-நிர்மலா ராகவன்

நேர்மைக்கும் உண்டு எல்லை

`உங்களுக்குப் பிறகு உங்கள் குழந்தைகளுக்கு என்ன விட்டுப் போகப் போகிறீர்கள்?’

`வங்கியில் கோடிக்கணக்கான பணம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பங்களாக்கள், இன்னும்..!’ பெருமை பேசுகிறார்.

நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. நேர்மை, உண்மை போன்ற குணங்களையும் இவர் தன் பிள்ளைகளுக்கு அளித்திருப்பாரா?

தந்தை நம் அறியாத்தனத்தைக் கண்டு சிரிக்கிறார். `நேர்மையாக இருந்தால் இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா?’

அவரே மாட்டிக்கொண்டு, `எப்போது சிறைச்சாலையில் குற்றவாளிகளோடு குற்றவாளியாகத் என்னைத் தள்ளிவிடுவார்களோ!’ என்று அஞ்சும்போதும், `வேண்டாதவர்கள் என்மேல் பழி சுமத்துகிறார்கள்!’ என்றெல்லாம் (பொய்யென்று தெரிந்தே) வாதாடுகிறார்.

நேர்மையின் பலன்

நேர்மை என்பது கபடமற்ற தன்மையையும், உண்மையை வெளிப்படையாகப் பேசுவதையும் குறிக்கிறது. உண்மை பேசிவந்தால், எப்போது என்ன சொன்னோம் என்று ஞாபகம் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய தொல்லை கிடையாது. எதையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லாததால் ஒருவிதச் சுதந்திர உணர்வு உண்டாகும்.

தம் குறைநிறைகளுடன் தம்மையே ஏற்க, நேர்மையானவர்கள் பிறரால் பாதிக்கப்படுவதில்லை. `இவரை நம்பலாம்!’ என்ற நம்பிக்கை எழுவதால் தரமான நண்பர்கள் வாய்ப்பார்கள். இவர்கள் எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. பிறர்தான் பயப்படுவார்கள் — தமது பொய்யான வாழ்க்கையைக் கேலி செய்கிறார்களோ என்று.

இருப்பினும், சிலர் பிறரது மதிப்பைப் பெற பலரும் கொஞ்சமாவது பொய்யுரைக்கிறார்கள்.

கதை

மலேசியக் கல்வி திட்டப்படி, எட்டாவது படிவ அரசாங்கப் பரீட்சையில் மொத்தம் எட்டு பாடங்கள் இருந்தன.

முடிவு வந்ததும், என் சக ஆசிரியை மிஸஸ் ஃபூங் (Foong), தன் மகள் ஜென்னி ஏழு பாடங்களில் மிகச் சிறப்பான `ஏ’ வாங்கியிருப்பதாகப் பெருமையுடன் அறிவித்தாள். அவள் மறந்தது: அதே பள்ளியில் என் மகளும் அப்பெண்ணுடன் இணைந்து படித்தாள் என்பது.

குட்டு வெளிப்பட்டது.

மிஸஸ் ஃபூங் இல்லாதபோது, எல்லாரும் சிரித்தார்கள். ஒருத்தி, “போனால் போகிறாள்! அவள் ஒரு அம்மா! நமக்குப் புரியாதா!’ என்றாள் கேலியுடன்.

எவரும் அவளிடம் மேற்கொண்டு எதையும் விசாரிக்கவில்லை. அதன்பின், அவள் எது சொன்னாலும் நம்பத் தயாராகவும் இல்லை. அப்போது அடைந்த அவமானத்தில், `நீ ஏன் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறவில்லை?’ என்று ஜென்னியை வாட்டி வருத்தியிருப்பாளோ? எதனாலோ, அப்பெண்ணின் மனநிலை குன்றி, பதினாறாவது வயதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

அவளுடைய கவுன்சிலர் மிஸஸ் ஹோ (Ho), “பெற்றோரது கடுமையான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாது, அந்த `வார்டு’ பூராவும் சீனப் பெண்கள்தாம்!” என்றாள் கசப்புடன். “இந்தப் பெண்ணோ, வாயே திறக்கமாட்டேன் என்கிறாள்!”

என் மகள் தன் சிநேகிதியைப் பற்றி உத்தேசமாகக் கூறியது: “ஜென்னி நல்ல பெண். மிக நேர்மையானவள். இப்படிப்பட்ட கீழ்த்தரமான அம்மா இருந்தாலே பிரச்னைதான்!”

ஆனால், சில சமயங்களில், நேர்மைகூட தண்டனைபோல் ஆகிவிடுகிறது.

கதை

பயிற்சியாளராக ஒரு நிறுவனத்தில் சேர்ந்திருந்தான் கந்தன். கணக்காய்வாளராக சில பரீட்சைகளே பாக்கியிருந்தன. அங்குப் பொய்க்கணக்கு எழுதத் தூண்டியபோது, மனம் பொறுக்காமல் வேலையை விட்டான். படிப்பும் பாதியில் நின்றது. `இந்தத் துறையே வேண்டாம்!’ என்று முடிவெடுத்தான். வேறு வேலையும் கிடைக்காத நிலையில், மாமியார் வீட்டு மருமகனாக, மதிப்பு குன்றி இருக்க நேரிட்டது.

