இலக்கியம்கவிதைகள்மரபுக் கவிதைகள்

நிறையாய் வளராய்

இனிய ஆசிரியர் (குரு) தின வாழ்த்துகள்

 

புவியாய் கதிராய் மதியாய் வெளியாய்
நிலமாய் நீராய் தீயாய் காற்றாய்
மலையாய் நதியாய் ஒலியாய் ஒளியாய்
சகமாய் சுகமாய் மனமாய் வளர்ந்தே!!

காயாய் கனியாய் கசப்பாய் இனிப்பாய்
தாயாய் பதியாய் தமிழாய் அணியாய்
உறவாய் உணர்வாய் உளமாய் இதமாய்
கறவாய் கவியாய் கனவாய் நனவாய்

சுரமாய் சுயமாய் சுருதியாய் கிருதியாய்
தரமாய் சரமாய் வரியாய் சரியாய்
கரமாய் க்ரமமாய் வரமாய் வருமாய்
விரியாய் குருவே திரிமேன் ஒளியே!

மனமாய் குணமாய் இனமாய் மதமாய்
தனமாய் வளமாய் தினமாய் திறமாய்
வ‌னமாய் தவமாய் பிறவாய் இறவாய்
முடிவாய் தருவாய் முதல்வாய் சரணே!!

சரியாய் உரையாய் விரியாய் வரியாய்
கரியாய் அரனாய் அரியாய் குகனாய்
தெரியாய் புரியாய் சுவையாய் அமுதே!
பெரிதாய் சிறிதாய் கிரியின் அழகே!!

கருவாய் திருவாய் கனிவாய் மொழியாய்
தருவாய் தருவாய் ஒருவாய் மொழியாய்
உருவாய் அறிவாய் அருவாய்த் தெளிவாய்
குருவாய் வருவாய் விரைவாய் மனதே

வரவாய் செலவாய் இரவாய் பகலாய்
முழுதாய் இலதாய் மதியாய் ஒளியாய்
புதிதாய் முதிதாய் வயதாய் தொடரும்
விதிதாய் சுழலும் உனதாய் முடியும்

உருவில் குருவாய் அருளில் தாயாய்
கருவின் முதலாய் அறிவின் விழுதாய்
இருளில் ஒளியாய் இறையே அருளாய்
மறையாய் மலராய் நிறையாய் வளராய்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க