பாலஸ்தீனம்: அநீதியின் உச்சக் கட்டம்

நாகேஸ்வரி அண்ணாமலை

 

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண ட்ரம்ப் ஜனாதிபதியானவுடன் தன் சொந்த மருமகன் ஜேரட் குஷ்னரை நியமித்தார்.  இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேறு எந்த தகுதியும் இல்லாதவர்.  ஆனால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க அவரால் முடியும் என்று ட்ரம்ப் உளறிக்கொண்டிருந்தார்.  எத்தனையோ முறை இஸ்ரேலுக்குச் சென்றுவந்த குஷ்னர் எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை.  இப்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

லட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி வரும் ஐ.நா. சபையின் அமைப்பு (United Nations Relief Works Agency) ஒன்றிற்கு அமெரிக்க அரசு இதுவரை அளித்துவந்த உதவியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக ஐ.நா.வுக்கு அமெரிக்கா நிதி உதவி அளிக்கும் துறையில் வேலைபார்த்த பழைய அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.  இந்த முடிவை எடுத்ததில் குஷ்னருக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து உலகின் பல பகுதிகளிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் பாலஸ்தீனர்களின் அனுமதி இல்லாமலேயே நுழைந்து அவர்களின் நிலங்களைத் தந்திரமாக வாங்கிப் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரத்தையே குலைத்து, வன்முறைகளால் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியேற்றி அவர்களில் பாதிப் பேருக்கு மேலானவர்களை அகதிகளாக்கினர்.  அப்படி அகதிகளாகச் சென்றவர்களுக்குத் தங்கள் இடங்களுக்குத் திரும்பும் உரிமை இருக்கிறது என்று கூறிவரும் பாலஸ்தீன அரசியல்வாதிகள் அந்த உரிமை பற்றிப் பேசாதிருக்க வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபையின் அமைப்பு அவர்களுக்குச் செய்துவரும் உதவியை நிறுத்தி அவர்களைப் பணியவைக்க முயன்றுவருவதாக அகில உலக வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தில் வேலைபார்த்த டேவிட் ஹார்டன் என்பவர் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்க வெளியுறவுத் துறை செப்டம்பர் மாத முடிவில் மேலே குறிப்பிட்ட, பாலஸ்தீன அகதிகளுக்கு, உதவிவரும் ஐ.நா. நிறுவனத்திற்கு பணம் பட்டுவாடா செய்யும். இந்த வருடம் இந்த உதவிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 35 கோடி டாலர் பணத்தில் ஏற்கனவே ஆறு கோடி டாலர் கொடுத்திருக்கிறது.  ஆனால் மீதிப் பணத்தைக் கொடுக்கப் போவதில்லை என்று குஷ்னரும் வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோவும் முடிவுசெய்திருப்பதாக ஹார்டன் கூறியிருக்கிறார்.  அந்தப் பகுதியிலுள்ள ஐம்பது லட்சம் அகதிகளுக்கு ஐ.நா. அமைப்பு உதவிவருவதாகவும் இந்த உதவி நிறுத்தப்படுமானால் அந்தப் பகுதியில் பெரிய கொந்தளிப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

2017 டிசம்பரில் ஜெருசலேம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்று கூறியதோடு காஸாவுக்கும் வெஸ்ட் பேங்கிற்கும் அமெரிக்க அளித்துவந்த 20 கோடி டாலர் பணத்தையும் ட்ரம்ப் நிறுத்திவிட்டார்.  இப்படி அடி மேல் அடியாக பாலஸ்தீனர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் வன்முறையில் இறங்காமல் என்ன செய்வார்கள்?

பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த யூதர்கள் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் தாங்கள் வாழ்ந்த தங்களின் புண்ணிய பூமி என்று பாலஸ்தீனத்திற்குச் சொந்தம் கொண்டாடி அதில் தங்களுக்கும் ஒரு நாடு வேண்டும் என்று அப்போது பாலஸ்தீனத்தை நிர்வகித்துவந்த பிரிட்டனின் சூழ்ச்சியோடு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டனர்.  அப்போது பாலஸ்தீனர்களிடமிருந்து முழு பாலஸ்தீனத்தையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் திட்டம் போட்டிருந்தாலும் வெளியில் பாலஸ்தீனத்தைப் பாலஸ்தீனர்களோடு பகிர்ந்துகொள்ளத் தயார் என்பதுபோல் நடந்துகொண்டனர்.  பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் ஐ.நா.வின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத பாலஸ்தீனர்கள் யூதர்களைப்போல் ஐ.நா. தங்களுக்குக் கொடுத்த இடத்தில் பாலஸ்தீன நாட்டை உருவாக்கிக்- கொள்ளவில்லை.  அன்று அவர்கள் செய்த இந்த மாபெரும் தவறு பாலஸ்தீனத்தில் அவர்களுக்கு இடமே இல்லை என்னும் அளவுக்கு அவர்களைக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது.

இஸ்ரேலிலேயே தங்கிவிட்ட, இப்போது இஸ்ரேலின் ஜனத்தொகையில் இருபது சதவிகிதம் இடம் பெற்றிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு முழு குடிமையுரிமைகளும் இஸ்ரேல் வழங்கும் என்ற நிலையிலிருந்து அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது அவர்கள் இஸ்ரேலின் குடிமக்களே இல்லை நிலைக்கு வந்திருக்கிறது.  சமீபத்தில் இஸ்ரேல் நாட்டுப் பாராளுமன்றம் இஸ்ரேல், யூதர்களுக்கு மட்டுமே உரிய நாடு என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.

ஆயிரத்து நானூறு வருடங்களாகத் தாங்கள் வாழ்ந்துவந்த தங்கள் நாடு தங்களுக்கு இல்லை என்று ஆகிவிட்டதோடு அகதிகளாக பாலஸ்தீனத்திலும் அண்டை நாடுகளிலும் வாழ்ந்துவரும் பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா. செய்துவரும் உதவியையும் நிறுத்தி அவர்களை முழுவதுமாகப் பாலஸ்தீனத்திலிருந்தே விரட்டிவிட அமெரிக்கா புதிதாகத் திட்டமிடுகிறது.  எல்லா சமாதானப் பேச்சுக்களிலும் அகதிகளாக வெளியே சென்ற பாலஸ்தீனர்களுக்கு அவர்களுடைய இடங்களுக்குத் திரும்பிச் செல்ல உரிமை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  இப்போது அந்த அடிப்படைக் கொள்கையிலேயே கைவைக்கிறார் குஷ்னர்.  இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண குஷ்னர் வைத்திருக்கும் திட்டம் போலும்.  பாலஸ்தீனர்கள் அனைவரையும் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டிவிடலாம் என்ற பென்-குரியனின் திட்டம் இறுதியில் நிறைவேறப் போகிறதா?  இஸ்ரேல் என்ற நாடு உருவான நாளிலிருந்தே பாலஸ்தீனர்கள் சொல்லவொணா துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.  அவர்களுடைய உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன.  இப்போது அமெரிக்கா பாலஸ்தீன அரசியல்வாதிகளை மிரட்டி அடிபணியவைக்க முயற்சிப்பது  அநீதியின் உச்சக் கட்டம்.

மனித இனம் இத்தனை வளர்ச்சி அடைந்தும் என்ன பிரயோஜனம்?  ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு அளிக்கும் கொடுமையைத் தட்டிக் கேட்க ஆளில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.