Month: January 2019

  • படக்கவிதைப் போட்டி – 198

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 5

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 5 – இல் வாழ்க்கை

     

    குறள் 41:

    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை

    வாழ்க்கைல பெத்தவங்க, பிள்ளைங்க, பொஞ்சாதி எல்லாருக்கும் நல்லது செய்து தொணையா இருக்கவன் தான் நல்ல படியா குடும்பம்  நடத்துதவன் .

     

    குறள் 42:

    துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை

    எல்லாத்திலயும் ஆசைய விட்டவனுக்கும், தங்கிட்ட இல்லன்னு கேக்குதவனுக்கும், ஏழைக்கும் குடும்பத்தோட வாழுதவன் தொணையா இருக்கணும்.

     

    குறள் 43:

    தென்புலத்தார் தெய்வம் விரு ந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தா றோம்பல் தலை

    தனக்கு,, சொந்தக்காரங்களுக்கு, விருந்தாளிக்கு, தேவர்களுக்கு, இறந்தவங்களுக்கு செய்ய வேண்டியத சிறப்பா செய்யணும்.

     

    குறள் 44:

    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

    வாழ்க்கையோட ஒழுக்கங்கறது பழி பாவத்துக்கு அஞ்சி பொருள் சேக்குததும், சேத்தத பங்குபோட்டு குடுத்து வாழுததுலயும் இருக்கு.

     

    குறள் 45:

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது

    குடும்ப வாழ்க்க பண்பும் பயனும் உள்ளதா இருக்கதுக்கு அன்பான மனசோட நல்ல செயல செய்யணும்.

     

    குறள் 46:

    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்

    நல்ல தனமா குடும்பம் நடத்துதவனுக்கு கெடக்குத பயன் வேறவழில கெடைக்குமா? கெடைக்காது.

    குறள் 47:

    இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை

    குடும்பத்தோட நல்ல வாழ்க்கை வாழுதவனால மட்டுந்தான் கடவுள பத்தி  அறிஞ்சிக்கிட்டு அவர அடைய முடியும்.

     

    குறள் 48:

    ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து

    பிறத்தியார நல்லா வாழ வச்சி தானும் நல்லபடியா குடும்பத்தோட வாழுதவனோட வாழ்க்க துறவிங்க கடைபிடிக்க நோன்ப விட ஒசந்தது.

     

    குறள் 49:

    அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

    குடும்பத்தோட வாழுத  வாழ்க்கையத் தான் ஒசந்த அறம் னு சொல்லுதாங்க. அதுவும் மத்தவங்க குத்தம் குறை சொல்ல முடியாததா இருந்துச்சுன்னா நல்லது.

     

    குறள் 50:

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்

     

    குடும்பத்தோட வாழுத ஒருத்தன் பூமியில இருந்தாலும் அவன மேலோகத்துல  வாழுத தேவர்கள் ல ஒருத்தனப் போல தான் மதிப்பாங்க.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • ஜார்ஜ் பெர்னாண்டஸ் (1930-2019)

    -மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    இலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின் தாக்குதலில் 64 தமிழ்ப் பொது மக்கள் இறந்தனர். வியத்நாமில் மைலாய் நகரில் 1968 மார்ச்சு 16இல் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் 300-500 வியத்நாமியப் பொதுமக்கள் இறந்தனர். வியத்நாமில் அமெரிக்கப் படைகள் செய்ததையே வல்வெட்டித்துறையில் இந்தியப் படைகள் செய்ததாகக் குற்றம் சாட்டிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், வல்வெட்டித்துறையை இந்தியாவின் மைலாய் என அறிவித்தார்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ், கொங்கணக் கத்தோலிக்கர். மேற்குக் கடற்கரையோர மங்களூரில் 1930இல் பிறந்தவர். பாதிரியாரகப் பயிற்சிக்கு பங்களூர் போனவர் இடை நிறுத்தி மும்பை சென்று தொழிற் சங்கவாதி ஆனவர்.

    சமதருமக் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். எளிமையானவர், இனிமையானவர், அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு அச்சாணியானவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினரானவர்.1994இல் சமதாக் கட்சியைத் தொடங்கியவர். பிகாரின் இன்றைய முதலமைச்சர் நிதிஷ்குமார், சமதாக் கட்சியில் இருந்து வளர்ந்தவர்.

    வங்கத்துக் கவிஞர், நேரு அமைச்சரவையில் அமைச்சர் உமாயூன் கபீரின் மகள் இலைலாவை விரும்பி மணந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சீன் அவர்களின் ஒரே மகன்.

    1983க்குப்பின் இந்திய மனித உரிமை இயக்கங்கள் இலங்கைத் தமிழர் மீதான சிங்களவரின் தாக்குதல்களையும் தமது நிகழ்ச்சி நிரலில் ஆர்வத்துடன் சேர்த்துக்கொண்டன.

    சென்னையில் ஊடகவியலார் தி என் கோபாலன் மிகுந்த ஆர்வம் காட்டினார். வி ஆர் கிருஷ்ண ஐயர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தமிழரல்லாத மனித உரிமை ஆர்வலர்களை, சமதரும ஈடுபாட்டாளரைச் சென்னைக்கு அழைத்து இலங்கைத் தமிழர் அழிப்புத் தொடர்பான மாநாடுகளை நடாத்தி வந்தார்.

    அக்காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தமிழகத்தில் பலருக்கு இலங்கைத் தமிழர் ஆதரவாளராக அறிமுகமானார். அதற்குப்பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர் அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.

    இலங்கைத் தமிழருக்காக மட்டுமன்றி, மியன்மார், வங்கதேசம், நேபாளம் என அவரின் இரக்கக் கண்கள் பரந்து பார்த்தன, அடக்கியோரை எதிர்த்து விரைந்து குரல் கொடுத்தன.

    இந்திராவின் நெருக்கடி நிலைக் காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கருணாநிதி. ஆனாலும் இலங்கைத் தமிழர் ஆதரவு நிலையில் தமிழகத்தில் பழ.நெடுமாறன், வைகோ, கி. வீரமணி மூவரும் ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் நெருக்கமாகப் பணிபுரிந்தவர்கள்.

    விடுதலையை வேரறுக்க முடியாது. அதற்கான போராட்டங்கைளையும் நசுக்க முடியாது. தமது நாட்டில் விடுதலைக் குரல்களை ஒடுக்கியோர், பிறிதொரு நாட்டில் விடுதலைக்கு ஆதரிப்பது இரட்டை வேடமே. மனதார ஆதரிக்கார். ஒப்புக்காக ஆதரிப்பார். இதனாலன்றோ உரத்த ஒலியுடன் குரல் எழுப்பியிருந்தாலும் இந்திரா காந்தியின் தமிழர் போராட்ட ஆதரவுக் கொள்கை தோல்வி கண்டது. எம்ஜியாரும் எதையும் செய்யமுடியவில்லை. ஆனாலும் அடக்கி ஆள்வோர் நடுவே எம்ஜியார் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததால் தனித்து ஒளிர்கிறார் என ஜார்ஜ் பெர்னாண்டஸ் எழுதினார் (பக். 61, மனித உரிமைகள், 1998).

    இந்தியப் படைகளை மீளழைக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் குரல் 1989 ஆனியில் ஓங்கி ஒலித்த நாள்களில், விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், ஜார்ஜ் பெர்னாண்டசுடன் தொடர்பு கெண்டார். இந்தியப் படைகள் விலகினால் விடுதலைப் புலிகளைப் பிரேமதாசா அழித்துவிடுவார் எனக் கூறினார். பாலசிங்கத்தை ஜார்ஜ் பெர்னாண்டஸ் கமுக்கமாகச் சந்தித்ததாகவும் செய்தி உண்டு. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார்.

    இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்லும் நிலையில் தான் இல்லை எனப் பதிலளித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், குடியரசுத் தலைவர் வேங்கடராமனுக்குக் கடிதம் எழுதினார். ஜார்ஜ் பெர்னாண்டஸிடம் மேலும் தகவல்களைக் கோரிப் பெற்ற வேங்கடராமன், பிரதமருக்கு அவை யாவற்றையும் அனுப்பினார். (இந்தியா டுடே, யூலை 31, 1989 இதழ்)

    1997 பெப்ருவரியில் ஜார்ஜ் பெர்னாண்டஸைத் தில்லியில் முதன்முதலாகச் சந்தித்தேன். என்னுடன் வந்தவர் திருமதி மாலினி இராசநாயகம். இலங்கைத் தமிழர் ஆதரவு நிலைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம்.

    1998 தொடக்கம் 2001 வரை ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர். முந்தைய அரசு, இலங்கைக்குக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களைக் கொடுத்திருந்தது. ஒரு கப்பலை அனுப்பியபின் மற்றக் கப்பல் அனுப்பும் நிலையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரானார். பழ் நெடுமாறனின் வேண்டுகோளை ஏற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் இரண்டாவது கப்பலை இலங்கைக்கு அனுப்ப மறுத்தார்.

    2000ஆம் ஆண்டு யூன் 3ஆம் நாள். சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம். முதலமைச்சர் கருணாநிதியின் 77ஆவது பிறந்த நாள் விழா.

    இரத்தம் சிந்தாமல் ஒரே நாடு பிரிந்தது. செக் நாடும் சுலோவாக் நாடும் உருவாகின. அதே போல இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் தனியாகவும் சிங்களவர் தாயகம் தனியாகவும் பிரிந்து தமிழருக்குத் தனி நாடு அமைய வேண்டும். கருணாநிதி தன் உரையில் இவ்வாறு கூறினார்.

    வாஜ்பாய் பிரதமர். திமுகவும் அரசில் கூட்டணி. மாறன் அமைச்சர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சர்.

    முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு இந்திய அரசின் கொள்கையா? இந்திய எதிர்க் கட்சிகள் கூவின. இலங்கையில் சிங்களவர் கூச்சலிட்டனர். மேற்கத்தைய நாடுகளும் குரலெழுப்பின.

    வாஜ்பாயின் பதிலை ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் விரும்பும் தீர்வே இந்தியக் கொள்கை என்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் வாஜ்பாய் அவர் வழி கூறினார். அதே நாளில் இந்திய வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சிங் கொழும்பில் நின்றார்.

    2000 யூலை 1, 2 நாள்கள். இடம் ஈரோடு. வைகோ தலைமையிலான மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் “தமிழக மீளெழுச்சி மாநாடு”. உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மின்சக்தி அமைச்சர் அரங்கராசன் குமாரமங்கலம், முதலமைச்சர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாசர் எனப் பலர் பங்குபற்றிய மாநாடு.

    அந்த மாநாட்டிலும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேசினார். 1987-1988இல் இந்திய அரசின் தவறான கொள்கையைப் பிரதமர் வாஜ்பாய் பின்பற்றமாட்டார் எனக் கூறிய அவர், தமிழரும் சிங்களவரும் இணைந்து கேட்டாலே இந்திய அரசு தலையிடும் எனக் கூறினார்.

    2008 வைகாசியில் தில்லியில் மீண்டும் ஜார்ஜ் பெர்னாண்டஸைச் சந்தித்தேன். குணபாலசிங்கம், பத்மநாதன் ஆகிய இருவருடனும் தில்லி சென்றிருந்தேன். இலண்டனில் அவர்கள் இருவரும் சார்ந்த அமைப்பு நடத்த இருந்த இலங்கைக் தமிழர் ஆதரவு மாநாட்டிற்காக ஜார்ஜ் பெர்னாண்டஸை அழைக்கச் சென்றிருந்தோம்.

    இலண்டன் மாநாட்டிற்காக, ஜார்ஜ் பெர்னாண்டஸை அனுப்ப உதவினேன். தென் ஆபிரிக்க அமைச்சர் என் நண்பர் படையாட்சியையும் அனுப்ப உதவினேன். தில்லியில் இருந்து இந்திய வெளியுறவுத் தூதரக அநுபவம் நிறைந்த என் நண்பர்களையும் அனுப்ப உதவினேன்.

    மற்றொரு முறை தில்லி சென்ற பொழுது, ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்ந்த கிருஷ்ண மேனன் மார்க் இல்லம் சென்றேன். அவர் மருத்துமனையில் இருப்பதாகக் கூறினர்.

    2019 ஜனவரி 29 அன்று அவர் காலமானார் என்ற செய்தி அறிந்து கலங்கினேன். இலங்கைத் தமிழரின் உணர்வுபூர்வமான நண்பர். அடித்தட்டு மக்களின் இதயத் துடிப்பு. விடுதலை இயக்கங்களுக்கு நீரூட்டி வளர்ப்பவர். அவரின் மறைவு இந்தியாவுக்கு மட்டுமன்று, மனித நேயர்களுக்குப் பேரிழப்பு.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 22

    -திருச்சி புலவர். இரா. இராமமூர்த்தி

    சுந்தரருக்குத் திருமணக்கோலம் புனைவித்து, உயர்ந்த குதிரையின் மேலேற்றி ஊர்வலம் வந்தார்கள்! அந்த ஊர்வலத்தில் உறவினரும், நட்பினராகிய அரசரைச் சார்ந்தோரும் தொடர்ந்து வந்தனர்! அவ்வாறு வந்தோர் தத்தமக்கு உரிய தேர், யானை, குதிரை முதலிய வாகனங்க ளிலும், வண்டிகளிலும் வந்தார்கள்!

    சிறந்த திருமணக் கோலத்துடன் திருமணம், நிகழும் புத்தூரை நோக்கி அனைவரும் வந்தனர்! புத்தூர், மணமகளின் தந்தை சடங்கவி சிவாசாரியாரின் ஊர் ஆதலால் அங்கேதான் திருமணம் புரிவித்தனர்! இங்கே சேக்கிழார் ஒருகுறிப்பைத் தருகிறார்! அன்றுமுதல் புத்தூரின் பெயர்’’மணம் வந்த புத்தூர் ‘’ எனப்பட்டது, என்று எழுதுகிறார்! சுந்தரர் திருமணத்தின் அடையாளமாக எஞ்சப்போவது, அந்தப் பெயரே ஆதலால் அவ்வாறு கூறினார்! ஆனால் காலப்போக்கில் அவ்வூர் ‘’மணம் தவிர்ந்த புத்தூர் ‘’ என்று மாறியது!

    அவ்வூர் நோக்கி வந்த சுந்தரர் சுற்றத்தினரை பூரண கும்பம் கொடுத்துப் புத்தூர் அந்தணர்கள் வரவேற்றனர்! அவ்வாறு ஊர்வலத்தில்வந்த சுந்தரரைக் குறித்தும் , திருமணப் பெண் குறித்தும், தம்மைக் குறித்தும் பெண்கள் உரையாடியதை அடுத்த பாடலில் நயம்படக் கூறுகிறார்!

