அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்

0

கணியன்பாலன்

        அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்

பாரதியும் தமிழும்:

     “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி ” என்றும்

     “வானம் அறிந்தது அனைத்தும் அறிந்த வளர்மொழி” என்றும்

            தமிழ் மொழி குறித்து நமது எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன் பெருமிதத்தோடு பாடுகிறான். அவன் தமிழின் மகாகவிகளில் ஒருவன். பல மொழிகளைக் கற்றவன். நமது தமிழகத்தின் தேசியக் கல்வி குறித்து மிக நீண்டகால நோக்கோடு அந்த மகாகவி பாரதி சொல்லிய சொற்கள் காலத்துக்கும் அழியாதவை. ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியவை.

        “தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாசையை பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாசையாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசீயம்’ என்ற பதத்தின் பொருளுக்கு விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாசையே பிரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை; இதை மறந்து விடக் கூடாது”. (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், பக்:365)

      கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் பாரதி சொல்லிய சொற்கள் இவை. இங்கு தேசம் என்பது தமிழகமே. அன்றே தமிழ் தேசியக் கல்விக் கொள்கை குறித்துப் பாரதி பேசியுள்ளார். தமிழ் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையாகத் தமிழ் மொழிதான் இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் இருக்கக் கூடாது என்றும் தெளிவாகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும் அவர்,“தேச பாசையின் மூலமாகவே இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப் படவேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாசை மூலமாக பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக்கல்வி என்று பெயர் சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ?” என்கிறார்(அதே நூல், பக்;368). ஆக தமிழகத்தின் தேசிய மொழி தமிழ் என்பதையும், அதன் மூலம்தான் அனைத்துப் பாடங்களும் சொல்லித்தரப்பட வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

        மேலும் அவர்,“தமிழ்நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் பாசையில் நடத்த வேண்டும் என்பது பொருள். நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாக கற்பிக்கப்படுவதுமின்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். சிலேட், பென்சில் என்று சொல்லக்கூடாது” என்கிறார்(அதே நூல்,பக்:395). இறுதியாக அவர் சொல்வதைக் கேளுங்கள்,“தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசியக்கல்வி இன்றியமையாதது. தேசியக்  கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்”(அதே நூல், பக்:384). என்கிறார்.

          பாரதி மிகக் கடுமையான வார்த்தைகளால் தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தைச் சாடுகிறார். கவிஞனுக்கே உரிய ஆவேசத்தோடு தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தைப் பிசாசுகள் வாழும் சுடுகாட்டுக்கு ஒப்பிடுகிறார். அதனால் தான் அவர் மகாகவி ஆகிறார். தமிழகத்தில் தேசியக் கல்வி என்பது தமிழ்வழிக் கல்விதான் என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகிறார். அவர் சொல்லிச் சென்று 100 ஆண்டுகளுக்குப் பின், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகியபின் தமிழகத்தில் என்ன நடந்து கொண்டுள்ளது? அந்நிய மொழி மோகம் தலை விரித்தாடுகிறது. ஏன் இந்த நிலை? விஜய நகரப் பேரரசின் நாயக்கர் ஆட்சிகாலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை 700 வருடங்களாகத்  தமிழகம் அந்நியர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், தொடர்ந்து இன்று வரை தமது தவறான சிந்தனைகளின் மூலம் தமிழர்களின் சுய சிந்தனையை மழுங்கடித்து வருவதும் இந்நிலைக்குக் காரணம் எனலாம். அதனால் “அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்” என்பது நமக்குப் பொருந்துகிறது.

மொழியே நமது அடையாளம்:

             நமது மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக  வாழ்ந்து வந்த நமது தாய் தந்தையர்களின், நமது முன்னோர்களின் பரந்து விரிந்த அறிவும், நீண்ட நெடிய அனுபவமும், ஆழ்ந்த கருத்துக்களும், உயர்ந்த தத்துவங்களும், சிறந்த பழக்க வழக்கங்களும், விழுமிய பண்பாடும், போற்றத்தக்க அறிவியலும், தொழில்நுட்பமும், புகழ்மிக்க அவர்களின் வரலாறும் இன்னபிறவும் நமது மொழியில் தான் காலங்காலமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டன. நமது மொழியில் தான் தொடர்ந்து அவைகளைப் பாதுகாத்து வைத்தும் வருகிறோம். உலகெங்கும் உள்ள அனைத்து மனித இனங்களும் அதனதன் மொழிகளில்தான் இவைகளைப் பாதுகாத்து வந்தன, தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. மொழி இல்லாது போகும்பொழுது அது பாதுகாத்து வந்த அனைத்தும் இல்லாது போய் விடும். அப்பொழுது அந்தச் சமுதாயமும் இல்லாது போய்விடும். எனவே மொழி என்பது வெறும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் கருவி மட்டுமல்ல. ஒரு மொழி பேசும் சமுதாயத்தின் உயிர் அதன் மொழி தான். அம்மொழியே அச்சமுதாயத்தின் ஆன்மா. அதுவே அதன் ஆளுமையும் ஆகும்.

