-மு.செல்லமுத்து

அன்றைய அறுவடைநாளின்
மாலைப்பொழுதில்
சிதறவிட்ட நெற்கதிர்களை
வயல்வெளியிலிருந்து
சேகரித்து வந்திருந்தேன்
ஒரு புண்சிரிப்போடு பற்றிக்கொண்டவள்
கைகளால் உதிர்த்து
சொளகிலிட்டு தூசிதட்டினாள்.

என்னுடன் பிறந்தவன் ருசித்துவிட்டு
அவ்வப்போது வீசியெறிந்த
புளியம் விதையொன்று
என்வீட்டின் சந்தடியில் முளைத்திருந்தது
புடைத்தெடுத்த நெல்மணியை
அடுக்குப்பானையில் கொட்டியவாறே
‘கம்மாத்தண்ணீ வத்துவதற்குள்
தெக்கவுள்ள நம்மகாட்டுக் கரையில
கொண்டுபோய் நடுயென்றாள் அம்மா’

பத்திரமாகப் பெயர்த்தெடுத்து
பனையோலைப் பெட்டியில்
உயிர்மண்ணை கொண்டுசேர்த்தேன்
வாழ்வதில் அலுத்துப்போனவனைப்போல்
ஓரிருநாட்கள் அந்தக்கரையில்
கதியற்று நின்றாலும்
அதனுயர்வை விரும்பாதவர்களிடமிருந்தும்
வான்தந்த வறட்சியைத் தாங்கியும்
எப்படியோ திமிறியெழுந்து
எண்ணி ஏழாண்டிற்குள் எனக்கும்
என்காட்டுப் பறவைகளுக்கும்
அவ்வப்போது தங்குமிடமானது.

உழைத்தவர் எவரேனும்
அங்கு சென்றிருக்கக் கூடும்
களைத்ததால் சற்று
கண்ணயரக் கருதியோ,
பறித்துக்கொணர்ந்த
விளைபொருள்கள் எதையேனும்
உலர்த்தியெடுக்க எண்ணியோ,
கள்ளமில்லா மழழைகள்
தூலிகட்டி அதன் மடியில் துள்ளவோ
காதலிக்கத் தெரிந்த எவரும்
கனவின் யாசகனாய்
வாசிப்பதற்கு புத்தகங்களோடு
அங்கு வந்திருக்கக்கூடும்.

விழித்திருக்கும் போது
எந்தச் சூறாவளிக்கும் அசைந்துகொடுக்கும்
பெருமழைக்கும் அப்படித்தான்
இருந்தாலும்
அது மௌனித்திருக்கும் வேளையில்
அவர்கள் வந்துவிட்டார்கள்
அதன் உடலெங்கும் துண்டுபட்டு
என்னுயிரும் வெற்றிடமானது
பசுமை வழித்திட்டமாம்
கலங்கிய விழிகளோடு
நான் அங்கு வந்திருந்தேன்
கையில் இன்னொரு
உயிர்மண்ணை சுமந்தவாறு…

கவிஞரைப் பற்றி…

மு.செல்லமுத்து
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழியற்புலம், தமிழியல்துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை – 21
மின்னஞ்சல் : [email protected]

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க