(Peer Reviewed) புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

0

முனைவா் பா. உமாராணி
இணைப் பேராசிரியர்,
கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்,
கோயம்புத்தூா்

புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

ஒரு படைப்பு தான் தோன்றிய சமூகத்தின் ஆகச் சிறந்த கூறுகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் என்பது இயல்பான ஒன்று. இதுவரை தோன்றிய இலக்கியங்களும், அவை சார்ந்த பின்னூட்டங்களும் நமக்கு இதையே மொழிகின்றன. ஒரு சமூகத்தின்  சிறந்த பண்பாட்டுக் கூறுகளை மட்டும் ஒரு இலக்கியம் தக்கவைத்துக் கொள்வதில்லை. அச்சமூகத்தில் மறைமுகமாகவும் எதிரிடையாகவும் தோன்றிய கருத்துகளையும் செயல்களையும் அவை பதிவு செய்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை எல்லா இலக்கிய வகைமைக்குள்ளும் மேற்சொன்ன நிகழ்வுகள் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளன. அங்ஙனம் பொருத்திப் பார்ப்பது படைப்பிலக்கியத்திற்கு மேலும் வளமையைக் கூட்டுகிறது. அத்துடன் இத்தன்மை. இலக்கியத்தை சமுதாயம் நோக்கி நகா்த்துவதற்கும் உதவுகின்றது. இத்தகையதொரு பார்வையில் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ள தோற்ற மன்னா்களின் நிலையை வெளிக்கொணரும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

தோற்ற அரசா்கள் குறித்தான பதிவுகள் அல்லது எதிர்நிலைத் தன்மை குறித்தான பதிவுகள் ஒரு சமூகத்தை அதன் ஆழத்திலிருந்து புரிந்துகொள்ள உதவுவதுடன், அச்சமுதாயம் கொண்டிருக்கும் ஆழ்மட்ட பண்பாட்டுக் கூறுகளையும் கண்டறிய உதவுகின்றது. சங்க இலக்கியத்திலும் இத்தகைய பதிவுக் கூறுகள் ஆங்காங்கே விரிந்த நிலையிலும், சிலபோது குறிப்பாகவும் வெளிப்படக் காண முடிகிறது.

பாடாண் திணை சுட்டும் தோற்றோர் பின்னணி

பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் வீரம், கொடை முதலிய சிறப்புகளை எடுத்தோதும் திணையாகும். புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன. அதில் செவியறிவுறூஉத் துறையில் 8  பாடல்களும், இயன்மொழித் துறையில் 54 பாடல்களும், வாழ்த்தியல் துறையில் 9 பாடல்களும், பரிசில் கடாத் துறையில் 15 பாடல்களும்,  கடைநிலைத் துறையில் 10  பாடல்களும், பரிசில் துறையில் 8 பாடல்களும்,  பாணாற்றுப்படை துறையில் 6 பாடல்களும், பரிசில் விடைத் துறையில் 6 பாடல்களும், விறலியாற்றுப்படைத் துறையில் 4 பாடல்களும், பூவைநிலைத் துறையில் 3  பாடல்களும், புலவராற்றுப்படைத் துறையில் 2 பாடல்களும், உடனிலைத் துறையில் ஒன்றும், குடைமங்கலம் துறையில் ஒன்றும், வாயில் மங்கலம் துறையில் ஒன்றுமாக மொத்தம் பதினான்கு துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

செவியறிவுறூஉ

செவியறிவுறூஉ என்னும் துறை, பாடாண் திணைகளுள் ஒன்றாகும். பகைமையும் கெடுதலுமற்ற வலிய எண்ணங்களை அரசனுக்கு எடுத்துரைத்தல், இத்துறையின் சிறப்பியல்பு. “மறம் திரிவு இல்லா மன்பெரும் சூழ்ச்சி, அறம்தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று” என இத்துறைக்குப் புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம் கூறுகிறது.