            அதனால் தான் மொழியை இழந்த சமுதாயம் எளிதில் அடிமையாகி விடுகிறது. அழிந்தும் போய் விடுகிறது. ஒரு சமுதாயத்தை அடிமைப்படுத்த விரும்பும் அந்நிய சக்திகள் முதலில் அதன் மொழியைச் சிதைத்து அழிக்க விரும்புகின்றன. வரலாற்றில் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. பண்டைய எகிப்திய சமுதாயம் இன்று இல்லை. அதன் பிரமிடுகள் மட்டுமே இன்று சாட்சிகளாக நிற்கின்றன. அன்றைய எகிப்திய மக்கள் முழுமையாகக் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டு விடவில்லை. அவர்கள் தங்கள் பண்டைய மொழி அறிவை இழந்து, தங்கள் மொழியை மறந்து அந்நியர்கள் திணித்த அந்நிய மொழியைத் தங்கள் மொழியாக மாற்றிக் கொண்டதால், நாளடைவில் பழைய மொழி குறித்த எந்தவிதத் தடையமும் அவர்களிடம் இல்லாதுபோய் அவர்களின் பண்டைய சமுதாயமே இல்லாது போய் விட்டது. இன்று எகிப்து ஒரு அரேபிய மொழி பேசும் அரேபிய நாடாக ஆகியுள்ளது.

         800 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் தமிழ்தான் இருந்தது. அன்று அவர்கள் தமிழர்களாக இருந்தனர். இன்று அவர்கள் மழையாளிகளாக மாறிவிட்டனர். சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் வரையான உலகளாவிய விழுமியங்களைக் கொண்ட மிகப்பெரிய இலக்கியச் செல்வத்தை அவர்கள் இழந்துவிட்டனர். தாங்கள் ஒருகாலத்தில் தமிழர்களாக இருந்தோம் என்பதையும் மறந்து விட்டனர். அவர்களின் 3000 ஆண்டுகால வரலாறு என்பது 800 ஆண்டுகால வரலாறாகச்  சுருங்கிவிட்டது. தமிழகமும் வேறு ஏதாவது மொழிக்கு மாற்றப்பட்டிருந்தால் தமிழ்மொழியின் பண்டைய இலக்கியச் செல்வம் அனைத்தும் இல்லாது போயிருக்கும் என்பதோடு, தமிழர்கள் என்ற இனமே இல்லாது போயிருக்கும். உலகளாவிய விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியத்தை உலக சமுதாயம் இழந்திருக்கும். ஒருவர் தன் தாய் மூலமே, தான் யார் என்பதை அறிய முடியும். அது போலவே ஒரு சமுதாயம் அதன் மொழி மூலமே தாங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆகவே மொழி என்பது ஒரு தாய் போன்றது. ஒரு சமுதாயம் அதன் மொழியை இழந்தால் அதன் வரலாறு, பண்பாடு, இலக்கியம், இசை, அதன் தொழில்நுட்பம், அறிவியல் என அனைத்தையும் அது இழந்து விடும். நாளடைவில் தான் யார் என்பது அதற்குத் தெரியாதுபோய் அடிமைகளாக, கீழ் மக்களாக ஆகவேண்டிய நிலை ஏற்படலாம். வரலாற்றில் இந்நிலை பல சமுதாயங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

           நாம் யார் என்பதை நமது வருங்காலப் பரம்பரை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நமது மொழியை நாம் பாதுகாப்பது அவசியம். ஒவ்வொருவரும் தனது பெயரைச் சொல்ல வாரிசு வேண்டும் என விரும்புகின்றனர். தனது வாரிசுகளைப் பாதுகாக்கவும் விரும்புகின்றனர். அதற்காகத் தனது காலம் முழுவதையும் செலவழித்துப் பாடுபடுகின்றனர். ஆனால் தனது சமுதாயத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற விருப்பம் அவர்களுக்கு இருப்பதில்லை. தனது சமுதாயத்தைப் பாதுகாப்பதன் மூலமே தனது பரம்பரையைப் பாதுகாக்க முடியும் என்பதை அவர்கள் அறியவில்லை. சமுதாயத்தைப் பாதுகாக்க மொழியைப் பாதுகாப்பது அவசியம் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. ஆனால் வளர்ந்த நாடுகளில் தங்கள் சமுதாயத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற விருப்பம் அவர்களிடம் இருக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் மொழியைப் பாதுகாக்கிறார்கள்.

