அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணம் கூறும் தீர்த்தங்கரர் சிற்பம்
அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணம் கூறும் தீர்த்தங்கரர் சிற்பம்
டாக்டர் நா. கணேசன், ஹூஸ்டன், அமெரிக்கா
(தமிழ்ச் சமணர்களின் ஆய்விதழ், முக்குடையில் மே மாதம், 2018-ல் அச்சான கட்டுரை.)
- சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரம் (கரூர்)
கரூர் இப்பொழுது தனி மாவட்டமாகத் தமிழ்நாட்டில் இருக்கின்றது. சங்க காலத்தில் இந்தக் கரூரின் பெயர் வஞ்சி என்பதாகும். வஞ்சி மாநகர், வஞ்சி மூதூர் என்று 2000 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தில் பாராட்டப் பெறும் சேரர்களின் தலைநகரம் இதுவே ஆகும். கரூரைச் சுற்றியுள்ள பல ஊர்களில் நத்தமேடு என்னும் மண்மேடுகளில் சங்கு வளையல்கள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் கிடைக்கின்றன. அவை சங்க காலப் பழமையைப் பறைசாற்றுவதாய் அமைகின்றன [1]. ஆன்பொருநை என்பது அமராவதி ஆற்றின் சங்ககாலப் பெயர். சங்கச் சான்றோரும், இளங்கோ அடிகள் மூன்று இடங்களிலும் ஆன்பொருநை ஆற்றங்கரையில் வஞ்சி நகரம் உள்ளதாகப் பதிவு செய்துள்ளனர்.
அந்துவன் சேரல் இரும்பொறை வஞ்சியில் இருந்து ஆண்டான். சேரன் எல்லைக்குள் கோப்பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனை மதம் பிடித்த யானை கொணர்ந்தது. முடமோசியார் இதனைப் புறப்பாட்டாகப் பாடியுள்ளார். வஞ்சி மாநகர் சோழ நாட்டு எல்லைக்கு அருகே என்பது இதனால் விளங்குகிறது.
பாண்டியன் நெடுஞ்செழியன் வஞ்சியை ஆண்ட மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் போரில் வென்றான். ஆனாலும், பின்னர் மீண்டும் அரியணை ஏறினான் அச் சேரன் (புறம் 17). சோழன் நலங்கிள்ளியும் கருவூரைக் கைப்பற்றினான். கோவூர்கிழார் அவன் ‘பூவா வஞ்சியும் தருகுவன்’ எனக் கூறுகிறார். இதைப் பழைய உரையாசிரியர் ‘பூவா வஞ்சி என்பது கருவூருக்கு வெளிப்படை’ எனக் கூறுகிறார்.
ஆலத்தூர் கிழார் பாடிய புறம் 36 கிள்ளிவளவன் என்னும் சோழன் ஆன்பொருநை நதிக்கரையில் இருந்த கருவூரை முற்றுகையிட்டதைப் பாடுகிறது.
”சிலம்பின் குறுந்தொடி மகளிர் பொலஞ் செய்
கழங்கில் தெற்றி ஆடும் தண்ணான் பொருநை
வெண் மணல் சிதைய “ (புறம் 36)
“கடும்பகட்டி யானை நெடுந்தேர்க் கோதைத்
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீர் உயர்கரைக் குவைஇய
தண்ணான் பொருநை மணலினும் பலவே” (அகம். 93)
கடல் பிறக்கோட்டிய குட்டுவன் சிலப்பதிகாரத்தின் செங்குட்டுவனுக்கு முன்னோன் என்பார் பேரா. கா. சு. பிள்ளை. இந்தச் சேரமன்னனைப் பரணர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தாகப் பாடினார். அதில் குடவனாறும், ஆன்பொருனையும், காவிரியும் கலக்கும் முக்கூடல் போன்றவன் என்று போற்றியுள்ளார்.