    திருமணத்தில் பேரழகர் சுந்தரரின் அலங்காரத் தோற்றத்தைக் கண்ட ஊர்வலப் பெண்டிர், ‘’ கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண ‘’ என்றார்கள்! சுந்தரரைக் ‘’காளை’’என்று கூறிய சேக்கிழாரின் சொல்லாட்சி தனித் தன்மை வாய்ந்தது! திருமண நங்கை சடங்கவி பேதை!அவளுடன் காளையை இணைப்பது சற்றுத் தயக்கம் தருகிறது! திருமணத்துக்கு மணம்பேசிய அளவில் திருமணத்தகுதி வந்துவிட்டது என்றாலும் , அவர்கள் திருமணத்தைப் பெருமான் தடுத்தாட்கொண்டார்! ஆதலால் கண்கள் எண்ணில்லாத வேண்டும் என்று சுந்தரரரைக் காண விரும்பியவர்கள், நங்கையாகிய சடங்கவி திருமகளின் அழகு குறித்து ஏதும் கூறாமல், ‘’பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை! என்பார்!’’ என்று சேக்கிழார் கூறுகிறார்! சுந்தரர் என்னும் சிவனடியாருடன் திருமணம் என்ற அளவிலேயே சடங்கவி மகள் சிவலோகப் பேறு பெற்றாள். ஆதலால் ‘’பெண்களில் சிவலோகப்பேறு பெற்று உயர நோற்றாள், சடங்கவி பேதை ‘’ என்று சேக்கிழார் பாடுகிறார் ‘சடங்கவி பேதை’ என்ற தொடர் அவர்தம் அஞ்ஞானம் விளைத்த ஞானத்தை உணர்த்துகிறது! அதனால்தான் சிவலோகப்பேறு பெரும் தகுதியுள்ள பேதைப்பெண்ணின் மேனியழகின் வருணனையைச் சேக்கிழார் பாடவில்லை.

    சுந்தரர் சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்றார். ஆனால் அவரைக் கணவனாக நினைத்த சடங்கவியார் திருமகள் என்ன ஆனார்? என்றார் வினாவுக்கு விடை தருவது போல் சேக்கிழார்,

    ‘’அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
    செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
    உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
    பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்.’’

    என்று அப்பேதையும் சிவலோகம் பெற்றதைக் கூறுகிறார்! இவ்விடத்தில் சிவப்பேறு பெறத்தக்க காரைக்காலம்மை வரலாற்றில் அவருக்கும் பரமதத்தனுக்கும் நிகழ்ந்த திருமணத்தை ,

    தளிரடிமென் னகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக்
    களிமகிழ்சுற் றம்போற்றக் கலியாணஞ் செய்தார்கள்.

    என்று சேக்கிழார் பாடியதை இங்கே நினைவில் கொண்டு வருதல் வேண்டும்! காளையும் மயிலும் திருமணப் பொருத்தத்தில் பகையாகும்.

    இங்கே முறையான திருமணத்தில் இணைந்த இராமன்-சீதை திருமணம் குறித்த கம்பன் பாடல்கள் படித்துச் சுவைக்கத் தக்கன! அங்கே மகளிர்,

    “நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்!
    கொம்பினைக் காணும்தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்!’’

    என்று ஒருவரை ஒருவர் விஞ்சிய அழகைக் காட்டுகிறார்! இதனை நன்கறிந்த சேக்கிழார், சற்றே மாற்றிப் பாடிய நயம் போற்றுதற்கு உரியது! இனிச் சேக்கிழார் பாடலை மீண்டும் காண்போம்!

    ‘’கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண என்பார்
    பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்
    மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் ‘’‘.

    இப்பாடலில் ஈற்றடியில் இந்த மண்ணில் மட்டும் மகிழ்ச்சி தரும் திருமணமத்தைக் காணுமுன் வாழ்ந்தோம் என்று கூறிய பெண்களின் கூற்று நயம் மிக்கதாகும்.

    Share
  • (Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்

    முனைவர் ஆ.ராஜா
    அருங்காட்சியகத் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்-10

    கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்
    (தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகச் சான்றுகளின் அடிப்படையில்)

    கொடுமணல் என்ற ஊர், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் காவிரியாற்றின் கிளை ஆறான நொய்யல் ஆற்றின் வடகரையில் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து, இவ்வூரைக் ‘‘கொடுமணம்’’ என்று குறிப்பிடுகிறது. இத்தகைய சங்க கால இலக்கியங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் கொடுமணலில் 1985-1986ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய அகழாய்வில் கண்டறியப்பட்ட பெருங்கற்காலத்தைச் சார்ந்த  தடயங்கள் பற்றியும், குறிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ள கொடுமணல் அகழாய்வுத் தடயங்கள் குறித்தும்  இக்கட்டுரை விளக்குகிறது.

    சங்க காலத்தில் அரிய கற்களைக் கொண்டு அணிகலன்களை உருவாக்கக்கூடிய தொழிற்கூடமாகக் கொடுமணல் விளங்கியிருந்தமையைக் ‘‘கொடுமணம் பட்ட வினை மான் அருங்கலம்’’ என (பதிற்றுப்பத்து 74) அரிசில்கிழாரும், ‘கொடுமணம் பட்ட நன்கலம்’ (பதிற்றுப்பத்து 64) எனச் சங்கப் புலவர் கபிலரும் குறிப்பிடுவதன் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வூர், சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூவூரையும், கேரளத்திலுள்ள துறைமுகப் பட்டினமான முசிறிப்பட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது.

    தொல்பொருட்கள்

    கொடுமணலிலுள்ள வாழ்விடப் பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட போது, அகழாய்வுக் குழிகளின் பல நிலைகளில் சுவரின் அடிப் பகுதிகள், வீட்டுத் தரை எச்சங்கள், செங்கற்கள், கூரை ஓடுகள், மரத்தூண் ஊன்றப்பட்ட குழிகள், அடுப்புப் பகுதிகள் ஆகியவற்றோடு கொல்லர் உலைகளும் (இரும்பு உருக்கு உலைகள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகழாய்வில் பல உலைகள், வட்ட வடிவில் அமைந்திருந்ததோடு, உலைகளின் கழிவு அல்லது கசடு அதிகளவில் காணப்பட்டன. இவ்வுலைகளில் சில, செம்பு உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும், கொடுமணல், ரோமானிய நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கான பல சான்றுகள் இங்கே கிடைத்துள்ளன. குறிப்பாக, மேற்பரப்பில் கிடைத்த ரோமானியக் காசும், அகழாய்வுக் குழிகளில் கிடைத்த ரோமன் வகை ‘ரூலெடட் மண்கல’ச் (Rouletted Pottery) சில்லுகளைக் குறிப்பிடலாம்.

    படம் : 1 & படம் : 2
    கொடுமணல்: குறியீடுகள் பொறித்த கறுப்பு-சிவப்பு கிண்ணம் மற்றும் சிவப்பு பானை ஓடு
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    மேலும், இரும்பாலான கூர்முனைகள், கத்திகள், அரிவாள்1, செம்புப் பொருட்கள், கார்னீலியன் மணிகள், பச்சைக்கல் (Beryl), நீலம் (sapphire), வைடூரியம் (lapis lazuli), ஜாஸ்பர் (Jasper), அகேட் (agate), கார்னட் (carnet) ஆகிய அரிய கல்மணிகளும் கிடைத்துள்ளன. சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றதற்கான தடயங்களான சங்கு வளையல் துண்டுகளும் (படம்:5) கிடைத்துள்ளன. இவ்வகழாய்வில் ஏராளமான சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன. அம்மணிகளில் சில, தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரிய வகை சூதுபவள மணிகளைப் பெருங்கற்கால மக்கள் உருவாக்கியதற்கான தொழிற்கூடம் கொடுமணலில் இருந்துள்ளது என்பதை இங்கே கிடைக்கக்கூடிய மிகுதியான மணிகளின் வாயிலாக அறிய முடிகிறது. இத்தொழிற்கூடத்தில் உருவாக்கப்பட்ட மணிகள், முசிறிப் பட்டினத்தின் வழியாக மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாகப் பண்டைய மக்கள் கடல்கடந்த வணிகத்தை அறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    படம் : 5
    சங்கு வளையல் துண்டுகள்
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வாயிலாக இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருவாக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தொழிற்கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் நின்று நிலைத்துள்ளன எனக் கா.ராஜன் கருதுகிறார். கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களை வாங்குவதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் வந்துள்ளனர். குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து வணிகர்களும் கைவினைஞர்களும் இங்கு வந்துள்ளதைத் தமிழ் மயமாக்கப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட்பெயர்களும், வணிகர் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன.

    எல்லாவற்றிற்கும் மேலாகக் கங்கைச் சமவெளிப் பகுதியின் பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள், கங்கைச் சமவெளிப் பகுதியில் கி.மு 6ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம்மட்பாண்டம், கி.மு. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்2. மேலும், புலிப்பொம்மை சிவப்பு, ஊதாக்கல் பதிக்கப்பட்டு அழகாகச் செய்யப்பட்டுள்ளது. சில விலங்குகளின் எலும்புகளும் பறவைகளின் எலும்புகளும் கிடைத்துள்ளமையால் இம்மக்கள் புலால் உணவை அருந்தியமை தெரிகிறது.3

    மேலும், ஈமக் காட்டில் உள்ள பெருங்கற்படைச் சின்னங்கள், நீத்தோர் நினைவாக உருவாக்கப்பட்ட கல்லறைகளாகும். இவற்றில் ஒரு சிலவே மண்ணால் செய்யப்பட்ட தாழிகளாகும். இப்பெருங்கற்படைச் சின்னங்கள் பெரிய கற்பலகைகளைக் கொண்டு, நீள்சதுரம் அல்லது சதுர வடிவில் நிலத்துக்கடியில் அமைக்கப்பட்டன. இக்கற்பலகைகள் ஒரு டன் முதல் ஆறு டன் வரை எடையுள்ளவையாகக் காணப்பட்டன. தென்னிந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் குறிப்பாகக் கல்லறைகளில் மிகப் பெரியவை கொடுமணலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இக்கல்லறைகளில் இடுதுளைகள் (Porthole) இருந்தன. கல்லறைக்குள்ளும் வெளியிலும் நீத்தோர் நினைவாகப் படைக்கப்பட்ட மட்பாண்டங்கள், இரும்பு, செம்புப் பொருள்கள், மணிகள் (Beads) ஆகியவற்றையும், வெண்மை நிறப் படிகக் கற்கள் (Quartz pieces) ஆகியவை கொண்டும் நிரப்பப்பட்டன. மேலும், கறுப்புநிறத் தாங்கிகள் (Ring stand), மூடிகள் (Lids),  கறுப்பு சிவப்பு நிறக் கிண்ணங்கள் (Bowls), குறியீடுகள் மற்றும் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கறுப்புசிவப்பு, சிவப்பு வகை மண்கலங்கள், நான்கு கால்களுடன்கூடிய சிவப்பு நிறச் சாடிகள் (Jars:படம்.4), தட்டுகள், சிறிய பெரிய இரும்பு வாள்கள் (Small and big swards), கத்திகள், அம்பு நுனிகள், ஈட்டி நுனிகள், கடப்பாரை, உளி, கம்பி, ஆணி, அரிவாள், புலிப் பொம்மை, வாணலி போன்ற வடிகட்டி, கரண்டி, ஊசி, ஊதுகுழாய், கம்பி, மோதிரம், ஒலிமணி, செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் ஆகியவை, அகழாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

    படம் : 4
    நான்கு கால்களுடன் கூடிய சாடிகள்
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    இங்கு கண்டறியப்பட்ட பொருட்களில் சில, தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பது சிறப்புக்குரியதாகும். இவ்வூரில் மிகப் பரந்த அளவில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள், உலக அளவில் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    குறியீடுகளும் எழுத்துப் பொறிப்புகளும்

    குறியீடுகள் என்பவை, பானையின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ காணப்படும். இந்தியாவில் பானைகளில் கீறப்பட்டுள்ள குறியீடுகள் பற்றிய ஆய்வினை, 1881இல் பிரான்பில் என்ற அறிஞர் தொடங்கினார். அதன் விளைவாக இ.எச்.ஹண்ட், ஜி.யஜ்தானி, பி.கே.தாபர், பி.பி.லால் போன்ற ஆய்வாளர்கள் தோற்றம், வளர்ச்சி மற்றும் குறியீடுகளுக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றை அகழாய்வுகளில் கிடைத்த பானைப் பொறிப்புகள், காசுப் பொறிப்புகள், முத்திரைகள் முதலியவற்றிலிருந்து ஆராய்ந்துள்ளனர்.4

    கொடுமணலில் தமிழ்ப் பல்கலைக்கழகம், புதுச்சேரிப் பல்கலைக்கழகம், மத்திய தொல்பொருள் அளவீட்டுத் துறை ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மட்பாண்ட ஓடுகள் பலவற்றில் கீறல் குறியீடுகளும் எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், கரூர், திருக்காம்புலியூர், உறையூர், அழகன் குளம், வல்லம் போன்ற ஊர்களிலும் குறியீடுகள் கிடைத்துள்ளன. அதே போன்று தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமான குறியீடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குறியீடுகள், பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் கொடுமணலில் கிடைத்த குறியீடுகள் 1456இல் 58 குறியீடுகள் தனிக் குறியீடுகளாவும், 24 அடிப்படைக் குறியீடுகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன5.

    இக்குறியீடுகள் ஏதோ ஒருவகையான தகவல்களை வெளிப்படுத்தக் கூடியவையாக இருந்திருக்க வேண்டும். எழுத்துகள் உருவாவதற்கு முன், மக்கள் தங்களின் எண்ணங்களையும் செயல்களையும், அவர்களைப் பற்றிய பதிவுகளையும் குறியீடுகள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

    தமிழ் – பிராமி எழுத்துகள்

    ஆரம்ப காலத்தில், குறியீடுகள் மற்றும் ஓவியங்கள் வாயிலாக மனிதர்கள், தங்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி வந்தனர். அதன் பின் சிந்திக்கத் தொடங்கிய மனிதர்கள் குறியீடுகளிலிருந்து வளர்ச்சி பெற்று எழுத்துகளைக் கண்டறிந்து உருவாக்க முற்பட்டனர். பண்டைத் தமிழர்கள், கி.மு.500 வாக்கில் எழுத்துகளின் பயனை அறிந்தவர்களாக இருந்துள்ளனர். பொதுவாக இக்காலக்கட்டத்திலுள்ள எழுத்துகளைத் தமிழி அல்லது தமிழ்பிராமி என்பர். இவ்வகையான எழுத்துகள், கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வாயிலாக 500க்கும் மிகுதியாகக் கிடைத்துள்ளன6. சங்க இலக்கியங்களில் வருகின்ற பெயர்கள் இங்கு கிடைத்த பானை ஓடுகளில் காணப்படுகின்றன. குறிப்பாகச் சாம்பன் ஸீமநன்(படம்.3), கூல அந்தைய் சாம்பன் அகல், கண்ணன் ஆதன், பண்ணன், குவிரன் அதன், அந்தவன் அதன், விஸாகீ, விஸகன், அதன்7,  போன்ற எழுத்துப் பொறிப்பு பெற்ற பானை ஓடுகளைக் குறிப்பிடலாம்.

    படம் :3, கொடுமணல்: ‘சாம்பன் ஸீமநன்’ எழுத்துப் பொறித்த பானை
    (நன்றி: பேரா.கா.இராஜன்)

    இலங்கையில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் அணைக்கோட்டை என்ற இடத்தில் பெருங்கற்படைச் சின்னம் அகழ்ந்தபோது கிடைத்த முத்திரை ஒன்றில் ‘கோவேதா’ என்ற பிராமி எழுத்து உள்ளது. ஐராவதம் மகாதேவன் அவர்களால் கேரளாவிலுள்ள எடக்கல் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டின் இறுதியில் ‘கடும்மி புத சேர’ என்ற சொல், தமிழ்-பிராமியில் உள்ளது நோக்கத்தக்கது.8

    இதே போன்று இலங்கையின் மிகத் தொன்மை வாய்ந்த ஊர்களுள் ஒன்றாகக் கருதப்படும் அநுராதபுரம் என்ற இடத்தில் தெரிணியகலா மற்றும் ராபின் கோனிங்காம் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வில்  பிராகிருதம் தாங்கிய பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்கள் குறிப்பிட்ட மண்ணடுக்குகளில் கிடைத்தன. இம்மண்ணடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் காலக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதால் அம்மண்ணடுக்குகளில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களின் காலமும் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டன.

    ஆயினும், பெளத்த மதம் அசோகரால் இலங்கையில் புகுத்தப்பட்ட போதுதான் பிராமி வடிவமும் அங்குப் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இக்காலத்தை ஏற்றுக்கொள்வதில் அறிஞர்கள் தயக்கம் கொண்டனர். இருப்பினும், இக்கால வரையறை இதுவரை பிராமி எழுத்துகளின் காலம் தொடர்பாகக் கொண்டிருந்த கருத்தை உரசிப் பார்த்தது.

    இந்நிலையில், பொருந்தல் மற்றும் கொடுமணல் அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களும் தமிழ்-பிராமி எழுத்துகளின் காலம் குறித்து முக்கியச் செய்திகளை நமக்கு வழங்கின. அதன் விளைவாக அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு முறையில் பொருந்தல், கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காலக் கணிப்பு செய்யப்பட்டன. இதன் வாயிலாக தமிழ்-பிராமியின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் நோக்கித் தள்ளப்பட்டது என்கிறார் கா.இராசன்.9

    காலக் கணிப்பு

    தொடக்க காலத்தில், எழுத்துகளின் வரிவடிவத்தின் அடிப்படையிலும், மண்ணடுக்கில் கிடைக்கின்ற பானை ஓடுகளின் அடிப்படையிலும், குகைத் தலங்களில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையிலும் காலக் கணக்கீடு செய்யப்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் தாக்கத்தால் கரிமக் காலக் கணிப்பு முறையின் வாயிலாகக் காலம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கா.இராசன் அவர்கள் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் காலக் கணிப்புக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிடிக் ஆய்வுக் கூடத்திற்கும், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்திற்கும் அனுப்பப்பட்டன. அவை கி.மு 408 என்ற காலக் கணிப்பை வழங்கின.

    பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகளின் காலத்திற்கு ஏற்பக் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகளின் காலமும் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டது. இக்காலக் கணிப்பு இங்குக் கிடைத்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளாலும் உறுதிப்படுத்தப்பட்டன. அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தைக் கி.மு. 5 ம் நூற்றாண்டு என கா.இராசன் குறிப்பிடுகிறார்.10

    கொடுமணலில் முதன்முதலில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட  அகழாய்வுகளில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துப் பொறித்த பானை ஓடுகளின் காலத்தை, புதுச்சேரிப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினர் 2012 மற்றும் 2013களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் அகழப்பட்ட குழிகளின் மண்ணடுக்கில் கிடைத்த தழிழ்-பிராமி எழுத்துகளின் அடிப்படையிலும், மேற்குறிப்பிட்ட கரிமக் கணிப்பின்படியும் கி.மு.500 எனக் கருதலாம். இவ்வகையான அறிவியல் முறைப்படியான ஆய்வுக்கு முன், கொடுமணலின் காலம் எழுத்துகளின் வடிவத்தின் அடிப்படையில் கி.மு.300 எனக் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.

    எனவே, கொடுமணல் பெருங்கற்காலத்தில் பெரும் நகரமாகவும், உள்நாடு மற்றும் மேலை நாடுகளுடன் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்த செழித்த ஊராகவும் திகழ்ந்திருக்கிறது என்பதை அகழாய்வுகளில் கிடைத்த பல்வேறு வகையான சான்றுகளின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், கொடுமணலில் கண்டறியப்பட்ட எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளை அறிவியல் முறைப்படி காலக் கணிப்பு செய்ததில் இதன் காலம் கி.மு.500க்கு பின்நோக்கி எடுத்துச் சென்றுள்ளது சிறப்புக்குரியது. இதன் வாயிலாகத் தமிழகத்தில் குறிப்பாகக் கொடுமணலில் பெருங்கற்கால மக்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே செழிப்புற்றிருந்தார்கள் என்பதனை அறிய முடிகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, ManooPathippakam, Thanjavur, 1997, P.89.
    2. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    3. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி எட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988, பக்.72-74.
    4. கா.இராஜன், குறியீடுகளும் எழுத்துகளும், வரலாற்றுக் கலம்பகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1998, பக்-1-8.
    5. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    6. மேலது.
    7. எ.சுப்பராயலு, மண்கல தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள், ஆவணம் இதழ்-19, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2008, பக்.189-221.
    8. கா.இராஜன், குறியீடுகளும் எழுத்துகளும், வரலாற்றுக் கலம்பகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1998, பக்-1-8.
    9. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    10. மேலது.

    துணை நின்ற நூல்கள் மற்றும் இதழ்கள்

    • சு.இராசவேலு மற்றும் கோ.திருமூர்த்தி, தமிழ் நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
    • Subbarayalu, “Vallam Excavations”, Tamiḻ Civilization, vol.2, no.4, 1985, pp.30-42.
    • Rajan, “Kodumanal Excavations – A Report”, K.V.Ramesh (ed.), Gauravam B.K.Gururajarao Felicitation Volume, Harman Publishing Company, New Delhi, 1996, pp.72-86.
    • Rajan and Osmund Bopearachchi, “Graffiti Marks of Kodumanal (India and Ridiyagama (Sri Lanka)”, Man and Environment, vol. 27, no.2, 2002, pp.97-106

    =====================================================

    ஆய்வறிஞர் கருத்துரை:

    தமிழகத் தொல்லிடங்கள், பொதுவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டு அளவே கால மூதெல்லையாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பிராமி எழுத்தின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்பட்டதே முதன்மைக் காரணம். கரிம ஆய்வின்படி கொடுமணல் பிராமி எழுந்துள்ள பானை ஓடுகள், எழுந்துள்ள பானையில் இருந்த பொருள்கள் கி.மு.5 ஆம் நூற்றாண்டு வரை நீளுவதால் பிராமி எழுத்தின் காலம் மட்டுமல்ல, கொடுமணல் நாகரிகக் காலமும் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது என நிறுவப்பட்டுள்ளதைக் கட்டுரை தெளிவாக விளக்குகிறது. வைடூரியம் < lapis lazuli என்பது தவறு. அது ஒரு நீல நிறப் பாறைக்கல். மற்றபடி, கட்டுரை நன்று.

    =====================================================

    Share
  • வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

    சேசாத்திரி

    வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

    தமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்
    2. நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே
    3. பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு
    4. அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக்  காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா
    5. ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும்  புன்பயிற் செய்தால் புனத்துக்கு  ஒரு பணமும்  இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்
    6. இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்வெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.

    விளக்கம்:

    விஜயநகரம் இரண்டாம் தேவராயர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1428 இல் வெட்டிய கல்வெட்டு. திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆள வன்னாட்டு வெண்பாற் நாட்டில் உள்ள அசுகூரான அசூரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயிலில் கூடிய வலங்கை 98 சாதிகளும், இடங்கை 98 சாதிகளும் குறைவின்றி நிறைவே நிறைந்தவராய் தாம் அரசுக்கு செலுத்த வேண்டிய பயிர்க் கடமை(வரி), பல இனத்தார் செலுத்த வேண்டிய பல வரிகள் குறித்து இக் கல்வெட்டு கூறுகிறது.

    நன்செய் பயிரில் பாழும் உமி மட்டும் உள்ள சாவியைத் தவிர்த்து வளர்ந்த பயிரில் வேலி ஒன்றுக்கு ஐம்பது பணமும், வரகு கேழ்வரகு விளையும் புன்செய் பயிரில் வீணாகிய பாழ், உமி ஆகிய சாவி தவிர்த்து வளர்ந்த பயிரில் பத்தில் ஒன்று 1/10 கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் இவற்றுக்குக் கீழான இளவரிசை துண்டில் 4 ல் 1 பங்கான கால்வாசி கழித்து, மேலும் 10 ல் 1 பகுதி கழித்து, வேலி ஒன்றுக்கு 25 பணமும் வானாவாரி பயிருக்கு 100 குழிக்கு 5 பணமும், வாழை மஞ்சள் இஞ்சி க்கு 100 குழிக்கு 2-1/2 பணமும், முதல் குருத்து விட்ட கமுகு, தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் தரவேண்டும். ஆண்டு காணிக்கைக்கு 220 பொன்னும், மகமை என்னும் கோவில் வரி, தலையாரிக் காவல் வரிக்கு 80 பொன்னும் தரவேண்டும். பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர் ஒருவர்க்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர், பறையர் ஒருவர்க்கு இரண்டு பணமும் புன்செய் பயிர் செய்தால் புனத்து 1 பணமும் தரவேண்டும். இவை தவிர்த்து வேறு எந்தப் புது வரியும் செலுத்த வேண்டாம்.

    இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாமல் கல்வெட்டை அழிப்பவர்களை நன்றாக வாட்டி வதைத்து, தலையில் குத்தி, கீழே இழுத்துப் போடுவோம் என்று எச்சரிக்கின்றனர். வலங்கை இடங்கையில் இடம்பெறாமல் இருப்பதால் தான் செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர், இடையர், வலையர், கண்மாளர், பறையர் என்போர் தனித்துக் காட்டப்பட்டார்களோ அல்லது இவர்கள் ஊழியத் தொழில் ஆற்றுவோர் என்பதால் இவர்கள் குறைவான வரி செலுத்தினால் போதும் என்று தனியே காட்டப்பட்டார்களா?

    மொத்தத்தில் இக்கல்வெட்டில் பறையர் பிற சாதிமாரோடு சரிநிகராக வைக்கப் படுவது, 15 ஆம் நூற்றாண்டில். இவர்கள் தாழ்த்தப்படவோ, ஒடுக்கப்படவோ இல்லை. தீண்டாமைக்கு ஆட்படவும் இல்லை எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்:

    தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி III பக்கம் 15, 2010, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு

    Share
  • படக்கவிதைப் போட்டி 197-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வரிசைகட்டி நிற்கும் நெகிழிப் புட்டிகளின் அருகே முறுவலோடு மலர்க்கரம் நீட்டி நமை மயக்கும் சுட்டிக் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்திருப்பவர் திரு. அண்ணாகண்ணன். படக்கவிதைப் போட்டிக்கு ஏற்றது இப்படம் என்றிதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    மகிழ்வோடு நாம் பயன்படுத்திய நெகிழிப் பொருள்கள் நம் மண்ணுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குபயக்கும் தன்மையன; மக்காத் தன்மை கொண்ட இவற்றை அழித்தலும் இயலாது என்றுணர்ந்த பின்னும் அவற்றைப் பயன்படுத்துதல் அறிவுடைமை ஆகாதென்னும் விழிப்புணர்வை மாந்தரிடம் ஏற்படுத்தி அவற்றுக்கு விடைகொடுத்தனுப்புவதே நம் கடமையாகும்.

    இனி, இந்நிழற்படத்துக்குப் பொருத்தமான கவிதைகள் வடிக்கக் காத்திருக்கும் கவிஞர்களை அழைப்போம்! அவர்தம் நன்மொழி கேட்போம்!

    *****

    ”மழைக்காக வானம் பார்த்து வாழும் கூட்டம் ஒருபுறம்; குடிநீருக்கு(ம்) கேடு வந்ததால் அதனைக் காசுகொடுத்து வாங்கிடும் கூட்டம் இன்னொருபுறம்; வயிறுபுடைக்க உண்டதனால் நீர் குடிக்க இடமின்றி அதனை வீணடிக்கும் கூட்டம் மறுபுறம் என்று விதவிதமான மனிதர்கள் மத்தியில் தாகம் தணித்திடும் நீர்ப்புட்டிகளை வேண்டுவோருக்கு வழங்கக் காத்திருக்கும் குழந்தைகள் இவை!” என வியக்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    ஈரம் கொண்ட பிஞ்சு மனம்

    மாதம் மும்மாரிப் பொழிந்த
    காலம் போய்
    வானம் பார்த்து வாழும் ஒரு கூட்டம்
    கால் கடுக்க வெகு தூரம் நடந்து சென்று
    கால்வாய்களில் கொண்டு வந்த தண்ணீர்
    கால் வயிற்றுக் கஞ்சி காய்ச்சிட
    காலியாகிப் போனதே
    நீரைத் தேடி மீண்டும் கால்கள் நடந்ததே
    மீளாத துயரம் இன்றும் தொடர்ந்ததே
    நிலத்தடி நீரை உறிஞ்சி குளித்துக்
    குடிக்கும் நீரைக் காசு கொடுத்து வாங்கி
    வாழும் ஒரு மக்கள் கூட்டம்
    அன்போடு தேவை அறிந்து பரிமாற நேரமின்றி
    ஆடம்பரத்திற்கு அடிமையாகி
    அடைத்து வைத்த தண்ணீரைக்
    கட்டாயமாய் வழங்கிடும் ஒரு கூட்டம்
    அதிகம் உண்டு நீர் குடிக்க இடம் இன்றி
    தாகம் தீர்க்கும் தண்ணீரை
    செய்வது அறியாது வீணாக்கிடும் ஒரு கூட்டம்
    முழுதும் முடியாத கட்டிடத்தில்
    அதிகம் வளராத பிள்ளைகள்
    வியக்க வைக்கும் சிந்தனையுடன்
    வீணாகும் நீரைச் சேமித்து
    சிலரது தீராத தாகத்தைத் தணித்திட
    புன்னகையோடு வழிகாட்டி நின்றனரே!

