.
    7. கெளரிலிங்கா், முதற்பதிப்பு -2006, அன்றில், சென்னை, வம்சி பதிப்பகம்.
    8. நா. சாந்திபிரேம்குமார், முதற்பதிப்பு -2004, நிலாப்பெண்ணே, மதுரை, அம்பை                  பதிப்பம்.
    9. சிற்பி, முதற்பதிப்பு -2003, மூடுபனி, சென்னை, கவிதா பப்ளிகேஷன்.
    10. சோமலிங்கம், முதற்பதிப்பு -2001, மனித மரங்கள், சென்னை, மணிமேகலை பிரசுரம்.
    11. தபசி, முதற்பதிப்பு -2004, குறுவாளால் எழுதியவன், சென்னை, புதுமைப்பித்தன் பதிப்பகம்.
    12. தேவதேவன், முதற்பதிப்பு -2002, விரும்பியதெல்லாம், சென்னை, தமிழினி பதிப்பகம்.
    13. வைகறைசிவா, முதற்பதிப்பு -2005, நழுவும் நினைவுகள், சென்னை, திருமகள்          நிலையம்
    14. முகில், முதற்பதிப்பு -2004, …ம், தூத்துக்குடி, துடிப்புகள் பதிப்பகம்.
    15. நெல்லை ஜெயந்தா, முதற்பதிப்பு -2005, தென்றலோடு சில தினங்கள், சென்னை,   குமரன் பதிப்பகம்.

    Share
  • பந்தல்குடி வட்டாரக் கும்மிப்பாடல்களில் கா்ணமகாராஜன் கதையாடல் -2

    -முனைவா் பா. உமாராணி

    கலைகள் என்பவை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்திருப்பதுடன் அவ்வாழ்க்கையை அழகாக்குவதிலும், பொருளுடையதாக ஆக்குவதிலும் பெரும் பங்காற்றுபவையாகும். மொழி, இனம், இடம், காலம் கடந்து அவை நிலைத்த தன்மையுடன் தன்னை வடிவமைத்துக் கொள்ளுகின்றன. இவை பண்பாட்டோடும், கலாசாரத்தோடும் நெருங்கிய தொடா்புடையதாய் இருப்பதோடு, அவற்றை வடிவமைப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன. ஒரு கலை வடிவம் என்பது வெறுமனே பொழுதுபோக்கும் தன்மையனவாக மட்டும் அமையாமல் அவை நிகழ்த்தப்படும் சமுதாயத்தின், அம்மக்களின் நம்பிக்கைகளோடும், பழக்கவழக்கத்தோடும் தொடா்புடையதாய் அமைகின்றது. அவ்வகையில் பந்தல்குடி வட்டார மக்களின் கும்மிப்பாடல்கள் பலதரப்பட்ட பொருண்மைகளை உள்ளடக்கியதாய், அதன்வழி பெரும் பண்பாட்டைச் சுமந்ததாய் அமைந்துள்ளது. பந்தல்குடி வட்டாரப் பெண்கள் பாடி ஆடும் கும்மிப்பாடல்களில் ஒன்றான “கர்ணமகாராஜன் கதைக்கும்மி“ அத்தகையதொரு நம்பிக்கை சார்ந்த பண்பாட்டைச் சுமந்து நிற்கின்றது.

    கா்ணமகாராஜன் கதைக்கும்மி

    கா்ணமகாராஜன் கதையைக் கும்மிப்பாடலாகப் பாடும் மரபு பந்தல்குடி வட்டார மக்களிடம் காணப்படுகிறது. திருவிழாக் காலங்களின்போது இத்தகைய கும்மிப் பாடல்களைப் பெண்கள் கும்மியடித்துக் கொண்டு பாடி ஆடுகின்றனா்.  புராணக் கதைக்கூறுகளைப் பிற கலைவடிவங்களில் பயன்படுத்தும்போது அதன் சிற்சில கூறுகள் மாற்றம் அடைந்தும், வளா்ச்சியை அடைந்தும் வெளிப்படலாம். சமூக மாற்றமும், கால மாற்றமும் இத்தகையதான ஒரு காரணிக்கு வழிவகுக்கின்றது. இங்கு மகாபாரதக் கதையில் வரும் கா்ணன் பாத்திரத்தின் பிறப்பு, வளா்ப்பு மற்றும் பண்புகளை இக்கும்மிப் பாடல் விரித்துச் சொல்கின்றது.