     இந்தியாவில், தமிழகத்தில் அது சாதியை, மதத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது. மதமோ சாதியோ சமுதாயத்தைப் பாதுகாக்க முடியாது என்பதோடு அவை மனிதனைப் பிளவுபடுத்தி மனிதமாண்புகளைச் சிதைத்து, சமுதாயத்தை முடமாக்கி அழித்து விடுகிறது. மேலும் அதனால் சமுதாயத்தின் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, தொழில்நுட்பம், அறிவியல் முதலியனவற்றை பாதுகாக்க முடியாது. மொழி மட்டுமே சமுதாயத்தை மேம்படுத்தி, இவைகளைப் பாதுகாக்கவல்லது. ஒரு மொழியின் இலக்கியம் (கவிதை, காப்பியம், உரைநடை, கதை போன்றவை) தனி மனிதனைப் பண்படுத்தி,  அவனை ஒரு பொறுப்புள்ள சமுதாய  உறுப்பினனாக மாற்றித்தருகிறது. அவன் நாளடைவில் அச்சமுதாயத்தின், உலக சமூகத்தின் ஒரு சிறந்த பாதுகாவலனாக மாறுகிறான். உலகளாவிய விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியங்கள் உலக மனிதனை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை. எனவே ஒரு சிறந்த மொழியை, செவ்வியல் இலக்கியங்களை உடைய மொழியைப் பாதுகாப்பது என்பது அந்த மொழிச் சமுதாயத்தை மட்டுமல்ல, உலகத்தை உலக மனிதனைப் பாதுகாப்பதும் ஆகும்.

வளர்ந்த நாடுகளில் மொழி:

        ஒரு சமுதாய மக்களின் மொழி அதன் ஆட்சி மொழியாக, அதன் கல்வி மொழியாக, அச்சமுதாயத்தின் அனைத்துமாக இருக்க வேண்டும். அதன் மூலமே அச்சமுதாயத்தின் வளர்ச்சியை, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். சொந்த மொழியை ஆட்சி மொழியாகக் கல்வி மொழியாகக் கொண்டிராத எந்த நாடும் வளர்ச்சி பெற்றதாக வரலாற்றில் காண முடியாது. ஆசியாவில் நன்கு வளர்ச்சிபெற்ற சீனா, ஜப்பான், கொரியா ஆகிய மூன்று நாடுகளையும், ஐரோப்பாவில் நன்கு வளர்ச்சிபெற்ற ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளையும் எடுத்துக் கொள்வோம். இவைகளின் மொழிகள் முறையே சீனமொழி, ஜப்பான்மொழி, கொரியமொழி, ஜெர்மன்மொழி, பிரெஞ்சுமொழி, இத்தாலிமொழி என்பன ஆகும். இன்னாடுகளில் இம்மொழிகளே ஆட்சி மொழிகளாக, கல்விமொழிகளாக உள்ளன. ஆரம்பக்கல்வியில்   வேறுமொழிகள் சொல்லித்தரப் படுவதில்லை. சில வருடங்களாக உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆங்கிலம்  ஒரு மொழியாகச் சொல்லித் தரப்படுகிறது. கல்லூரிகளில் பிற மொழிகள் மொழி ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் மேலே சொல்லப்பட்ட அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாட்டு மொழிவழிக் கல்வியே ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை உள்ளது.

          ஆக இந்த வளர்ந்த நாடுகள் அனைத்தும் தம் சொந்த மொழிகளிலேயே அனைத்துப் பாடங்களையும் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகம்வரை சொல்லித் தருகின்றன. அதனால் தான் அவை வளர்ந்த நாடுகளாக உள்ளன. இன்றாவது அவை உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கட்டாயம் சொல்லித் தருகின்றன. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவை வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோது பிற மொழிகளில் எதையாவது ஒன்றைக் கற்க வாய்ப்பு இருந்ததே ஒழிய ஆங்கிலம் ஒரு கட்டாய மொழிப் பாடமாக அன்று இல்லை. ஆனால் உலகமயமாக்கல் என்பதன் காரணமாகவும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஆங்கிலம் இருப்பதாலும், வணிக நோக்கிலும், ஏதாவது ஒரு பிற மொழி அறிவு மனித ஆளுமைக்கு நல்லது என்பதாலும் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் அவை கற்றுத்தருகின்றன. அதே சமயம் அவர்களின் மொழியே அனைத்துமாக அங்கு இருந்து வருகிறது.

    சீனா உட்பட பல வளர்ந்த நாடுகள் அனைத்துமே கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பொருளாதார வளர்ச்சியிலும், ஏற்றுமதியிலும் உலகின் முன்னணி நாடுகளாக இருந்து வருகின்றன. இந்நாடுகளில் சொந்த மொழியே அனைத்துமாக இருக்கிறது. மிக அதிக அளவில் அவை ஏற்றுமதி செய்த போதிலும் எந்த ஒரு பிற மொழியும் ஒரு கட்டாய பாடமாகக் கூட இருக்கவில்லை. பிற மொழிவழிக்கல்வி என்பது அறவே அன்றும் இல்லை, இன்றும் இல்லை. அந்த நாட்டின் சொந்த மொழியில் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்வி வரை படிப்பு இருக்கிறது. அதுதான் படிப்பில் தெளிவைத் தந்தது; ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்தது; திறமையானவர்களை மட்டுமல்ல பண்பாளர்களையும் உருவாக்கியது; தன்னம்பிக்கையையும், சுயசார்பினையையும் அதிகப்படுத்தியது; ஒட்டு மொத்தமாக அந்நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு அவை வழிகோழியது. சொந்த மொழிதான் சுய சிந்தனையை, சுய அறிவை வளர்க்கும் என்பதற்கு இந்த வளர்ந்த நாடுகள் சான்றாதாரங்களாக இருக்கின்றன. தமிழகம் சுய சிந்தனையோடும், சுய அறிவோடும் இருக்கவேண்டுமானால் வளர்ந்த நாடுகளைப்போன்று நமது சொந்த மொழியான தமிழில்தான் அனைத்தும் இருக்க வேண்டும். ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்வி வரை படிப்பு அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு கட்டாய மொழிப்பாடமாக வைத்துக் கொள்ளலாம். தமிழே அரசு மொழியாக, கல்வி மொழியாக, வணிக மொழியாக, ஆலய மொழியாக இருக்க வேண்டும். அதுவே தமிழகத்தின் வளர்ச்சியை, வளத்தை உறுதி செய்யும்.

 ஆங்கில மொழிக் கல்வி:

                        தமிழகத்தின் ஒவ்வொரு பள்ளி மாணவ மாணவியரும் ஆங்கிலத்தை நன்கு படிக்க, எழுத, பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆங்கிலவழிக் கல்வி அதற்கு மாற்றாகாது. தன்னம்பிக்கையும், சுயசிந்தனையும், சிறந்த பண்பு நலன்களும் கொண்ட ஒரு தமிழ் தேசக் குடிமகனை உருவாக்கத் தமிழ்வழிக் கல்வி தான் தேவை. தமிழை நன்கு அறிந்திருந்தால்தான் ஆங்கிலத்தை படிக்க முடியும். முதலில் தெரிந்ததை சொல்லித்தந்த பின் தெரியாததை சொல்லித்தருவதே பயன்தரும். குழந்தைகளுக்கு தமிழ் தெரியும். அதனை சொல்லித்தந்த பின் அதன் மூலம் ஆங்கிலத்தைச் சொல்லித்தருவதே ஆங்கில மொழி அறிவை வளர்க்கும். மேலும். ஆங்கிலவழிக் கல்வி தன்னம்பிக்கையை, சுயசிந்தனையை, சிறந்த பண்பு நலன்களைக் கண்டிப்பாக உருவாக்காது. அது திறமையும் அறிவும் சுயநலமும் உடைய மனித இயந்திரங்களைத் தான் உருவாக்கும். அதனைத்தான் இன்றைய ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் செய்து கொண்டுள்ளன. ஆனால் தமிழ்வழிக்கல்வி சிறந்த மனிதனை உருவாக்கும்.

         அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. கல்வியில் தரம் இன்மை, போதிய வசதிகள் இன்மை, ஆங்கில மோகம், வறட்டுப் பெருமை முதலியன அதன் சில காரணங்களாகும். அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு இடங்கள் முதலியவற்றின் தரத்தை ஆங்கிலவழிப் பள்ளிகளுக்குச் சமமாக  உயர்த்த வேண்டும். முக்கியமாக ஆரம்பப் பள்ளிகளுக்கு அதிக வசதிகள் செய்து தர வேண்டும். தனியார்களின் உதவியோடு அரசு அதனைச் செய்யலாம். ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்கள்-மாணவர்கள் விகிதத்தை 1:25 ஆகக் குறைக்க வேண்டும். கற்றுத் தருவதைத் தவிர வேறு பணிகள் அந்த ஆசிரியர்களுக்கு இருக்கக் கூடாது. ஆரம்பப் பள்ளிகளில் துப்புரவு பணிகளுக்காகவும், பிற அலுவலகப் பணிகளுக்காகவும் தேவையான உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆரம்பப்பள்ளிகள் தான் கல்வியின் அடிப்படை என்பதை உணர்ந்து அங்கு அதிக வசதிகள் செய்து தரப்படவேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்துப் பாடங்களிலும் முறையானத் தரமான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப் பட வேண்டும்.