    *****

    ”நெகிழிக் குடுவையே போய் வா; நீர் வளம் இங்கு பெருகட்டும்” என்கிறார் திருமிகு. லட்சுமி.

    நீர் வளம் பெருகிடவே
    நிறைந்த மனதாய்
    நெகிழி குடுவையே!
    போய் வருவாயோ!

    பந்தி முடிந்தபின்பும் அகலாது குந்தியிருந்த குப்பிகளை வைத்துத் தொடர்வண்டி செய்த சிறுமியர், தாங்கிநிற்கும் மேசையையே அதற்குத் தண்டவாளம் ஆக்கிவிட்டனர் என்று கற்பனைச் சுவை மிளிரக் கவியெழுதியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    உணவுப் பந்தியில் உதித்த சிறுமியரின் தொடர்வண்டி…
    தொடர்வண்டி செய்திடுவோம்.. தோழி..
    தொடர்வண்டி செய்திடுவோம்..
    அழகழகுக் குப்பிகளை.. தோழி..
    அருகருகே நிற்கவைத்து.. (தொடர்வண்டி…)

    பந்தி முடிந்த பின்னாலே.. தோழி..
    பல குப்பிகளைச் சேகரித்து..
    பந்திமேசை அதன்மீது.. தோழி..
    பாங்குடனே அடுக்கிவைத்து.. (தொடர்வண்டி…)

    இழுவையொன்று செய்திடவே.. தோழி..
    இயன்றவழியைச் சொல்வாயா..?
    இங்கிருக்கும் பொருளொன்றை.. தோழி..
    இழுவையாக நாம்மாற்றி.. (தொடர்வண்டி…)

    தொடர்வண்டி செய்தாச்சு.. தோழி..
    தண்டவாளம் என்னாச்சு..?
    தாங்கிநிற்கும் மேசையிதையே.. தோழி..
    தண்டவாளமாய்க் கொள்வோமே.. (தொடர்வண்டி…)

    நாம் செய்த தொடர்வண்டி.. தோழி
    நீண்டதொலைவு சென்றிடுமே..
    நாமிருவரும் அதிலேறி.. தோழி
    நினைத்தபடியே செல்வோமே.. (தொடர்வண்டி…)

    *****

    ”ஆறுகளையும் குளங்களையும் மனிதன் கூறுபோட்டதனால் நீர்வளம் குன்றிப்போய் குப்பிகளில் குடியேறியது குடிநீர் ” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மாற்றம்…

    ஆறு குளமும் கேணியென
    அத்தனை வகையாய் நீர்நிலைகள்,
    ஊறும் நீரின் வளத்தாலே
    உலகம் வாழ்ந்ததே யந்நாளில்,
    கூறு போடும் மனிதராலே
    குன்றிப் போனது நீர்வளமும்,
    ஆறாய்ப் போன நீர்மறந்தே
    அடைத்ததைக் குப்பியில் காண்கிறோமே…!

    *****

    ”கெட்டவரையும் புண்படுத்தாது பண்படுத்தும் இயல்புடைய தமிழராகிய நாம், மக்காது புவிவாழ் மக்களையும் மாக்களையும் வதைக்கும் நெகிழிகளுக்கும் ஒரு நினைவுதினம் நடத்துவோம் வாரீர்!”  என்றழைக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    நினைவு தினம்!

    வாரீர் எம் தமிழர்களே
    வழியனுப்பு விழாவிற்கு!
    நெகிழிப்பை பயன்படுத்த
    நாளை முதல் தடையாம்
    பிறந்தது முதல் தொட்டிலாய்
    பாலுண்ணும் குமிழியாய்
    பகிர்ந்து உண்ணும் தட்டாய்
    பருக உதவிய குவளையாய்
    விளையாட்டுப் பொம்மையாய்
    விரும்பி ஆடும் ஊஞ்சலாய்
    குளிக்கும் வாளியாய்
    பல வருடம் வித விதமாய்
    பவனி வந்த நெகிழி பற்றி
    புரிந்து கொண்டோம்
    நாளை முதல் ஒவ்வொன்றாக
    நன்மை கருதிப் புறந்தள்ளுவோம்
    உருக்கி வடிவுமாற்றி மீண்டும்
    உபயோகிக்க முடிந்தவை தவிர
    மக்கிப் போகாது இப்புவிவாழ்
    மக்களையும் மாக்களையும்
    வாட்டி வதைக்கும் நெகிழிகளுக்கு
    வழியனுப்பு விழா இன்று!
    புவிவளம் காக்க அவைகளை
    புறம் ஒதுக்க விழைந்தாலும்
    கெட்டவரையும் புண்படுத்தாத
    குணம் கொண்ட தமிழர் யாம்
    நிறைவு பெறாக் கட்டிடத்தில்
    நிறை மனதோடு கொண்டாடுவோம்
    நெகிழிப் பைக்கொரு நினைவுதினம்!

    *****

    ”மட்பாண்டக் குவளைகள் எல்லாம் மரியாதையுடன் மனையேறட்டும்; மக்காத நெகிழி நச்சுகளெல்லாம் மலையேறி வெளியேறட்டும்” என்று மாற வேண்டியதையும் நாம் மாற்ற வேண்டியதையும்  அழகாய்த் தன் கவிதையில் பதிவுசெய்துள்ளார் திரு. யாழ் பாஸ்கரன்.

    மாறுவோமே மாற்றுவோமே!

    பச்சைத் தலைப்பாகட்டி பளபளக்க வரிசையிலே
    பச்சைத் தண்ணீர் நெகிழிப் போத்தல்கள் – நாம்
    எச்சிலாக்கி எறிந்தபின் மக்கி நெகிழாமல்
    பசுமைத் தாய்நிலத்தின் நலம் சாய்க்கும் பகைவர்கள்

    வழக்கம் மாறினால் வானமே எல்லை நெகுநெகு நெகிழிகளை
    வழியனுப்பி வைப்போம் பிள்ளைகள் நாங்கள்
    வாழும் பூமிக்கோளம் மாசின்றி மலர்ச்சியுற
    வையகம் வாழ வழிமுறை காண்போம்

    மடமடவென மண்பானைத் தண்ணீரைக் குடித்துவிட்டு
    மளமளவென மண்வெட்டியால் நிலம் கொத்திய
    முப்பாட்டன் காலத்தின் சூழல் நோக்கி முழுமனதுடன்
    முதல் அடியை எடுத்து வைப்போம்

    மண்பாண்டக் குவளைகள் எல்லாம்
    மரியாதை பெற்றே மனையேறட்டும்
    மக்காத மாசான நச்சுக் குப்பைகள் எல்லாம்
    மனம் மாறி மலையேறி வெளியேறட்டும்

    மாசில்லா உலகே மகிழ்வான சுவனம்
    மக்காத பொருளாலே நிகழுமே உயிர்களின் மரணம்
    மனம் நெகிழ்ந்தே நெகிழிகளை ஒழிப்போம்
    மண்ணுயிர்க்கு வாழ்வளித்து மகிழ்வோம்

    மனிதனின் தேவைக்குத் தாயாகும் இயற்கை
    மாறாத அவன் பேராசைக்குப் பாலியாகுது இது செயற்கை
    மாறுவோமே மாற்றுவோமே இனி மண் சிரித்துப் பொன்னாகும்
    மரம் வளர்ப்போம் உலகு அழகாகும்!

    *****

    சிந்தனைக்கு விருந்தான சீரிய கவிதைகளைப் படைத்திருக்கும் புலவர் தோழர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    நெகிழிப் பொருட்களைத் தவிர்த்திடுவோம்…மண்ணின் வளத்தைக் காத்திடுவோம்..!!

    நெகிழிக் குப்பிகள் ஒவ்வொன்றாய்..நெருக்கமாய் அடுக்கி வரிசையாக்கி..
    நெஞ்சம் மகிழ விளையாடும்.. நெருங்கியத் தோழிகள் இருவருக்கும்..
    நெருக்கடிச் சூழலை உணர்த்துகிறேன்.. சிரத்தையாய் அதற்குச் செவிமடுப்பீர்..!!

    நெடுங்கழுத்து உள்ள நாரைகளும்.. நெடுந்தூரம் செல்லும் பறவைகளும்..
    நெடுங்கடல் வாழும் உயிரினமும்.. நெகிழிப் பொருட்களை விழுங்குவதால்..
    நெடுதுயில் கொள்வதை உணர்வீரா..? இவற்றின் துன்பம்போக்க முனைவீரா..?

    நெடுஞ்சாலை நீர்நிலை எங்கெங்கும்.. நெகிழிக் குப்பைகள் நிறைந்திருக்கு..
    நெடுகிலும் குவியும் குப்பைகளால்.. நெருப்பாய்த் தகிக்குது நம்பூமி..
    நெஞ்சம் பதறுது அதையெண்ணி.. உணர்வீர் செல்லக் குழந்தைகளே..!!

    நெல்லைத் தந்திடும் பூமியெங்கும்.. நெருஞ்சில் தைத்த வலியாக..
    நெகிழிக் குப்பைகள் படிவதனால்.. நெடிதுய்க்கும் மண் வளங்கள்..
    நெஞ்சம் பதறிடக் குன்றிடுதே.. நெடுங்கதையாய் இது தொடர்கிறதே..!!

    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நிலத்தடி நீரின் குறைபாடு..!!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நாட்டின் தூய்மைக்கு இடர்ப்பாடு..!!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நம் சுற்றுச்சூழலின் சீர்கேடு..!!

    மனதில் இவற்றை இருத்திடுவோம்.. மண்ணின் வளத்தைக் காத்திடுவோம்..!!
    மக்கா நெகிழிக் குப்பைகளை.. மண்ணில் எறிவதைத் தவிர்த்திடுவோம்..!!
    நெகிழிப் பைகளைத் தவிர்ப்போமே.. நெய்த துணிப்பைகளைக் கொள்வோமே..!!

    ”நெகிழிப் பொருட்களின் பயன்பாடு, நிலத்தடி நீரின் குறைபாடு; நெகிழிப் பொருட்களின் பயன்பாடு, நாட்டின் தூய்மைக்கு இடர்ப்பாடு” என்று நெகிழிப் பொருள்களால் விளையும் தீமைகளைச் செல்லக் குழந்தைகளுக்குத் தன் பாட்டில் அழகாய்ப் பட்டியலிட்டு விளக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • (Peer Reviewed) புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

    முனைவா் பா. உமாராணி
    இணைப் பேராசிரியர்,
    கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்,
    கோயம்புத்தூா்

    புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

    ஒரு படைப்பு தான் தோன்றிய சமூகத்தின் ஆகச் சிறந்த கூறுகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் என்பது இயல்பான ஒன்று. இதுவரை தோன்றிய இலக்கியங்களும், அவை சார்ந்த பின்னூட்டங்களும் நமக்கு இதையே மொழிகின்றன. ஒரு சமூகத்தின்  சிறந்த பண்பாட்டுக் கூறுகளை மட்டும் ஒரு இலக்கியம் தக்கவைத்துக் கொள்வதில்லை. அச்சமூகத்தில் மறைமுகமாகவும் எதிரிடையாகவும் தோன்றிய கருத்துகளையும் செயல்களையும் அவை பதிவு செய்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

    சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை எல்லா இலக்கிய வகைமைக்குள்ளும் மேற்சொன்ன நிகழ்வுகள் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளன. அங்ஙனம் பொருத்திப் பார்ப்பது படைப்பிலக்கியத்திற்கு மேலும் வளமையைக் கூட்டுகிறது. அத்துடன் இத்தன்மை. இலக்கியத்தை சமுதாயம் நோக்கி நகா்த்துவதற்கும் உதவுகின்றது. இத்தகையதொரு பார்வையில் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ள தோற்ற மன்னா்களின் நிலையை வெளிக்கொணரும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    தோற்ற அரசா்கள் குறித்தான பதிவுகள் அல்லது எதிர்நிலைத் தன்மை குறித்தான பதிவுகள் ஒரு சமூகத்தை அதன் ஆழத்திலிருந்து புரிந்துகொள்ள உதவுவதுடன், அச்சமுதாயம் கொண்டிருக்கும் ஆழ்மட்ட பண்பாட்டுக் கூறுகளையும் கண்டறிய உதவுகின்றது. சங்க இலக்கியத்திலும் இத்தகைய பதிவுக் கூறுகள் ஆங்காங்கே விரிந்த நிலையிலும், சிலபோது குறிப்பாகவும் வெளிப்படக் காண முடிகிறது.

    பாடாண் திணை சுட்டும் தோற்றோர் பின்னணி

    பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் வீரம், கொடை முதலிய சிறப்புகளை எடுத்தோதும் திணையாகும். புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன. அதில் செவியறிவுறூஉத் துறையில் 8  பாடல்களும், இயன்மொழித் துறையில் 54 பாடல்களும், வாழ்த்தியல் துறையில் 9 பாடல்களும், பரிசில் கடாத் துறையில் 15 பாடல்களும்,  கடைநிலைத் துறையில் 10  பாடல்களும், பரிசில் துறையில் 8 பாடல்களும்,  பாணாற்றுப்படை துறையில் 6 பாடல்களும், பரிசில் விடைத் துறையில் 6 பாடல்களும், விறலியாற்றுப்படைத் துறையில் 4 பாடல்களும், பூவைநிலைத் துறையில் 3  பாடல்களும், புலவராற்றுப்படைத் துறையில் 2 பாடல்களும், உடனிலைத் துறையில் ஒன்றும், குடைமங்கலம் துறையில் ஒன்றும், வாயில் மங்கலம் துறையில் ஒன்றுமாக மொத்தம் பதினான்கு துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

    செவியறிவுறூஉ

    செவியறிவுறூஉ என்னும் துறை, பாடாண் திணைகளுள் ஒன்றாகும். பகைமையும் கெடுதலுமற்ற வலிய எண்ணங்களை அரசனுக்கு எடுத்துரைத்தல், இத்துறையின் சிறப்பியல்பு. “மறம் திரிவு இல்லா மன்பெரும் சூழ்ச்சி, அறம்தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று” என இத்துறைக்குப் புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம் கூறுகிறது.