செங்குணக்கு ஒழுகும்-நேர் கிழக்காக ஓடும்; கலுழி மலிர் நிறைக் காவிரி யன்றியும்-கலங்கலாகிய நிறைந்த வெள்ளத்தையுடைய காவிரியை ஒப்பதே யன்றி; பூவிரி புனல் ஒரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை-பூக்கள் விரிந்த புனலையுடைய ஆறுகள் மூன்றும் கூடிய முக்கூடலையும் ஒப்பாவாய்.
செங்குட்டுவனும் செம்மை நெறிக்கண் ஒழுகி நாடு வளம் பெருகத் தண்ணளி சுரந்து இனிது புரத்தல் பற்றி, “காவிரி அனையை” என்றார். மூன்று ஆறுகள் கூடுமிடத்து மூன்றிடத்துப் பொருள்களும் ஒருங்கு தொகுவதுபோல், கடல்பிறக் கோட்டிக் கடல்படு பொருளும், சேரநாடுடைமையால் மலைபடு பொருளும் பழையன் முதலியோரை வென்று, காவிரி செங்குணக்கு ஒழுகும் நாடுடைமையால் அந்நாட்டுப் பொருளும் என்ற மூவகைப் பொருளும் ஒருங்கு தொக நிற்கின்றனை என்பார். “பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை” என்றார். மூன்றுடன் கூடிய கூடலைப் பழைய உரைகாரர், “அக் காவிரி தானும் ஆன் பொருநையும் குடவனாறும் என இம்மூன்றும் சேரக்கூடிய கூட்டம்” என்பர்.
“எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் வரு புனல், வாயில் வஞ்சியும்” என்கிறது சிறுபாணாற்றுப்படை. இதன் பிரதிபேதமாக “. (பி-ம்.) ‘புனல் வஞ்சி வாயிலும் வறிதே’” என்றும் இருக்கிறது (உவேசா பதிப்பித்த பத்துப்பாட்டு). வரு புனல் வாயில் வஞ்சியும் வறிது – பெருகுகின்ற நீரையும், கோபுர வாயிலையுமுடைய வஞ்சியென்னும் ஊரும் தரும் பரிசில் சிறியதாயிருக்கும் என்பது நச்சினார்க்கினியர் உரை. சேரர்களின் ராஜதானி நகரமாக வஞ்சிக் கருவூர் விளங்கியுள்ளது. அமராவதி ஆற்றின் நீர்வளத்தைக் கொண்டதாக உள்ளது.
இவ்வாறு பல பாடல்களில் ஆன்பொருனை நதியும், வஞ்சி மூதூரும் இணைத்துச் சங்கச் சான்றோரால் பேசப்படுகின்றன. காவிரியாற்றோடு ஆன்பொருநையும் குடவனாறும் கலக்கும் கூடல் போன்றவன் செங்குட்டுவன் என்று பரணர் பதிற்றுப்பத்தில் பாடுகின்றார். கூடல் என்பது கருவூரின் அருகே உள்ளது. கங்கர், அதியர் போன்ற சேரரின் சிற்றரசரை வென்றவன் இராசசிம்ம பாண்டியன். தன் மகனுக்குக் கங்கர்களிடம் பெண்ணெடுத்தவன். இவர்களை வென்றபின் தெற்கே வந்து சேரருடன் போரிட்டு வென்றிருக்கிறான். இப்போர் காவிரியின் வடகரையில் வஞ்சி நகருக்கு வடக்கே நிகழ்ந்துள்ளது. “”புனற்பொன்னி வடகரையில், பொழில் புடைசூழ் மதில் வஞ்சி கனல்பட விழித்து” என்பது சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டு வாசகம்.
பின்னர், நடுகல்லில் “ஸ்ரீ வஞ்சி வேள் அடியான் ”என்று பொறிக்கப்பட்டுள்ளது. நெரூர்ப் பெருமாள் கோயில் கல்வெட்டிலும், பசுபதீசுவரர் கோயில் கல்வெட்டிலும் ‘வஞ்சி மாநகரமான கருவூர்’ என்றும், கரூர் ரங்கநாதர் கோயில் கல்வெட்டில் ‘வஞ்சி ஸ்ரீவைஷ்ணவரோம்’ என்றும் 12-ஆம் நூற்றாண்டில் உள்ளது. கரூர் ரங்கநாதர் கோயிலே குலசேகர ஆழ்வார் பாடிய வித்துவக்கோடு என்று மு. ராகவையங்கார் கருதுகிறார். இன்றும் அதன் அருகே உள்ள அக்கிரகாரம் வித்துவக்கோட்டு அக்கிரகாரம் என அழைக்கப்படுகிறது. சோழர்கள் இறையாண்மை மிகுந்த காலங்களில் கரூரை விட்டு வித்துவக்கோட்டைச் சேரர்கள் கேரளாவுக்கு நகர்த்தி உள்ளனர். இது குலசேகர ஆழ்வார் காலத்தின் பின்னர் வந்த நூற்றாண்டுகளில் எனலாம். சோழர் தலைநகர் உறையூருக்கு 50 மைல் தொலைவில் வஞ்சி மூதூர் இருப்பதால், பிற்காலத்தில் பெருவஞ்சி என்ற தாராபுரம் சேரநாட்டுக்கு தலைநகர் ஆகியுள்ளது. அப்போது திருத்தக்கதேவர் அங்கே வாழ்ந்திருக்கிறார். அதற்கும் பின்வந்த நூற்றாண்டுகளில் கேரள மாநிலத்துக்கு சேரர் தலைநகர் வஞ்சி நகர்ந்துவிட்டது. உதாரணமாக, கொச்சி அருகே உள்ள அஞ்சைகளத்தைத் திருவஞ்சிக்குளம் என்பர். ஆனால், அப் பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுகளில் கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு முந்தைய தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை (கே. வி. ராமன், தொல்லியல் ஆய்வுகள், 1977).
வஞ்சிக் கொடி (Tinospora cordifolia) தல விருட்சமாக இருப்பது கரூர் ஆனிலையப்பர் கோவில். வஞ்சிக்கொடிக்குச் சீந்தில் என்றும் ஒரு பெயர் உண்டு. சீந்து/சிந்து மக்களுக்கு முக்கியமான சின்னமாக இருந்ததால் இந்நகருக்குச் சங்கச் சேரர் வஞ்சி எனப் பெயரிட்டனர் போலும். இதனால் ஊரும் பெயர் பெற்றது. தமிழ் தேசியக் காப்பியம் ஆகிய சிலப்பதிகாரம் சமணத் தத்துவங்களைக் கங்க ராஜ்யத்தில் வாழ்ந்த கவுந்தி அடிகள் வாயிலாகப் போதிப்பதாக இளங்கோ அடிகள் எழுதியுள்ளார் [2]. கனக விஜயரை அமராவதி நதியில் அமைந்துள்ள வஞ்சிக் கருவூருக்கு கண்ணகியின் கல்சிலையைக் கொண்டுவந்ததைப் பாடியுள்ளார். சுருளி/சுள்ளிப் பெரியாறு கொடுங்ஙல்லூர் அருகே கடலில் கலக்கிறது. சூர்ணீ என்று வடமொழியில் பெயர்பெற்ற அப் பெரியாற்றுக் கழிமுகத்தில் எங்கேயும் சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி மூதூர் இல்லை. வஞ்சி மாநகர் பற்றி இளங்கோ அடிகளின் முத்தமிழ்க் காப்பியத்தில் மூவிடங்களைப் பார்ப்போம்.
(i) வாழ்த்துக் காதை
மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே;
அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன்பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ”மலை அரையன் பெற்ற மடப்பாவை” என்றார். நிலவரசர் – கனகனும் விசயனும்.
(ii) செங்குட்டுவன் கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றி வஞ்சினம் முடித்தது
நீர்ப்படைக் காதை
தண் ஆன்பொருநை ஆடுநர் இட்ட
வண்ணமுஞ் சுண்ணமும் மலரும் பரந்து
தண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட-குளிர்ந்த ஆன்பொருநையில் நீராடுவோர் இட்ட, வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து – தொய்யிற் குழம்பும் பொற் சுண்ணமும் மலர்களும் பரவி, விண் உறை விற்போல் விளங்கிய பெருந்துறை – இந்திர வில்லைப்போல் விளங்குகின்ற பெரிய நீர்த் துறைகளில், வண்டுஉண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை –
ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி
வால்வளை செறிய வலம்புரி வலனெழ
மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து
குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள
வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென்.
இக் கதையில், இளங்கோ அடிகள் கோப்பெருந்தேவி என்னும் பட்டத்தரசி வாழ்ந்த சேரர்களின் தலைநகர் வஞ்சி மூதூர் அமராவதி பாய்கின்ற தமிழ்நாட்டின்கண் இருந்தது என்றும், அங்கே சேரராசா செங்குட்டுவன் வடபுல ஆரிய மன்னர் கநக-விஜயர் முடித்தலையில் கல்லேற்றிக் கண்ணகி படிமையைக் கொணர்ந்து தானும் தன் தேவியைக் காண, அவள் வளையல்கள் செறிய வஞ்சி நகரில் புகுந்தனன் என்று பாடியுள்ளார்.
(iii) நடுகல் காதை:
மண்ணாள் வேந்தே நின் வாணாள்கள்
தண் ஆன்பொருநை மணலினுஞ் சிறக்க!
ஆன்பொருநை – சேரநாட்டுள்ளதோர் யாறு; இஃது ஆன்பொருந்தம் எனவும் பொருநை யெனவும் வழங்கும். ஓரரசரை வாழ்த்துங்கால் அவரை அவர் யாற்று மணலினும் வாழ்கவென்றல் மரபாகலான் இங்ஙனங் கூறினான். “சிறக்க நின்னாயுள், மிக்கு வரும் இன்னீர்க் காவிரி, எக்கர் இட்ட மணலினும் பலவே” என வருதலுங் காண்க.
இனி, வஞ்சி மூதூர் அருகே கிடைத்துள்ள அரிய சமணச் சிற்பம் பற்றிக் காண்போம். ‘ஆ கெழு கொங்கர்’ எனச் சங்க இலக்கியம் புகழும். ஆன்பொருந்தம் என்று பேர்பெற்ற நதிக்கரையில் ஆனிலை அப்பர் என்னும் சிவாலயம் வஞ்சி மாநகரின்கண் அமைந்துள்ளது. இன்றும் தமிழ்நாடு முழுதும் ஜல்லிக்கட்டு என்றால் கொங்குநாட்டின் பொலிகாளைகள் தாம் பங்கேற்கின்றன. வஞ்சி அருகே, ரிஷபநாதர் எனப்படும் ஆதிநாத தீர்த்தங்கரர் தம் மகள்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் காட்சி பெருஞ்சிற்பமாகக் கிடைத்துள்ளது [3]. இது தமிழ்க் காப்பியங்கள் உருவாகிய காலமாக இருக்கலாம். களப்பிரர் ஆட்சிக் காலம்.