அவனுடைய நிலைமைக்கு பரிதாபப்பட்டு, ஒரு முதியவர் தன் கம்பெனியில் வேலை போட்டுக் கொடுத்தார். முதலில் ஒழுங்காக இருந்தவன், `நேர்மையாக இருந்து என்ன கண்டோம்!’ என்று தோன்றிப் போக, நன்றி மறந்து, அவ்விடத்திலேயே திருட ஆரம்பித்தான். கிடைத்த ஒரு வேலையும் போயிற்று.

எல்லா கார்களும் தெருவில் தவறான வழியில் செல்லும்போது, ஒருவன் மட்டும், `சரியான வழியில்தான் போவேன்!’ என்றால் என்ன ஆகும்? கந்தனைப் போன்ற சிலர், நேர் எதிரான பாதைக்கு மாறுகிறார்கள். வேறு சிலர் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவதும் உண்டு.

எப்போது பொய் சொல்லலாம்?

குழந்தைகளிடம் பொய் சொல்லாத தாய்மார்கள் இருவரை மட்டும்தான் நான் சந்தித்திருக்கிறேன். இருவருக்குமே திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து அருமையாகப் பிறந்த குழந்தை.

பிற தாய்மார்கள், எந்த சந்தர்ப்பத்தில் பொய்யுரைப்பார்கள்?

`சீக்கிரம் சாப்பிடு. காக்கா கொத்திண்டு போயிடும்!’

`நானும் அப்பாவும் டாக்டரைப் பாக்கப் போறோம்!’ நன்கு அலங்கரித்துக்கொண்டு திரைப்படத்திற்குப் புறப்படும் தாய், இளம்பிள்ளையிடம் கூறுகிறாள். ஓரிரு முறை அழைத்துப் போயிருப்பார்கள். அங்கு அவனைச் சமாளிக்க முடியாது போக, வேறு வழி தெரியவில்லை.

மற்றபடி, நம்மிடம் அபயம் நாடி வந்த ஒருவரைக் காப்பற்றப் பொய் சொல்லலாம். அல்லது, நமக்கு உற்ற நண்பர் ஒருவரைக் காட்டிக் கொடுக்காது இருப்பதற்காக.

கதை 1

பதின்ம வயது மாணவர்களின் கை, சும்மா இருக்காது. வகுப்பிலிருக்கும் மேசைமேல் பேனாவினாலோ, ஏதாவது கூரான சாமானாலோ கிறுக்குவார்கள். அதில் கெட்ட வார்த்தைகளே மிகுந்திருக்கும்.

அப்படி ஒரு முறை நடந்தபோது, நான் அருகிலிருந்த முஸ்தபாவிடம், “யார் கன்னா பின்னாவென்று எழுதியது?” என்று மிரட்டலாகக் கேட்க, “எனக்குத் தெரியாது, டீச்சர்!” என்றான் மெல்லிய குரலில். அவன் முகத்தில் சிறு வேதனை – பொய் சொல்கிறோமே என்று. அவன் முகத்திலிருந்த நேர்மையைக் கண்டு, நான்தான் அவனை மாணவத் தலைவனாகத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

முஸ்தபாவின்மேல் எனக்கிருந்த மதிப்பு அதிகரித்தது. நண்பனை ஆசிரியையின் கோபத்திலிருந்து காப்பாற்ற, இவன் உண்மையை மறைக்கிறான்!

அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில், அந்தப் பையன் பள்ளியில் பல பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பள்ளிப் படிப்பு முடிந்ததும், ஒரு கௌரவமான வேலையில் அமர்ந்தான்.

கதை 2

ரத்னாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின், திடீரென நின்று போயிற்று – பல முறை. அவள் வீட்டார் காரணத்தைக் கேட்டபோது, ஒரு மொட்டைக் கடிதம் அவர்களிடம் காட்டப்பட்டது. பெண்ணின் சித்தியின் கையெழுத்தில் இருந்ததன் வாசகம்: `இப்பெண் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டவள்!’

அடுத்த முறை, தாங்களே வலிய மாப்பிள்ளை வீட்டாரிடம் உண்மையைத் தெரிவிக்க, கல்யாணம் நல்லபடியாக நடந்தேறியது. சித்திக்கு அழைப்பில்லை.

`அநியாயமாக ஒருவரை ஏமாற்றலாமா? அதனால்தான் நடந்த உண்மையை எல்லாருக்கும் தெரிவித்தேன்!’ அரிச்சந்திரனின் வாரிசாகத் தன்னைப் பாவித்துக்கொண்ட சித்தி.

யார் செய்தது சரி? செய்த தவற்றை ஒத்துக்கொண்ட ரத்னாவும் அவள் பெற்றோருமா, சித்தியா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *