Tag: sathiyamani srinivasan kavithai tamil delhi

  • வாழியே தமிழே நீயும் !!

    உலக கவிஞர்கள் தினமென்று
    தொலைக்காட்சி படித்தது
    உலக கவிஞர்கள் தினமின்று
    மனசாட்சி இடித்தது
    உலக கவிஞர்கள் தினம்-என்று
    வல்லமை விரைந்தது – மனம்
    உலக கவிஞர்கள் தினமென்றும் (என)
    தனைத் தேற்றி கொண்டது

    என்ன செய்திங்குக் கிழித்து விட்டேனென‌
    பாவலர் வரிகள் மீறும்
    இன்றும் களைக்க மாட்டோ மென்றென‌
    காவலர் வரிகள் கூறும்
    படக் கவிதைப் போட்டிக்கு வாருமென‌
    அண்ணாவின் அழைப்பில் சேரும்
    படக் கவிதைப் பாராட்டு பாருமென‌
    மேகலையின் தேர்வில் தேறும்

    ஓயாது ரேஸில் ஓடும் புரவிகளாய்
    கிரேஸியின் வெண் பாக்கள்
    தேயாது வானில் பாடும் மீன்களாய்
    செண்பகப் புது கவிகள்
    பாயாது பெருக்கு எடுத்து பாயும்ஜெய‌
    பாரதன் தரும் வரிகள்
    சாயாது சாய்ந்து கொண்டு ரசிக்க‌
    ஜெயசர்மா மரபு கவிகள்

    எத்தனை எத்தனைக் கவிகள் வாழும்
    இத்தகு வல்லமை இணையம்
    அத்தனை அத்தனைச் சிறப்பில் ஆளும்
    வாழியே தமிழே இனியும்

    Share
  • அம்மா இல்லாத தீபாவளி 

    அம்மா இல்லாத தீபாவளி 
    அதுவே ஆறாதத் தீராவலி 
    உணர்ந்தவருக்குத் துயர் தெரியும் 
    உணராதவர்க்கு இனி புரியும் 

    முப்பது நாட்கள் முன்னிருந்தே 
    முதலாம் முயற்சியில் இற‌ங்கிடுவாள் 
    அப்புறம் பார்க்கலாம் மென்றிடினும் 
    அப்பா மனதைத் தளர்த்திடுவாள் 

    எப்பொழு தெங்கெனக் கேட்காமல் 
    இப்பொழு தெனவே இழுத்துசெல்வாள். 
    எங்களின் விருப்பத் திற்கேற்றாற்போல் 
    எல்லாம் எல்லாம் கிடைத்திடுமே 

    சீருடையாய் மொத்தத் துணிவாங்கி 
    சிறப்பாய் தைக்கவும் தந்திடுவாள் 
    தந்தைக்கும் சட்டை வாங்கியப்பின் 
    தனக்கெனப் பிறகே யோசிப்பாள். 

    திருச்சியின் பெருங்கடைச் சாலையிலே 
    தெப்பக்குள எதிர் சிந்தா மணியினிலும் 
    எங்களுக் கெனவே போரிட்டு 
    பட்ஜெட் பட்டாசும் வாங்கிடுவாள் 

    காலும் கைகளும் வலித்தாலும் 
    கரகரத் தொண்டைக் கனத்தாலும் 
    உறவினில் பிடித்தவைக் கணக்கிட்டு 
    இரவினில் பட்சணம் செய்திடுவாள் 

    எத்தனை சிக்கனம் நயத்தோடு 
    அத்தனை வகைகளும் சுவையோடு 
    இத்தனை பகுத்திட கொடுத்திடுவாள் 
    தனக்கென மறைக்கா தெய்வமகள் 

    காலையில் சீக்கிரம் எழவேண்டி 
    இரவினில் உறங்கிடச் செய்திடுவாள். 
    விடியலின் முன்னே எழுந்தாங்கே 
    எண்ணெய்க் குளியலைத் தொடங்கிடுவாள் 

    ஆடைகள் எடுத்து அணியவைப்பாள் 
    ஆசையில் ஆசிகள் பொழிந்திடுவாள் 
    அன்புடன் பொங்கிட அணைத்துடனே 
    ஆண்டவன் அருளிட துதிசெய்வாள் 

    இட்டிலி சட்டினி இடும்போதும் 
    தட்டினில் விருந்தினைத் தரும்போதும் 
    மட்டில்லாத மகிழ்ச்சி தரும் 
    அம்மா வருவாய் எப்போது? 

    சிரிப்பில் உதிரிட மத்தாப்பு 
    சிலநொடி கருகிட புகையாக‌ 
    சுழலும் சக்கரம் கக்கிவிட்டு 
    இருள்வெளி கோளம் ஆகிவிட 

    அதிரும் சரவெடி பட்டாசோ 
    சிதறிடத் துகளாய் வீதியிலே 
    புதிரும் போட்டது யாவுமெனைப் 
    புரிந்தது பிரிவுகள் இப்படியா?


    வருத்திடும் பிணியில் இருந்தாலும் 
    மருந்தினை உண்டிட மறந்தாலும் 
    விரும்பிடும் எங்களை மறக்காமல் 
    இருந்தவள் விட்டெனைச் சென்றது ஏன்? 