செவியறிவுறூஉ துறையில் அமைந்த பாடலில் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயா் வழுதியினைப் பகைத்த பகையரசா்களின் நிலையானது,

            “துன்அருந் திறல், கமழ் கடாஅத்து

            எயிறு படையாக எயிற் கதவு இடாஅ

            கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின்

            பெருங்கை யானை இரும்பிடா்த் தலை இருந்து

            மருந்து இல் கூற்றத்து அருந்தொழில் சாயா”     (புறம். 3)

என்று முற்றும் அழிந்துபட்ட நிலையே என்பதனைச் சுட்டுகிறார் இரும்பிடத்தலையார். பாண்டியனின் பட்டத்து யானை பகைநாட்டின் படைக்கலன்களை அழிக்கும் திறனையும், கொலைத் தொழிலுக்கும் அஞ்சாத பாண்டியனின் தன்மையையும் எடுத்தோதும் நிலையில் பகைநாட்டவா் அடைந்த நிலையைத் தெற்றென விளங்க வைக்கிறார் ஆசிரியா்.

முதுகுடுமியின் வலிமையைக் கூறும் முகத்தான், ஆசிரியா் பகையரசா்களின் நிலையையும், அவா்கள் நாட்டில் விளையும் தீங்குகளையும் சுட்டிக் காட்டுகின்றார் காரிக்கிழார். குடுமியைப் பகைத்து வாழும் மன்னின் நிலையானது,

            “செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வா் தேஎத்து

            கடல்படை குளிப்ப மண்டி, அடா் புகா்ச்

            சிறுகண் யானை செவ்விதின் ஏவி,

            பாசவல் படப்பை ஆா் எயில் பல தந்து

            அவ்வெயில்  கொண்ட செய்வுறு நன்கலம்

            பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி”         (புறம். 6)

என்று குறிப்பிடுகிறார். அதாவது, போர்செய்ய எதிர்த்த பகைவருடைய நாடுகளில் கடல்போன்ற படையை உட்புகுந்து அழித்தும், அவா்களின் விளை நிலங்களை யானையை விட்டு அழிக்கச் செய்வதுடன் அவா்களுடைய அரண்களையும் அழிக்கும் முறையை எடுத்தோதுகின்றார். அத்துடன் அப்பகை நாட்டினரின் செல்வங்களைப் பரிசிலருக்கு அளிக்கும் நிலையும் சுட்டப்படுகிறது. மேலும்,

            “வாடுக இறைவ! நின் கண்ணி – ஒன்னார்

            நாடுசுடு கமழ் புகை எறித்தலானே!

            செலியா் அத்தை, நின் வெகுளி”     (மேலது)

என்று குறிப்பிடுகிறார் ஆசிரியா். குடுமியின் போரின் தன்மையானது பகைவா் நாட்டை எரித்து அழிக்கும்  இயல்பினை உடையது என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன. மேலும் அத்தகைய அழிவினை அவன் மேலும் அந்நாட்டிற்குச் செய்யத் துணியும் கோபத்துடனே இருப்பான் என்றும் குறிப்பிடுகிறார். இரு அரசுகளுக்கு இடையிலான போரில் மக்களின் விளை நிலங்கள் அழிக்கப்படுவதும், அம்மக்களிடம் இருந்து பெற்ற பொருளைப் பரிசிலாகக் கொடுத்து பெருமை கொள்ளும் நிலையும் வருந்தத் தக்கதே. குடுமியின் புகழ் பாடப்பட்டபோதும் மறைமுகமாக அன்றைய அரசுகளின் செயல்பாட்டைச் சுட்டுவதாகவே இப்பாடல் அமைந்துள்ளது.

புறநானூற்றின் 40ஆவது பாடல்,  பகை மன்னா்களின் நிலையை எடுத்தோதுகின்றது. மதிப்பிற்குரிய பொன்னாலான பகைவரின் மணிமுடியினை அவமதித்தல் போன்றும், அவா்களை அடிமைப்படுத்தல் போன்றும் அதைத் தம் காலில் அணிகின்ற தன்மையினை,

            “நீயே, பிறா்ஓம்புறு மறமன் எயில்

            ஓம்பாது கடந்தட்டு, அவா்

            முடி புனைந்த பசும்பொன் நின்

            அடிபொலியக் கழல் தைஇய வல்லாளனை”        (புறம். 40)

எனக் காண முடிகிறது. இப்பாடலில் வெற்றி பெற்றோரின் வீரமும், பகையில்லாத அவன் நாட்டின் சிறப்பும் கூறப்பட்டதெனினும் தோற்ற அரசன் அடைந்த இழிநிலையினையும் இப்பாடல் பதிவு செய்துள்ளது. செவியறிவுறூஉ துறையில் அமைந்த எட்டு பாடல்களில் மூன்று பாடல்கள் மட்டுமே தோற்றோரின் நிலையைப் பேசுகின்றது.

இயன்மொழி

தலைவனுடைய இயல்பினைக் கூறுதலும், அவன் முன்னோர் செயல்களைப் பாராட்டிக் கூறலும்  இயன்மொழித் துறையின்பாற்படும். தமிழ் மன்னா்களிடம் போர் அறம் இருந்தது. அதன் வழிநின்றே போர் செய்தனா் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் வழி அறியலாம். நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழுமிடத்து தமிழா்களின் போர் அறத்தினைத் தெற்றென விளக்கிறார்.

            “ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும்”  ( புறம். 9)

என்ற பாடலானது போருக்கான அறத்தைத் தமிழா் எங்ஙனம் போற்றினா் என்று விரித்துக் கூறுகின்றது. எனினும் போரின் பின் நிகழும் துயா்கள் எண்ணிலடங்காதவை என்பதை இயன்மொழித் துறையில் அமைந்துள்ள பாடல்கள் தெளிவாகச் சுட்டுகின்றன.

தோற்ற அரசா்களின் காவல் மரத்தை முறித்து பகைவா்களை அவமதிக்கும் செய்தியினை,

            “கடுங் கண்ண கொல் களிற்றால்

            காப்பு உடைய எழு முருக்கிப்

            பொன் இயல் புனை தோட்டியால்”            ( புறம். 14)

என்று கபிலா் குறிப்பிடுகிறார். செல்வக்கடுங்கோ வாழியாதன் பகை மன்னனின் வலிமையை அழித்தலின் குறியீடாகக் கணையமரத்தை அழித்தான் என்னும் செய்தி இங்குச் சுட்டப்படுவதுடன் பகையரசனின் நிலையும் எடுத்துரைக்கப்படுகிறது.

முதுகுடுமி பெருவழுதி பகைவா் நாட்டினை அழித்துச் சிதைக்கும் காட்சியினைச் சுட்டவரும் நெட்டிமையார் பகை மன்னனின் நிலம் அடைந்த அவல நிலையை முன்வைக்கிறார். இதில் பகை மன்னா்களின் நிலமானது

            “கடுந்தோ் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

            வெள்வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

            பாழ் செய்தனை, அவா் நனந்தலை நல் எயில்,

            புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,

            வெள் உளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்

            ………………………………..

            நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,

            வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்?”          (புறம்.15)

என அழிந்துபட்டதைக் கூறுகின்றார். இங்கு வென்ற பகையரசா்களின் நாட்டைக் கழுதைகள் பூட்டி உழுதலும், விளைவயல்களை அழித்தலும், நீர்த்துறைகளைக் கலக்குதலும், மக்கள் வாழும் இடங்களை எரியூட்டலும் செய்து பகையரசா்கள் அவமதிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதை இப்பாடல் புலப்படுத்துகின்றது. இதே கருத்தினைக் கடைநிலைத் துறையில் புறம் 392ஆவது பாடலும் முன்வைத்துள்ளது. பொகுட்டெழினி தான் போர்செய்யும் பகைநிலத்தை கழுதைகள் பூட்டி உழுதும், மதில்களை அழித்தும் போர்செய்தான் என்பதை ஔவையார் சுட்டியுள்ளார்.