         ஆங்கில மொழி படிப்புக்கு அதிக வகுப்புகளையும் அதிக நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஆரம்பப் பள்ளிகளின் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளது. இங்கு ஆசிரியர்களுக்கு பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு முதல் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை ஐந்து வருடமும்  குறிப்பிட்ட மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் எடுக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அவர் தனது பணியைச் சரியாகச் செய்தாரா என்பதை எளிதில் அறிய முடியும். இதனால் கண்டிப்பாகத் தரம் உயரும். குறிப்பிட்ட 25 மாணவர்களுக்கும் முதல் வகுப்பு முதல் ஐந்தாவது வகுப்பு வரை ஒரு குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் சொல்லித் தந்தும் அந்தக் குறிப்பிட்ட 25  மாணவர்களுக்கும் எழுதப் படிக்கக்கூடத் தெரியவில்லை எனில் அந்த ஆசிரியரிடம் ஏதோ தவறு உள்ளது என்று பொருள். உரிய பயிற்சிகள் வழங்கியும், முறையாகக் கண்காணித்தும் அது போன்ற தவறுகள் நடக்காது பார்த்துக் கொள்ள வேண்டும்.

         தற்போதைய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில அறிவு இல்லை என்றே சொல்லலாம். எனவே ஆங்கிலத்தில் நன்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை ஆரம்பப் பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு நியமிக்க வேண்டும். பிற நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் உள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கும் மிகத் தரமான இலக்கண அறிவுடன் கூடிய ஆங்கிலப் பயிற்சியை வழங்க வேண்டும். இதன்பின் அனைத்துப் பள்ளிகளின் கல்வித்தரத்தைக் கண்காணிக்கத் தனிக் குழுக்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் தரத்தை உயர்த்துபவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கலாம். அரசுப் பள்ளிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி ஆங்கிலப் பாடம் சொல்லித்தரப்பட்டு மாணவர்கள் ஆங்கிலத்தை நன்கு படிக்க, எழுத, பேசக் கற்றுக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

    மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டு வருவது என்பது செருப்புக்காகக் காலை வெட்டுவது போன்றது. பாரதி சொல்வது போன்று அப்பொழுது நாடு பிசாசுகள் வாழும் சுடுகாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. தனியார் பள்ளிகள் பணத்துக்காக பாரதி கூறியபடி பிசாசுகள் வாழும் சுடுகாடுகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. அதனை அரசும் தொடர்ந்தால் என்ன ஆவது? அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்ச ஆங்கில அறிவுகூட இல்லை. அந்த மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவும் இல்லை. தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடங்களைப் படிக்கக் கடுமையாக வேலை செய்ய வேண்டியதுள்ளது. மாணவர்களுக்காக பெற்றோர்களும் சேர்ந்து பாடுபடுகிறார்கள். ஆனால் இறுதியில் மாணவனுக்குத் தமிழும் தெரிவதில்லை, ஆங்கிலமும் தெரிவதில்லை. புரிந்து படிப்பது என்பது இல்லவே இல்லை. எல்லாம் மனப்பாடம் தான். ஆங்கில மோகம் அனைவரையும் பைத்தியமாக்கியுள்ளது. ஆகவே அரசு ஆங்கிலப் பாட நேரங்களை அதிகப்படுத்தி சிறந்த ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க  வேண்டும். இந்த சிறந்த ஆங்கில ஆசிரியர்களைக் கொண்டு, பள்ளிகளில் முன்பே இருக்கும் ஆசிரியர்களுக்கு நல்ல தரமான ஆங்கில இலக்கணப் பயிற்சியை வழங்க வேண்டும். இவைகளின் மூலம் மாணவர்களின் ஆங்கில அறிவை அதிகப்படுத்த முடியும்.