    செவியறிவுறூஉ துறையில் அமைந்த பாடலில் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயா் வழுதியினைப் பகைத்த பகையரசா்களின் நிலையானது,

                “துன்அருந் திறல், கமழ் கடாஅத்து

                எயிறு படையாக எயிற் கதவு இடாஅ

                கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின்

                பெருங்கை யானை இரும்பிடா்த் தலை இருந்து

                மருந்து இல் கூற்றத்து அருந்தொழில் சாயா”     (புறம். 3)

    என்று முற்றும் அழிந்துபட்ட நிலையே என்பதனைச் சுட்டுகிறார் இரும்பிடத்தலையார். பாண்டியனின் பட்டத்து யானை பகைநாட்டின் படைக்கலன்களை அழிக்கும் திறனையும், கொலைத் தொழிலுக்கும் அஞ்சாத பாண்டியனின் தன்மையையும் எடுத்தோதும் நிலையில் பகைநாட்டவா் அடைந்த நிலையைத் தெற்றென விளங்க வைக்கிறார் ஆசிரியா்.

    முதுகுடுமியின் வலிமையைக் கூறும் முகத்தான், ஆசிரியா் பகையரசா்களின் நிலையையும், அவா்கள் நாட்டில் விளையும் தீங்குகளையும் சுட்டிக் காட்டுகின்றார் காரிக்கிழார். குடுமியைப் பகைத்து வாழும் மன்னின் நிலையானது,

                “செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வா் தேஎத்து

                கடல்படை குளிப்ப மண்டி, அடா் புகா்ச்

                சிறுகண் யானை செவ்விதின் ஏவி,

                பாசவல் படப்பை ஆா் எயில் பல தந்து

                அவ்வெயில்  கொண்ட செய்வுறு நன்கலம்

                பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி”         (புறம். 6)

    என்று குறிப்பிடுகிறார். அதாவது, போர்செய்ய எதிர்த்த பகைவருடைய நாடுகளில் கடல்போன்ற படையை உட்புகுந்து அழித்தும், அவா்களின் விளை நிலங்களை யானையை விட்டு அழிக்கச் செய்வதுடன் அவா்களுடைய அரண்களையும் அழிக்கும் முறையை எடுத்தோதுகின்றார். அத்துடன் அப்பகை நாட்டினரின் செல்வங்களைப் பரிசிலருக்கு அளிக்கும் நிலையும் சுட்டப்படுகிறது. மேலும்,

                “வாடுக இறைவ! நின் கண்ணி – ஒன்னார்

                நாடுசுடு கமழ் புகை எறித்தலானே!

                செலியா் அத்தை, நின் வெகுளி”     (மேலது)

    என்று குறிப்பிடுகிறார் ஆசிரியா். குடுமியின் போரின் தன்மையானது பகைவா் நாட்டை எரித்து அழிக்கும்  இயல்பினை உடையது என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன. மேலும் அத்தகைய அழிவினை அவன் மேலும் அந்நாட்டிற்குச் செய்யத் துணியும் கோபத்துடனே இருப்பான் என்றும் குறிப்பிடுகிறார். இரு அரசுகளுக்கு இடையிலான போரில் மக்களின் விளை நிலங்கள் அழிக்கப்படுவதும், அம்மக்களிடம் இருந்து பெற்ற பொருளைப் பரிசிலாகக் கொடுத்து பெருமை கொள்ளும் நிலையும் வருந்தத் தக்கதே. குடுமியின் புகழ் பாடப்பட்டபோதும் மறைமுகமாக அன்றைய அரசுகளின் செயல்பாட்டைச் சுட்டுவதாகவே இப்பாடல் அமைந்துள்ளது.

    புறநானூற்றின் 40ஆவது பாடல்,  பகை மன்னா்களின் நிலையை எடுத்தோதுகின்றது. மதிப்பிற்குரிய பொன்னாலான பகைவரின் மணிமுடியினை அவமதித்தல் போன்றும், அவா்களை அடிமைப்படுத்தல் போன்றும் அதைத் தம் காலில் அணிகின்ற தன்மையினை,

                “நீயே, பிறா்ஓம்புறு மறமன் எயில்

                ஓம்பாது கடந்தட்டு, அவா்

                முடி புனைந்த பசும்பொன் நின்

                அடிபொலியக் கழல் தைஇய வல்லாளனை”        (புறம். 40)

    எனக் காண முடிகிறது. இப்பாடலில் வெற்றி பெற்றோரின் வீரமும், பகையில்லாத அவன் நாட்டின் சிறப்பும் கூறப்பட்டதெனினும் தோற்ற அரசன் அடைந்த இழிநிலையினையும் இப்பாடல் பதிவு செய்துள்ளது. செவியறிவுறூஉ துறையில் அமைந்த எட்டு பாடல்களில் மூன்று பாடல்கள் மட்டுமே தோற்றோரின் நிலையைப் பேசுகின்றது.

    இயன்மொழி

    தலைவனுடைய இயல்பினைக் கூறுதலும், அவன் முன்னோர் செயல்களைப் பாராட்டிக் கூறலும்  இயன்மொழித் துறையின்பாற்படும். தமிழ் மன்னா்களிடம் போர் அறம் இருந்தது. அதன் வழிநின்றே போர் செய்தனா் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் வழி அறியலாம். நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழுமிடத்து தமிழா்களின் போர் அறத்தினைத் தெற்றென விளக்கிறார்.

                “ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும்”  ( புறம். 9)

    என்ற பாடலானது போருக்கான அறத்தைத் தமிழா் எங்ஙனம் போற்றினா் என்று விரித்துக் கூறுகின்றது. எனினும் போரின் பின் நிகழும் துயா்கள் எண்ணிலடங்காதவை என்பதை இயன்மொழித் துறையில் அமைந்துள்ள பாடல்கள் தெளிவாகச் சுட்டுகின்றன.

    தோற்ற அரசா்களின் காவல் மரத்தை முறித்து பகைவா்களை அவமதிக்கும் செய்தியினை,

                “கடுங் கண்ண கொல் களிற்றால்

                காப்பு உடைய எழு முருக்கிப்

                பொன் இயல் புனை தோட்டியால்”            ( புறம். 14)

    என்று கபிலா் குறிப்பிடுகிறார். செல்வக்கடுங்கோ வாழியாதன் பகை மன்னனின் வலிமையை அழித்தலின் குறியீடாகக் கணையமரத்தை அழித்தான் என்னும் செய்தி இங்குச் சுட்டப்படுவதுடன் பகையரசனின் நிலையும் எடுத்துரைக்கப்படுகிறது.

    முதுகுடுமி பெருவழுதி பகைவா் நாட்டினை அழித்துச் சிதைக்கும் காட்சியினைச் சுட்டவரும் நெட்டிமையார் பகை மன்னனின் நிலம் அடைந்த அவல நிலையை முன்வைக்கிறார். இதில் பகை மன்னா்களின் நிலமானது

                “கடுந்தோ் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

                வெள்வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

                பாழ் செய்தனை, அவா் நனந்தலை நல் எயில்,

                புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,

                வெள் உளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்

                ………………………………..

                நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,

                வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்?”          (புறம்.15)

    என அழிந்துபட்டதைக் கூறுகின்றார். இங்கு வென்ற பகையரசா்களின் நாட்டைக் கழுதைகள் பூட்டி உழுதலும், விளைவயல்களை அழித்தலும், நீர்த்துறைகளைக் கலக்குதலும், மக்கள் வாழும் இடங்களை எரியூட்டலும் செய்து பகையரசா்கள் அவமதிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதை இப்பாடல் புலப்படுத்துகின்றது. இதே கருத்தினைக் கடைநிலைத் துறையில் புறம் 392ஆவது பாடலும் முன்வைத்துள்ளது. பொகுட்டெழினி தான் போர்செய்யும் பகைநிலத்தை கழுதைகள் பூட்டி உழுதும், மதில்களை அழித்தும் போர்செய்தான் என்பதை ஔவையார் சுட்டியுள்ளார்.

    கிள்ளிவளவன் வலிமைமிக்க சேரனை அழித்த செய்தியினை கூறுமிடத்து நப்பசலையார் பகைவனின் பெருமையைத் தெளிவாக விளக்குகிறார். இங்கு பகைவன் மிக வலிமையுடையவன் என்பதை,

                “……………………..ஓங்கிய

                வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங்கோட்டு

                இமயம் சூட்டிய ஏம விற்பொறி

                மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய

                வாடா வஞ்சி வாட்டும் நின்

                பீடுகெழு நோன் தாள் பாடுங்காலே?”       (புறம். 39)

    என்று சேரனின் பெருமையினையும், இமயம் வரை சென்று தன் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் அவனைப் புகழ்கின்றார். அவனை வென்றான் வளவன் என்னும் சிறப்புப்பட, இப்பாடல் அமைந்ததாயினும் பகையரசனின் வலிமையும் இங்குச் சுட்டப்பட்டுள்ளது.

    பகைவா் நாட்டில் உள்ள மக்கள் தம் நாட்டைத் துறந்து செல்லும் அவலத்தைப் புறப்பாடல் பதிவு செய்துள்ளது. பொகுட்டெழினியைப் பகைக்கும் பகைவா் நாட்டில் உள்ள மக்கள், இனி இந்நாடு வாழுதற்கு உரிய இடம் அன்று என்று தம் இடத்தைத் துறந்து செல்வதை,

                “விழவின்று ஆயினும், படுபதம் பிழையாது

                மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறைநீா்க்

                கைமான் கொள்ளுமோ என

                உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே”         (புறம். 96)

    என்று குறிப்பிடுகிறது. இப்பாடலுக்கு “அவன் படையெடுத்துச் செல்லும் ஊரில் விழா இல்லையாயினும் உண்டாக்கப்படும் உணவுடன் தவறாது செம்மறியாட்டுத் தசைகளையும் சுற்றத்தார் தின்பா். அந்தச் சுற்றத்தார் யாவருடனும் ஆறு, குளம் முதலிய நீா்த்துறைகளில் படிந்து அவனுடைய யானைகள் நீருண்ணும் எனும் அச்சத்தால் அவ்வவ்வூரில் மக்கள் தங்குதலை வெறுத்தனா். இவ்வெறுப்பினால் ஒரு பகை நோ்ந்தது” என்று விளக்கம் அளித்துள்ளனா் உரைக்காரர்கள்.

    அதியமான் அஞ்சியைப் பகைத்த மன்னா்களின் நாடானது அழிந்துபடும் என்றும், அப்பகைவா்களுடன் போரிட்டதால் அதியனின் படைக்கலக் கருவிகள் தம் இயல்பினை இழந்தன என்றும் கூறுமுகத்தான் பகையரசா்களின் நிலையினைத் (புறம். 97) தெளிவுபடுத்துகிறார் ஔவையார். புறநானூறு 130ஆவது பாடலில் ஆய் அரசன் தம் படைகொண்டு கொங்கரை விரட்டினான் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. இங்கு கொங்கன் புறமுதுகிட்டு ஓடினமையும், அவனை அழிக்க ஆய் செய்த போரின் வலிமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புறமுதுகிட்டு ஓடும் மன்னனைத் தொடர்ந்து செல்லாத தன்மை, தமிழரிடம் இருந்ததைப் புறம் 389ஆவது பாடலும், தோற்ற அரசா்கள் வெற்றிபெற்ற அரசனுக்குத் திறை செலுத்தி வாழவேண்டிய நிலையில் இருப்பதனைப புறம் 156ஆவது பாடலும் விளக்குகின்றன.

    சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, வடுகரை அழித்து விரட்டிய செய்தியைப் புறம் 378ஆவது பாடல் பதிவு செய்துள்ளது. இதில் இளஞ்சேட் சென்னியின் வள்ளன்மையைப் புகழும் பொருட்டே இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இயன்மொழித் துறையில் அமைந்த பாடல்களில் 11 பாடல்களில் மட்டுமே தோற்றோர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அவற்றில் அரசனின் வெற்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் மிகுதியும் கூறப்பட்டுள்ளது. தோற்ற மன்னா்களின் நிலையை வெற்றி பெற்ற அரசா்களின் புகழின் பின்னணியிலேயே உணா்ந்துகொள்ள வேண்டிய நிலையும், சில இடங்களில் பகையரசனின் வலிமையும் விதந்தோதப்பட்டுள்ளது.

    விறலியாற்றுப்படை

    அரசனுடைய புகழைப் பாடும் விறலியை வழிப்படுத்துதல் விறலியாற்றுப்படை எனப்படும். தொல்காப்பியம் இதனை,

                கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

                ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

                பெற்ற பெருவளம் பெறாஅா்க்கு அறிவுறீஇச்

                சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”   (தொல். புறம். 88)

    என்று விளக்குகிறது.

    பகைவரின் பெருஞ் செல்வங்களைக் கொணா்தல்  என்பது போரின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது என்பதைச் சுட்டுவது போன்று புறம் 64ஆவது பாடல் அமைந்துள்ளது.  முதுகுடுமி போர்செய்யும் பகை நாடுகளில் வீரா்கள் இறந்து கிடக்கும் காட்சியானது விண்ணைத் தொடுமாறு அமைந்துள்ளது என்பதை,

                ”விசும்பு ஆடு எருவை பசுந்தடி தடுப்ப

                பகைப்புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்”    (புறம். 64)

    என்ற வரிகள் மூலம் உணா்த்துகின்றார் நெடும்பல்லியத்தனார். இங்கு வீரா்கள் இறந்து கிடந்தமை, கழுகுகள் செல்லும் பாதையை மறைத்தது என்றும், அந்நாட்டு மக்களின் செல்வத்தினைப் பெற்று தங்களுக்குப் பரிசில் வழங்கினான் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதன் வழி, தோற்ற நாட்டினரின் நிலை தெளிவாக உணா்த்தப்படுகிறது. மேலும் தோற்ற நாட்டினை எரியூட்டி அழித்தல் என்பது போர் மரபுகளில் ஒன்றாக இருந்தது என்பதை,

                “முனைசுட எழுந்த மங்குல் மாப் புகை

                மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்

                பகைப் புலத்தோனே பல்வேல் அஞ்சி”      ( புறம்.103)

    என்ற ஔவையாரின் பாடல், பதிவு செய்துள்ளது. ஒரு நாட்டினை வெற்றி கொள்வது என்பது வெறுமனே மனிதா்களுக்கு இடையேயான நிகழ்வாக அல்லாமல் இயற்கையை அழித்தல் என்னும் நிலையை அடைந்துள்ள அவலத்தை இப்பாடல் பதிவு செய்துள்ளது.