கிள்ளிவளவன் வலிமைமிக்க சேரனை அழித்த செய்தியினை கூறுமிடத்து நப்பசலையார் பகைவனின் பெருமையைத் தெளிவாக விளக்குகிறார். இங்கு பகைவன் மிக வலிமையுடையவன் என்பதை,

            “……………………..ஓங்கிய

            வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங்கோட்டு

            இமயம் சூட்டிய ஏம விற்பொறி

            மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய

            வாடா வஞ்சி வாட்டும் நின்

            பீடுகெழு நோன் தாள் பாடுங்காலே?”       (புறம். 39)

என்று சேரனின் பெருமையினையும், இமயம் வரை சென்று தன் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் அவனைப் புகழ்கின்றார். அவனை வென்றான் வளவன் என்னும் சிறப்புப்பட, இப்பாடல் அமைந்ததாயினும் பகையரசனின் வலிமையும் இங்குச் சுட்டப்பட்டுள்ளது.

பகைவா் நாட்டில் உள்ள மக்கள் தம் நாட்டைத் துறந்து செல்லும் அவலத்தைப் புறப்பாடல் பதிவு செய்துள்ளது. பொகுட்டெழினியைப் பகைக்கும் பகைவா் நாட்டில் உள்ள மக்கள், இனி இந்நாடு வாழுதற்கு உரிய இடம் அன்று என்று தம் இடத்தைத் துறந்து செல்வதை,

            “விழவின்று ஆயினும், படுபதம் பிழையாது

            மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறைநீா்க்

            கைமான் கொள்ளுமோ என

            உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே”         (புறம். 96)

என்று குறிப்பிடுகிறது. இப்பாடலுக்கு “அவன் படையெடுத்துச் செல்லும் ஊரில் விழா இல்லையாயினும் உண்டாக்கப்படும் உணவுடன் தவறாது செம்மறியாட்டுத் தசைகளையும் சுற்றத்தார் தின்பா். அந்தச் சுற்றத்தார் யாவருடனும் ஆறு, குளம் முதலிய நீா்த்துறைகளில் படிந்து அவனுடைய யானைகள் நீருண்ணும் எனும் அச்சத்தால் அவ்வவ்வூரில் மக்கள் தங்குதலை வெறுத்தனா். இவ்வெறுப்பினால் ஒரு பகை நோ்ந்தது” என்று விளக்கம் அளித்துள்ளனா் உரைக்காரர்கள்.

அதியமான் அஞ்சியைப் பகைத்த மன்னா்களின் நாடானது அழிந்துபடும் என்றும், அப்பகைவா்களுடன் போரிட்டதால் அதியனின் படைக்கலக் கருவிகள் தம் இயல்பினை இழந்தன என்றும் கூறுமுகத்தான் பகையரசா்களின் நிலையினைத் (புறம். 97) தெளிவுபடுத்துகிறார் ஔவையார். புறநானூறு 130ஆவது பாடலில் ஆய் அரசன் தம் படைகொண்டு கொங்கரை விரட்டினான் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. இங்கு கொங்கன் புறமுதுகிட்டு ஓடினமையும், அவனை அழிக்க ஆய் செய்த போரின் வலிமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புறமுதுகிட்டு ஓடும் மன்னனைத் தொடர்ந்து செல்லாத தன்மை, தமிழரிடம் இருந்ததைப் புறம் 389ஆவது பாடலும், தோற்ற அரசா்கள் வெற்றிபெற்ற அரசனுக்குத் திறை செலுத்தி வாழவேண்டிய நிலையில் இருப்பதனைப புறம் 156ஆவது பாடலும் விளக்குகின்றன.

