இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (281)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்களுடன் மீண்டுமொரு வாரத்தில் மடல் வரைய விழைகின்றேன். இம்மடல் வரையும் நாளான 14ம் திகதி செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் காலையில் மீண்டும் ஒரு பரபரப்பு, பதைபதைப்பு. காலைவேளையில் தமது கடமைகளைச் செய்யச் சென்று கொண்டிருந்த ஏதுமறியா அப்பாவி மக்கள் காயப்பட்ட ஒரு கனத்த காலையாகி விட்டது . மனதை ஆணவத்திற்கும், மிருக உணர்ச்சிக்கும் விலையாக்கி விட்ட மிலேச்சத்தனம் கொண்ட சிலருள் ஒரு கயவன் தான் மோட்டார் கார் கொண்டு நடைபாதையில் சென்று கொண்டிருந்தோரின் மீது மோதியதில் அப்பாவியான சைக்கிள் பிரயாணிகள் சிலர் காயமடைந்தார்கள். அக்கோரச் செயலைப் புரிந்தவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் யார் என்பது போலீசாருக்குத் தெரிந்திருந்தும் அவனது நோக்கத்தை அவன் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்று தெரிய வருகிறது. நடைபெற்ற இந்நிகழ்வுகள் ஒரு பயங்கரவாதியினால் நடத்தப்படுத்தப்பட்டிருப்பதற்குரிய அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் அது இன்னமும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
இன்றைய இங்கிலாந்தில் நடைபெறும் இத்தகைய செயல்களால் தமது இருப்பினை நியாயப்படுத்திக் கொள்ள முனையும் சிறுபான்மை சமூகத்தின் முயற்சிகள் மேலும் பின்னோக்கித் தள்ளப்படுமேயல்லாது வேறு பயனில்லை. தமது நாடுகளில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சி இங்கிலாந்தில் தஞ்சம் கோரி வந்த உண்மையான அகதிகள் அனைவருமே ஒருவிதமான சந்தேகக் கண்ணோட்டத்துடன் நோக்கப்படுவதே இதனால் இத்தகைய மூடர்கள் சாதிக்கக்கூடிய விடயமாகிறது. ஜனநாயகத்தின் கருவறை எனக் கருதப்படும் இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்திற்கு மிக அருகாமையில் நடைபெற்றிருக்கும் இச்செயலானது இங்கிலாந்தின் ஜனநாயக நீரோட்டத்தையே நிலைகுலைய வைத்திருக்கிறது,. இங்கிலாந்தின் அரசியல் நீரோட்டத்தில் சிலதுளிகளாக இருக்கும் அதீத வலதுசாரப் போக்குக் கொண்ட மிதவாத இனத்துவேசம் கொண்ட அரசியல்வாதிகளின் பலத்தை பெருக்குவதற்கே இத்தகைய செயல்கள் துணை போகும் என்பதுவே உண்மையாகும். இதன் விளைவுகளை இனிவரும் நாட்கள்தான் எமக்கு உணர்த்தும் என்பதும் உண்மை.
இனி அடுத்தொரு செய்தியினைப் பார்ப்போம். டாக்டர்கள் எனப்படுவோர் உயிர்களைக் காப்பாற்றப் போராடுவோர் என்பதுவே பொதுவான கருத்து.. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு லெஸ்டர் ஹாஸ்பிட்டலில் கொண்டு செல்லப்பட்ட ஆறு வயதான ஜாக் எனப்படும் சிறுவனை அன்றைய டாக்டர்கள் பற்றாக்குறையினால் சேவையில் குறைந்த அனுபவமுள்ள டாக்டர் ஹடிசா பாவா-ஹாபா எனும் பெண் வைத்தியரினால் பரிசோதிக்கப்பட்டார். தனக்குள்ள அனுபவத்துடனும் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையினாலும் கிடைக்கப்பட்ட வசதிகளின் படி தன்னாலான வகையினில் பரிசோதனை செய்து வைத்தியமளித்தும் பயனளிக்காமல் அவ்வாறு வயதான பையன் உயிரிழந்தான். மனமுடைந்த பெற்றோர்கள் அந்த டாக்டர் மீது குற்றம் சாட்டி வழக்குத் தொடுத்தார்கள். அவ்வழக்கில் அந்த டாக்டர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டார். விளைவாக அந்த டாக்டர் அந்த வைத்தியசாலையில் தனது பதவியை இழந்ததோடு இனி இங்கிலாந்தில் டாக்டராக பணியாற்ற முடியாது என்று இங்கிலாந்தின் டாக்டர்கள் கவுன்சிலின் அங்கத்தினர் அந்தஸ்திலிருந்தும் விலக்கப்பட்டார்.