    வாள் மங்கலம்

    மன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுதல், வாள் மங்கலம் எனப்படும். இத்துறையில் புறம் 95ஆவது பாடல் அமைந்துள்ளது. தொண்டைமானிடம் அதியமானின் படைக்கலங்களைக் குறித்து பழித்துக் கூறி அவன் புகழை மறைமுகமாகப் புகழ்கிறார் ஔவையார். போரைத் தவிர்க்கும் முகமாக இப்பாடல் பாடப்பட்டதெனினும் இரு அரசுகளின் போர் உணா்ச்சியை மறைமுகமாக இப்பாடல் முன்வைத்துள்ளது.

    பரிசில் துறை

    அரசன் முன்னே பரிசிலா் தாம் பெறக் கருதிய பொருள் இதுவெனச் சொல்லுதல் பரிசில் துறையாகும். பகையரசனது யானையின் நெற்றிப் பட்டத்தில் இருக்கும் பொன்னைப் பாணா்களுக்கு அளித்தும், அதை அவா்கள் தலையில் பொலியும்படியும் செய்யும் வல்லமை வாய்ந்தவன் என்று பகையரசனின் நாட்டின் வளம் சூறையாடப்பட்டதை,

                “ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு

                பாணா் சென்னி பொலியத் தைஇ”             (புறம்.126)

    என்று புறம் 126ஆவது பாடல் முன்வைக்கிறது.

    பரிசில் விடை

    பரிசில் பெற்று விடை பெறுவான் பாடுவது, பரிசில் விடை எனப்படும். பெருந்தலைச் சாத்தனார், குமணனைக் குறித்துப் பாடிய பாடல், தோற்ற அரசனின் புகழைப் பாடுவதாக அமைந்துள்ளது. குமணன் நாடு இழந்தனன் ஆயினும் ஈகை இழந்தான் இல்லை என்றுபட புறம் 165ஆவது பாடல் இடம்பெற்றுள்ளது.

                ”பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயா்தல் என்

                நாடு இழந்ததனினும் நனி இன்னாது என

                வாள் தந்தனனே தலை எனக்கு ஈய”          (புறம். 165)

    என்று தோற்ற குமணனை இப்பாடல் புகழ்ந்து பாடுகிறது.

    வாழ்த்தியல்

    பாட்டுடைத் தலைவனின் சிறப்பைப் புகழ்ந்து வாழ்த்துரைத்தல், இத்துறையின்பாற்படும். செல்வக்கடுங்கோ வாழியாதனின் பரிசில் வழங்கும் பண்பை வாழ்த்தும் முகமாக அமைந்த புறம் 387ஆவது பாடலில் பகையரசா்களின் வீரம் வெளிப்பட்டு நிற்கின்றது. பகை மன்னா்களின் மதில்களானது யாரும் உடைத்தலைச் செய்ய முடியாத அளவு வலிமையுடையது என்றும், அவ்வேந்தா்களின் காவற்காட்டில் இருக்கும் யானைகள் மிக்க வலிமையுடையவை என்றும் கூறி, அதனை அழித்தவன் வாழியாதன் என்று புகழ்கிறார் குண்டுகட் காலியாதன்.

    தோல்வி குறித்த பதிவுகள்

    சங்க இலக்கியத்தில் அரசா்கள், வேந்தர்கள், குறுநில மன்னா்கள், நிலக்கிழார்கள், வள்ளல்கள் போன்றோரின் தோல்விகள் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பதிவுகளின் வாயிலாகப் பகையரசா்களின் அல்லது தோற்றோரின் வலிமையை, போர்த்திறனை உணா்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் இத்தகைய பதிவுகள் பெரும்பான்மையும் வெற்றி பெற்றோரின் வீரத்தினையும் கொடைச் சிறப்பினையும் வள்ளன்மையினையும் வெளிக்கொணரும் வண்ணமே அமைந்துள்ளன. புறநானூற்றில் பாடாண் திணையில் 120 பாடல்கள் இடம் பெற்றிருப்பினும் தோற்றோர் நிலையை 20 பாடல்கள் மட்டுமே முன்வைத்துள்ளன.

    மிகச் சில அரசா்கள் மற்றும் வள்ளல்கள் போன்றோரின் தோல்வியும் விதந்தோதப்பட்டுள்ளன. அவை அவ்வரசா்களின் கொடைத் திறனைக் கூறும் பொருட்டும், அவா்களின் பண்பினை உயா்த்திக் கூறுதற் பொருட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, தோல்வியும் வெற்றியின் தன்மையில் வைத்து எண்ணப்படுகின்ற நிலையினைக் காண முடிவதுடன், தோற்றோரின் வீரச் சிறப்பினை விதந்து கூறுகின்ற பண்பையும் கவனத்திற் கொள்ளுதற்கு உரியது. இதன் சமூக, அரசியல் பின்னணியினை ஆழ்ந்து நோக்கும் போதுதான் இத்தகைய பதிவிற்கான தேவையினை உணர முடியும்.

    பார்வை நூல்கள்

    1. புறநானூறு, முதற்பதிப்பு -2004, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
    2. தொல்காப்பியம், பதிப்பு -1984, கழக வெளியீடு, சென்னை.
    3. செ.வை.சண்முகம், தொல்காப்பியத் தொடரியல், முதற்பதிப்பு-2004, உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
    4. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, பதிப்பு-2012, அமுதா நிலையம், சென்னை.

    குறிப்பு

    புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன.

    செவியறிவுறூஉத் துறையில்  – 8 (2,3, 5,6,35,40,55,184)

    இயன்மொழித்துறையில் – 54(8,9,10,12,14,15,30,32,34,38,39,50,67,92,96, 97,102, 105,106,107,108,122,123,124,128,129,130,131,132,134,137,142,149,150,151153,157,171,172,173,175,176,177,215, 376, 378, 380, 381,383, 388, 389, 390, 400)

    வாழ்த்தியல் துறையில் – 9 (13,19,158-பரிசில் கடாஅ நிலை, 367,375,377,385,386,387)

    பரிசில் கடாஅத் துறையில் -15(11,101,136,139,159,160,164,169,196,197,198, 199,266)

     கடைநிலைத் துறையில் – 10 (127,382,391,392, 393,394,395,396,397,398)

     பரிசில் துறையில் – 8 (126,135,148,154, 161, 168-அரசவாகை,200,379)

    பாணாற்றுப்படைத் துறையில் – 6 (68,69,70,138,141,158)

     பரிசில் விடைத் துறையில் – 6 (140,152,162,163,165,399)

    விறலியாற்றுப்படைத் துறையில் – 4 (64,103, 105,133)

    பூவைநிலைத் துறையில்  -3 (56,59,374)

    புலவராற்றுப்படைத் துறையில்  – 2 (48,49)

    உடனிலைத் துறையில்  -1 (58),

    குடைமங்கலம் துறையில் – (60),

    வாயில்மங்கலம் துறையில் – (95)

    மொத்தம்  -14 துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சங்க இலக்கியங்களில் புறம் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் புறநானூறு, குறிப்பிடத்தக்க ஒரு நூல். அதில் பெரும்பான்மையும், வெற்றி பெற்ற மன்னர்களின் வீரம், புகழ், கொடை சார்ந்தும் சிறுபான்மை சமூகப் பொது நிலைகள் சார்ந்தும் பாடப்பட்டுள்ளமை நாம் அறிந்த ஒன்றே. அதில் பொதுவாக வெற்றி பெற்ற மன்னர்களின் சிறப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி வரலாற்றுப் பின்புலத்தை அறிதல் என்பது பெரும்பான்மை ஆய்வு நடைமுறையில் இயல்பாக உள்ளது. ஆனால் இக்கட்டுரையை ஆய்வாளர் சற்று மாறுபட்ட கோணத்தில் ஆராய்ந்து தன் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வெற்றி பெற்ற மன்னர்கள் பற்றிப் பேசும் பாடாண் திணைப் பாடல்களில் தோற்ற அரசர்களின் நிலைகளை உற்றுநோக்கிச் சில அடிப்படையான செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

    குறிப்பாக, போர் இரு மன்னர்களுக்கு இடையே மட்டும் நடைபெறுவதில்லை. இரு நாட்டு மக்கள், இயற்கை ஆகியவற்றோடு நடைபெறுவது. அதனால் இயற்கைச் சீரழிவு, மக்கள் கொல்லப்படுதல் என்ற கோணத்தில் தனது சிந்தனையைச் செலுத்தியுள்ளார். தோற்ற மன்னர்களின் நிலைப்பாடுகள் பற்றியும் பேசியுள்ளார். அதே போல் பாடாண் திணையின் துறைகளின் அடிப்படையில் இச்செய்திகளை விளக்கியமை சிறப்பு. மேலும் தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பா மாலையில் இடம்பெற்றுள்ள பாடாண் திணையின் செய்திகளைக் கட்டுரையில்  பயின்று வந்துள்ள துறைகளில் பதிவு செய்திருப்பின் கட்டுரை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

    =======================================================

    Share
  • நலம்… நலமறிய ஆவல் – 144

    -நிர்மலா ராகவன்

    நேர்மைக்கும் உண்டு எல்லை

    `உங்களுக்குப் பிறகு உங்கள் குழந்தைகளுக்கு என்ன விட்டுப் போகப் போகிறீர்கள்?’

    `வங்கியில் கோடிக்கணக்கான பணம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பங்களாக்கள், இன்னும்..!’ பெருமை பேசுகிறார்.

    நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. நேர்மை, உண்மை போன்ற குணங்களையும் இவர் தன் பிள்ளைகளுக்கு அளித்திருப்பாரா?

    தந்தை நம் அறியாத்தனத்தைக் கண்டு சிரிக்கிறார். `நேர்மையாக இருந்தால் இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா?’

    அவரே மாட்டிக்கொண்டு, `எப்போது சிறைச்சாலையில் குற்றவாளிகளோடு குற்றவாளியாகத் என்னைத் தள்ளிவிடுவார்களோ!’ என்று அஞ்சும்போதும், `வேண்டாதவர்கள் என்மேல் பழி சுமத்துகிறார்கள்!’ என்றெல்லாம் (பொய்யென்று தெரிந்தே) வாதாடுகிறார்.

    நேர்மையின் பலன்

    நேர்மை என்பது கபடமற்ற தன்மையையும், உண்மையை வெளிப்படையாகப் பேசுவதையும் குறிக்கிறது. உண்மை பேசிவந்தால், எப்போது என்ன சொன்னோம் என்று ஞாபகம் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய தொல்லை கிடையாது. எதையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லாததால் ஒருவிதச் சுதந்திர உணர்வு உண்டாகும்.

    தம் குறைநிறைகளுடன் தம்மையே ஏற்க, நேர்மையானவர்கள் பிறரால் பாதிக்கப்படுவதில்லை. `இவரை நம்பலாம்!’ என்ற நம்பிக்கை எழுவதால் தரமான நண்பர்கள் வாய்ப்பார்கள். இவர்கள் எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. பிறர்தான் பயப்படுவார்கள் — தமது பொய்யான வாழ்க்கையைக் கேலி செய்கிறார்களோ என்று.

    இருப்பினும், சிலர் பிறரது மதிப்பைப் பெற பலரும் கொஞ்சமாவது பொய்யுரைக்கிறார்கள்.

    கதை

    மலேசியக் கல்வி திட்டப்படி, எட்டாவது படிவ அரசாங்கப் பரீட்சையில் மொத்தம் எட்டு பாடங்கள் இருந்தன.

    முடிவு வந்ததும், என் சக ஆசிரியை மிஸஸ் ஃபூங் (Foong), தன் மகள் ஜென்னி ஏழு பாடங்களில் மிகச் சிறப்பான `ஏ’ வாங்கியிருப்பதாகப் பெருமையுடன் அறிவித்தாள். அவள் மறந்தது: அதே பள்ளியில் என் மகளும் அப்பெண்ணுடன் இணைந்து படித்தாள் என்பது.

    குட்டு வெளிப்பட்டது.

    மிஸஸ் ஃபூங் இல்லாதபோது, எல்லாரும் சிரித்தார்கள். ஒருத்தி, “போனால் போகிறாள்! அவள் ஒரு அம்மா! நமக்குப் புரியாதா!’ என்றாள் கேலியுடன்.

    எவரும் அவளிடம் மேற்கொண்டு எதையும் விசாரிக்கவில்லை. அதன்பின், அவள் எது சொன்னாலும் நம்பத் தயாராகவும் இல்லை. அப்போது அடைந்த அவமானத்தில், `நீ ஏன் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறவில்லை?’ என்று ஜென்னியை வாட்டி வருத்தியிருப்பாளோ? எதனாலோ, அப்பெண்ணின் மனநிலை குன்றி, பதினாறாவது வயதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

    அவளுடைய கவுன்சிலர் மிஸஸ் ஹோ (Ho), “பெற்றோரது கடுமையான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாது, அந்த `வார்டு’ பூராவும் சீனப் பெண்கள்தாம்!” என்றாள் கசப்புடன். “இந்தப் பெண்ணோ, வாயே திறக்கமாட்டேன் என்கிறாள்!”

    என் மகள் தன் சிநேகிதியைப் பற்றி உத்தேசமாகக் கூறியது: “ஜென்னி நல்ல பெண். மிக நேர்மையானவள். இப்படிப்பட்ட கீழ்த்தரமான அம்மா இருந்தாலே பிரச்னைதான்!”

    ஆனால், சில சமயங்களில், நேர்மைகூட தண்டனைபோல் ஆகிவிடுகிறது.

    கதை

    பயிற்சியாளராக ஒரு நிறுவனத்தில் சேர்ந்திருந்தான் கந்தன். கணக்காய்வாளராக சில பரீட்சைகளே பாக்கியிருந்தன. அங்குப் பொய்க்கணக்கு எழுதத் தூண்டியபோது, மனம் பொறுக்காமல் வேலையை விட்டான். படிப்பும் பாதியில் நின்றது. `இந்தத் துறையே வேண்டாம்!’ என்று முடிவெடுத்தான். வேறு வேலையும் கிடைக்காத நிலையில், மாமியார் வீட்டு மருமகனாக, மதிப்பு குன்றி இருக்க நேரிட்டது.

    அவனுடைய நிலைமைக்கு பரிதாபப்பட்டு, ஒரு முதியவர் தன் கம்பெனியில் வேலை போட்டுக் கொடுத்தார். முதலில் ஒழுங்காக இருந்தவன், `நேர்மையாக இருந்து என்ன கண்டோம்!’ என்று தோன்றிப் போக, நன்றி மறந்து, அவ்விடத்திலேயே திருட ஆரம்பித்தான். கிடைத்த ஒரு வேலையும் போயிற்று.

    எல்லா கார்களும் தெருவில் தவறான வழியில் செல்லும்போது, ஒருவன் மட்டும், `சரியான வழியில்தான் போவேன்!’ என்றால் என்ன ஆகும்? கந்தனைப் போன்ற சிலர், நேர் எதிரான பாதைக்கு மாறுகிறார்கள். வேறு சிலர் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவதும் உண்டு.

    எப்போது பொய் சொல்லலாம்?

    குழந்தைகளிடம் பொய் சொல்லாத தாய்மார்கள் இருவரை மட்டும்தான் நான் சந்தித்திருக்கிறேன். இருவருக்குமே திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து அருமையாகப் பிறந்த குழந்தை.

    பிற தாய்மார்கள், எந்த சந்தர்ப்பத்தில் பொய்யுரைப்பார்கள்?

    `சீக்கிரம் சாப்பிடு. காக்கா கொத்திண்டு போயிடும்!’

    `நானும் அப்பாவும் டாக்டரைப் பாக்கப் போறோம்!’ நன்கு அலங்கரித்துக்கொண்டு திரைப்படத்திற்குப் புறப்படும் தாய், இளம்பிள்ளையிடம் கூறுகிறாள். ஓரிரு முறை அழைத்துப் போயிருப்பார்கள். அங்கு அவனைச் சமாளிக்க முடியாது போக, வேறு வழி தெரியவில்லை.

    மற்றபடி, நம்மிடம் அபயம் நாடி வந்த ஒருவரைக் காப்பற்றப் பொய் சொல்லலாம். அல்லது, நமக்கு உற்ற நண்பர் ஒருவரைக் காட்டிக் கொடுக்காது இருப்பதற்காக.

    கதை 1

    பதின்ம வயது மாணவர்களின் கை, சும்மா இருக்காது. வகுப்பிலிருக்கும் மேசைமேல் பேனாவினாலோ, ஏதாவது கூரான சாமானாலோ கிறுக்குவார்கள். அதில் கெட்ட வார்த்தைகளே மிகுந்திருக்கும்.

    அப்படி ஒரு முறை நடந்தபோது, நான் அருகிலிருந்த முஸ்தபாவிடம், “யார் கன்னா பின்னாவென்று எழுதியது?” என்று மிரட்டலாகக் கேட்க, “எனக்குத் தெரியாது, டீச்சர்!” என்றான் மெல்லிய குரலில். அவன் முகத்தில் சிறு வேதனை – பொய் சொல்கிறோமே என்று. அவன் முகத்திலிருந்த நேர்மையைக் கண்டு, நான்தான் அவனை மாணவத் தலைவனாகத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

    முஸ்தபாவின்மேல் எனக்கிருந்த மதிப்பு அதிகரித்தது. நண்பனை ஆசிரியையின் கோபத்திலிருந்து காப்பாற்ற, இவன் உண்மையை மறைக்கிறான்!

    அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில், அந்தப் பையன் பள்ளியில் பல பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பள்ளிப் படிப்பு முடிந்ததும், ஒரு கௌரவமான வேலையில் அமர்ந்தான்.

    கதை 2

    ரத்னாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின், திடீரென நின்று போயிற்று – பல முறை. அவள் வீட்டார் காரணத்தைக் கேட்டபோது, ஒரு மொட்டைக் கடிதம் அவர்களிடம் காட்டப்பட்டது. பெண்ணின் சித்தியின் கையெழுத்தில் இருந்ததன் வாசகம்: `இப்பெண் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டவள்!’

    அடுத்த முறை, தாங்களே வலிய மாப்பிள்ளை வீட்டாரிடம் உண்மையைத் தெரிவிக்க, கல்யாணம் நல்லபடியாக நடந்தேறியது. சித்திக்கு அழைப்பில்லை.

    `அநியாயமாக ஒருவரை ஏமாற்றலாமா? அதனால்தான் நடந்த உண்மையை எல்லாருக்கும் தெரிவித்தேன்!’ அரிச்சந்திரனின் வாரிசாகத் தன்னைப் பாவித்துக்கொண்ட சித்தி.

    யார் செய்தது சரி? செய்த தவற்றை ஒத்துக்கொண்ட ரத்னாவும் அவள் பெற்றோருமா, சித்தியா?

    Share
  • தமிழ்த் தொழுகை

    -விவேக்பாரதி

    தொழுதால்நான் தமிழ்த்தாயைத் தொழவேண்டும்! – புதுத்
    தோரணமாய் அவள்புகழை நடவேண்டும் – இனி
    அழுதாலும் தமிழில்தான் அழவேண்டும் – அந்த
    ஆனந்தம் போல்மண்ணில் எதுவேண்டும்? – வந்து
    முழுதாக எனைவார்த்த செந்தமிழே – நாவை
    முத்துரத மாக்கிவைத்த முத்தமிழே – உன்னை
    மொழியாகக் கொண்டதலால் இச்சிறுவன் – எந்த
    முக்தியையும் பெற்றதில்லை வான்தமிழே!

    பாரதியின் பாட்டுவழி உள்வந்தாய் – அந்தப்
    பாட்டமுதம் வழியென்னுள் கள்தந்தாய் – ஒரு
    காரணமில் லாமலுயர் பொன்தந்தாய் – ஆ
    ககனத்தைக் கைசேர்க்கும் கவிதந்தாய் – உனைச்
    சாரதியாய் நான்கொண்ட தேதிமுதல் – உமை
    சன்னிதிக்கு மட்டுந்தான் கால்பயணம் – மீதி
    நேரமெல்லாம் நீயோட்டும் வெள்ளிரதம் – இது
    நேர்ந்துவிட நான்செய்த தென்னதவம்?

    தொட்டாலே பொன்னாக்கும் வித்தையினை – எனைத்
    தொடாமலே தந்தபுதுச் சித்திரமே – விழி
    பட்டாலே பாடுகின்ற பாவலனாய் – உயர்
    பாதைமாற்றி விட்டதொரு பெட்டகமே – இனி
    கெட்டாலும் கவலையிலை நீகாப்பாய் – நான்
    கேட்டதெலாம் உமைகொடுக்கக் கவிசேர்ப்பாய் – நீ
    சுட்டாலும் சுகம்சேர்க்கும் காலைவெயில் – உன்
    சுருதிக்கு நானாடும் காட்டுமயில்!!

    27.01.2019

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 4

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

    குறள் 31:

    சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு!

    நாலு பேர் முன்னால நம்மள ஒசத்திய காட்டி நமக்கு சீரையும் சிறப்பையும் கொடுக்குத அறத்த விட ஆக்கமான பாத வேற ஏதும் இருக்கா என்ன?

    குறள் 32:

    அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு

    அறம் செய்யுதத போல நல்லது வேற எதுவும் இல்ல. அத செய்ய ஓர்ம கெட்டு அலையுதத (மறப்பதப்) போல தீங்கும் வேற இல்ல.

    குறள் 33:

    ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்

    முடிஞ்ச மட்டும் சொணங்காம எல்லா இடத்திலயும் நல்லதையே (அறச்செயலயே) செய்யணும்.

    குறள் 34:

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற.

    மனச சுத்தபத்தமா வச்சிக்கிடணும். அறம் னு சொல்லுதது அம்புட்டுதான். அத உட்டுபோட்டு பேசுத பசப்பு வார்த்த நடிப்பு எல்லாம் வெறும் வெத்துவேட்டு ஆரவாரந்தான்.

    குறள் 35:

    அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்

    மத்தவங்கள பாத்து பொறாமல புழுங்குதது, அஞ்சு புலனால வெளையற ஆசை, ஆசைக்கு தட சொல்லுதபோது வர கோவம், கோவத்துல சொல்லுத கெட்ட வார்த்த இந்த நாலயும் நீக்கிட்டு தொடர்ச்சியா செய்யுத செயலத்தான் நல்ல செயல் (அறம்னு) சொல்லுவாங்க.

    குறள் 36:

    அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை

    சின்ன வயசில பொறவு பாத்துக்கிடலாம் னு தள்ளிப்போடாம நல்ல விசயங்கள (அறம்) செய்யணும். அப்பந்தான் அது நாம செத்த பிறவு கூட நமக்கு தொணையா நிக்கும்.

    குறள் 37:

    அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோ டூர்ந்தான் இடை

    அற வழில நடக்கவனுக்கு துக்கம் சொகம் ரெண்டும் ஒண்ணு போலத்தோணும். பல்லக்குக்கு உள்ள ஒக்காந்து அலுங்காம போகுதது மாதிரி. கெட்ட செயல செய்தவன் பல்லக்கு தூக்கிட்டுப் போவுதவன மாதிரி சொகத்தயும் அறியமுடியாம துக்கத்தையும் தாள மாட்டாம அவதிப்படுவான்.

    குறள் 38:

    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்

    தெனக்கும் தவறாம நல்லது (அறம்) செய்யுதவனுக்கு அது அவன் மறு பிறப்பு எடுக்குத வழிய அடைக்குத கல்லா நின்னு துணை நிக்கும்.

    குறள் 39:

    அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
    புறத்த புகழும் இல

    நல்லத செஞ்சவனுக்கு கெடைக்குததே இன்பம். மத்த வழில வருதது எல்லாம் புகழ்ச்சி ஆவாது.

    குறள் 40:

    செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி

    ஒருத்தன் புகழடயணும் னு நெனைச்சாம்னா அவன் பழி பாவம் செய்யாம நல்ல செயல (அறத்தை) மட்டுந்தான் செய்யணும்

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • உயிர்மண்

    -மு.செல்லமுத்து

    அன்றைய அறுவடைநாளின்
    மாலைப்பொழுதில்
    சிதறவிட்ட நெற்கதிர்களை
    வயல்வெளியிலிருந்து
    சேகரித்து வந்திருந்தேன்
    ஒரு புண்சிரிப்போடு பற்றிக்கொண்டவள்
    கைகளால் உதிர்த்து
    சொளகிலிட்டு தூசிதட்டினாள்.

    என்னுடன் பிறந்தவன் ருசித்துவிட்டு
    அவ்வப்போது வீசியெறிந்த
    புளியம் விதையொன்று
    என்வீட்டின் சந்தடியில் முளைத்திருந்தது
    புடைத்தெடுத்த நெல்மணியை
    அடுக்குப்பானையில் கொட்டியவாறே
    ‘கம்மாத்தண்ணீ வத்துவதற்குள்
    தெக்கவுள்ள நம்மகாட்டுக் கரையில
    கொண்டுபோய் நடுயென்றாள் அம்மா’

    பத்திரமாகப் பெயர்த்தெடுத்து
    பனையோலைப் பெட்டியில்
    உயிர்மண்ணை கொண்டுசேர்த்தேன்
    வாழ்வதில் அலுத்துப்போனவனைப்போல்
    ஓரிருநாட்கள் அந்தக்கரையில்
    கதியற்று நின்றாலும்
    அதனுயர்வை விரும்பாதவர்களிடமிருந்தும்
    வான்தந்த வறட்சியைத் தாங்கியும்
    எப்படியோ திமிறியெழுந்து
    எண்ணி ஏழாண்டிற்குள் எனக்கும்
    என்காட்டுப் பறவைகளுக்கும்
    அவ்வப்போது தங்குமிடமானது.

    உழைத்தவர் எவரேனும்
    அங்கு சென்றிருக்கக் கூடும்
    களைத்ததால் சற்று
    கண்ணயரக் கருதியோ,
    பறித்துக்கொணர்ந்த
    விளைபொருள்கள் எதையேனும்
    உலர்த்தியெடுக்க எண்ணியோ,
    கள்ளமில்லா மழழைகள்
    தூலிகட்டி அதன் மடியில் துள்ளவோ
    காதலிக்கத் தெரிந்த எவரும்
    கனவின் யாசகனாய்
    வாசிப்பதற்கு புத்தகங்களோடு
    அங்கு வந்திருக்கக்கூடும்.

    விழித்திருக்கும் போது
    எந்தச் சூறாவளிக்கும் அசைந்துகொடுக்கும்
    பெருமழைக்கும் அப்படித்தான்
    இருந்தாலும்
    அது மௌனித்திருக்கும் வேளையில்
    அவர்கள் வந்துவிட்டார்கள்
    அதன் உடலெங்கும் துண்டுபட்டு
    என்னுயிரும் வெற்றிடமானது
    பசுமை வழித்திட்டமாம்
    கலங்கிய விழிகளோடு
    நான் அங்கு வந்திருந்தேன்
    கையில் இன்னொரு
    உயிர்மண்ணை சுமந்தவாறு…

    கவிஞரைப் பற்றி…

    மு.செல்லமுத்து
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழியற்புலம், தமிழியல்துறை,
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
    மதுரை – 21
    மின்னஞ்சல் : cmchellamuthu.muthu83@gmail.com

    Share
  • அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்

    -மறவன்புலவு க. சச்சிதானந்தன்

     இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைமை இடமாகக் கொண்டு அமைந்த சைவத்தமிழ் அரசானது 400 ஆண்டுகளாகச் சங்கிலித் தொடர்ச்சியாக அமைந்த அரசு.தென்மேற்கே ‘வாய்க்கால் ஆறு’ அதன் எல்லை.தென்கிழக்கே ‘கொம்புக்கல் ஆறு’ அதன் எல்லை. சில காலங்களில் ‘மாணிக்கக் கங்கை’ வரை அதன் எல்லை விரிந்து இருந்ததாம்.

    அந்த 400 ஆண்டுகளில் தமிழீழ அரசின் ஆட்சியில் சைவ சமயமும் தமிழ் மொழியும் மட்டுமே பண்பாட்டு நெறிகள்.புத்த சமயமும் சிங்கள மொழியும் தெற்கே கண்டியைத் தலைநகராகக் கொண்ட ஆட்சியாலும் தென்மேற்கே கோட்டையை தலைநகராக கொண்ட ஆட்சியாலும் சமகாலத்தில் விளங்கின.மேலை நாட்டு மொழிகள், சமயங்கள் மற்றும் அரபு நாட்டு மொழிகள், சமயங்கள், அக்காலங்களில் இலங்கையில் இல்லை. நல்லூரைத் தலைநகராகக் கொண்ட சைவத்தமிழ் அரசு 400 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ந்தது.

    கலியுகம் 4720 சகாப்தம் 1541 திருவள்ளுவராண்டு 1650
    விபவ ஆண்டு 27 வைகாசி புதன்கிழமை (05.06.1619) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்தது. வீழ்த்தியவர்கள் மேலைநாட்டுப் போர்த்துக்கேயர்.