    சப்தமிட்ட வெடிகள் இன்றி 
    சாளரமெல்லாம் மூடிவைத்தேன் 
    மூச்சுத் திணறும் புகையென்றே 
    முகத்திரையும் நான் வாங்கிவைத்தேன் 

    தேடும் இடமெலாம் உனைப்போல 
    உருவம் நகர்வது தெரியுதம்மா 
    அகலின் விளக்கின் அடியினிலே 
    அம்மா உன் நிழல் ஆடுதம்மா 

    இருளைக் களைந்திடும் உன்விழிகள் 
    அருளைப் பெருக்கிடும் உன்மொழிகள் 
    கருணைக் கடலாய் இருந்தவளே 
    காதுகள் கொடுத்து கேளாயோ 


    படைத்ததும் கவிதைப் படித்துவிட்டு 
    பாராட் டள்ளி கொடுத்தவளே 
    கிடைத்திட வேண்டும் அதுபோன்று 
    நிலத்தினில் மீண்டு வருவாயா? 

    கனக்கும் மனதின் ஒலியோடு 
    கசியும் ஈரம் கண்களிலும் 
    துடைக்கும் விரல்கள் உனையன்றி 
    துணையாய் எதையும் கண்டதில்லை

    Share
  • தாய்மையே ! வெண்த்தூய்மையே !!

    (கலி விருத்தம் )

    தாயுமானவள்  தாரமானவள் தங்கையானவள்  அன்பினோடும்

    சேயுமானவள்  சேமமானவள்  சீருமானவள்    பண்பினோடும்

    வாயுமானவள்   வாசியானவள்  வாழ்வுமானவள் பண்ணோடும்

    வேயுமானவள்   பேருமானவள் பெண்மையாமவள்  தாய்மையே  1

     

    ஈரமானவள்     தீரமானவள்   ஆரமானவள்  அரசனாகும்

    வீரமானவள்    விசயமானவள் வித்தையாகி  அகிலமாகும்

    வாரமானவள்   மாதமானவள் வருடமாகியே வயதுமாகும்

    சாரமானவள்   சந்தமானவள் சக்தியாமித் தாய்மையே         2

     

    பெண்மையாக  மென்மையாக தந்திடும்பத்   துமாதமாக‌

    உண்மையாக    இன்மையாகத்     தங்கிடும்கருப்  பையுமாக‌

    தண்மையாக    திண்மையாக    கவனமாகப்  பெற்றெடுக்க‌

    ப‌ண்மையாக     நண்மையாக    பிறப்பளித்த  தாய்மையே                   3

     

    விழிகளாட்டி விரல்களாட்டி வளைகளாட்டி அம்மாயென‌

    மொழிகளுட்டி தமிழனாக்கி வழிகளாற்றிய‌ அன்னையை

    பழிகளாற்றிக் கலைகளென்ற‌ கவர்ச்சிகாம வெறியரை

    அழிப்பதற்குச் சூலமேந்தும் ஆதிகாளியே தாய்மையே        4

     

    கற்பனைக் கலையெழுதக் கன்னியரைப் பயமுறுத்தி

    அற்பனைப் போலசிலர் அறமாற்றி நெறிமாற்றி

    கற்பினைக் களங்கமுற கண்கலங்கச் செய்வதும்

    ஏற்பிலைக் காணாயோ! நீயும் பெண்தானே!!     5

     

    கற்றவை   யாவுமினி    கசடறவே   நெறிமாற‌

    மற்றவை   யேவுமினி  மறைமுக     வெறியேறி

    உற்றவை   யாலினிது  குற்றம்        வளராமல்

    கொற்றவைக் காக்கத் தீயோர்த் தலைவீழ‌ !!     6

     

     

    Share
  • நிறையாய் வளராய்

    இனிய ஆசிரியர் (குரு) தின வாழ்த்துகள்

     

    புவியாய் கதிராய் மதியாய் வெளியாய்
    நிலமாய் நீராய் தீயாய் காற்றாய்
    மலையாய் நதியாய் ஒலியாய் ஒளியாய்
    சகமாய் சுகமாய் மனமாய் வளர்ந்தே!!

    காயாய் கனியாய் கசப்பாய் இனிப்பாய்
    தாயாய் பதியாய் தமிழாய் அணியாய்
    உறவாய் உணர்வாய் உளமாய் இதமாய்
    கறவாய் கவியாய் கனவாய் நனவாய்

    சுரமாய் சுயமாய் சுருதியாய் கிருதியாய்
    தரமாய் சரமாய் வரியாய் சரியாய்
    கரமாய் க்ரமமாய் வரமாய் வருமாய்
    விரியாய் குருவே திரிமேன் ஒளியே!

    மனமாய் குணமாய் இனமாய் மதமாய்
    தனமாய் வளமாய் தினமாய் திறமாய்
    வ‌னமாய் தவமாய் பிறவாய் இறவாய்
    முடிவாய் தருவாய் முதல்வாய் சரணே!!

    சரியாய் உரையாய் விரியாய் வரியாய்
    கரியாய் அரனாய் அரியாய் குகனாய்
    தெரியாய் புரியாய் சுவையாய் அமுதே!
    பெரிதாய் சிறிதாய் கிரியின் அழகே!!

    கருவாய் திருவாய் கனிவாய் மொழியாய்
    தருவாய் தருவாய் ஒருவாய் மொழியாய்
    உருவாய் அறிவாய் அருவாய்த் தெளிவாய்
    குருவாய் வருவாய் விரைவாய் மனதே

    வரவாய் செலவாய் இரவாய் பகலாய்
    முழுதாய் இலதாய் மதியாய் ஒளியாய்
    புதிதாய் முதிதாய் வயதாய் தொடரும்
    விதிதாய் சுழலும் உனதாய் முடியும்

    உருவில் குருவாய் அருளில் தாயாய்
    கருவின் முதலாய் அறிவின் விழுதாய்
    இருளில் ஒளியாய் இறையே அருளாய்
    மறையாய் மலராய் நிறையாய் வளராய்.

    Share
  • என்னதவம் செய்தனையோ!-இரங்கற்பா

    சத்தியமணி

     

    அன்னல் அட்டல் பிஹாரி !!

    சினத்தையும் சிரிப்பால் சொன்னவர் இன்றுயில்லை
    சிரத்தையும் சிரசில் கொண்டவர் இன்றுயில்லை
    சிறப்பிலும் அமைதிக் காத்தவர் இன்றுயில்லை
    இறப்பிலும் எளிமை யேற்றவர் இன்றுயில்லை

    ஆட்சிகள் கவிழும்போதும் கலவரம் எழுப்பவில்லை
    காட்சிகள் கனத்தபோதும் நம்பிக்கை நழுவவில்லை
    கட்சிகள் அத்துணைக்கும் கலங்கரை விளக்கமாக
    மாட்சிமை பெற்றுயர்ந்தார் மதிநலம் பிறழவில்லை

    வன்முறை தூண்டவில்லை வாக்குகள் மாற்றவில்லை
    பன்முறை பரிகசிப்பில் பாரதம் சாய்க்கவில்லை
    மொழிவெறி இனவெறி பேசிடும் தலைவரில்லை
    குலவெறி கொண்டு ஆளும்குண வெறி கொள்ள‌வில்லை.

    ஏளனம் செய்தவர்க்கும் தண்டனை கொடுக்கவில்லை
    நூதனம் மாற்றம்செய்ய என்றுமே தயங்கவில்லை
    அரசாங்க கூட்டம் தன்னில் அவரிடம் கண்டதென்னில்
    அரவணைத்த நகைச்சுவைதான்! ஆணவம் கடுகுமில்லை!!

    எண்ணிய இன்பமெல்லாம் கவிதையாய் விளம்புபோதும்
    கண்ணிய மாககட்சி தலைவர்கள் வாழ்த்தும்போதும்
    விளம்பரம் செய்யவில்லை வெறுப்பினில் பேச்சுமில்லை
    புண்படு ம்படிபேசும் சுயநலக் காரரில்லை.

    இலஞ்சமுடன் இலாவன்ய ஊழல்கள் செய்துவிட்டு
    இலவசம் ஆட்சி கேட்டு ஏந்திடும் தலைவனில்லை.
    சொத்துகள் குவித்தாங்கே சொகுசினில் வாழுமந்த‌
    வித்தையும் அறியவில்லை!! விண்ணேகி சென்றாரே!!

    அட்டலின் கர்ஜனைக்கும் அவரிடும் கட்டளைக்கும்
    அணுகுண்டு போக்ரானில் அந்நியர் அச்சம்கொண்டார்
    சதியினில் வீழவைக்க எத்தனை எதிரியிங்கே
    விதியினில் சென்றபோதும் மீண்டிது ஆளுமென்றார்

    இப்படியோர் தலைவன் இனிமேலும் கிடைப்பாரோ!!
    இப்படியோர் கவிஞன் இனிமேலும்     பிறப்பாரோ!!
    இப்படியோர் மகனை பெற்றவளே ! பாரதமே ! – பெற்று
    இவனுறங்க உன்மடியில் என்னதவம் செய்தனையோ!!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – சத்தியமணி

    முன்னுரை

    ஓராயிரம் பார்வையிலே என் பார்வையை நீயறிவாய்  , என் பார்வையில் உன்வடிவம்  ஓர் மாபெரும் கவியரங்கம். முத்தய்யா, உன்னை யொன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்  என்னைக் கட்டுரை  எழுதச் சொன்னால் ஒரு நாள்  போதுமா ஒரு மாதம் தான் போதுமா? எத்தனைப் படைப்புகள் …அப்பப்பா ! சின்ன கண்ணன் புன்னகையில் என்னத்தான் ரகசியமோ ? தட்டு தடுமாறும் எனைப் பார்த்து கேட்கிறீர் மயக்கமென்ன இன்னும் மெளனமென்ன என்று கேளிக்கையுடன்.? ஆயிரம் மலர்களே மலருங்கள் ஆயிரம் வார்த்தைகள் பகிருங்கள் கவியரசே என்றே தொடர்கிறேன்.  கவியரசே எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன், உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் ?

    புகழுரை

    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்று வாழவில்லை நீ.  எந்தஊர் என்றவனே என்று கேட்பவர் முன் இருந்தவூரைப் பெருமையுற செய்தவன் நீ. தமிழகம் பிறந்தாலும் உலகம் பிறந்தது எனக்காக …ஓடும் நதிகளும் எனக்காக என்று உரிமையாய் பாடியவன் நீ ? கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கவியென்றால் கவியரசுன்றன் வரியாகுமா எனக் காட்டியவன் நீ? புவியரசு தான் விதிக்குமா! கவியரசின் வரிகளும் வாடிக்கையாய் கேளிக்கைவரிகள் விதிக்குமய்யா! மெல்லிசை மன்னரின் மெட்டுகளும் உங்களின் வரிகளின் சொட்டுகளும்  அற்புத அலை வரிசைகளை செவிகளில் நுழைத்தன ! அனுபவம் புதுமை என்று பல்லவி பாடிய பின் விஸ்வநாதன் வேலை வேண்டும் என்றும் ஆடினாய். பளிங்கினால் ஒரு மாளிகையும் அமைத்து அதன் மஞ்சத்திலிருந்து  எல்லோரது   நெஞ்சத்தில் அமர்ந்தவன் நீயல்லவோ ? கருமை நிறக் கண்ணா !

    காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது போன்றது உங்கள் கவி பெருக்கு! கற்பனை  முறுக்கு!!. பல்லவியிலிருந்து சரணம் வரை அருவி போல் தொடராய் கவிதை வரும். இந்தத் திறன் இப்போது எவருக்கு இருக்கிறது ?   மலர்ந்தும் மலராத பாதி மலரானப் பாச மலராகட்டும் கண்ணே கலைமானே என்ற வாச மலராகட்டும் காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்ற தாலாட்டாகட்டும் எதிலும் உங்களின் கை வண்ணம். இந்த கை வண்ணம் அங்கே கண்டேன் மை வண்ணம் இங்கே கண்டேன் என்று உங்களின் கவி தொகுப்பினில் எத்தனை ஆளுமைகள் ?  உண்மையில் பாடல் வந்ததும் தாளம் வந்ததா இல்லை தாளம் வந்ததும் பாடல் வந்ததா,  சொல்லுங்கள் பார்க்கலாம்? எனக்கு மட்டும் எனக்கு மட்டும் ரகசியம் சொல்வாய்,அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிட மாட்டேன்.

    எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா? நம் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?.வயற்காடாகட்டும் ஏரிகரையாகட்டும் கல்லூரி வளாகமாகட்டும் அயல்நாட்டு சங்கமாகட்டும் உம் பாட்டையே பாட வைத்தது யார்?

    சிறப்புரை

    என்னைப் போன்ற பூஜ்ஜியத்துக்குள், ஒரு ராஜ்ஜியம் அமைத்தவன் நீ.  புரியாமல் நின்றவன் இவன்.

    அத்தனையும்   முத்தமிழ் காவியமோ ஆன்றத் தமிழ் ஓவியமோ ? கோப்பையில் உன் குடியிருப்பாகலாம் ஒரு கோலமயில் உன் துணையாகலாம் வாசிக்கும் எங்களுக்கு அத்தனையும்  கள் போதை அமுதம் தான்.

    கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம் போல் தமிழ் மக்களுக்கு வாய்த்தது உங்களின் பாடல்கள்.   எளிமையாகவும் இனிமையாகவும் படிக்காத பாமர மக்களாகட்டும் ஆராய்ச்சி செய்யும் முனைவராகட்டும் அனைவருக்கும் உம் கவிதை தேனீர் விருந்து.  எப்படி ?  பார்த்தேன் ரசித்தேன் பக்கங்களை இசைத்தேன். பாட்டு பாடவா  பார்த்து பேசவா என்று தமிழை அழைத்ததால் என்னவோ?  அவளும் ஜல் ஜல் யெனும் சலங்கையொலி கூட்டி நடனமாடினாள் உங்கள் முன்.

    அறிவுரை

    புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி யில்லை என்பதில் உன் போராட்ட வாழ்க்கையை அறிய முடிகிறது. வந்து பிறந்துவிட்டேன்  ஆனால் வாழத் தெரியவில்லை என்பதில் காயங்கள் தெரிகிறது. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று வனவாசத்தில் வரித்த போது சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்றே மது போதையில் அடிமையானாய்.  போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே என்று ரசிகர்கள் அழுத போது மயக்கம் எனது தாயகம் மெளனம் எனது தாய் மொழி என்று ஆறுதல் அளித்தாய் . உங்கள் சொத்துகளை கபளீகரம் செய்த தொண்டர்களுக்கும்  யாரைத் தான் நம்புவதோ என்று குட்டு வைத்தாய்.  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று நிலைகுலைந்தாய். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததல்லவா ? யாரை நம்பி நான் பிறந்தேன் என்ற எழுச்சியுடன் நிமிர்ந்தாய்.  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று சவாலை சமாளித்தாய். நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு , உன்னை யறிந்தால் நீ உன்னை யறிந்தால் வரிகளும்  படிப்பில்லாத மக்களுக்கும் நம்பிக்கை கொடுத்தது.உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பது  தாழ்ந்த மனப்பாண்மை நோயாளிகளுக்கும் ஊக்க மருந்து , ஆறுதல் அரவணைப்பு. செல்வத்தை சொல்லும் போது காசே தான் கடவுளடா

    என்றாய். பால் தரு பசுவுக்கு “இணங்காதோர் மனம் கூட இணங்கும் (கருணை) ,

    நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும் (நம்பிக்கை), வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும் (சிறப்பு), உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும் (பயன்) என்றாயே. தற்கால  அரசாங்கத்திற்கு கைக்குக் கைமாறும் பணமே – உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே, வரவு எட்டணா செலவு பத்தணா இக்கால நிலைக்கு ஏகப் பொருத்தம். அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் என்பதும் ஒரு ஏவுகணை தான்.”மலை போலே வரும் சோதனை யாவும்

    பனி போல் நீங்கி விடும்,நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்..,கூட இருந்தே குழி பறிச்சாலும் கொடுத்தது காத்து நிக்கும்” ஆகா அற்புதம்.

    இல்லறவுரை / காதல் உரை

    ‘நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை,காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை”  வல்லவன் இப்படி சொல்லலாமா ? பாலிருக்கும் பழமிருக்கும் பசியெடுக்காது உங்களின் பாட்டை கேட்டால். சிட்டு குருவி முத்தங் கொடுத்த இளமை காதலும் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்  உதிரம் கொட்டுதடி என்ற முதிர்ந்த காதலும்  திரைப் பாடல்களாய் யார் தரப் போகிறார்கள்? மலர் போன்ற இதழ் இன்று பனிகண்டு துடிக்கும் என்ற வரிகளில் காமம் தெரிக்கிறது. ஆபாசம் தெரியவில்லை. ” சுக்கு மிளகு தட்டி சூப்பு வைச்சு”    என்றால் இன்று பாரத விருது !  அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்காகாது என்பதில் மின்னல். மனைவிக்கு வளர்ந்த கலை மறந்து விட்டாள் …..குடும்பக் கலை போதுமென்று … – அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா? என்ற அறவுரை  வழங்கினாய்.  திருமண அர்த்ததிற்கு “

    சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை

    சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை – (சண்டையே வராது பாருங்க) ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை”. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்  என்பதை உணர்ந்தார் போல் உன் கஜானாவும் எனது என்ற நிலையின்று.  காதலின் அர்த்தத்திற்கு  “பொன்னை விரும்பும் பூமியிலே,என்னை விரும்பும் ஓருயிரே,புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே” என்றாய். காதல் சிறகை காற்றினில் விரித்து பறந்தாய். என்னதான் ரகசியமோ இதயத்திலே, நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே என்றும் மயங்கினாய். “நடமாடும் மேகம் நவநாகரீகம் … நடமாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்கால சின்னம் உயிராக மின்னும்”  என்று கன்னிகளின் பண்பைக் கூறினாய். பெண்மையை போற்றும் முகமாக ” ஈன்ற தாயை நான் கண்டதில்லை எனது தெய்வம் வேறெங்கும் இல்லை

    ”  என்றாய்.  ஊடலைச் சொல்லி “கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது,என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு,ஆசையில் விழுந்தேன் அங்கே,காலையில் கனவுகள் எங்கே” உறவாக்கினாய்.

    “மலராத பெண்மை மலரும், முன்பு தெரியாத உண்மை தெரியும்” என்றும் உசுப்பினாய். “ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன

    அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன” என்று பரிமளித்தாய்.

    கற்புக்கு  ” தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை,தெருவினிலே விழலாமா

    ,வேறோர் கை தொடலாமா,ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா,ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா” என்ற வர்ணித்தாய். குழந்தைக்கு ‘வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவோ, பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ’ என்றாயே பார்க்கலாம்.

    பகுத்தறிவு உரை

    அண்ணன் என்னடா என்ற பல்லவியில் குடும்ப அரசியலை கலக்கியவர் நீங்கள். அராஜகம் செய்ய வடக்கே முளைத்தவரை ராணி மகா ராணி யென்று பாடி,  கவியரசை புவியரசு வெற்றி கண்டதுண்டா என்று வரிகள் விட்டதை மூன்றாம் வகுப்பில் ரசித்தவன் நான். அது தான் நான் கவி யெழுத வித்திட்டதும். இன்றும் தில்லி ராஜபேட்டையில் நிமிர்ந்து நடக்க  வைக்கிறது செந்தமிழ் கவிதைகளை இயற்றி கொண்டு!புதியதல்லவே தீண்டாமை யென்பது புதுமையல்லவே அதை நீயும் சொன்னது  சமூகப் பிரச்சனைக்கு பகிரங்க கண்டனம்.இளம் பகுத்தறிவில் கடவுள் ஏன் கல்லானான் என்றும் இறைவன் இருக்கிறானா என்றும் எழுதிய வரிகள்,  முதிர்வில் இறைவன் வருவான், கடவுள் ஒருநாள் .. தனியே வருவான்,  இருக்கும் இடத்தைவிட்டு என்றும் பல்லவிகள் சரணங்களோடு உதயமாயின. ஆள்பவர்களின் அடிபணிவாயாயின் உனக்கு கவிபேரரசு,கவிமாபேரரசு எல்லாம் கிடைத்திருக்கும். “நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா , தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா”  நம்பிக்கை துரோகிகளுக்கோர் கணை. சமத்துவத்திற்கு “அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி… பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் பூமி சிரிக்கும்” . மனிதநேயத்திற்கு “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”  சுட்டிகாட்டினாய்.

    எழிலுரை

    இயற்கையை கையாளுவதில் கடவுளுக்கு பின் கவிதான். இயற்கையென்னும் கன்னியை வர்ணிக்கும் பால் “அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே,ந‌தி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே! ” , “அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்…..பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன், பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்” கவிஞன் கடவுளுடன் பேசுகிறான். தமிழும் கவியுமாக “நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே….தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே….” வரிகள்.

    கண்ணனுரை

    யமுனைக் கண்ணனுக்கு கங்கை கரைத் தோட்டம் என்ற பல்லவியை போட்டாலும் பிரசிதம்! . ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதை காணுங்கள் என்றாய் குருவாயூரப்பனை? ஆனால் அவனோ நின்றபடி யிருக்கிறான்! நீங்கள் சொல்ல வந்தது அன்னப் பிரசனம் செய்ய அன்னை முன் அமர்ந்திருக்கும் குட்டி கோபாலர்களை அல்லவா ? அவ்வப்பொழுது கீதையையும், இதிகாசங்களையும், காவியங்களையும், பாசுரங்களையும், பாரதியையும் உமர்கயாமையும் காளிதாசையும் வரிகளில் படைத்தாய்.

    ஞான உரை

    கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா என்ற ஞானக் கேள்விக்கு  ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது ,அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது, ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது என்றே பதிலளித்தாயே ! நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா  அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா என்ற சித்த மந்திரம் எத்தனை திறம் !  பொதுவுடமையாய் “ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும் – நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி  ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் ” சொன்னது உன்னுள்ளும் பாரதி. “உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

    உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” ஏகத்தின் அனுபவம். ” தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்,அது தெரியாமல் போனாலே வேதாந்தம்,மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி,என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி,உண்மை என்ன பொய்மை என்ன ?”  என்ன வரிகள்? “படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா

    பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா”  இன்றைய வாழ்க்கை நெறி.

    “சொர்க்கமும் நரகமும் நம் வசமே, நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே…..

    சத்தியம் தர்மங்கள் நினைக்கட்டுமே…. இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே” ஒரு சமாதானம்.