இது ஏனைய இங்கிலாந்து டாக்டர்கள் பலருக்கு அதிர்ச்சியளித்தது. டாக்டர்களும் மனிதர்கள் தானே அவர்கள் அ|றியாமல் இழைத்த தவறுக்காக அவர்களின் ஜீவாதாரத்தையே குலைக்கும் வகையில் தண்டிக்கலாமா? கூடாது என்றனர். அந்த டாக்டருக்குச் சார்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள் விளைவாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த டாக்டர் இனி டாக்டராக பணியாற்றக் கூடாது எனும் தடை நியாயமற்றது என்று தீர்ப்பளித்தது. அந்த டாக்டர் இனி டாக்டராக பணியாற்ற வகை செய்தது. இந்தத் தீர்ப்பினால் மகிழ்ந்த அந்த டாக்டர் தனது வைத்தியத்தின் போது உயிரிழந்த அந்த குடும்பத்தின் துயரையும், கோபத்தையும் தான் நன்கு உணர்வதாகவு,ம், இச்சம்பவத்தில் தான் மட்டுமன்றி அந்த வைத்தியச்சாலையின் நிர்வாகத்தினரின் தவறும் எத்தனையோ இணைந்திருப்பதாகவும் இனியாவது இத்தகைய தவறுகள் நடக்காவண்ணம் நிர்வாகத்தினர் தமது பணியாற்றுவோர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அப்பையனின் பெற்றோர் அந்த டாக்டரை மன்னிப்பதற்கு தாம் இன்னமும் தயாரில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
சரி இனி எமது ட்ரம்ப் அண்ணாவின் விளையாட்டுக்களைப் பார்ப்போம். அவரது அரசியல் அந்தரங்க ஆலோசகராக அவர் தான் தொலைக்காட்சியில் “அப்பிரண்டிஸ்” எனும் நிகழ்ச்சியை நடத்தும்போது பங்கு பற்றிய ஒரு கறுப்பு இன பெண்ணை நியமித்திருந்தார். பின்பு அப்பெண்மணி ட்ரம்ப் அண்ணாவின் நிர்வாக அதிகாரியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அந்தப் பெண்மணி தனது நினைவுப் பதிவுகளை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதிலே எமது ட்ரம்ப் அண்ணாவைப் பற்றி மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். தான் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது அதைப்பற்றி ட்ரம்ப் அண்ணாவுக்கு தெரியவே தெரியாது என்று அவர் தன்னோடு உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவை ஊடகங்களுக்கு கையளித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் அண்ணாவின் பதில் ” அந்தப் பெண்மணி ஒரு தோல்வியின் உதாரணம், கீழ்த்தரமானவர்” என்பதுவே. அதுமட்டுமல்ல இன்றுகாலை இங்கிலாந்தில் நடைபெற்ற பயங்கரவாதச் செயல் எனும் நம்பப்படும் செயல் ட்ரம்ப் அண்ணாவுக்கு தனது இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரத்துக்கு கிடைத்த ஒரு துருப்புச் சீட்டுப் போல உள்ளது.. அதைப் பற்றியும் தனது சமூக ஊடகத்தளத்தில் வெளியிட்டுள்ளார்,
சுண்டெலிக்குத் திண்டாட்டம்
பூனைக்கு கொண்டாட்டம் . . . . . . ம் , , , , , இருந்து பார்ப்போம்
மீண்டும் அடுத்த மடலில்.
அன்புடன்
சக்தி சக்திதாசன்