    1617இல் கோவாவில் தமிழீழ அரசை வீழ்த்துமாறு

    போர்த்துக்கேய ஆளுநர் ஆணையிட்டார். போர்த்துக்கேயர் திறை கொடுக்குமாறு ஆணைகளை அனுப்பினர்.ஆனால், அக்காலத் தமிழீழ அரசன் சங்கிலியன், அதனை நிறைவேற்ற மறுத்தான்.

    மன்னரின் பேசாலையில் போர்த்துக்கேய யேசூற்றப் பாதிரிமார்களால் வாள்முனையிலோ சோற்றுக்காகவோகத் தோலிக்கராக மதம் மாறிய தனது குடிமக்களைச் சங்கிலியன் அழித்தான்.

    போர்த்துக்கேயரின் படையெடுப்புகளைச் சந்திக்கத் தமிழகப் பழவேற்காட்டில் முகாமிட்டிருந்த ஒல்லாந்தர்களையும் தஞ்சை நாயக்கர் படைகளையும் மலையாளக் குஞ்சலி வீரர்களின் கடற்படையையும் துணைக்கு அழைத்தான். கண்டி அரசுக்கும் செய்தி அனுப்பினான்.

    1619 பங்குனியில் பிலிப்பு  டி ஒலிவேரா தலைமையில் தெற்கே கொழும்பிலிருந்து நூறு போர்த்துக்கேய வீரரும் சில ஆயிரம் சிங்களக் கூலிப்படைகளும் இணைந்த படை ஒன்று வடக்கு நோக்கிக் கிளம்பியது

    தமிழகம், நாகப்பட்டினத்திலிருந்து போர்த்துக்கேயக் கடற்படை கப்பல்கள் யாழ்ப்பாணம் நோக்கிக் கிளம்பின.1619 சித்திரையில் பூநகரி வந்த போத்துக்கேயப் படைகள் கேரதீவுக் கடலைக் கடக்க மீனவர்களைப் பயன்படுத்தினர்.1619 சித்திரைக் கடைசியில் குடாநாட்டுக்குள் போத்துக்கேயப் படைகள் நுழைந்தன.

    கலியுகம் 4720, சகாப்தம் 1541, திருவள்ளுவராண்டு 1650, விபவ ஆண்டு, வைகாசி 27ஆம் நாள், புதன்கிழமைபூரட்டாதி நாளில் (05.06.1619) வண்ணார்பண்ணையில் நடந்த பெரும் போரில் சங்கிலியன் படை தோற்றது. சைவத் தமிழ்ப் படை தோற்றது.பிலிப்பு டி ஒலிவேராவின் கத்தோலிக்கப் போர்த்துக்கேயப் படை வென்றது.

    நல்லூரைத் தலைமையகமாகக் கொண்ட தமிழீழ அரசு வீழ்ந்தது.சைவத் தமிழ் அரசன் சங்கிலியனும் பல்லாயிரம் சைவத் தமிழ்ப் படை வீரரும் கத்தோலிக்கப் போர்த்துகேயப் படையிடம் தோற்று மாவீரராகிய நாள், அந்த நாள்.

    அந்த நாளின் 400ஆவது ஆண்டு நிறைவு நாள், அதே திதி, இந்த ஆண்டு கலியுகம் 5120, சகாப்தம் 1941,திருவள்ளுவராண்டு 2050, விகாரி ஆண்டு, வைகாசி 13, திங்கள்கிழமை, தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி, சதயநாளன்று (27.05.2019) வருகிறது.அந்நாள் இலங்கையின் வரலாற்று நாள். சைவத் தமிழரின் இதயத் துடிப்பு நாள்.மன்னன் சங்கிலியனையும் அவனோடு உயிர்துறந்த தமிழர் படையினரையும் நினைவுகொள்ளும் நாள். 400ஆவது ஆண்டு நினைவு நாள்.

    “கீரிமலையில் திரள்வோம், பாலியாற்றில் திரள்வோம். பாலாவியில் திரள்வோம், மோதரகம் ஆற்றில் திரள்வோம். நந்திக் கடலில் திரள்வோம், கொட்டியாற்றில் திரள்வோம். கல்லடியில் திரள்வோம், கொம்புக்கல் ஆற்றில் திரள்வோம். வாய்க்கால் ஆற்றில் திரள்வோம்,சங்கிலிய மன்னனுக்கும் படைவீரர்களுக்கும் நீத்தார் கடன் ஆற்றுவோம்.”

    இந்த ஆனி தொடக்கம் அடுத்த ஆனி வரை ஓராண்டு காலத்துக்குச் சங்கிலியன் 400வது ஆண்டு நினைவு நிகழ்வுகளை இலங்கை முழுவதும் நடத்துவோம். புலம்பெயர் தமிழர்களிடையே நடத்துவோம்.ஊர்கள் தோறும் சங்கிலியன் சிலைகள் நிறுவுவோம்.வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் சங்கிலியன் வரலாறு என்ற தலைப்பில் ஒரு பகுதி சேர்ப்போம்.

    சங்கிலியன் நாடகம் ஓரங்க நாடகமாக நாடகக் குழுகளிகளிடையே போட்டி நடத்துவோம்.சங்கிலியின் கதையில் ஏதாவது ஒரு பகுதியைப் பரதநாட்டியமாக அமைக்கும் போட்டி நடத்துவோம்.சங்கிலியன் வரலாற்றைத் தமிழிசைப் பாடல்களாக்கி இசைக்கும் போட்டி நடத்துவோம்.சங்கிலியன் வரலாறு தொடர்பாக மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி எனப் போட்டிகள் நடத்துவோம்.

    வைகாசித் தேய்பிறை எட்டாம் நாள் மன்னன் சங்கிலியன் மற்றும் தமிழ் படை வீரருக்கு நினைவு நாள்.ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்.

    Share
  • கவிஞர் சுரேஷ்மணி கவிதைகள்

    -கவிஞர் சுரேஷ்மணி

    1.

    படித்து முடித்துவிட்டேன்
    வேலை கிடைத்துவிடும்
    வேலை கிடைத்துவிடும்
    என்றது மனது
    கிடைத்தது
    தன்மானத்தையும்
    சுயமரியாதையையும் இழந்த
    ஆட்டுவித்தால்
    ஆடவைக்கும்
    மரப்பாவை வேலை….

    2.

    குடும்பத்தைக் கடந்த
    பணியின் சுமை
    நாட்காட்டியின் வேகத்திற்கு
    ஈடுகொடுக்க முடியாத
    வாழ்க்கையில்
    உயிர்
    இலை உதிர்வதைப் போல்
    உதிர்கின்றது.
    தினம் தினம்..

    3.

    கற்களின் இடுக்குகளில்
    விழுந்த விதையொன்று
    வீரியத்துடன்
    வளர்ந்து
    கற்களை வென்றது.

    4.

    முதலாளித்துவத்தின் பிடியில்
    படித்த பாமரர்
    நாங்கள்
    எதிர்த்துக்கேட்காமல்
    மௌனம் காக்கும்
    இக்காலத்து
    மார்க்சும் லெனினும்

    Share
  • படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    மைக்கேல் கோகென் என்பவர் ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர். இவர் இவ்வளவு நாட்களாக ட்ரம்ப் செய்த சில தவறுகளை மூடிமறைத்து வந்தார். இப்போது வேறு வழியில்லாமல் தான் அமெரிக்கப் பாராளுமன்ற கமிட்டியின் முன்னால் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். இதற்கு அவருக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் இம்மாதிரிக் குற்றங்கள் எல்லாம் – அதுவும் மேல் மட்டத்தில் நடந்தால் – கண்டுகொள்ளப்படாமலே போய்விடும். என்ன இருந்தாலும் கோகெனும் ட்ரம்பும் அமெரிக்காவில் இருப்பவர்கள் அல்லவா? அமெரிக்கா இன்னும் இந்தியா அளவுக்குத் தாழ்ந்து போகவில்லை.

    இம்மாதிரிக் குற்றங்களைப் படித்தவர்கள் செய்யும் குற்றங்கள் (white collar crimes) என்று அழைக்கிறார்கள். இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோர்களை – அவர்கள் மேல்மட்டத்தவர் என்றாலும் – அமெரிக்கா தண்டிக்காமல் விடுவதில்லை. இருப்பினும் அவர்கள் எந்த மாதிரி சிறைச்சாலைக்குப் போக விரும்புகிறார்கள் என்ற சலுகையை அமெரிக்கா அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

    கோகென் நியூயார்க் அருகிலுள்ள ஆடிஸ்வில் என்னும் ஊரிலுள்ள ஒரு சிறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை ஒரு சிறை என்றுகூட சொல்ல முடியாது. ஒரு முகாமுக்குரிய எல்லா வசதிகளும் இங்கு உண்டு. கோகென் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த முகாம் இம்மாதிரியான மற்ற முகாம்களைவிட வசதிகள் குறைந்ததுதான். இருப்பினும் கோகென் இதைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு முக்கிய காரணம் இங்கு யூதக் குற்றவாளிகள் பலர்  இருப்பதுதான். மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள் பலர், படித்தவர்கள் புரியும் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள். நியூயார்க் மாநில சட்டசபையின் பெரும்பான்மை கட்சித் தலைவர் ஷெல்டனும் இவர்களில் ஒருவர்.

    இன்னொரு காரணம், யூதர்கள் உண்ண விரும்பும் ஒரு வகையான இறைச்சி. இதை இந்தச் சிறையில் கொடுக்கிறார்கள். யூதர்கள் ஒரு குறிப்பிட்ட சடங்கு செய்துமாடுகளையும் மற்ற மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அந்த இறைச்சியைத்தான் உண்ணுவார்கள். இன்னொரு காரணம், பெரும்பான்மையான யூதக் குற்றவாளிகளால் மதகுருவாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இங்குள்ள யூதக் கோவில்களில் மத சம்பந்தப்பட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள். இவர்கள் வெளியே இருந்தபோது மதகுருவாக வேலை பார்த்தவர்கள். தினம் மூன்று முறை இம்மாதிரி கூட்டங்கள் நடத்த வசதி இருக்கிறது.

    மேலும் வாரம் ஒரு முறை – வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததிலிருந்து சனிக்கிழமை சூரியன் மறையும்வரை – யூதர்கள் வேலை செய்யாத விதியைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த விதியைக் கடைப்பிடிக்கவும் யூதர்களுக்கு இந்தச் சிறையில் அனுமதி உண்டு. யூதர்கள் பாஸோவர் (Passover) என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடுவார்கள். எகிப்திலிருந்து யூதர்களின் தலைவரான மோசஸ், அவர்களை எகிப்து அரசனின் அனுமதியோடு கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றபோது அரசன் மனம் மாறி அவர்களை மறுபடி சிறைப்பிடிக்க முயன்றபோது, அவர்கள் அவசர அவசரமாகத் தயாரித்த உணவுகளைத் தங்களோடு எடுத்துச் சென்றார்களாம். அந்த உணவுகளை இப்போதும் பாஸோவர் அன்று சாப்பிடுகிறார்கள். இந்த உணவுகளைச் சிறையிலேயே தயாரித்துக்கொள்வதற்கும் அங்கு வசதி இருக்கிறதாம்.

    கோஷர் இறைச்சி, தினந்தோறும் மூன்று முறை வழங்கப்பட்டாலும் மௌனம் இருக்கும் சனிக்கிழமையன்றும் பாஸோவர் தினத்தன்றும் அந்தத் தினங்களுக்கு உரிய உணவுகளைச் சமைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. யூதர்கள் அணியும் தலைக்குல்லா, அவர்கள் அருந்தும் ஒரு வகைப் பானம், ஒரு வகையான ரொட்டி ஆகியவையும் இவர்களைப் பார்க்க வருபவர்களைச் சந்திக்கும் அறையில் விற்கப்படுகின்றனவாம். அவை கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் சிறையில் கிடைக்கிறதே என்று இந்தச் சிறையில் இருக்கும் யூதர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

    இவ்வளவு வசதிகள் இருந்தாலும் இந்தச் சிறை ஒன்றும் பிக்னிக் போகும் இடமல்ல என்கிறார், இங்கு பதினெட்டு மாதங்களைக் கழித்த ஒரு யூதர். ஒவ்வொரு நாள் காலையும் ஆறு மணிக்கு அங்குள்ளவர்களின் எண்ணிக்கையைப் பட்டியல் போடும்போது எல்லோரும் எழுந்திருக்க வேண்டும். சிறைக் காவலாளிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகளின் அறைகளுக்குள் வரலாம். அந்தரங்கம் கிடையாது. குறட்டை விடும் பலருக்கு அருகில்தான் தூங்க வேண்டும் என்றால் அதைத் தவிர்க்க முடியாது. மதவழிபாட்டைப் பின்பற்றுவதால் இந்தக் கஷ்டங்களை ஓரளவு தாங்கிக்கொள்ள முடிகிறதாம். இப்படி இந்தச் சிறையில் மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். மற்ற சிறைச்சாலைகளில் நிலைமை நேர் எதிர்.

    இங்குள்ள யூதர்களில் பலர், பெரிய பதவிகளில் இருந்தவர்கள். உதாரணமாக பலர் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், நிதி ஆலோசகர்கள், வணிகர்கள், மதகுருக்கள். இந்த மதகுருக்கள் பலர், பல வகையான மோசடிகள் புரிந்திருக்கிறார்கள். மதகுருக்கள் சிலருக்கு யூதர்களின் வேதமான தோராவின் உரையான டால்முட் (Talmud) தலைகீழ்ப் பாடம். ஆனாலும் எப்படி இவ்வகையான குற்றங்கள் புரிந்தார்கள் என்று தெரியவில்லை. இப்படிக் குற்றங்கள் புரிந்தவர்களே சிறைக்கு வந்ததும் மனம் மாறி மற்றவர்களுக்கு வேதத்தைப் போதிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    அமெரிக்க சமூகம் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வசதியானவர்கள் செய்யும் குற்றங்களைக் (white collar offences) கண்டித்து அவர்களையும் சிறைக்கு அனுப்பித் தண்டிக்கிறதே என்ற வியப்பு ஒரு பக்கம். தங்கள் மதத்தின் வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்களும் பெரிய பெரிய ஊழல்களும் பணம் சம்பந்தப்பட்ட மோசடிகளும் புரிந்திருக்கிறார்களே என்ற வியப்பு இன்னொரு பக்கம். வேதங்களை முழுமையாகப் படித்துவிட்டு இவர்களால் எப்படி இப்படிப்பட்ட குற்றங்களைப் புரிய முடிகிறது? பின்னால் சிறையில் மறுபடி எப்படி மத போதகர்களாக மாற முடிகிறது? அங்கும் இவர்களைப் பின்பற்றுவதற்கு பலர் இருக்கிறார்களே. இவற்றையெல்லாம் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.

    Share