சங்ககாலம்:

       சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் மொழியே அனைத்துமாக இருந்தது. அதனால் மிகப் பரவலான கல்வி அறிவு தமிழகத்தில் அன்று இருந்தது என்பதைத் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் சான்றுகள் உறுதி செய்கின்றன. சங்க காலத்தில் தொழில்நுட்பமும், உற்பத்தித் திறனும் பெருகி உலகளாவிய அளவில் வாணிகம் நடைபெற்றது. மேற்கே எகிப்து முதல் இரோம் வரையிலும், கிழ்க்கே தாய்லாந்து முதல் சீனா வரையிலும், இடையில் அரேபியா முதலான வளைகுடா நாடுகளிலும் தமிழர்கள் அன்று வணிகம் புரிந்து வந்தனர். எகிப்திலும், தாய்லாந்திலும், வளைகுடா நாடுகளிலும் சங்ககாலத் தமிழி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. ஆகவே தமிழர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல தாங்கள் வணிகம் புரிந்த அயல்நாடுகளிலும் தமிழையே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. பிற மொழி அறிவையும் தேவையானவர்கள் பெற்றிருந்தனர். தமிழகத்து க்கு பல மொழி பேசும் வணிகர்கள் வந்து வணிகம் புரிந்தனர். அதனை கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டாம் கரிகாலனைப் பாடிய பட்டினப்பாலை,

            “மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

            புலம்பெயர் மாக்கள் கலந்துஇனி துறையும்”  என்கிறது.

புகார்த்துறைக்கு பல நாட்டு வணிகர்கள் வந்து வணிகம் புரிந்தனர் என்பதை இப்பாடல் சொல்கிறது. அன்றைய தமிழகத்தில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, வணிக மொழியாக, கோயில் மொழியாக, மக்கள் மொழியாக என அனைத்துமாக தமிழே இருந்தது. எனினும் உலகளவில் அவர்கள் அன்று வணிகம் செய்தனர். எனவே வணிகம் புரிவதற்காகவோ அல்லது பிறவற்றிற்காகவோ பிற மொழிகளை பள்ளிகளிலேயே சொல்லித்தர வேண்டும் என்பது தேவையற்றது என்பதைப் பண்டைய தமிழகம் நமக்கு உணர்த்துகிறது. ஆங்கிலம் இன்று உலகு தழுவிய மொழியாக உள்ளது. அதனை ஒரு பாட மொழியாக நாம் கற்றுக் கொள்ளலாம். அது போதுமானது. ஆனால் ஆங்கிலவழிக் கல்வி என்பது வேண்டவே வேண்டாம். கல்வி அனைத்தும் தமிழ்வழிக் கல்வியாகவே இருக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே கல்வி மொழியாக இருக்க வேண்டும். அதனைப் படிப்படியாக செயல்படுத்தலாம். முதலில் மேல்நிலைப் பள்ளி வரை(+2 வரை) தமிழ் வழிக் கல்வியை உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும் செயல் படுத்துவது மிகமிக அவசியம்.

ஜீவானந்தம் – மொழி;

                        இந்தி ஒரு தொடர்பு மொழிதான், ஆட்சிமொழி அல்ல. தொடர்பு மொழி என்றால் மாநிலங்களுக்கிடையேயும் மத்திய அரசிடமும் தொடர்பு கொள்ளவே ஒழிய மக்களிடம் தொடர்பு கொள்ள அல்ல. மக்களிடம் மக்கள் மொழியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் அப்பொழுது தான் ஒரு மக்கள் குடியரசு என இந்தியாவைச் சொல்ல முடியும். அந்நிய மொழியில் தான் மக்களோடு தொடர்பு கொள்வேன் என்பது சர்வதிகாரத்தின் அடையாளம். நம்மைப் பொருத்த வரையில் இந்தி அந்நியமொழி தான். நமக்குத் தெரியாத, நமக்குப் புரியாத, நாம் பேசாத மொழி தான் அந்நிய மொழி ஆகும். இந்தியை நமக்குத் தெரியாது, அது நமக்குப் புரியாது, நாம் அதைப் பேசுவதும் இல்லை. எனவே இந்தி அந்நிய மொழி தான். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

     மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப் பட்டுள்ளது. இங்கு தனி ஆட்சியும் உள்ளது. 7 கோடி மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்களிடம் மத்திய அரசு தமிழ் மொழியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனத்தும் தமிழில் தான் தமிழ் மக்களோடு தொடர்பு கொள்ளவேண்டும். அதுவே அடிப்படை ஜனநாயகம். இதைக்கூட பின்பற்றாத ஒரு அரசை நமது குடியரசாக நாம் எப்படிக் கருதமுடியும்? இது குறித்து எளிமைக்கும் நேர்மைக்கும் அடையாளமாக இருந்த தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