2. ஸ்ரீபுராணம் – மகளிர்க்கு எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆதிநாதர்
சமண சமயத்தவர் எழுத்து மாத்திரம் இல்லாமல், எண்ணையும் இந்தியர்க்குக் கற்பித்தார்கள். அதனால் தான் வள்ளுவர் ”எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என்றும் ஔவை ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும் பகுத்தனர். இன்றும் 4-9 தமிழெண்களின் வடிவங்களில் வடமொழி எண்ணுப்பெயர்களின் முதல் அட்சரங்கள் இருப்பதைக் காண்கிறோம். வடநாட்டுக் குகைக் கல்வெட்டுக்களில் உள்ள எண்களைச் சிரமண சமயத்தவர் மருங்கூர்ப் பட்டினம் போன்ற நகரங்களில் கொணர்ந்து தமிழர்க்குத் தந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் காட்டி நிற்கின்றன. தமிழரின் எண்கணித வரலாற்றுக்கு வையைப் பட்டினம் ஆகிய அழகன்குளம் பானையோடு முக்கியமானது [4].
ஸ்ரீபுராணத்தில் ரிஷபநாத தீர்த்தங்கரர் எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் மகள்களாக சுந்தரி, பிராமியைக் குறிப்பிடுவது சிற்பமாக தமிழகத்திலேயே வஞ்சி மூதூர் அருகே கிடைத்திருக்கிறது. இது இந்தியாவின் ஜைன சமயக் கலைப்படைப்புகளில் ஒரு சிறப்பு வாய்ந்த சிற்பம் ஆகும்.
ரிஷபநாத தீர்த்தங்கரர் இரு மக்களை மாணவியராக ஏற்று எழுத்தையும், எண்ணையும் கற்பித்தார். அதில் பிராமி என்ற மாணவிக்கு வலக்கையில் எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்ததால் இடமிருந்து வலமாக பிராமி எழுத்துக்கள் வளர்ந்தன. ஆனால், சுந்தரி என்னும் பெண்ணுக்கு இடக்கையில் எண்களைத் தீர்த்தங்கரசாமி கற்பித்தார். எனவேதான் எண்களை விவரிக்கும்போது வலமிருந்து இடமாக வளர்வதை இந்தியாவில் காண்கிறோம். தொல்லியல், இலக்கியம், கல்வெட்டு மூலமாக ஆய்வுலகம் காட்டும் இந்திய எண்களின் வளர்ச்சியைத் தான் ஸ்ரீபுராணக் கதையும் சொல்லிச்செல்கிறது. பிராமியில் எண்களை எழுத வாமகதித் தத்துவம், அதாவது வலப்புறம் சிற்றெண்ணில் தொடங்கி பேரெண்களை ஒன்றன் பின் ஒன்றாக இடப்புறமாக எழுதிச் செல்லும் வழிமுறை பயன்படுகிறது. இப் பண்டைய வாமகதி முறையை “அங்காநாம் வாமதோ கதி” என்று சிற்றெண்ணை முதலில் வலப்புறம் எழுதி இடப்புறத்தில் அடுத்தடுத்த பெரிய எண்களை எழுதுதலை வடமொழி கணித சாஸ்திரங்களில் குறிப்பிடுகின்றனர். தொல்காப்பியம் (புணரியல்) முதல் நூற்பா:
”மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்
இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது
அறுநான்கு ஈற்றொடு நெறி நின்று இயலும்”
தொல்காப்பியர் காலத்தில் பூஜ்யம் இல்லை. தசமகணித முறையும் கண்டுபிடிக்கப் படாத காலம். ஆனால், 10, 100, 1000 இவற்றுக்குத் தனிச் சின்னங்கள் இருந்தன. 3 (10) 3 = 33. சிறிய எண் 3-ஐ வலப்புறம் அமைத்து (மூன்று தலையிடுதல்), அதற்கு இடமாக 3(10) எழுதுதலைச் சுட்டுகிறார். அதுபோலவே, 2 (10) 2 = 22 என்பதையும் வாமகதி முறையில் தொல்காப்பியர் எழுதிக் காட்டியுள்ளார்.
