அம்மா இல்லாத தீபாவளி 
அதுவே ஆறாதத் தீராவலி 
உணர்ந்தவருக்குத் துயர் தெரியும் 
உணராதவர்க்கு இனி புரியும் 

முப்பது நாட்கள் முன்னிருந்தே 
முதலாம் முயற்சியில் இற‌ங்கிடுவாள் 
அப்புறம் பார்க்கலாம் மென்றிடினும் 
அப்பா மனதைத் தளர்த்திடுவாள் 

எப்பொழு தெங்கெனக் கேட்காமல் 
இப்பொழு தெனவே இழுத்துசெல்வாள். 
எங்களின் விருப்பத் திற்கேற்றாற்போல் 
எல்லாம் எல்லாம் கிடைத்திடுமே 

சீருடையாய் மொத்தத் துணிவாங்கி 
சிறப்பாய் தைக்கவும் தந்திடுவாள் 
தந்தைக்கும் சட்டை வாங்கியப்பின் 
தனக்கெனப் பிறகே யோசிப்பாள். 

திருச்சியின் பெருங்கடைச் சாலையிலே 
தெப்பக்குள எதிர் சிந்தா மணியினிலும் 
எங்களுக் கெனவே போரிட்டு 
பட்ஜெட் பட்டாசும் வாங்கிடுவாள் 

காலும் கைகளும் வலித்தாலும் 
கரகரத் தொண்டைக் கனத்தாலும் 
உறவினில் பிடித்தவைக் கணக்கிட்டு 
இரவினில் பட்சணம் செய்திடுவாள் 

எத்தனை சிக்கனம் நயத்தோடு 
அத்தனை வகைகளும் சுவையோடு 
இத்தனை பகுத்திட கொடுத்திடுவாள் 
தனக்கென மறைக்கா தெய்வமகள் 

காலையில் சீக்கிரம் எழவேண்டி 
இரவினில் உறங்கிடச் செய்திடுவாள். 
விடியலின் முன்னே எழுந்தாங்கே 
எண்ணெய்க் குளியலைத் தொடங்கிடுவாள் 

ஆடைகள் எடுத்து அணியவைப்பாள் 
ஆசையில் ஆசிகள் பொழிந்திடுவாள் 
அன்புடன் பொங்கிட அணைத்துடனே 
ஆண்டவன் அருளிட துதிசெய்வாள் 

இட்டிலி சட்டினி இடும்போதும் 
தட்டினில் விருந்தினைத் தரும்போதும் 
மட்டில்லாத மகிழ்ச்சி தரும் 
அம்மா வருவாய் எப்போது? 

சிரிப்பில் உதிரிட மத்தாப்பு 
சிலநொடி கருகிட புகையாக‌ 
சுழலும் சக்கரம் கக்கிவிட்டு 
இருள்வெளி கோளம் ஆகிவிட 

அதிரும் சரவெடி பட்டாசோ 
சிதறிடத் துகளாய் வீதியிலே 
புதிரும் போட்டது யாவுமெனைப் 
புரிந்தது பிரிவுகள் இப்படியா?


வருத்திடும் பிணியில் இருந்தாலும் 
மருந்தினை உண்டிட மறந்தாலும் 
விரும்பிடும் எங்களை மறக்காமல் 
இருந்தவள் விட்டெனைச் சென்றது ஏன்? 

சப்தமிட்ட வெடிகள் இன்றி 
சாளரமெல்லாம் மூடிவைத்தேன் 
மூச்சுத் திணறும் புகையென்றே 
முகத்திரையும் நான் வாங்கிவைத்தேன் 

தேடும் இடமெலாம் உனைப்போல 
உருவம் நகர்வது தெரியுதம்மா 
அகலின் விளக்கின் அடியினிலே 
அம்மா உன் நிழல் ஆடுதம்மா 

இருளைக் களைந்திடும் உன்விழிகள் 
அருளைப் பெருக்கிடும் உன்மொழிகள் 
கருணைக் கடலாய் இருந்தவளே 
காதுகள் கொடுத்து கேளாயோ 


படைத்ததும் கவிதைப் படித்துவிட்டு 
பாராட் டள்ளி கொடுத்தவளே 
கிடைத்திட வேண்டும் அதுபோன்று 
நிலத்தினில் மீண்டு வருவாயா? 

கனக்கும் மனதின் ஒலியோடு 
கசியும் ஈரம் கண்களிலும் 
துடைக்கும் விரல்கள் உனையன்றி 
துணையாய் எதையும் கண்டதில்லை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *