இலக்கியம்கவிதைகள்

என்னதவம் செய்தனையோ!-இரங்கற்பா

சத்தியமணி

 

அன்னல் அட்டல் பிஹாரி !!

சினத்தையும் சிரிப்பால் சொன்னவர் இன்றுயில்லை
சிரத்தையும் சிரசில் கொண்டவர் இன்றுயில்லை
சிறப்பிலும் அமைதிக் காத்தவர் இன்றுயில்லை
இறப்பிலும் எளிமை யேற்றவர் இன்றுயில்லை

ஆட்சிகள் கவிழும்போதும் கலவரம் எழுப்பவில்லை
காட்சிகள் கனத்தபோதும் நம்பிக்கை நழுவவில்லை
கட்சிகள் அத்துணைக்கும் கலங்கரை விளக்கமாக
மாட்சிமை பெற்றுயர்ந்தார் மதிநலம் பிறழவில்லை

வன்முறை தூண்டவில்லை வாக்குகள் மாற்றவில்லை
பன்முறை பரிகசிப்பில் பாரதம் சாய்க்கவில்லை
மொழிவெறி இனவெறி பேசிடும் தலைவரில்லை
குலவெறி கொண்டு ஆளும்குண வெறி கொள்ள‌வில்லை.

ஏளனம் செய்தவர்க்கும் தண்டனை கொடுக்கவில்லை
நூதனம் மாற்றம்செய்ய என்றுமே தயங்கவில்லை
அரசாங்க கூட்டம் தன்னில் அவரிடம் கண்டதென்னில்
அரவணைத்த நகைச்சுவைதான்! ஆணவம் கடுகுமில்லை!!

எண்ணிய இன்பமெல்லாம் கவிதையாய் விளம்புபோதும்
கண்ணிய மாககட்சி தலைவர்கள் வாழ்த்தும்போதும்
விளம்பரம் செய்யவில்லை வெறுப்பினில் பேச்சுமில்லை
புண்படு ம்படிபேசும் சுயநலக் காரரில்லை.

இலஞ்சமுடன் இலாவன்ய ஊழல்கள் செய்துவிட்டு
இலவசம் ஆட்சி கேட்டு ஏந்திடும் தலைவனில்லை.
சொத்துகள் குவித்தாங்கே சொகுசினில் வாழுமந்த‌
வித்தையும் அறியவில்லை!! விண்ணேகி சென்றாரே!!

அட்டலின் கர்ஜனைக்கும் அவரிடும் கட்டளைக்கும்
அணுகுண்டு போக்ரானில் அந்நியர் அச்சம்கொண்டார்
சதியினில் வீழவைக்க எத்தனை எதிரியிங்கே
விதியினில் சென்றபோதும் மீண்டிது ஆளுமென்றார்

இப்படியோர் தலைவன் இனிமேலும் கிடைப்பாரோ!!
இப்படியோர் கவிஞன் இனிமேலும்     பிறப்பாரோ!!
இப்படியோர் மகனை பெற்றவளே ! பாரதமே ! – பெற்று
இவனுறங்க உன்மடியில் என்னதவம் செய்தனையோ!!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க