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, வடுகரை அழித்து விரட்டிய செய்தியைப் புறம் 378ஆவது பாடல் பதிவு செய்துள்ளது. இதில் இளஞ்சேட் சென்னியின் வள்ளன்மையைப் புகழும் பொருட்டே இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இயன்மொழித் துறையில் அமைந்த பாடல்களில் 11 பாடல்களில் மட்டுமே தோற்றோர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அவற்றில் அரசனின் வெற்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் மிகுதியும் கூறப்பட்டுள்ளது. தோற்ற மன்னா்களின் நிலையை வெற்றி பெற்ற அரசா்களின் புகழின் பின்னணியிலேயே உணா்ந்துகொள்ள வேண்டிய நிலையும், சில இடங்களில் பகையரசனின் வலிமையும் விதந்தோதப்பட்டுள்ளது.

விறலியாற்றுப்படை

அரசனுடைய புகழைப் பாடும் விறலியை வழிப்படுத்துதல் விறலியாற்றுப்படை எனப்படும். தொல்காப்பியம் இதனை,

            கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

            ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

            பெற்ற பெருவளம் பெறாஅா்க்கு அறிவுறீஇச்

            சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”   (தொல். புறம். 88)

என்று விளக்குகிறது.

பகைவரின் பெருஞ் செல்வங்களைக் கொணா்தல்  என்பது போரின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது என்பதைச் சுட்டுவது போன்று புறம் 64ஆவது பாடல் அமைந்துள்ளது.  முதுகுடுமி போர்செய்யும் பகை நாடுகளில் வீரா்கள் இறந்து கிடக்கும் காட்சியானது விண்ணைத் தொடுமாறு அமைந்துள்ளது என்பதை,

            ”விசும்பு ஆடு எருவை பசுந்தடி தடுப்ப

            பகைப்புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்”    (புறம். 64)

என்ற வரிகள் மூலம் உணா்த்துகின்றார் நெடும்பல்லியத்தனார். இங்கு வீரா்கள் இறந்து கிடந்தமை, கழுகுகள் செல்லும் பாதையை மறைத்தது என்றும், அந்நாட்டு மக்களின் செல்வத்தினைப் பெற்று தங்களுக்குப் பரிசில் வழங்கினான் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதன் வழி, தோற்ற நாட்டினரின் நிலை தெளிவாக உணா்த்தப்படுகிறது. மேலும் தோற்ற நாட்டினை எரியூட்டி அழித்தல் என்பது போர் மரபுகளில் ஒன்றாக இருந்தது என்பதை,

            “முனைசுட எழுந்த மங்குல் மாப் புகை

            மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்

            பகைப் புலத்தோனே பல்வேல் அஞ்சி”      ( புறம்.103)

என்ற ஔவையாரின் பாடல், பதிவு செய்துள்ளது. ஒரு நாட்டினை வெற்றி கொள்வது என்பது வெறுமனே மனிதா்களுக்கு இடையேயான நிகழ்வாக அல்லாமல் இயற்கையை அழித்தல் என்னும் நிலையை அடைந்துள்ள அவலத்தை இப்பாடல் பதிவு செய்துள்ளது.

வாள் மங்கலம்

மன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுதல், வாள் மங்கலம் எனப்படும். இத்துறையில் புறம் 95ஆவது பாடல் அமைந்துள்ளது. தொண்டைமானிடம் அதியமானின் படைக்கலங்களைக் குறித்து பழித்துக் கூறி அவன் புகழை மறைமுகமாகப் புகழ்கிறார் ஔவையார். போரைத் தவிர்க்கும் முகமாக இப்பாடல் பாடப்பட்டதெனினும் இரு அரசுகளின் போர் உணா்ச்சியை மறைமுகமாக இப்பாடல் முன்வைத்துள்ளது.

பரிசில் துறை

அரசன் முன்னே பரிசிலா் தாம் பெறக் கருதிய பொருள் இதுவெனச் சொல்லுதல் பரிசில் துறையாகும். பகையரசனது யானையின் நெற்றிப் பட்டத்தில் இருக்கும் பொன்னைப் பாணா்களுக்கு அளித்தும், அதை அவா்கள் தலையில் பொலியும்படியும் செய்யும் வல்லமை வாய்ந்தவன் என்று பகையரசனின் நாட்டின் வளம் சூறையாடப்பட்டதை,

            “ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு

            பாணா் சென்னி பொலியத் தைஇ”             (புறம்.126)

என்று புறம் 126ஆவது பாடல் முன்வைக்கிறது.