ஸ்ரீபுராணம் – ஆதிபர்வம்:
“அன்னைமீர்! நீங்கள் பாலைகளாக இருக்கின்றீர்களெனினும். சீலவிநயங்களால் பரிணதைகளாக விருக்கின்றீர்கள்; ஈத்ரஸமாகிய ரூபயெளவனாவஸ்தா சீலாசாரங்கள் வித்தையால் அலங்கிருதமாகில் அன்றோ ஸ்ரேஷ்டமாகும்; ஜன்மபலமாவது வித்தையே; எஸஸ்ஸினையும், ஸ்ரேயஸ்ஸினையும் தருவது வித்தையே; கருதியவற்றைத்தரும் சிந்தாமணியாவதும் வித்தையே; தர்மார்த்தகாமங்களுள் சம்பத் பரம்பரையைத் தருவதும் வித்தையே; பந்துவாவதும். மித்திரராவதும், சர்வார்த்தங்களையும் சாதிக்கும் தேவதையாவதும் வித்தையே; ஆகையால், நீங்கள் வித்தையினைக் கைக் கொள்வீர்களாக” என்பனவே.
பகவான் இவ்வாறு சொல்லி அவர்களை ஆசிர்வாத வசனங்களால் வாழ்த்தித் தமது ஹிருதய கமலத்து எழுந்தருளியிருந்த ஸ்ருததேவியினை ஸ்வர்ணபட்டகத்தின் மிசை பூஜாபுரஸ்ஸரம் அதிவசிப்பித்து, ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
அங்ஙனம் காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், அகராதி ஹகாராந்தமாகிய ஸ்வரம் வியஞ்சனமென்னும் இரண்டு பேதத்தினை உடைத்தாகியதும், அயோகவாகங்கள் இரண்டாகவுடையதுமாகிய அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.
சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணித ஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையு முபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாம ஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. சகலசாஸ்திரங்களும் அக்ஷரங்களின்றி நிகழாவாதலின் பிரஜாபதி முந்துற அக்ஷரங்களை, உபதேசித்தருளிப் பின்னும் இருவருக்கும் வியாகரணமும், சந்தோவிஸ்சித்தியும், அலங்காரமுமாகிய ஸ்பத சாஸ்திரங்களையும் உபதேசித்தருளினர். அவ்விருவரும் பிரக்ஞாபலத்தால் (புத்திவிசேஷத்தால்) பகவானால் உபதேசிக்கப்பட்ட சகலவித்தைகளையும் உணர்ந்தனர்.”
ஆழ்வார் என்ற சொல்லை தமிழில் தியானத்தில் ஆழ்ந்திருப்பவர் என்ற பொருளில் அருகர்களுக்கு அறிமுகம் செய்தோர் சமணர்களே. ஸ்ரீ என்ற சொல்லின் முத்தியத்துவம், ஆழ்வார்கள் என்னும் பெயர், உரைநடையில் மணிப்பிரவாள நடை என இவற்றையெல்லாம் பின்னாளில் சமணத்தில் இருந்து ஸ்ரீவைஷ்ணவ மரபினர் எடுத்தாள்கின்றனர்.
3. அரவக்குறிச்சியில் ஆதிநாத தீர்த்தங்கரர்:
அரவக்குறிச்சி வட்டத்தில் மொட்டையாண்டவர் திருக்கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் முருகன் கோயில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள இடம் ஒரு சிறிய கரட்டுக் குன்று இருக்குமிடம் ஆகும். குன்று நோக்கியுள்ள சிறிய ஏற்றப்பாதையில் மேலே செல்லுமுன் சமதளத்திலேயே மிகப்பெரியதொரு பாறை காணப்படுகிறது. மதுரை-ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பாறை போலச் சரிந்து பெரிய சுவர் போலத் தோற்றமளிக்கிறது. பாறையில் சற்றேறத்தாழ ஏழு அடி உயரத்துக்கு மூன்று சமணச்சிலைகள் ஒரே இடத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று சிற்பங்களும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றன. நடுவில் ஓர் ஆண் உருவமும், அதன் இரு பக்கங்களிலும் இரு பெண் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன.