    முடிவுரை

    உங்களுடன் அமர்ந்து என் கவிதைகளை பகிர ரொம்ப ஆசைப் பட்டேன். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை  காலம் செய்த கோலமய்யா கடவுள் செய்யும் ஜாலமய்யா ! அதற்கு  வாய்ப்பே வரவில்லை.  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைதான். அதற்காக இழந்தா நிற்பது ? நெஞ்சம் மறப்பதில்லை  அது நினைவை இழப்பதில்லை அல்லவா . அதற்காக போனால் போகட்டும் போடா என்று சொல்ல வேண்டாம்.   யார் பெறுவார் அந்த அரியாசனம் கவியரசோடு தனக்கும் ஒரு சரியாசனம் என்றே பாடுவேன். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது உன்னைப் பார்த்த பின்னால். பார்த்தால்/படித்தால் பசி தீருமா என்று கேட்டால் ஆம் என்பேன் .  எனது பாட்டும் நீ  பாவமும் நீயானாய்.  நலந்தானா ! நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா என்பது என் கைப்பேசி அழைப்பு மணி. காவியப் பேரரசு வாலி படித்து சபாஷ் கொடுத்த இவன் எழுதிய உனக்கோர் இரங்கற்பாவின் வரிகள்

    கவிமகள் உன்னையே கணவனாய் எண்ணியே

    கற்புடை ம‌ங்கையாய் வாழ்ந்திருந்தாள்

    கவிநீ பிரிந்ததால் கண்டவர் நாவிலே

    கற்பிழந்து  இங்கே தவிக்கிறாள்

    கவியரசு கண்ணதாசனுக்கு இந்த தாசனின் சமர்ப்பணம்.

    Share
  • வல்லமைத் தமிழே !

    எப்படி வந்தாய் உள்ளே என்
    இதயக் கருவரைக் குள்ளே
    கற்பனை யென்றெனும் உடல் கலக்காமல்
    கவிதை யெனும்பெண் கருசிதைக்காமல் – தமிழே ()

    பாரத பூமியில் பழம்பெரும் நாடினில்
    பாரதி வாணியை யாழுடன் நாவினில்
    ஏற்றி நவின்றிடும் வாக்கினில் அருளுடன்
    ஏட்டில் பள்ளியில் வல்லமைத் தமிழே()
    ஊற்றிட ஊற்றிட உவந்திடும் கள்ளாய்
    காற்றிட சுவாசப் பைக்குள் துள்ளாய்
    வேற்றிட மென்றெனை வெறுப்பார்க் கில்லாய்
    போற்றி புகழ்தரு வல்லமைத் தமிழே ()

    மாறுதல் த‌ந்திடும் காலமும் வந்திடும்
    ஆறுதல் மொழிகளும் வாழ்த்துகள் சிந்திடும்
    ஊறுதல் இன்றினி ஊர்வலம் என்றிடும் – வாகை
    தேறுதல் பெற்றிட வல்லமைத் தமிழே()

    Share
  • ஓட்டுப் போடப் போனார் … (காற்று வாங்கப் போனேன்……மெட்டு)

    சத்திய மணி

     

     

    ஓட்டுப் போடப் போனார்   வெறும்

    ஓட்டைப் போட்டு வந்தார்

    நாட்டை காக்கவில்லை வரும்

    கேட்டை பார்க்கவில்லை   ()

     

    வேட்டையாடும் கூட்டம் பல‌

    கூட்டை தேடி ஓட்டும்

    கோட்டை தாண்டி நோட்டம் லஞ்ச‌

    நோட்டை எண்ணி நீட்டும்

    ஏட்டில் தந்தக் கல்வி பலி

    யாட்டை யாக்கும் பள்ளி

    வீட்டைக் காக்கவில்லை எனில்

    நாட்டைக் காக்க வருமோ  ()

     

    திண்ணும் விலையும் ஏறும் வீட்டு

    மண்ணின் விலையும் ஏறும்

    தேவை வரியும் ஏறும் அதற்கு

    சேவை வரியும் ஏறும்

    தேர்தல் முன்னர்  ஒன்று கூட்டு

    தேர்தல் பின்னர் ஒன்று

    மக்கள் ஓட்டில் இல்லை ஆட்சி

    குதிரை பேரம் போகும்  ()

     

    சின்னம் பார்த்து போட்டால் அது

    பின்னமாகி போகும்

    முன்னத் தேர்தல்போல இதுவும்

    உஞ்சலாட்டம் போடும்

    முதுமை நினைக்கும் ஒன்று துள்ள‌

    இளமை நினைக்கும் ஒன்று

    மடமைத் தனத்தில மீண்டும் வாக்கு

    உரிமை சகுனி தாயம்()

    Share
  • ஊழல் நாற்பது

    இல்லறத்தில்

    1. கொட்டுகிற குழாய்களை நிறுத்த வேண்டாம்
    2. குடியிருப்பில் குப்பைகளை அகற்ற வேண்டாம்
    3. மின்சாரம் வீணடிக்க வருந்த வேண்டாம்
    4. அண்டை வீட்டு சண்டைகளை நிறுத்த வேண்டாம்
    5. அறிவுரைகள் என்று குட்டை குறைக்க வேண்டாம்

    கல்லூரியில்

    1. சிகப்பு சிக்னல் விளக்குகளை மதிக்க வேண்டாம்
    2. சீக்கிரத்தின் த்ரில் ஸ்பீடு குறைக்க வேண்டாம்
    3. கட் அடித்து வகுப்பறைக்கு செல்ல வேண்டாம்
    4. பிட் அடித்து மாட்டும் வரை அசர வேண்டாம்

