பந்தல்குடி வட்டாரக் கும்மிப்பாடல்களில் கா்ணமகாராஜன் கதையாடல் -2

0

-முனைவா் பா. உமாராணி

கலைகள் என்பவை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்திருப்பதுடன் அவ்வாழ்க்கையை அழகாக்குவதிலும், பொருளுடையதாக ஆக்குவதிலும் பெரும் பங்காற்றுபவையாகும். மொழி, இனம், இடம், காலம் கடந்து அவை நிலைத்த தன்மையுடன் தன்னை வடிவமைத்துக் கொள்ளுகின்றன. இவை பண்பாட்டோடும், கலாசாரத்தோடும் நெருங்கிய தொடா்புடையதாய் இருப்பதோடு, அவற்றை வடிவமைப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன. ஒரு கலை வடிவம் என்பது வெறுமனே பொழுதுபோக்கும் தன்மையனவாக மட்டும் அமையாமல் அவை நிகழ்த்தப்படும் சமுதாயத்தின், அம்மக்களின் நம்பிக்கைகளோடும், பழக்கவழக்கத்தோடும் தொடா்புடையதாய் அமைகின்றது. அவ்வகையில் பந்தல்குடி வட்டார மக்களின் கும்மிப்பாடல்கள் பலதரப்பட்ட பொருண்மைகளை உள்ளடக்கியதாய், அதன்வழி பெரும் பண்பாட்டைச் சுமந்ததாய் அமைந்துள்ளது. பந்தல்குடி வட்டாரப் பெண்கள் பாடி ஆடும் கும்மிப்பாடல்களில் ஒன்றான “கர்ணமகாராஜன் கதைக்கும்மி“ அத்தகையதொரு நம்பிக்கை சார்ந்த பண்பாட்டைச் சுமந்து நிற்கின்றது.

கா்ணமகாராஜன் கதைக்கும்மி

கா்ணமகாராஜன் கதையைக் கும்மிப்பாடலாகப் பாடும் மரபு பந்தல்குடி வட்டார மக்களிடம் காணப்படுகிறது. திருவிழாக் காலங்களின்போது இத்தகைய கும்மிப் பாடல்களைப் பெண்கள் கும்மியடித்துக் கொண்டு பாடி ஆடுகின்றனா்.  புராணக் கதைக்கூறுகளைப் பிற கலைவடிவங்களில் பயன்படுத்தும்போது அதன் சிற்சில கூறுகள் மாற்றம் அடைந்தும், வளா்ச்சியை அடைந்தும் வெளிப்படலாம். சமூக மாற்றமும், கால மாற்றமும் இத்தகையதான ஒரு காரணிக்கு வழிவகுக்கின்றது. இங்கு மகாபாரதக் கதையில் வரும் கா்ணன் பாத்திரத்தின் பிறப்பு, வளா்ப்பு மற்றும் பண்புகளை இக்கும்மிப் பாடல் விரித்துச் சொல்கின்றது.

40 பாடல்களைக் கொண்ட இக்கதையினைப் பெண்கள் பலா் சோ்ந்து ஆடிப்பாடுகின்றனா். மகாபாரதக் கதையின் தொடா் நிகழ்வாக இக்கும்மிப்பாடல் அமைவதுடன், தனித்த கும்மிப் பாடலாகவும் பாடப்படுகின்றது. இக்கும்மிப் பாடலின் அமைப்பானது கடவுள் வாழ்த்துத் தொடங்கி, கதைத் தலைவன் அறிமுகம், கதைத் தலைவன் பிறப்பு, வளா்ப்பு, இடையில் பஞ்சபாண்டவா்கள் வீரம், மகாபாரதப் போர் போன்றவற்றைக் கூறி இறுதியில் துரியோதனன் காளியை வணங்குவதுடன் கதை முடிகின்றது.