நடுவில் இருக்கும் ஆண் சிற்பத்தின் தலைக்கு மேல் சமணத்துக்கே உரிய முக்குடை அமைப்புக் காணப்படுகிறது. சமணத் தீர்த்தங்கரர் சிலைகளில் இது போன்ற முக்குடை அமைப்பைக் காணலாம். இங்கு, சிற்பத்தில் ஆடை அணியாத சமணத்துறவியின் நின்ற கோலமும், அவரின் தலைக்குமேல் காணப்படும் முக்குடை அமைப்பும் இச் சிற்பம் ஒரு சமணத் தீர்த்தங்கரரின் சிற்பம் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆதிநாதர் என்பவர் ரிஷபதேவர் வஞ்சி மாநகர ஆன்நிலையப்பருக்கு அருகிலே இருக்கிறார். தீர்த்தங்கரர் என்னும் உயர்நிலை பெற்ற இருபத்து நான்கு பேரின் சிற்ப,ஓவிய உருவங்களுக்கு அடையாளமாக அவர்களின் தலைக்கு மேல் முக்குடை அமைப்புக் காணப்படும். ஆத்திசூடி அமரும் பார்சுவ நாதருக்கு மட்டும் முக்குடையும் அதன்கீழே அவரைக் காக்கின்ற நாகமும் தலைமேல் காட்டப்பட்டிருக்கும்.
சமணத் தீர்த்தங்கரரின் இரு பக்கங்களிலும் இரு பெண்ணுருவங்கள் உள்ளன. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆதி நாதர் என்னும் ரிஷபதேவர் ஆவார். இவர் ஒரு அரசர். இவருக்கு மக்கள் இரு மகன்களும், இரு மகள்களும். பாகுபலி மூத்த மகன்; பரதன் இளைய மகன். பிராமி, சுந்தரி இருவரும் மகள்கள். ஆட்சியை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு ரிஷபதேவர் துறவறம் மேற்கொள்கிறார். சக்கரவர்த்தியாகும் எண்ணத்தில் பரதன், பல நாட்டு அரசர்களை வெல்கிறார் உடன்பிறந்த பாகுபலியையும் கொல்ல நினைக்கிறார். மனம் வெறுத்த பாகுபலி, தன் பங்குக்கான ஆட்சிப்பரப்பையும் உடன்பிறந்தானுக்குத் கொடுத்துவிட்டுக் காட்டுக்கு ஏகித் தவத்தில் ஈடுபடுகிறார். சகோதரிகள் பிராமி, சுந்தரி ஆகிய இருவரும், தவத்தைக் கைவிடுமாறு பாகுபலியை வேண்டிக்கொள்கின்றனர். உடன்பிறந்த சகோதரிகள் காட்டுக்குச் சென்று அண்ணனைச் சீறாட்டுத் தெளிவிக்கும் இந்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நடுவில் பாகுபலியும், அவரது பக்கங்களில் அவரது சகோதரிகளும் நின்றுகொண்டிருப்பது போன்ற தோற்றத்தில், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஆனால், இதைவிடச் சிறப்பாக இந்தச் சிற்ப அமைப்பை வடிக்கலாம் என்று பெண்கல்வியை வலியுறுத்தும் ஸ்ரீபுராண நிகழ்ச்சியாக அரவக்குறிச்சியில் வடிவமைத்துள்ளனர். கண்ணபிரான் கையில் வெண்ணெய் ஏந்தும் காட்சியாக இந்தியா முழுதுமே சிற்பங்கள், ஓவியங்கள் பல உண்டு. அதனை மாதிரியாக எடுத்து, சம்பந்தர் புராணம் ஏற்பட்டபோது, தனக்கு முலைப்பால் ஊட்டிய உமையாளைக் கோபுரத்தில் காட்டுவதுபோல தமிழ்ச்சிற்பிகள் வடித்துள்ளனர். காரைக்கால் அம்மையார் வடிவம் காளியினதே. அது போல, இங்கே பாகுபலியை எடுத்துவிட்டு, பெண்கல்வியைப் பரப்பும் வகையில் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரம் அருகே ஆதிநாதர் தீர்த்தங்கரர் சிற்பம் அமைந்துள்ளது, பழைய சேரநாட்டின் சிறப்பு. இந்தியாவிலேயே ஒரு புதுமையான ஜைநக் கலைக்கருவூலம். ’குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல’ என நாலடியிலும்,