    வாலிபத்தில்

    1. சீக்கிரத்தில் பணம் சேர்க்க நேர்மை வேண்டாம்
    2. பெட் அடித்து  சூதாட தயங்க வேண்டாம்
    3. அடிதடியில் இறங்காமல் தடுக்க வேண்டாம்
    4. சகிப்புத்தனம் சலிப்பு தரும் சேர்க்க வேண்டாம்
    5. நல்லவரின் அறிவுறையை நினைக்க வேண்டாம்
    6. வல்லவரின் கால்பிடிக்க தயங்க வேண்டாம்
    7. படித்தால் தான் பட்டம்யென அஞ்ச வேண்டாம்

    வேலை கிடைத்த பின்

    1. நம்மைவிட முன்னேற்றம் யெவர்க்கும் வேண்டாம்
    2. நட்புதனில் இலாபமின்றி சேர்க்க வேண்டாம்
    3. கொடுக்கும் குணம் எடுக்கும் வரை குறைய வேண்டாம்
    4. கெடுக்கும் மனம் இருக்கும் வரை மறைய வேண்டாம்
    5. எடுக்கும் தனம் திருட்டுஅல்ல விடவும் வேண்டாம்
    6. அலுவலக தூக்கத்தை நிறுத்த‌ வேண்டாம்
    7. தொலைபேசி அரட்டைகளை குறைக்க வேண்டாம்

    ஆட்சிக்கு வந்தபின்

    1. எதிரிகூட கூட்டுசேர வெட்கம் வேண்டாம்
    2. வாக்குறுதி தொகுதி பற்றி நினைக்க வேண்டாம்
    3. அன்பளிப்பாய் தருவதைநீ மறுக்க வேண்டாம்
    4. அரசியலில் இதுசகஜம் மறக்க வேண்டாம்
    5. பொய் சொல்வார் முன் மெய்யை பேச வேண்டாம்
    6. புறம் கூறி களிப்பாற்று கலைக்க வேண்டாம்
    7. விதிகளை மீறிடவே தயங்க வேண்டாம்
    8. விளயாட்டு கலவரங்கள் அழிக்க வேண்டாம்
    9. பதவி தரும் உரிமைகளை அறுக்க வேண்டாம்

    வியாபார யுக்தி

    1. தொலைகாட்சி நாடகங்கள் தவிர்க்க வேணடாம்
    2. விளம்பரங்கள் கண்டு மனம் வெம்ப வேண்டாம்
    3. ஆபாச ஆடைகளை தடுக்க வேண்டாம்
    4. கலப்படத்தில் கஞ்சத்தனம் பிடிக்க வேண்டாம்
    5. பணம் கொடுத்து காரியங்கள் இழிவு வேண்டாம்
    6. பிறர் செய்யும் பிழைகளை மறக்க வேண்டாம்
    7. தன்னிச்சை செயல்படுத்த தயங்க வேண்டாம்
    8. சுதந்திரமாய் தப்பு செய திகைக்க‌ வேண்டாம்

    சாரம்

    குடிகளின் செயல்பாட்டில்  இத்தனை ஊழல்

    கோனென்ன மந்திரியும் அத்தனை ஊழல்

    நடப்பதுதான் நடக்கும்மென அறிந்த பின்னும்

    கிடைப்பதுதான்கிடைக்கும் என புரிய வேண்டும்

    கண்மூடி கொண்டாலும் இத்தனையும் நடக்கும்

    கண்திறந்து கண்டாலும் இத்தனயும் நிகழும்

    ஊழலில் உலகமெல்லாம் ஊறிஊறி போனதனால்

    நீயும் நானுமென விதிவிலக்கா! சொல்லுங்கள்

    Share
  • எந்திர வாழ்க்கையிலே !

    எந்திர வாழ்க்கையிலே மந்திரம் தேடுகிறார்
    தந்திரங் கற்றுபின்னர் மந்திரி ஆகவென()

    கம்மென் றிருந்திருந்தால் கணபதி தெரிவான்
    சம்மென் றிருந்திருந்தால் சண்முகன் வருவான்
    சிவனென் றிருந்திருந்தால் சிற்சபை கிடைக்கும்
    அவமான மின்றியிங்கே அருட்சபை மதிக்கும் ()

    அரியென் றிருந்திருந்தால் அறியாமை விலக்கும்
    சரிபுத்தர் வழியெனினும் சத்புத்தி பிறக்கும்
    ஒமென்றிருந்தாலும் உள்ளம் அமைதியிலே
    ஆமென்றிருந்தாலும் ஏசுவும் அன்பினிலே()

    அல்லா வென்றிருந்திருந்தால் எல்லாமும் உண்டு
    கல்லா லானச்சிலைக்குமே கருணையும் உண்டு
    சொல்லா முதுமைவரை பொல்லாகுணம் யெடுத்து
    எல்லாம் பெற்றிடினும் அருளின்றி யேதுபயன்()

    Share
  • சீதா கல்யாண வைபோகமே

    சீதா கல்யாண வைபோகமே
    ராம கல்யாண வைபோகமே
    ராமன் வரும்வரை காத்திருந்தாள்
    வைதேகி மனமுவந்து வார்த்திருந்தாள்
    சனகனின் மாளிகையில் கனவுடனே
    கனக மலரென்று பூத்திருந்தாள்()

    நீலவானம் வந்து நிமிர்ந்து நடைகொடுக்க‌
    கோலநீள் விழிகள் கதிரின் ஒளிகொடுக்க‌
    கண்டதும் நெஞ்சமும் ஏனோ பறிகொடுக்க‌
    துண்டென ஈசன்வில் உடைத்து உயிர்கொடுக்க()
    வில்லென வளர்த்த புருவங்கள் வியக்க‌
    நில்லெனச் சொல்லுமுன் மாலைகள் தொடுக்க‌
    கல்லையும் பெண்ணாக்கும் கால்களில் பணிக்க‌
    முல்லையாய் ஜானகி முறுவல் கொடுத்தாள்()
    காத்திருக்கும் வரையும் காலம் இனிக்கும்
    காத்திருக்கும் வரைக்கும் காதல் வளர்க்கும்
    காத்திருக்கும் கலையும் மாலைகொடுக்கும்
    காத்திருக்கும் கனவும் நனவாய் விழிக்கும் ()

    Share
  • செம்பொன் சோதீசன் பதிகம்

    (இலாலாப்பேட்டை, குளித்தலை கரூர் இணைக்கும் சாலையில் உள்ளது. எனது இளம்பிராயம் அங்கு தான் அனுபவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைப் பணியில் கோயில் இடம்மாறி புதுபிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம் கொட்டிகிடக்கும் இக்கிராமத்தில் அருள்வல நாயகனை கண்டு தரிசனம் செய்ய இப்பதிக காணிக்கை.)

    நாமம்

    அகண்ட காவிரியின் தென்கரைச்    சீலமாக்க‌

    உகந்த     நிலமென்று  உமையோடு குடியமர‌

    முகர்ந்த மலர்கதம்ப  மல்லிகை      மாலைசூடி

    சகண்டை நாதமோடு செம்பொன்   சோதீபோற்றி

     

    நிலம்

    கீழ்திக்கில்        கடம்பராக‌     தென்கீழ்     ரத்தினக்கிரி

    தென்திக்கில்    சொக்கனாய் தென்மேல் நாமகிரி

    மேற்திக்கில்      கொடுமுடி    வடமேற்கு ஞானகிரி

    வடதிக்கில் கொள்ளிசித்தன் ஈசானம்  மரகதகிரிவாழி

     

    தலம்

    வாழைதன் தோட்டமோடு தென்னைசூழ்  பச்சையாக‌

    தாழையின் வாசம்சேர்     தளிர்வெற்றி    லைப்பாக்கு

    பேழைவயி ற்றெடுத்த     பெரும்பிள்ளை வேலனோடு

    மாழையாய் செம்பொற்   சோதியான்  பாதம்போற்றி

     

    தீர்த்தம்

    தவமுடை முனிவரோடு     சித்தரும் குழுமிநிற்க‌

    சிவசிவ       நாதமோடு          நந்தியும்  ஓதிநிற்க‌

    புவனமும் பொன்னியோட‌   செம்பொன்  துறைசேர்

    ப‌வனமும் அணியுமாக    பல்வினைப் போகுமாமே

     

    விருட்சம்

    பொன்னியில் தலைமூழ்கி புதுகுட நீரெடுத்து

    பொன்னீசன்   குளிரவென   அபிடேகம் செய்வித்து

    பொன்மஞ்   சற்மலரோடு    வில்வத்தால் பூசித்து

    பொன்சடை யேற்றிபாடு குலம்வாழச் செய்யுமாமே

     

    அருள்

    நம்பிக்கை பக்திநேச‌ம்    தருமமொடு   வாய்மையுமே

    கும்பிடும்  அன்புநேயம்  குறைகாணா  பிறைசூடன்

    அம்பரத் தாடுவான்முன் அனைத்தோடு துதிசெய்யாய்

    பம்பர  மனதடங்கி பல்காலம் நலங்காண்பாய்

     

    மகிமை

    திருநீறு தரித்துவரின்     அறிவோடு நலமேறும்

    திருநீறு அணிந்துவரின்  கேடுதசை மாறிவிடும்

    திருநீறு பூசிவரின்    பெருநோயும் ஓடிவிடும்

    திருநீறு குளித்துவரின் தீராதவினைத் தீறும்

     

    வாழ்த்து

    வாழியச் செம்போற்சோதி வாழிய தருமவர்த்தனி

    வாழியத் தொண்டர்குழாம் வாழிய தருமநெறி

    வாழிய    வையகமும்   வாழிய இந்நிலமும்

    வாழிய   கங்கையென வற்றாமல் பொன்னியுமே!!

    Share
  • எங்கே போகிறது காலம்-சுதந்திரதின நல் வாழ்த்துகள்

    சத்தியமணி

     

    சுதந்திரதின நல் வாழ்த்துகள்
    வாழிய பாரதம்!வாழியத் தமிழ்!

    எங்கே போகிறது காலம்

    இங்கே யேன‌லங் கோலம்

    மேலே எழுகிறது நாசம்

    கீழே  விழுகிறது தேசம்….ஓ..()

     

    குழிகள்பறித்து   முடமானார்

    விழிகளிருந்தும் குருடானார்

    செவிகளிருந்தும் செவிடானார்

    அறிவுசெழித்திருந்தும் ஊமையானார் ஓ..()

     

    கற்ற    கல்வி  தரும் பட்டம்

    உற்ற  வேலை யின்றி கட்டம்

    வரிகள் போக வருமானம்-அவ

    மானம் இங்கு வெகுமானம் ……ஓ..()

     

    மதங்கள்  பிரித்து பெறும் ஓட்டு

    மதிக்கும் பெரியவர்கள்   கூட்டு

    சாதி பெயரில் வாக்கு சீட்டு

    மதச்சார்பின்மை என்றும் பாட்டு ……ஓ..()

     

    நீதிநியாயம் வெறும் பேச்சு

    பாதிதர்மம் எங்கு போச்சு

    வாய்மைவெல்லுமெனும் சிங்கம்

    என்று தீர்க்கும் இந்த அசிங்கம்……ஓ..()

    Share