கூடா நட்பு
கூடா நட்பு
இந்த ஆண்டும் வழக்கம் போல பள்ளி ஆண்டு விழாவின் விளையாட்டுப் போட்டியை ஆசிரியர் அறிவித்துக் கொண்டிருந்தார். எல்லாப் போட்டிகளிலும் தவறாது கலந்து கொண்டு முதல் இரண்டு பரிசுகளையும் ஆளுக்கொன்றாக தட்டிச் செல்வதில் இணை பிரியாத் தோழிகளான கண்மணியையும், தமிழ்ச்செல்வியையும் அடித்துக்கொள்ள வேறு எவரும் இல்லை என்பது அந்தப் பள்ளியில் அனைவருக்கும் தெரியும். இது பல மாணவர்களின் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. எப்படியாவது இந்த ஆண்டு இவர்கள் இருவரையும் தோற்று ஓடச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்த அந்த வகுப்பு மாணவர்களில் சிலர் அதற்கான வேலையை தந்திரமாக செய்ய ஆரம்பித்தனர். அதன் முதல் படியாக கண்மணியையும், தமிழ்ச்செல்வியையும் பிரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
“ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்” என்றாள் மணிமொழி.
“அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச் செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது” என்றாள் கண்மணி.
“அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை விருது வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்” என்றாள் மணிமொழி
இதற்கு 4 மாணவிகள் ஒத்து ஊதிக்கொண்டிருந்தார்கள். எப்படியும் கண்மணிக்கு ஆசை காட்டி தமிழ்ச்செல்வியை சண்டைக்கு இழுக்க வைக்க முயற்சி செய்தார்கள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல கண்மணியை தொடர்ந்து மூளைச் சலவை செய்தவர்கள், இறுதியாக,
“கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்” என்றபோது கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. இதைப் பயன்படுத்திக்கொண்டு மணிமொழி குழுவினர் அவளை மெல்ல தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி தலைக்கேற ஆரம்பிக்க புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் பல படிகள் அதிகமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
புதிய நண்பர்கள் கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்.
“கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”
“என்ன அது.. இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”
“அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” என்றார்கள்.
இதற்கு 4 நண்பர்களும் நான்கு விதமாக கண்மணியை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனாலும் கண்மணியின் மனதில் ஏதோ உறுத்திக் கொண்டேதான் இருந்தது. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விடக்கூடாது என்று மனம் எச்சரிக்கை விடுத்தாலும் புதிய நண்பர்களின் ஆசை வார்த்தைகள் அவளை மதியிழக்கச் செய்தது.
அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,
“கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்” என்று கனிவுடன் கேட்டார்கள். அவளும் அவசர அவசரமாக, “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா” என்றபோதே அவள் அம்மா ஏதோ பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்து விட்டார்கள். எப்படியோ நல்ல வார்த்தை சொல்லி மகளை அனுப்பி வைத்தாலும் அந்தத் தாய்க்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. அவரும் அதற்குமேல் மகளை தொல்லை கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தவர் போட்டி நடக்கும் மைதானத்திற்கு தானும் வந்து சேர்ந்தார்.
போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது. அவள் அம்மாவிற்கு மட்டும் ஒரு ஐயம் இருந்து கொண்டுதான் இருந்தது. அதற்கேற்றார்போல் சில மாணவிகள் வந்து அவளிடம் இரகசியம் பேசிச் சென்றதையும் கவனித்து விட்டார். போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள் என்பதை உணர்ந்தவர் அதைத் தடுக்க ஆயத்தமாகவும் இருந்தார். குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள். தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாலும் கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டதில் பெருமிதம் கொண்டாள். அவள் அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்டவள் அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள்.
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும், என்ற வள்ளுவரின் குறள் அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது.
காட்சி அறிமுகம்
அனைவருக்கும் வணக்கம்.
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
என்பது கூடா நட்பு அதிகாரத்தின் 824வது குறட்பா.