பரிசில் விடை

பரிசில் பெற்று விடை பெறுவான் பாடுவது, பரிசில் விடை எனப்படும். பெருந்தலைச் சாத்தனார், குமணனைக் குறித்துப் பாடிய பாடல், தோற்ற அரசனின் புகழைப் பாடுவதாக அமைந்துள்ளது. குமணன் நாடு இழந்தனன் ஆயினும் ஈகை இழந்தான் இல்லை என்றுபட புறம் 165ஆவது பாடல் இடம்பெற்றுள்ளது.

            ”பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயா்தல் என்

            நாடு இழந்ததனினும் நனி இன்னாது என

            வாள் தந்தனனே தலை எனக்கு ஈய”          (புறம். 165)

என்று தோற்ற குமணனை இப்பாடல் புகழ்ந்து பாடுகிறது.

வாழ்த்தியல்

பாட்டுடைத் தலைவனின் சிறப்பைப் புகழ்ந்து வாழ்த்துரைத்தல், இத்துறையின்பாற்படும். செல்வக்கடுங்கோ வாழியாதனின் பரிசில் வழங்கும் பண்பை வாழ்த்தும் முகமாக அமைந்த புறம் 387ஆவது பாடலில் பகையரசா்களின் வீரம் வெளிப்பட்டு நிற்கின்றது. பகை மன்னா்களின் மதில்களானது யாரும் உடைத்தலைச் செய்ய முடியாத அளவு வலிமையுடையது என்றும், அவ்வேந்தா்களின் காவற்காட்டில் இருக்கும் யானைகள் மிக்க வலிமையுடையவை என்றும் கூறி, அதனை அழித்தவன் வாழியாதன் என்று புகழ்கிறார் குண்டுகட் காலியாதன்.

தோல்வி குறித்த பதிவுகள்

சங்க இலக்கியத்தில் அரசா்கள், வேந்தர்கள், குறுநில மன்னா்கள், நிலக்கிழார்கள், வள்ளல்கள் போன்றோரின் தோல்விகள் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பதிவுகளின் வாயிலாகப் பகையரசா்களின் அல்லது தோற்றோரின் வலிமையை, போர்த்திறனை உணா்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் இத்தகைய பதிவுகள் பெரும்பான்மையும் வெற்றி பெற்றோரின் வீரத்தினையும் கொடைச் சிறப்பினையும் வள்ளன்மையினையும் வெளிக்கொணரும் வண்ணமே அமைந்துள்ளன. புறநானூற்றில் பாடாண் திணையில் 120 பாடல்கள் இடம் பெற்றிருப்பினும் தோற்றோர் நிலையை 20 பாடல்கள் மட்டுமே முன்வைத்துள்ளன.

மிகச் சில அரசா்கள் மற்றும் வள்ளல்கள் போன்றோரின் தோல்வியும் விதந்தோதப்பட்டுள்ளன. அவை அவ்வரசா்களின் கொடைத் திறனைக் கூறும் பொருட்டும், அவா்களின் பண்பினை உயா்த்திக் கூறுதற் பொருட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, தோல்வியும் வெற்றியின் தன்மையில் வைத்து எண்ணப்படுகின்ற நிலையினைக் காண முடிவதுடன், தோற்றோரின் வீரச் சிறப்பினை விதந்து கூறுகின்ற பண்பையும் கவனத்திற் கொள்ளுதற்கு உரியது. இதன் சமூக, அரசியல் பின்னணியினை ஆழ்ந்து நோக்கும் போதுதான் இத்தகைய பதிவிற்கான தேவையினை உணர முடியும்.

பார்வை நூல்கள்

  1. புறநானூறு, முதற்பதிப்பு -2004, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  2. தொல்காப்பியம், பதிப்பு -1984, கழக வெளியீடு, சென்னை.
  3. செ.வை.சண்முகம், தொல்காப்பியத் தொடரியல், முதற்பதிப்பு-2004, உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
  4. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, பதிப்பு-2012, அமுதா நிலையம், சென்னை.

குறிப்பு

புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன.

செவியறிவுறூஉத் துறையில்  – 8 (2,3, 5,6,35,40,55,184)

இயன்மொழித்துறையில் – 54(8,9,10,12,14,15,30,32,34,38,39,50,67,92,96, 97,102, 105,106,107,108,122,123,124,128,129,130,131,132,134,137,142,149,150,151153,157,171,172,173,175,176,177,215, 376, 378, 380, 381,383, 388, 389, 390, 400)

வாழ்த்தியல் துறையில் – 9 (13,19,158-பரிசில் கடாஅ நிலை, 367,375,377,385,386,387)

பரிசில் கடாஅத் துறையில் -15(11,101,136,139,159,160,164,169,196,197,198, 199,266)

 கடைநிலைத் துறையில் – 10 (127,382,391,392, 393,394,395,396,397,398)

 பரிசில் துறையில் – 8 (126,135,148,154, 161, 168-அரசவாகை,200,379)

பாணாற்றுப்படைத் துறையில் – 6 (68,69,70,138,141,158)

 பரிசில் விடைத் துறையில் – 6 (140,152,162,163,165,399)

விறலியாற்றுப்படைத் துறையில் – 4 (64,103, 105,133)

பூவைநிலைத் துறையில்  -3 (56,59,374)

புலவராற்றுப்படைத் துறையில்  – 2 (48,49)

உடனிலைத் துறையில்  -1 (58),

குடைமங்கலம் துறையில் – (60),

வாயில்மங்கலம் துறையில் – (95)

மொத்தம்  -14 துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

=======================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

சங்க இலக்கியங்களில் புறம் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் புறநானூறு, குறிப்பிடத்தக்க ஒரு நூல். அதில் பெரும்பான்மையும், வெற்றி பெற்ற மன்னர்களின் வீரம், புகழ், கொடை சார்ந்தும் சிறுபான்மை சமூகப் பொது நிலைகள் சார்ந்தும் பாடப்பட்டுள்ளமை நாம் அறிந்த ஒன்றே. அதில் பொதுவாக வெற்றி பெற்ற மன்னர்களின் சிறப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி வரலாற்றுப் பின்புலத்தை அறிதல் என்பது பெரும்பான்மை ஆய்வு நடைமுறையில் இயல்பாக உள்ளது. ஆனால் இக்கட்டுரையை ஆய்வாளர் சற்று மாறுபட்ட கோணத்தில் ஆராய்ந்து தன் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வெற்றி பெற்ற மன்னர்கள் பற்றிப் பேசும் பாடாண் திணைப் பாடல்களில் தோற்ற அரசர்களின் நிலைகளை உற்றுநோக்கிச் சில அடிப்படையான செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக, போர் இரு மன்னர்களுக்கு இடையே மட்டும் நடைபெறுவதில்லை. இரு நாட்டு மக்கள், இயற்கை ஆகியவற்றோடு நடைபெறுவது. அதனால் இயற்கைச் சீரழிவு, மக்கள் கொல்லப்படுதல் என்ற கோணத்தில் தனது சிந்தனையைச் செலுத்தியுள்ளார். தோற்ற மன்னர்களின் நிலைப்பாடுகள் பற்றியும் பேசியுள்ளார். அதே போல் பாடாண் திணையின் துறைகளின் அடிப்படையில் இச்செய்திகளை விளக்கியமை சிறப்பு. மேலும் தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பா மாலையில் இடம்பெற்றுள்ள பாடாண் திணையின் செய்திகளைக் கட்டுரையில்  பயின்று வந்துள்ள துறைகளில் பதிவு செய்திருப்பின் கட்டுரை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

=======================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.