    “ராஜ்யத்தின் சகல துறைகளிலும் சட்ட சபைகளிலும், கல்லூரிகளிலும், தமிழே ஆட்சி மொழியாக விளங்க வேண்டும்; மக்கள் சபையில்(பாராளுமன்றத்தில்) தமிழகப் பிரதிநிதிகள்- இதைப்போன்று ஒவ்வொரு ராஜ்யப்பிரதிநிதிகளும் பிரதேச மொழியில் தங்கு தடையின்றிப் பேச அனுமதிக்க வேண்டும். மக்கள் சபை தஜ்தாவேஜுகளிலும், சுப்ரீம்கோர்ட் தீர்ப்புகள், மத்திய அரசாங்கத்தின் கெஜட்டுகள், மசோதாக்கள், சட்டங்கள் ஆகியவைகளும் சரி ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமின்றி பிரதேச மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள மத்திய அரசாங்கக் காரியலாயங்கள் பொது மக்களுடன் தொடர்புகொள்ளும் தொடர்புகளும் ஆங்கிலம் இந்தி ஆகியவற்றுடன் தமிழிலும் இருக்கவேண்டும்.” என்கிறார் அவர்.(ஆதாரம்: மொழியைப் பற்றி ஜீவா – பக்: 30). சோவியத் இரசியாவில் பின்பற்றப்பட்ட தொடர்பு மொழி குறித்து அவர்,’ஒரு அங்கத்தினர் எந்த தேசிய இனத்தவராயினும் அவருக்கு அவரது சொந்த மொழியில் சுப்ரீம் சோவியத் உட்பட சகல மக்கள் பிரதிநிதித்துவ சபைகளிலும் சகல நீதி மன்றங்களிலும் பேசவும், எந்த அதிகாரியோடும் கடிதப் போக்குவரத்து நடத்தவும் உரிமையுண்டு. சோவியத் யூனியனின் சுப்ரீம் சோவியத் நிறைவேற்றுகிற சட்டங்கள் அனைத்தும் யூனியனிலுள்ள முக்கியமான 16 மொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. சுப்ரீம் சோவியத்தின் கெஜட்டும் மேற்படி 16 மொழிகளிலும் வெளியிடப் படுகின்றது’. என்கிறார்.( ஆதாரம்: மொழியைப் பற்றி ஜீவா – பக்: 26). எனவே இந்தியாவிலும் இம்முறை பின்பற்றப்பட வேண்டும்.

தமிழ்வழிக் கல்வி – தோழர் ஜீவா.

        நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களும், இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற, வங்காள மகா கவி தாகூர் அவர்களும், உலகப் புகழ்பெற்ற கல்வியாளர்களும், அறிஞர்களும் தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது எனச் சொல்லி உள்ளனர். ஐ. நா. சபை போன்ற உலக நிறுவனங்களும் அதனையே அறிவித்துள்ளன. உலகம் நாடுகள் முழுவதும் தாய்மொழிக் கல்வி மூலமே ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்துப் பாடங்களும் சொல்லித்தரப்படுகின்றன. 1960 வாக்கில் இரசியாவில் உள்ள பின்தங்கிய ஆசிய ஐரோப்பிய தேசிய இன மக்களுக்கு அவரவர்களின் தேசிய மொழியில் தான்  ஆரம்பம் முதல் பல்கலைக்கழகம் வரை கற்றுத்தரப் பட்டது என்கிறார் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள்.

     “இரசியாவில், கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் பிரதேச மொழியில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வியின் ஒவ்வொரு மட்டத்திலும் பொருத்தமான வகையில் பிரதேச மொழி ஊக்குவிக்கப்படுகிறது. ஜியார்ஜியக் குடியரசில் உள்ள பள்ளிக்கூடங்கள், கலைக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய யாவற்றிலும் ஜியார்ஜிய மொழியிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. கசாக் குடியரசில் கசாக் மொழியே போதனா மொழியாக உள்ளது”. என்பது அவரது கூற்று.( ஆதாரம்: மொழியைப் பற்றி ஜீவா-ப. ஜீவானந்தம், பக்: 25, 26)

    நான் முன்பு கூறிய வளர்ச்சிபெற்ற ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகி ஆறு நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் மொழிகளான, ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, சீனம், கொரியன், ஜப்பான் ஆகிய மொழிகளில் தான் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்விவரை கற்றுத்தரப் படுகிறது. இந்த ஆறு நாடுகளில், தென்கொரியா இரண்டாம் உலகப்போர் வரை ஜப்பானுக்கு அடிமையாக இருந்த நாடு; அதற்குப் பின்னரும் வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் நீண்டகாலம் போர் ந்டந்தது. உண்மையில் 1965க்குப் பின் தான் அதன் வளர்ச்சி தொடங்கியது. 25 வருடங்களிலேயே அது ஒரு வளர்ச்சிபெற்ற நாடாக மாறியது. ஒரு பொருளாதார வல்லரசாக தற்பொழுது உள்ளது.