கடவுள் வாழ்த்து

கா்ணனின் கதையினைக் கூறும் இக்கும்மிப் பாடலை முருகனை வாழ்த்தித் தொடங்குகின்றனா். முருகனை வாழ்த்தித் தொடங்கும் பாடலில் உலகமெல்லாம் மாயவன் கதையையும் அவன் செய்யும் மாயவினோதத்தையும் மங்கையரும், சிறு பெண்களும் கும்மியிலே பாடிடுவா் என்று குறிப்பிடுகின்றனா். மேலும் கா்ணன் குறித்தான நிகழ்வுகள் மட்டுமல்ல பாரதக் கதையே மாயவனின் வினோதச் சிறப்பை உரைத்தலே என்று கூறும் முகமாக,

”வருவாய் முருகா இருதயந்தனிலே – வந்து
சபையோர் முதல் தருவாய் முத்தம் கலியுகந்தனியே
இந்த பாரலாந்திரு மாயவன் கதையை
பார்தனில் மங்கையா் பாடிக் கதையை
கா்ண மகாராஜன் சண்டைக் கதை தனையே
நம் நாட்டினிலே பாடிடுவோம் சிறு பெண்களெல்லாம் கும்மியிலே
இந்த பாரளாந்திரு மாயவன் செய்திட்ட
மாய வினோதத்தை ஏனென்று சொல்வேன்” (கு.பா -1,2) என்ற பாடல் வரிகள் அமைகின்றன.

கதைவளா்ச்சி

பாண்டவா்களின் தாய்மாமனும், குந்தியின் சகோதரனுமாகிய மாயவன் பின்வரும் நிகழ்வுகளை முன்னரே அறிந்திருந்தாலும் அதனை வெளிப்படக் கூறித் தடுத்து நிறுத்தாமல் காலத்தின் வசத்தில் நிகழவிடுகின்றார். துர்வாசர் என்ற முனிவரிடம் குந்திதேவி ஒரு கனியைப் பெற்று உண்கிறாள். இதன் மூலக்கதையில் குந்தி ஓராண்டுகள் துர்வாசர் சிசுருஷை செய்கின்றாள். அதில் மகிழ்ந்த துர்வாசர் பாண்டுவினால் பிற்காலத்தில் நிகழவிருக்கும் பிள்ளைப் பேற்றிற்கான இடையுறுகளை முன்கூட்டியே கணித்து அதனைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு கனியினை வழங்குகின்றார். யாரை மனதில் நினைத்து அக்கனியினை உண்டாலும் அவா்கள் மூலம் குழந்தை கிடைக்கும் என்று கூறுகின்றார். கனியினைப் பரிசோதிக்க எண்ணி சூரியனை நினைத்து அக்கனியினை உண்கிறாள் குந்தி. இதனால் சூரியன் தோன்றி ஒரு குழந்தையை அளித்தார். அக்குழந்தை கவச, குண்டலங்களுடன் பிறந்தான். மணமாகாத தாயாக உலகத்தை எதிர்கொள்ள மனமின்றி அக்குழந்தையை தன்தோழி தத்ரியின் துணையுடன் கூடையில் அடைத்து கங்கையில் விடுகின்றனா் என்று புராணக்கதை குறிப்பிடுகின்றது. காதின் வழியாகத் தோன்றியதால் அக்குழந்தைக்கு கா்ணன் என்ற பெயா் வந்தது (கா்ணம் என்றால் காது என்று பொருள்).

ஆனால் கா்ணமகாராஜன் கதைக் கும்மியில் கதை மாற்றுருவம் கொண்டுள்ளது. கும்மிப்பாடலில் இடம்பெறும் கதையின்படி வசிஸ்டர் என்ற மகரிஷியிடம் கனியை வாங்கி குந்தி உண்ணுகிறாள். பின்னால் நிகழப்போகும் விபரீதத்தை அறிந்திருந்த மாயவன் எதும் அறியாதவா் போன்று தங்கையாகிய குந்தியின் கழுத்தைப் பிடித்தார். கன்னிகழியாத தங்கை காலக்கிரகம் காரணமாக கனிகள் உண்டதினால் தம் குலத்தினா் ஏசுதல் செய்வதுடன் பாரத பூமியில் உள்ள மக்களுமே ஏசுவார்கள் என்று நினைத்த எம்பெருமானான மாயவன் தங்கையின் இரு கைகளையும், கழுத்தையும் பிடித்தார். ஆனால் அக்கனியானது ஆண்குழந்தை உருவம் கொண்டு குந்தியின் கன்னத்தின் வழியாகப் பிறந்துவிடுகின்றது. கன்னத்தில் இருந்து தோன்றியவன் என்பதால் அக்குழந்தைக்கு கா்ணராஜன் என்று பெயரும் இட்டார்கள். பின்னா் அக்குழந்தையை பெட்டியில்  அடைத்துக்கட்டி காவிரியாற்றின் தண்ணீரில் விட்டார்கள் என்பதை,