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு
என ஏலாதியிலும், சமண முனிவர்கள் பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்கேற்ற சிற்பம். சமண சமயம் போதிப்பதற்காக, சிலப்பதிகாரத்தில் குடக நாட்டில் தவப்பள்ளிக்குச் சென்று கோவலனும், கண்ணகியும் கவுந்தி அடிகளுடன் காவேரி ஆறு பாயும் நாட்டின் வளம் முழுதும் பாடுவதாக அமைத்ததும் இதன் காரணமாகவே. “இவளோ, கொங்கச் செல்வி, குடமலையாட்டி” என்று அடிகள் கூறுவது காவிரிநாட்டின் முதல்பகுதி குடகும், கொங்கும் கண்ணகியை முதலில் வழிபட்டோர் எனக் கூறிச் சிறப்பித்தார் [2].
அரவக்குறிச்சி ஜைந சிற்பவமைதியை (iconography) நோக்குங்கால் மூன்று அம்சங்கள் முக்கியமாக வெளிப்படுகின்றன. (1) வள்ளுவர், பாகுபலி, … போன்றவர்களுக்கு இருக்கும் ஒரு குடை இதில் இல்லை. தீர்த்தங்கரருக்கு உள்ள முக்குடை இருக்கிறது. (2) பாகுபலி சிற்பங்கள் எல்லாவற்றிலும் துறவு நீண்ட காலம் மேற்கொண்டமையால் கால்களைச் சுற்றிக் செடி கொடிகள் காட்டப்படும். பாகுபலி திருப்பாதத்தின் அருகிலே புற்றும், நாகமும், தழைகளும், கொடிகளுமாய் இருக்கும். அவை தீர்த்தங்கரர் சிற்பமாகிய இதில் இல்லை (3) சுந்தரி பிராமி தந்தையுடன் நிற்கையில் கைகளில் கல்விக்கான முத்திரை காட்டப்படுகிறது. பனை ஏடும், கையில் எழுத்தாணியும் கொண்டு இரு பெண்களும் நிற்கின்றனர். இந்தப் பெண்டிரின் ஹஸ்த முத்திரை இங்கே வடிக்கப்பட்டுள்ளது ஸ்ரீபுராணக் காட்சி என்பதை ஐயந் திரிபற விளக்குகிறது. பொலிவுடைய இச் சிற்பச் சிறப்புக்கு இரு அட்ட நாகபந்தங்கள் செய்தேன்.
வஞ்சிமா நகரருகே மாதர் கல்வி
விஞ்சும் சிலைகாட்டும் சீபுராணம்
4. ஆய்வுத் துணை
(i) கி. ஸ்ரீதரன், கருவூரும் அகழ்வைப்பகமும், தமிழ்நாடு தொல்பொருள்துறை, 1992
(ii) நா. கணேசன், இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு
http://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html
(iii) துரை. சுந்தரம், கரூர் அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு
http://nganesan.blogspot.com/2018/02/sripurana-sculpture-near-vanji-karur.html
(iv) நா. கணேசன், வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்.
https://www.vallamai.com/?p=29153
இக்கட்டுரை தமிழ்ச் சமணர்களின் ஆய்விதழ், முக்குடையில் மே மாதம், 2018-ல் அச்சானது.