இதன் பொருள், முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். நண்பர்களுடன் பேசும்போது நம்முடைய மனம் நேர்மறை சிந்தனைகளில் அல்லாமல் எதிர்மறை சிந்தனைகளில் வளர்கிறதெனில் அந்த நட்பு தவறானது என்பதைக் கண்டு கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் தான் முடியும் .
“உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்”, என்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யக் கூடாது. அதன் வலி தாங்கமுடியாதது என்பதையும் உணரச் செய்யும் காட்சிகளைத்தான் காண இருக்கிறோம். வாருங்கள் நிகழ்ச்சிக்குள் போகலாமா…
காட்சி – 1 பள்ளி வகுப்பறை
ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே! ஒரு நல்ல செய்தி. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஆண்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கப் போகிறது. கண்மணி, தமிழ்ச்செல்வி தவிர வேறு யாரெல்லாம் பெயர் கொடுக்கப் போகிறீர்கள்?
மாணவர்கள் ஒன்றாக டீச்சர் ஏன் அவர்களைத் தவிர என்கிறீர்கள்? என்ற கூச்சல்.
ஆசிரியர்: ஆமாம் அவர்கள் எப்போதும் கலந்து கொள்பவர்கள்தானே. அதான் நானே அவர்களுடைய பெயர்களை எழுதிக்கொண்டேன்..
ஓ …..
ஆசிரியர்: சரி, விரைவில் மற்றவர்களும் பெயர்களைக் கொடுங்கள். இப்போது பாடத்திற்குச் செல்லலாம்.
காட்சி – 2
கண்மணி : “தமிழ், எப்படியும் இந்த முறையும் நீதான் சுழற்கோப்பையை தக்க வைத்துக்கொள்ளப் போகிறாய். அப்படித்தானே?”
தமிழ்ச்செல்வி : அதெல்லாம் இல்லைப்பா. எனக்குப் போட்டியாத்தான் எப்பவும் நீ இருகிறாயே? அப்புறம் எப்படி ?
(தமிழ்ச்செல்வி அந்த இடத்தை விட்டு அகன்றாள்)
மணிமொழி : “ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்”
கண்மணி : “அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச்செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது”
மணிமொழி : “அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை கோப்பையை வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்”
மற்ற 3 மணவிகள் : ஆமாம் .. ஆமாம். மணிமொழி சொல்வது சரிதான். நீதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போகிறாய்.
“கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்”
(கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பிக்கிறாள். “எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும்” என்று தனக்குத்தானே சபதம் மேற்கொள்கிறாள்.
(புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்).
“கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”
கண்மணி : “என்ன அது.. இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”
தோழிகள் : “அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” .
கண்மணி : (மனதிற்குள்) மனசு என்னமோ உறுத்திக் கொண்டே இருக்கிறதே. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விட்டுவிடுவோமா? சே..சே.. அப்படியெல்லாம் ஆகாது. பார்த்துக்கலாம் …
காட்சி – 3
அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,
அம்மா : “கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்”.
கண்மணி : “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா”
அம்மா மனதிற்குள் .. : ஏதோ பிரச்சனை இருக்கிறது. என்னமோ அசம்பாவிதம் நடக்கப் போவதாகத் தோன்றுகிறதே. பேசாமல் போட்டி நடக்கும் மைதானத்திற்கு போய்விடலாம்”.
போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது.
சில மாணவிகள் வந்து கண்மணியிடம் இரகசியம் பேசிச் செல்கிறார்கள்.
அம்மா மனதிற்குள் : “போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும்”.
குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள்.
“தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாள்” என்ற அறிவிப்பு வருகிறது.
கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
கண்மணி மனதிற்குள் : நல்ல வேளை. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டோம்”
அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார்.
இறுதிக் காட்சி
“நண்பர்களே, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்ட கண்மணி அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள். நமக்கும் இது ஒரு பாடம்தானே?”