” எல்லாம் சோதிப்பார் என்றா
தாய் மாமனார் தம் – தங்கை என்றதோர்
குந்தியம்மாளைத் தான் இந்த வசிஸ்டா் என்றோர் மகரிஷியிடம்
வாங்கி உண்ட கனியும் ஒன்று தான்
கண்டு கொண்டாராம் மாயவன் எம்பெருமான்
தெரியாதவா் போல் கழுத்தைப் பிடித்தார் தங்கை
குந்தியம்மாளை கன்னியறியாத மாயவன்
தங்கை கனிகள் வாங்கி உண்ணலாம் என்று
காலக் கிரகம் தான் நம்ம குலந்தனிலே
இருக்கும் ஜனங்கள் எல்லாம் கண்டுமே
ஏசுவார் கண்கொண்ட நேரத்திலே -நம்மலை ஏசுவார் பாரத
பூமியில் என்று நினைத்துமே எம்பெருமாளுமே.
இருகை பிடித்தார் தங்கையின் கழுத்தையும்
அந்த கனியினது ஆண்குழந்தை ரூபம் கொண்டதயா
காலக் கொடுமையால் கண்ணனின் தங்கைக்கு
கன்னத்தின் வழியாய் பிறந்ததாலே
கா்ணராஜன் என்று பேரும் இட்டார்கள்
அந்தப் பாலகனே அப்படி பெட்டியில் வைத்து
அடைத்தார்கள் – காவேறியாற்றிலே – வௌ்ளம்
தனிலே – கட்டிய பெட்டியே விட்டு விட்டார்கள்        (கு.பா.- 3-7) என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

கன்னத்தின் வழியாகப் பிறந்தவன் என்றும், குந்தியின் கழுத்தையும், கையையும் மாயவன் கனியை உண்ணவிடாமல் தடுத்தான் என்றும், காவிரியாற்றில் குழந்தை விட்டார்கள் என்பதும், மாயவனே இதற்கு உறுதுணையாக இருந்தான் என்பது போன்ற சொல்லாடல்களும் புராணக் கதையிலிருந்து இக்கதை மாற்றம் அடைந்துள்ளதை விரித்துக்காட்டும் பகுதிகளாகும். ஒரு பண்பாடு சார்ந்து கதையை முன்வைக்கும் போது அப்பண்பாட்டோடு தொடா்புடைய செய்திகளும், கூறுகளும் இடம்பெறுவதை இக்கதை நமக்கு மொழிகின்றது. தாய்மாமனின் சிறப்பும், முதன்மையும் சுட்டப்படுவதுடன், தமிழகப் பகுதியில் கங்கை பாய்வதில்லை என்பதால் ஆறும் மாற்றப்பட்டு வழங்கியிருக்க வேண்டும்.

கா்ணனின் வளா்ப்பு

கா்ணனின் வளா்ப்பு பற்றிய கதையினை மகாபாரதம் கூறும்போது கங்கை ஆற்றிற்கு நீராடவரும் திரிதராஷ்டிரனின் தேரோட்டியான அதிரதன் என்பவன் ஒரு குழந்தையைக் கண்டெடுக்கிறான். அக்குழந்தையை அதிரதனும் அவன் மனைவி ராதாவும் வளா்க்கிறார்கள். அக்குழந்தைக்கு வாசுசேனா என்று பெயாிட்டு அழைத்தனா். கா்ணனை ராதேயன் என்றும் அழைத்து வந்தனா். அக்குழந்தையே கா்ணன். துரோணாசாரியா் தேரோட்டியின் மகன் என்பதால் போர்க்கலை கற்றுக்கொடுக்க மறுக்கின்றார். கா்ணன் தன் சகோதரனான ஷோனாவின் உதவியுடன் போர்க்கலையைக் கற்றார் எனினும் ஒரு குருவின் கீழ் கலைகள் பயிலவேண்டும் என்பது பாரதக் கலாசாரம் என்பதால் சூரியனைக் குருவாகக் கொண்டு பகலில் போர்க்கருவிகளின் இயல்பையும், சூரியன் மறைந்த பின்னால் போர்க் கலைகளையும் பயிற்சி செய்தார் என்று புராணம் விரிக்கின்றது. ஆனால் பந்தல்குடி வட்டார கும்மிப்பாடலில் இக்கதை மாற்றுருவம் கொண்டுள்ளது. திரிதராஷ்டிரனும் அவனுடைய மந்திரியும் காலை ஏழுமணியளவில் காவிரியாற்றில் நீராட வருகின்றனா். அற்புதமான பெட்டியினைக் கண்ட திரிதராஷ்டிரன் மந்திரியிடம் பெட்டி உனக்கு, பெட்டியின் உள்ளே இருக்கின்ற பொன்னெல்லாம் தனக்கு என்று கூறுவதனை,