          அதன் வளர்ச்சிக்கான பல காரணங்களில் அதன் கல்வி முறையும், அக்கல்விமுறையில் அதன் சொந்த மொழியான கொரியன் மொழிக்குத் தரப்பட்ட முக்கியத்துவமும் ஒரு மிக முக்கிய காரணமாகும். எனவே சொந்த மொழியைக் கல்வி மொழியாகக் கொண்டிராத ஒரு நாடு வேகமான முழுமையான வளர்ச்சியைப் பெறுவது என்பது இயலாது என்ற உண்மையை நாம் முதலில் புரிந்து கொள்வது அவசியம். சங்ககாலத்தில் நமது சொந்த மொழியான தமிழில் அனைவரும் கல்வி கற்றதும், கல்வி தமிழகமெங்கும் பரவலாக இருந்ததும் தான் பண்டைய தமிழகத்தின் அபரிதமான வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியக் காரணமாகும். சொந்தமொழிக் கல்வி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதற்கு நமது சங்ககாலத்தின் வளர்ச்சியே ஒரு உதாரணமாகும். இஸ்ரேலில் இப்ரு மொழி உள்ளது. அது நவீன மொழி அல்ல. பண்டைய மொழி என்பதோடு, நீண்டகாலமாக மக்களால் பேசப்படாத மொழி. யூத மதத்தின் மொழி. அதில் நவீனச் சொற்கள் இல்லை. எனினும் அது தான் இன்று இஸ்ரேலின் தேசிய மொழியாகவும், கல்வி மொழியாகவும் அனைத்துமாகவும் இருக்கிறது. 1950 வாக்கில் தான் இஸ்ரேலும் இப்ருமொழியும் திரும்ப உருவாக்கப்பட்டது. இன்று இப்ரு ஒரு நன்கு வளர்ந்த நவீன மொழியாக உள்ளது.

          கி.பி 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் முகம்மதிய மதம் பல நாடுகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அப்பகுதிகளில் பழமையும் புகழும் உடைய கிரேக்கமும், பாரசீகமும் ஆட்சி மொழிகளாக இருந்தன. ஆனால் ஆட்சியாளர்களின் மொழியான அரேபியமொழி, ஒரு பின்தங்கிய மொழியாகவும் நாடோடிகளின் மொழியாகவும் இருந்தது. ஆனால் அரேபிய மொழி ஆட்சி மொழியாக ஆக்கப்பட்ட 25 வருடங்களில் அது ஒரு வளர்ந்த மொழியாக மாறியது. ஆகவே 1200 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு பின்தங்கிய மொழியாகவும் நாடோடிகளின் மொழியாகவும் இருந்த ஒரு மொழி, ஆட்சி மொழியாக மாற்றப்பட்ட பின், ஒரு வளர்ந்த மொழியாக ஆக முடிந்தது என்பதை வரலாறு நமக்குப் போதிக்கிறது. எனவே ஒரு மொழியால் ஆகாது எனச் சொல்வது அறியாமை. அதுவும் தமிழ் போன்ற செம்மொழியாகவும், நவீன மொழியாகவும் உள்ள ஒன்றால் ஆகாது எனச் சொல்வது என்பது அறியாமை மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.

        ஆகவே சொந்த தேசிய மொழியைக் கல்விமொழியாகக் கொள்ளாத எந்த ஒரு நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. இந்த நிலையில் தமிழகத்தில் அதனது தேசிய மொழியும், செவ்வியல் மொழியும் ஆன தமிழில் கல்வி கற்பது  என்பது இல்லாது போய்க் கொண்டிருப்பது ஏன்? ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்வி வரை தமிழில் சொல்லித் தருவது என்பது இல்லாமல் ஆரம்பக் கல்வியில் கூட தமிழ்வழிக் கல்வி இல்லை என்ற நிலை ஏன்? பெரும்பாலான மக்கள் அந்நிய மொழியான ஆங்கிலவழிக் கல்வியை விரும்புவது ஏன்? தமிழ், தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களாலேயே தமிழ்வழிக்கல்வி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏன்? இதற்கெல்லாம் காரணத்தைத் தேட வேண்டுமானால் நமது 700 ஆண்டுகால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவேண்டும். இந்த 700 வருட கால அடிமை வாழ்வும், 70 வருட கால சுதந்திர இந்தியாவின் தமிழக அரசியல் வாதிகளும்தான்  நமது ஆங்கில மொழி மோகத்துக்கான அடிப்படைக் காரணமாகும்.   இவைகளை உணர்ந்து தமிழ் மொழியை அரசு மொழியாக, கல்வி மொழியாக, ஆலய மொழியாக அனைத்துமாக ஆக்க முயல்வோமாக.

                                          கணியன்பாலன், ஈரோடு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.