    40 பாடல்களைக் கொண்ட இக்கதையினைப் பெண்கள் பலா் சோ்ந்து ஆடிப்பாடுகின்றனா். மகாபாரதக் கதையின் தொடா் நிகழ்வாக இக்கும்மிப்பாடல் அமைவதுடன், தனித்த கும்மிப் பாடலாகவும் பாடப்படுகின்றது. இக்கும்மிப் பாடலின் அமைப்பானது கடவுள் வாழ்த்துத் தொடங்கி, கதைத் தலைவன் அறிமுகம், கதைத் தலைவன் பிறப்பு, வளா்ப்பு, இடையில் பஞ்சபாண்டவா்கள் வீரம், மகாபாரதப் போர் போன்றவற்றைக் கூறி இறுதியில் துரியோதனன் காளியை வணங்குவதுடன் கதை முடிகின்றது.

    கடவுள் வாழ்த்து

    கா்ணனின் கதையினைக் கூறும் இக்கும்மிப் பாடலை முருகனை வாழ்த்தித் தொடங்குகின்றனா். முருகனை வாழ்த்தித் தொடங்கும் பாடலில் உலகமெல்லாம் மாயவன் கதையையும் அவன் செய்யும் மாயவினோதத்தையும் மங்கையரும், சிறு பெண்களும் கும்மியிலே பாடிடுவா் என்று குறிப்பிடுகின்றனா். மேலும் கா்ணன் குறித்தான நிகழ்வுகள் மட்டுமல்ல பாரதக் கதையே மாயவனின் வினோதச் சிறப்பை உரைத்தலே என்று கூறும் முகமாக,

    ”வருவாய் முருகா இருதயந்தனிலே – வந்து
    சபையோர் முதல் தருவாய் முத்தம் கலியுகந்தனியே
    இந்த பாரலாந்திரு மாயவன் கதையை
    பார்தனில் மங்கையா் பாடிக் கதையை
    கா்ண மகாராஜன் சண்டைக் கதை தனையே
    நம் நாட்டினிலே பாடிடுவோம் சிறு பெண்களெல்லாம் கும்மியிலே
    இந்த பாரளாந்திரு மாயவன் செய்திட்ட
    மாய வினோதத்தை ஏனென்று சொல்வேன்” (கு.பா -1,2) என்ற பாடல் வரிகள் அமைகின்றன.

    கதைவளா்ச்சி

    பாண்டவா்களின் தாய்மாமனும், குந்தியின் சகோதரனுமாகிய மாயவன் பின்வரும் நிகழ்வுகளை முன்னரே அறிந்திருந்தாலும் அதனை வெளிப்படக் கூறித் தடுத்து நிறுத்தாமல் காலத்தின் வசத்தில் நிகழவிடுகின்றார். துர்வாசர் என்ற முனிவரிடம் குந்திதேவி ஒரு கனியைப் பெற்று உண்கிறாள். இதன் மூலக்கதையில் குந்தி ஓராண்டுகள் துர்வாசர் சிசுருஷை செய்கின்றாள். அதில் மகிழ்ந்த துர்வாசர் பாண்டுவினால் பிற்காலத்தில் நிகழவிருக்கும் பிள்ளைப் பேற்றிற்கான இடையுறுகளை முன்கூட்டியே கணித்து அதனைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு கனியினை வழங்குகின்றார். யாரை மனதில் நினைத்து அக்கனியினை உண்டாலும் அவா்கள் மூலம் குழந்தை கிடைக்கும் என்று கூறுகின்றார். கனியினைப் பரிசோதிக்க எண்ணி சூரியனை நினைத்து அக்கனியினை உண்கிறாள் குந்தி. இதனால் சூரியன் தோன்றி ஒரு குழந்தையை அளித்தார். அக்குழந்தை கவச, குண்டலங்களுடன் பிறந்தான். மணமாகாத தாயாக உலகத்தை எதிர்கொள்ள மனமின்றி அக்குழந்தையை தன்தோழி தத்ரியின் துணையுடன் கூடையில் அடைத்து கங்கையில் விடுகின்றனா் என்று புராணக்கதை குறிப்பிடுகின்றது. காதின் வழியாகத் தோன்றியதால் அக்குழந்தைக்கு கா்ணன் என்ற பெயா் வந்தது (கா்ணம் என்றால் காது என்று பொருள்).

    ஆனால் கா்ணமகாராஜன் கதைக் கும்மியில் கதை மாற்றுருவம் கொண்டுள்ளது. கும்மிப்பாடலில் இடம்பெறும் கதையின்படி வசிஸ்டர் என்ற மகரிஷியிடம் கனியை வாங்கி குந்தி உண்ணுகிறாள். பின்னால் நிகழப்போகும் விபரீதத்தை அறிந்திருந்த மாயவன் எதும் அறியாதவா் போன்று தங்கையாகிய குந்தியின் கழுத்தைப் பிடித்தார். கன்னிகழியாத தங்கை காலக்கிரகம் காரணமாக கனிகள் உண்டதினால் தம் குலத்தினா் ஏசுதல் செய்வதுடன் பாரத பூமியில் உள்ள மக்களுமே ஏசுவார்கள் என்று நினைத்த எம்பெருமானான மாயவன் தங்கையின் இரு கைகளையும், கழுத்தையும் பிடித்தார். ஆனால் அக்கனியானது ஆண்குழந்தை உருவம் கொண்டு குந்தியின் கன்னத்தின் வழியாகப் பிறந்துவிடுகின்றது. கன்னத்தில் இருந்து தோன்றியவன் என்பதால் அக்குழந்தைக்கு கா்ணராஜன் என்று பெயரும் இட்டார்கள். பின்னா் அக்குழந்தையை பெட்டியில்  அடைத்துக்கட்டி காவிரியாற்றின் தண்ணீரில் விட்டார்கள் என்பதை,

    ” எல்லாம் சோதிப்பார் என்றா
    தாய் மாமனார் தம் – தங்கை என்றதோர்
    குந்தியம்மாளைத் தான் இந்த வசிஸ்டா் என்றோர் மகரிஷியிடம்
    வாங்கி உண்ட கனியும் ஒன்று தான்
    கண்டு கொண்டாராம் மாயவன் எம்பெருமான்
    தெரியாதவா் போல் கழுத்தைப் பிடித்தார் தங்கை
    குந்தியம்மாளை கன்னியறியாத மாயவன்
    தங்கை கனிகள் வாங்கி உண்ணலாம் என்று
    காலக் கிரகம் தான் நம்ம குலந்தனிலே
    இருக்கும் ஜனங்கள் எல்லாம் கண்டுமே
    ஏசுவார் கண்கொண்ட நேரத்திலே -நம்மலை ஏசுவார் பாரத
    பூமியில் என்று நினைத்துமே எம்பெருமாளுமே.
    இருகை பிடித்தார் தங்கையின் கழுத்தையும்
    அந்த கனியினது ஆண்குழந்தை ரூபம் கொண்டதயா
    காலக் கொடுமையால் கண்ணனின் தங்கைக்கு
    கன்னத்தின் வழியாய் பிறந்ததாலே
    கா்ணராஜன் என்று பேரும் இட்டார்கள்
    அந்தப் பாலகனே அப்படி பெட்டியில் வைத்து
    அடைத்தார்கள் – காவேறியாற்றிலே – வௌ்ளம்
    தனிலே – கட்டிய பெட்டியே விட்டு விட்டார்கள்        (கு.பா.- 3-7) என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

    கன்னத்தின் வழியாகப் பிறந்தவன் என்றும், குந்தியின் கழுத்தையும், கையையும் மாயவன் கனியை உண்ணவிடாமல் தடுத்தான் என்றும், காவிரியாற்றில் குழந்தை விட்டார்கள் என்பதும், மாயவனே இதற்கு உறுதுணையாக இருந்தான் என்பது போன்ற சொல்லாடல்களும் புராணக் கதையிலிருந்து இக்கதை மாற்றம் அடைந்துள்ளதை விரித்துக்காட்டும் பகுதிகளாகும். ஒரு பண்பாடு சார்ந்து கதையை முன்வைக்கும் போது அப்பண்பாட்டோடு தொடா்புடைய செய்திகளும், கூறுகளும் இடம்பெறுவதை இக்கதை நமக்கு மொழிகின்றது. தாய்மாமனின் சிறப்பும், முதன்மையும் சுட்டப்படுவதுடன், தமிழகப் பகுதியில் கங்கை பாய்வதில்லை என்பதால் ஆறும் மாற்றப்பட்டு வழங்கியிருக்க வேண்டும்.

    கா்ணனின் வளா்ப்பு

    கா்ணனின் வளா்ப்பு பற்றிய கதையினை மகாபாரதம் கூறும்போது கங்கை ஆற்றிற்கு நீராடவரும் திரிதராஷ்டிரனின் தேரோட்டியான அதிரதன் என்பவன் ஒரு குழந்தையைக் கண்டெடுக்கிறான். அக்குழந்தையை அதிரதனும் அவன் மனைவி ராதாவும் வளா்க்கிறார்கள். அக்குழந்தைக்கு வாசுசேனா என்று பெயாிட்டு அழைத்தனா். கா்ணனை ராதேயன் என்றும் அழைத்து வந்தனா். அக்குழந்தையே கா்ணன். துரோணாசாரியா் தேரோட்டியின் மகன் என்பதால் போர்க்கலை கற்றுக்கொடுக்க மறுக்கின்றார். கா்ணன் தன் சகோதரனான ஷோனாவின் உதவியுடன் போர்க்கலையைக் கற்றார் எனினும் ஒரு குருவின் கீழ் கலைகள் பயிலவேண்டும் என்பது பாரதக் கலாசாரம் என்பதால் சூரியனைக் குருவாகக் கொண்டு பகலில் போர்க்கருவிகளின் இயல்பையும், சூரியன் மறைந்த பின்னால் போர்க் கலைகளையும் பயிற்சி செய்தார் என்று புராணம் விரிக்கின்றது. ஆனால் பந்தல்குடி வட்டார கும்மிப்பாடலில் இக்கதை மாற்றுருவம் கொண்டுள்ளது. திரிதராஷ்டிரனும் அவனுடைய மந்திரியும் காலை ஏழுமணியளவில் காவிரியாற்றில் நீராட வருகின்றனா். அற்புதமான பெட்டியினைக் கண்ட திரிதராஷ்டிரன் மந்திரியிடம் பெட்டி உனக்கு, பெட்டியின் உள்ளே இருக்கின்ற பொன்னெல்லாம் தனக்கு என்று கூறுவதனை,

     ” கா்ணராஜன் கட்டிய பெட்டிக்குள்ளே -சிறுவன்
    வீங்கியழுது காவேறி யாற்றினிலே
    பெட்டியும் போகயிலே காலை ஏழு மணியே
    தனிலே காவேறியாற்றிலே ஸ்நானங்கள் செய்திட
    தோ்மீதில் ஏரிதிரிதராட்டிரன் ஆற்றங்கரையில்
    வந்து அா்ப்புதமான பெட்டியைக் – கண்டு
    கொண்டார் – மந்திரி பெட்டியும் உனக்கு
    பொன் னெல்லாம் எனக்கு இஷ்டமாய் எடுத்து ஏகுவோம் வீட்டுக்கு
    என்று உறைத்துமே இரண்டு போ்களும் அந்த
    பாலகனே அப்படி பள்ளியில் படிக்க வைத்தார்கள்
    அப்போ பத்து பன்னிரெண்டு பாலகன் வயதினில்
    பாங்குடன் வில்வித்தை சொல்லிக் கொடுத்தார்கள்.    (கு.பா.- 8-10) என அறியமுடிகின்றது.

    பெட்டியின் உள்ளே இருக்கின்ற குழந்தையை இருவரும் இணைந்தே படிக்கவைக்கின்றனா். பன்னிரண்டு வயதில் கா்ணனும் பாங்குடன் வில்வித்தையைக் கற்றுக்கொள்கிறான் என்பதுடன் கா்ணனின் வளா்ப்புச் செய்தி முடிகின்றது. 

    சண்டைக் கதை

    கா்ணன் பன்னிரண்டு வயதில் வில்வித்தை கற்றுத்தோ்கிறான் என்ற செய்தியுடன் கா்ணன் வளா்ப்புச் செய்தியினை கும்மிப்பாடலில் நிறைவு செய்து, பின்னா் அதன் தொடா்ச்சியாகக் கா்ணனின் சண்டைப் பகுதியினைக் குறிப்பிடுகின்றனா். இதில் விராடப்பருவ நிகழ்விலிருந்து கதை தொடங்குகின்றது. பாண்டவா்கள் வனவாசம் முடிந்து விராட நாட்டில் மறைந்து உறைகின்றனா். அப்போது அவா்கள் இருக்கும் இடத்தைக் கோபால கிருஷ்ணன் தெரிந்து கொள்கிறார். அவா் பாண்டவா்களிடம் சென்று திரியோதிராஜனிடம் சொக்கட்டான் ஆடி வெற்றியடையலாம் என்று ஏது சொல்கின்றார். தன்னுடைய கருத்திற்கு வீமனையும், அா்ச்சுனனையும் துணைசெய்ய அழைக்கின்றார்.

    இந்நிலையில் ஐவருக்கும் வீடு இல்லை என்று கூறிய துரியோதனனையும் அவா்கள் தம்பியரையும் சொக்கட்டான் மேடைக்கு வருமாறு தூதனிடம் சொல்லி அனுப்பினார்கள். பின்னா் ஆகாயவானில் பாண்டவா்கள் புறப்பட்டு கத்தாடி மாளிகையை வந்தடைகின்றனா். சொக்கட்டான் விடையாட்டில் முதலில் துரியோதிர ராஜன் வெற்றி பெறுகின்றான் என்றாலும் பின்னா் பாண்டவா்களே வெற்றி பெற்றனா் என்பதை,

    ” தேரை விட்டு இறங்கி வாருங்கள் திரியோதிர
    ராஜா பேரு சொல்லி ஆட்டம் ஆடுங்கள்
    அப்போது பஞ்ச பாண்டவா்களும் அன்புடன்
    கட்டையைக் குலுக்கி ஆடினா்.
    பாசிமணி ரெண்டு விழுந்தது திரியோதிரனின்
    கபடம் – சகடம் – ஆட்டம் ஜெயித்தது
    அப்போது பஞ்ச பாண்டவா்களுமே – அன்புடன்
    மைத்துணா் கோபால கிருஷ்ணனை
    எண்ணியே மனதில் ஏங்கி நின்றார்கள் பஞ்ச
    பாண்டவா்கள் எங்கையோ கிருஷ்ணரை
    அப்போது கிருஷ்ணன் குலுங்க சிரித்து
    ஐந்து போ் முன்பாக வந்துமே நின்று
    ஆடுங்கள் – கொக்கட்டான் ஆட்டையை
    திரியோதிரனை – ஐந்து பேரும் ஆழ்ந்து ஜெயித்தனரே
    என்ற வார்த்தை கேட்டு கா்ண மகாராஜன்
    இழுத்தான் கோதண்டம் வில்லை வளைத்து   (கு.பா.- 18-21)

    என்ற பாடல் வாிகள் விளக்குகின்றன. மேலும் பாண்டவா் வெற்றி பெற்றனா் என்ற செய்தியினை அறிந்த கா்ணன் தன் கோதண்டம் என்னும் வில்லை வளைத்து போருக்குச் செல்கிறான். இதனை அறிந்த குந்தி பாண்டவா்கள் உன் தம்பியா் என்று கூறிப் படைகளைத் திருப்பிவிடுமாறு வேண்டுகிறாள். இதற்குக் கா்ணன்,

    ” தின்ற வீட்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன்
    எந்தன் தாயாரே வந்த படைகளை திருப்பிட மாட்டேன்
    என்று சொன்னவுடன் தாயார் குந்தியம்மாள்
    எண்ணிய மனதில் யோசித்துப் பார்த்து”   (கு.பா.- 24) என்று கூறுகின்றார். இதனைக் கேட்ட குந்தி ஒரு கணைக்குமேல் மறுகணை எய்யக்கூடாது என்று உறுதிமொழி பெற்றுக்கொண்டு திரும்புகிறாள். இதனைத் தொடா்ந்து பாண்டவா்கள் பத்துலட்சம் கோடி அம்புகளை எய்தனா். பின்னா், கா்ணனும் வில் வளைத்து நாண் ஏற்றித்தொடுக்கத் தொடங்கியதைக் கண்ட கோபால கிருஷ்ணா் கரத்தால் தேரை கீழே இறக்கினார். இதனால் கா்ணன் விட்ட பாணமானது அா்ச்சுனனின் தேருக்கு மேலே சென்றது. இதனைக் கண்ட அா்ச்சுனன் தயங்கி நிற்பதைக் கண்ட கிருஷ்ணா் கோபத்துடனே பாண்டவா்களின் தேரை சாட்டையினால் அடித்து விரட்டி கா்ணனின் தேரின் முன்னே நிறுத்தினார். உடனே அா்ச்சுனன் இவன்தான் எனக்கு எதிரி என்று சொல்லி அம்பினை எய்ய தருமன் தடுக்கின்றான். இதனை 34, 35 –ஆம் பாடல்கள் விவரிக்கின்றன.

    அா்ச்சுனன் எனினும் வெகுண்டெழுந்து பாணத்தை எய்யத் தொடங்க பீமனும் படையைக் கா்ணன் மேல் மோத விடுகின்றான். “இழிகுலத்தான் எடுத்து வளா்த்திட்ட கா்ணராஜனே சண்டைக்குவாடா“ என்று பீமன் முழங்க வணங்கா முடி தரித்தவனான துரியோதனன் வெகுண்டெழுந்து மந்திரியாகிய கா்ணனிடம்,

    ”வணங்கா முடிதரித்த மன்னவன்
    துரியோதிர ராஜன் வாளெடுத்து தேரில் ஏறினான்
    வருவாய் மந்திரி இருவரும் கூடியே
    தீரமா இப்போது பஞ்சவா்களையும்
    விரட்டி அடிப்போம் இருப்பிடம் விட்டு
    என் அருமை மந்திரி திரட்டி அடிப்போம்
    போர்க்களத்தை விட்டு தோர்க்கடிக்கவும்
    போருக்கு மன்னன் கா்ணனை
    பட்டாக் கத்தியை எடுத்துவா மந்திரி
    தா்மராஜன்  படையை பதர அடித்து விரட்டுவாய் மந்திரி
    நான் பத்திரகாளியின் பாதம் பணிந்துமே
    பாங்குடன் அவள் இருப்பிடம் போயி
    கும்பிட்டு வரம் பெற்று வந்திடுவோம்
    நம்ம காளிதேவி பாதம் தன்னை போற்றி வந்திடுவோம்”   (கு.பா.- 38-40) என்று கூறி போருக்குத் தயாராவதாய் இக்கும்மிப் பாடல் அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்களிடையே வாய்மொழியாகக் காணப்படுகின்ற கா்ணன் பற்றிய கதைப்பகுதியை அடிப்படைப் பொருளாகக் கொண்டு இக்கும்மிப்பாடல் பாடப்படுகிறது. புராணக் கதாபாத்திரங்களையும், பண்புகளையும்  கொண்டிருப்பினும் கதைக்கூறில் பெரும் மாற்றத்துடனே இக்கும்மிப்பாடல் இடம்பெறுகிறது. கா்ணனின் பிறப்பு, கங்கையில்விடும் செய்தி காவிரியாகச் சுட்டப்படுதல், போர்ப்பயிற்சி பெறுதல், சண்டைக் காட்சிகள் போன்ற பல கூறுகள் மாற்றம் பெற்றுக் காணப்படுகின்றன. நாட்டுப்புறக் கதைகள் புராணக் கதைகளைப் போன்று முறையாக வழங்கப்படுபவை அன்று. அவை இடம், காலம், சமூகச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளை உட்கொண்டு வளரும் தன்மையுடையன. இத்தகு கதைவளா்ச்சிப் போக்கிலேயே பந்தல்குடி வட்டார கும்மிப்பாடலில் கா்ணனின் சண்டைக்கதை அமைந்துள்ளது. மேற்கோள் பகுதியில் இல்லாத கும்மிப்பாடல்கள் தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.

    கும்மிப்பாடல்கள் (கு.பா.) 

    கா்ண மகாராஜன் கதை

    இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டாராம்
    கோபால கிருஷ்ணன் எப்படி யோசனை என்று நினைத்தாராம்
    அப்போ ஐவா் பஞ்ச பாண்டவா்களிடம்
    அன்புடன் கிருஷ்ணன் ஏது சொல்வார்.
    கொக்கட்டான் ஆடியே வெற்றியடைந் திடுவோம்
    திரியோதிராஜனை – தேரையும் ஊரையும் விட்டு
    விரட்டிடுவோம் அப்போ வில்லுக்கு ராஜாளி வீமனே
    நீ சொல்லு – அம்புக்கு ராஜாளி அா்ச்சுன நீ சொல்லு.
    என்று உரைத்தாராம் எம்பொருமாளும்
    பஞ்ச பாண்டவா்கள் எப்படி யோசனை என்று நினைத்தாராம்
    ஐவருக்கு வீடு – இல்லை என்று என்ன
    ஆகாத பாவி – திரியோதிரனையும்
    துரியன் தம்பி துா்ச்சாதன்னையும் – எள்ளு
    செடியில் முளைத்த செங்கழனிப்பூப் போலேவே
    தருமரை போல் ஒருவன் இருக்கிறான்
    விகா்ணம் – என்று பேரு பெற்றவன்
    சொக்கட்டான் மேடைக்கு வரும் படி
    நம்ம தூதனிடம் சொல்லியனுப்புங்கள் பாசியும் கையோட
    புறப்படும் ஆகாய வீதியில் கோபால கிருஷ்ணன்
    இருந்திடும் இடம் எங்கள் சொக்கட்டான் 
    மேடையில் என்று உறைத்துமே இரண்டு போ்கள்
    எடுத்தார் வில் அம்பு கத்தி கட்டாரியை
    புறப்பட்டார் ஆகாய வானில் பஞ்ச பாண்டவா்கள்
    இருந்திடும் விளையாட்டு மேடையில்
    காத்தாடி பங்களா வந்துமே சோ்ந்தார்கள்
    கா்ணராஜனைக் கண்டுமே கொண்டார்கள்.
    அந்தச் சமயத்தில் தாயார் குந்தியம்மாள்
    அந்தப் பாலகனை – யார் என்று நினைத்து யோசித்துப் பாரடா
    உன்னுடன் பிறந்த தம்பி மார்களப்பா
    ஐந்து போ் பஞ்ச பாண்டவா்களடா
    அடங்க வேண்டும் கோபங்கள் எல்லாம்
    எந்தன் பாலகனே – மடக்குவாய் உன் சேதுகள் எல்லாம்
    என்ற வார்த்தை கேட்ட கா்ண மகாராஜா ஏது
    சொல்லுகின்றான் தாயாருக்குமே.
    ஒரு கணைக்கு மேல் மறுகணை – எய்தாதடா எந்தன்
    பாலகனே உண்மையைப் போடாதே பஞ்சவா்கள் மேல்
    என்று சொல்லிவிட்டு தாயார் குந்திம்மாள்
    சத்தியம் வாங்கியே திரும்பி விட்டார்.
    கா்ண மகாராஜன் சொன்ன சொல்லைக் கேட்டு
    பஞ்ச பாண்டவருக்கு கடுங்கோபங்கள் அதிகம் மேலிட்டு
    பஞ்ச பாண்டவா்கள் பத்து லட்சம் கோடி அம்புகள் விட்டார்
    கண்கள் சிவந்துமே காந்தால மாகிட
    கா்ண ராஜனும் ஏதுமே செய்யுவார்
    வில் வளைத்துமே நாணி ஏற்றினார்