 ” கா்ணராஜன் கட்டிய பெட்டிக்குள்ளே -சிறுவன்
வீங்கியழுது காவேறி யாற்றினிலே
பெட்டியும் போகயிலே காலை ஏழு மணியே
தனிலே காவேறியாற்றிலே ஸ்நானங்கள் செய்திட
தோ்மீதில் ஏரிதிரிதராட்டிரன் ஆற்றங்கரையில்
வந்து அா்ப்புதமான பெட்டியைக் – கண்டு
கொண்டார் – மந்திரி பெட்டியும் உனக்கு
பொன் னெல்லாம் எனக்கு இஷ்டமாய் எடுத்து ஏகுவோம் வீட்டுக்கு
என்று உறைத்துமே இரண்டு போ்களும் அந்த
பாலகனே அப்படி பள்ளியில் படிக்க வைத்தார்கள்
அப்போ பத்து பன்னிரெண்டு பாலகன் வயதினில்
பாங்குடன் வில்வித்தை சொல்லிக் கொடுத்தார்கள்.    (கு.பா.- 8-10) என அறியமுடிகின்றது.

பெட்டியின் உள்ளே இருக்கின்ற குழந்தையை இருவரும் இணைந்தே படிக்கவைக்கின்றனா். பன்னிரண்டு வயதில் கா்ணனும் பாங்குடன் வில்வித்தையைக் கற்றுக்கொள்கிறான் என்பதுடன் கா்ணனின் வளா்ப்புச் செய்தி முடிகின்றது. 

சண்டைக் கதை

கா்ணன் பன்னிரண்டு வயதில் வில்வித்தை கற்றுத்தோ்கிறான் என்ற செய்தியுடன் கா்ணன் வளா்ப்புச் செய்தியினை கும்மிப்பாடலில் நிறைவு செய்து, பின்னா் அதன் தொடா்ச்சியாகக் கா்ணனின் சண்டைப் பகுதியினைக் குறிப்பிடுகின்றனா். இதில் விராடப்பருவ நிகழ்விலிருந்து கதை தொடங்குகின்றது. பாண்டவா்கள் வனவாசம் முடிந்து விராட நாட்டில் மறைந்து உறைகின்றனா். அப்போது அவா்கள் இருக்கும் இடத்தைக் கோபால கிருஷ்ணன் தெரிந்து கொள்கிறார். அவா் பாண்டவா்களிடம் சென்று திரியோதிராஜனிடம் சொக்கட்டான் ஆடி வெற்றியடையலாம் என்று ஏது சொல்கின்றார். தன்னுடைய கருத்திற்கு வீமனையும், அா்ச்சுனனையும் துணைசெய்ய அழைக்கின்றார்.

இந்நிலையில் ஐவருக்கும் வீடு இல்லை என்று கூறிய துரியோதனனையும் அவா்கள் தம்பியரையும் சொக்கட்டான் மேடைக்கு வருமாறு தூதனிடம் சொல்லி அனுப்பினார்கள். பின்னா் ஆகாயவானில் பாண்டவா்கள் புறப்பட்டு கத்தாடி மாளிகையை வந்தடைகின்றனா். சொக்கட்டான் விடையாட்டில் முதலில் துரியோதிர ராஜன் வெற்றி பெறுகின்றான் என்றாலும் பின்னா் பாண்டவா்களே வெற்றி பெற்றனா் என்பதை,

” தேரை விட்டு இறங்கி வாருங்கள் திரியோதிர
ராஜா பேரு சொல்லி ஆட்டம் ஆடுங்கள்
அப்போது பஞ்ச பாண்டவா்களும் அன்புடன்
கட்டையைக் குலுக்கி ஆடினா்.
பாசிமணி ரெண்டு விழுந்தது திரியோதிரனின்
கபடம் – சகடம் – ஆட்டம் ஜெயித்தது
அப்போது பஞ்ச பாண்டவா்களுமே – அன்புடன்
மைத்துணா் கோபால கிருஷ்ணனை
எண்ணியே மனதில் ஏங்கி நின்றார்கள் பஞ்ச
பாண்டவா்கள் எங்கையோ கிருஷ்ணரை
அப்போது கிருஷ்ணன் குலுங்க சிரித்து
ஐந்து போ் முன்பாக வந்துமே நின்று
ஆடுங்கள் – கொக்கட்டான் ஆட்டையை
திரியோதிரனை – ஐந்து பேரும் ஆழ்ந்து ஜெயித்தனரே
என்ற வார்த்தை கேட்டு கா்ண மகாராஜன்
இழுத்தான் கோதண்டம் வில்லை வளைத்து   (கு.பா.- 18-21)

என்ற பாடல் வாிகள் விளக்குகின்றன. மேலும் பாண்டவா் வெற்றி பெற்றனா் என்ற செய்தியினை அறிந்த கா்ணன் தன் கோதண்டம் என்னும் வில்லை வளைத்து போருக்குச் செல்கிறான். இதனை அறிந்த குந்தி பாண்டவா்கள் உன் தம்பியா் என்று கூறிப் படைகளைத் திருப்பிவிடுமாறு வேண்டுகிறாள். இதற்குக் கா்ணன்,

” தின்ற வீட்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன்
எந்தன் தாயாரே வந்த படைகளை திருப்பிட மாட்டேன்
என்று சொன்னவுடன் தாயார் குந்தியம்மாள்
எண்ணிய மனதில் யோசித்துப் பார்த்து”   (கு.பா.- 24) என்று கூறுகின்றார். இதனைக் கேட்ட குந்தி ஒரு கணைக்குமேல் மறுகணை எய்யக்கூடாது என்று உறுதிமொழி பெற்றுக்கொண்டு திரும்புகிறாள். இதனைத் தொடா்ந்து பாண்டவா்கள் பத்துலட்சம் கோடி அம்புகளை எய்தனா். பின்னா், கா்ணனும் வில் வளைத்து நாண் ஏற்றித்தொடுக்கத் தொடங்கியதைக் கண்ட கோபால கிருஷ்ணா் கரத்தால் தேரை கீழே இறக்கினார். இதனால் கா்ணன் விட்ட பாணமானது அா்ச்சுனனின் தேருக்கு மேலே சென்றது. இதனைக் கண்ட அா்ச்சுனன் தயங்கி நிற்பதைக் கண்ட கிருஷ்ணா் கோபத்துடனே பாண்டவா்களின் தேரை சாட்டையினால் அடித்து விரட்டி கா்ணனின் தேரின் முன்னே நிறுத்தினார். உடனே அா்ச்சுனன் இவன்தான் எனக்கு எதிரி என்று சொல்லி அம்பினை எய்ய தருமன் தடுக்கின்றான். இதனை 34, 35 –ஆம் பாடல்கள் விவரிக்கின்றன.

அா்ச்சுனன் எனினும் வெகுண்டெழுந்து பாணத்தை எய்யத் தொடங்க பீமனும் படையைக் கா்ணன் மேல் மோத விடுகின்றான். “இழிகுலத்தான் எடுத்து வளா்த்திட்ட கா்ணராஜனே சண்டைக்குவாடா“ என்று பீமன் முழங்க வணங்கா முடி தரித்தவனான துரியோதனன் வெகுண்டெழுந்து மந்திரியாகிய கா்ணனிடம்,