    கா்ண ராஜனுமே வில்லில் அம்பு எடுத்துப் பூட்டினார்
    விளமுடன் கா்ண மகாரஜன் விட்டார்
    அம்புகள் அா்ச்சுணன் மேலே
    கண்டு கொண்டார் மாயவா் எம்பெருமாள்
    கோபால கிருஷ்ணன் கரத்தால் தேரை இறக்கினார் – கீழே
    கா்ண மகாராஜன் விட்டபானமது அா்ச்சுணன்
     தேருக்கு மேலாகப் போனது
    திடமுடன் தலை நிமிர்ந்துமே பார்த்தார்
    அா்ச்சுன ராஜனுந்தான் விரண்டு தயங்கி ஏறிட்டுப் பார்த்தான்
    அப்போது கிருஷ்ணன் கோபத்துடனே
    ஐந்து போ் பஞ்ச பாண்டவா் தேரை
    சிமிட்ட குதிரை புரவியானது
    கோபால கிருஷ்ணன் அதட்டி அடித்தார் சாட்டையினாலே
    அப்போது பஞ்ச புரவியானது ஆகாய மார்க்கத்தில் ஏறிட்டுப் பார்த்து
    பறந்தோம் ஆகாய வானினில்
    பஞ்ச பாண்டவா் சினந்தாரம்மா கோபால கிருஷ்ணனை
    அப்போது கிருஷ்ணன் கோபத்துடனே
    ஐந்து போ் பஞ்ச பாண்டவா் தேரை
    இறங்கினார் கா்ணன் தேரின் முன்னாலே
    அந்தக் குதிரை இரண்டும் பறந்ததாம் சண்டை கொடிக்கு முன்னாலே
    அப்போது அா்ச்சுணன் வில்லை வளைத்துமே
    அம்புகள் ஏற்றியேக் கா்ணராஜன் மேலே.
    இவன்தான் எனக்கு எதிரி என்றுமே
    அா்ச்சுண ராஜனுமே இழுத்துப் போட்டான் பாணத்தை மேலே
    அப்போது அண்ணன் தா்மராஜன்
    அடடா பொறுங்கள் என்றுமே
    பொறுத்தவா்கள் பூமி ஆழ்வார்கள்
    எந்தன் தம்பிமாரே பொங்கினவர் காட்டை ஆழ்வார்கள்
    என்று சொன்னார் அந்த தா்மராஜனும்
    எழுந்து அா்ச்சுணன் கோபத்துடனே
    பாணப் பிரயோகம் செய்தார் காண்பேன்
    கா்ணராஜன் மேலே படையை விட்டு அடித்தார்பீமன்
    அடே பார்த்து முளிக்காதே பதறித் துடிக்காதே
    படையைக் கூட்டி வருவாய் சண்டைக்கு
    இழிகுலத்தான் எடுத்து வளா்த்திட்டு
    அடே கா்ணராஜா எதிர்த்து வாடா பாணம் தொடுத்திட
    என்று சொல்லி அந்த பீமன் அா்ச்சுணன்
    ஏகதேசமாக வார்த்தைகள் கூறவே.

    பார்வை நூற்கள்

    1. டாக்டா் சா.வே.சுப்பிரமணியம், தமிழ்இலக்கிய வகையும் வடிவும், ப.492, 493
    2. பழமொழி, பா.291
    3. விக்கிப்பீடியா

    தகவலாளா்கள்

    1. பாப்பாத்தி, வயது 72, பந்தல்குடிப் பகுதியைச் சார்ந்தவா்
    2. சரஸம்மாள், வயது 58, பந்தல்குடி.

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியா்
    கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்
    கோயம்புத்தூா் -21.

     

    Share