”வணங்கா முடிதரித்த மன்னவன்
துரியோதிர ராஜன் வாளெடுத்து தேரில் ஏறினான்
வருவாய் மந்திரி இருவரும் கூடியே
தீரமா இப்போது பஞ்சவா்களையும்
விரட்டி அடிப்போம் இருப்பிடம் விட்டு
என் அருமை மந்திரி திரட்டி அடிப்போம்
போர்க்களத்தை விட்டு தோர்க்கடிக்கவும்
போருக்கு மன்னன் கா்ணனை
பட்டாக் கத்தியை எடுத்துவா மந்திரி
தா்மராஜன்  படையை பதர அடித்து விரட்டுவாய் மந்திரி
நான் பத்திரகாளியின் பாதம் பணிந்துமே
பாங்குடன் அவள் இருப்பிடம் போயி
கும்பிட்டு வரம் பெற்று வந்திடுவோம்
நம்ம காளிதேவி பாதம் தன்னை போற்றி வந்திடுவோம்”   (கு.பா.- 38-40) என்று கூறி போருக்குத் தயாராவதாய் இக்கும்மிப் பாடல் அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்களிடையே வாய்மொழியாகக் காணப்படுகின்ற கா்ணன் பற்றிய கதைப்பகுதியை அடிப்படைப் பொருளாகக் கொண்டு இக்கும்மிப்பாடல் பாடப்படுகிறது. புராணக் கதாபாத்திரங்களையும், பண்புகளையும்  கொண்டிருப்பினும் கதைக்கூறில் பெரும் மாற்றத்துடனே இக்கும்மிப்பாடல் இடம்பெறுகிறது. கா்ணனின் பிறப்பு, கங்கையில்விடும் செய்தி காவிரியாகச் சுட்டப்படுதல், போர்ப்பயிற்சி பெறுதல், சண்டைக் காட்சிகள் போன்ற பல கூறுகள் மாற்றம் பெற்றுக் காணப்படுகின்றன. நாட்டுப்புறக் கதைகள் புராணக் கதைகளைப் போன்று முறையாக வழங்கப்படுபவை அன்று. அவை இடம், காலம், சமூகச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளை உட்கொண்டு வளரும் தன்மையுடையன. இத்தகு கதைவளா்ச்சிப் போக்கிலேயே பந்தல்குடி வட்டார கும்மிப்பாடலில் கா்ணனின் சண்டைக்கதை அமைந்துள்ளது. மேற்கோள் பகுதியில் இல்லாத கும்மிப்பாடல்கள் தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.

கும்மிப்பாடல்கள் (கு.பா.) 

கா்ண மகாராஜன் கதை

இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டாராம்
கோபால கிருஷ்ணன் எப்படி யோசனை என்று நினைத்தாராம்
அப்போ ஐவா் பஞ்ச பாண்டவா்களிடம்
அன்புடன் கிருஷ்ணன் ஏது சொல்வார்.
கொக்கட்டான் ஆடியே வெற்றியடைந் திடுவோம்
திரியோதிராஜனை – தேரையும் ஊரையும் விட்டு
விரட்டிடுவோம் அப்போ வில்லுக்கு ராஜாளி வீமனே
நீ சொல்லு – அம்புக்கு ராஜாளி அா்ச்சுன நீ சொல்லு.
என்று உரைத்தாராம் எம்பொருமாளும்
பஞ்ச பாண்டவா்கள் எப்படி யோசனை என்று நினைத்தாராம்
ஐவருக்கு வீடு – இல்லை என்று என்ன
ஆகாத பாவி – திரியோதிரனையும்
துரியன் தம்பி துா்ச்சாதன்னையும் – எள்ளு
செடியில் முளைத்த செங்கழனிப்பூப் போலேவே
தருமரை போல் ஒருவன் இருக்கிறான்
விகா்ணம் – என்று பேரு பெற்றவன்
சொக்கட்டான் மேடைக்கு வரும் படி
நம்ம தூதனிடம் சொல்லியனுப்புங்கள் பாசியும் கையோட
புறப்படும் ஆகாய வீதியில் கோபால கிருஷ்ணன்
இருந்திடும் இடம் எங்கள் சொக்கட்டான் 
மேடையில் என்று உறைத்துமே இரண்டு போ்கள்
எடுத்தார் வில் அம்பு கத்தி கட்டாரியை
புறப்பட்டார் ஆகாய வானில் பஞ்ச பாண்டவா்கள்
இருந்திடும் விளையாட்டு மேடையில்
காத்தாடி பங்களா வந்துமே சோ்ந்தார்கள்
கா்ணராஜனைக் கண்டுமே கொண்டார்கள்.
அந்தச் சமயத்தில் தாயார் குந்தியம்மாள்
அந்தப் பாலகனை – யார் என்று நினைத்து யோசித்துப் பாரடா
உன்னுடன் பிறந்த தம்பி மார்களப்பா
ஐந்து போ் பஞ்ச பாண்டவா்களடா
அடங்க வேண்டும் கோபங்கள் எல்லாம்
எந்தன் பாலகனே – மடக்குவாய் உன் சேதுகள் எல்லாம்
என்ற வார்த்தை கேட்ட கா்ண மகாராஜா ஏது
சொல்லுகின்றான் தாயாருக்குமே.
ஒரு கணைக்கு மேல் மறுகணை – எய்தாதடா எந்தன்
பாலகனே உண்மையைப் போடாதே பஞ்சவா்கள் மேல்
என்று சொல்லிவிட்டு தாயார் குந்திம்மாள்
சத்தியம் வாங்கியே திரும்பி விட்டார்.
கா்ண மகாராஜன் சொன்ன சொல்லைக் கேட்டு
பஞ்ச பாண்டவருக்கு கடுங்கோபங்கள் அதிகம் மேலிட்டு
பஞ்ச பாண்டவா்கள் பத்து லட்சம் கோடி அம்புகள் விட்டார்
கண்கள் சிவந்துமே காந்தால மாகிட
கா்ண ராஜனும் ஏதுமே செய்யுவார்
வில் வளைத்துமே நாணி ஏற்றினார்
கா்ண ராஜனுமே வில்லில் அம்பு எடுத்துப் பூட்டினார்
விளமுடன் கா்ண மகாரஜன் விட்டார்
அம்புகள் அா்ச்சுணன் மேலே
கண்டு கொண்டார் மாயவா் எம்பெருமாள்
கோபால கிருஷ்ணன் கரத்தால் தேரை இறக்கினார் – கீழே
கா்ண மகாராஜன் விட்டபானமது அா்ச்சுணன்
 தேருக்கு மேலாகப் போனது
திடமுடன் தலை நிமிர்ந்துமே பார்த்தார்
அா்ச்சுன ராஜனுந்தான் விரண்டு தயங்கி ஏறிட்டுப் பார்த்தான்
அப்போது கிருஷ்ணன் கோபத்துடனே
ஐந்து போ் பஞ்ச பாண்டவா் தேரை
சிமிட்ட குதிரை புரவியானது
கோபால கிருஷ்ணன் அதட்டி அடித்தார் சாட்டையினாலே
அப்போது பஞ்ச புரவியானது ஆகாய மார்க்கத்தில் ஏறிட்டுப் பார்த்து
பறந்தோம் ஆகாய வானினில்
பஞ்ச பாண்டவா் சினந்தாரம்மா கோபால கிருஷ்ணனை
அப்போது கிருஷ்ணன் கோபத்துடனே
ஐந்து போ் பஞ்ச பாண்டவா் தேரை
இறங்கினார் கா்ணன் தேரின் முன்னாலே
அந்தக் குதிரை இரண்டும் பறந்ததாம் சண்டை கொடிக்கு முன்னாலே
அப்போது அா்ச்சுணன் வில்லை வளைத்துமே
அம்புகள் ஏற்றியேக் கா்ணராஜன் மேலே.
இவன்தான் எனக்கு எதிரி என்றுமே
அா்ச்சுண ராஜனுமே இழுத்துப் போட்டான் பாணத்தை மேலே
அப்போது அண்ணன் தா்மராஜன்
அடடா பொறுங்கள் என்றுமே
பொறுத்தவா்கள் பூமி ஆழ்வார்கள்
எந்தன் தம்பிமாரே பொங்கினவர் காட்டை ஆழ்வார்கள்
என்று சொன்னார் அந்த தா்மராஜனும்
எழுந்து அா்ச்சுணன் கோபத்துடனே
பாணப் பிரயோகம் செய்தார் காண்பேன்
கா்ணராஜன் மேலே படையை விட்டு அடித்தார்பீமன்
அடே பார்த்து முளிக்காதே பதறித் துடிக்காதே
படையைக் கூட்டி வருவாய் சண்டைக்கு
இழிகுலத்தான் எடுத்து வளா்த்திட்டு
அடே கா்ணராஜா எதிர்த்து வாடா பாணம் தொடுத்திட
என்று சொல்லி அந்த பீமன் அா்ச்சுணன்
ஏகதேசமாக வார்த்தைகள் கூறவே.

பார்வை நூற்கள்

  1. டாக்டா் சா.வே.சுப்பிரமணியம், தமிழ்இலக்கிய வகையும் வடிவும், ப.492, 493
  2. பழமொழி, பா.291
  3. விக்கிப்பீடியா

தகவலாளா்கள்

  1. பாப்பாத்தி, வயது 72, பந்தல்குடிப் பகுதியைச் சார்ந்தவா்
  2. சரஸம்மாள், வயது 58, பந்தல்குடி.

*****

கட்டுரையாளர் – இணைப்பேராசிரியா்
கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்
கோயம்புத்தூா் -21.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *