வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு
சேசாத்திரி
வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு
தமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.
- ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்
- நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே
- பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு
- அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக் காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா
- ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும் புன்பயிற் செய்தால் புனத்துக்கு ஒரு பணமும் இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்
- இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்வெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.
விளக்கம்:
விஜயநகரம் இரண்டாம் தேவராயர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1428 இல் வெட்டிய கல்வெட்டு. திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆள வன்னாட்டு வெண்பாற் நாட்டில் உள்ள அசுகூரான அசூரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயிலில் கூடிய வலங்கை 98 சாதிகளும், இடங்கை 98 சாதிகளும் குறைவின்றி நிறைவே நிறைந்தவராய் தாம் அரசுக்கு செலுத்த வேண்டிய பயிர்க் கடமை(வரி), பல இனத்தார் செலுத்த வேண்டிய பல வரிகள் குறித்து இக் கல்வெட்டு கூறுகிறது.
நன்செய் பயிரில் பாழும் உமி மட்டும் உள்ள சாவியைத் தவிர்த்து வளர்ந்த பயிரில் வேலி ஒன்றுக்கு ஐம்பது பணமும், வரகு கேழ்வரகு விளையும் புன்செய் பயிரில் வீணாகிய பாழ், உமி ஆகிய சாவி தவிர்த்து வளர்ந்த பயிரில் பத்தில் ஒன்று 1/10 கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் இவற்றுக்குக் கீழான இளவரிசை துண்டில் 4 ல் 1 பங்கான கால்வாசி கழித்து, மேலும் 10 ல் 1 பகுதி கழித்து, வேலி ஒன்றுக்கு 25 பணமும் வானாவாரி பயிருக்கு 100 குழிக்கு 5 பணமும், வாழை மஞ்சள் இஞ்சி க்கு 100 குழிக்கு 2-1/2 பணமும், முதல் குருத்து விட்ட கமுகு, தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் தரவேண்டும். ஆண்டு காணிக்கைக்கு 220 பொன்னும், மகமை என்னும் கோவில் வரி, தலையாரிக் காவல் வரிக்கு 80 பொன்னும் தரவேண்டும். பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர் ஒருவர்க்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர், பறையர் ஒருவர்க்கு இரண்டு பணமும் புன்செய் பயிர் செய்தால் புனத்து 1 பணமும் தரவேண்டும். இவை தவிர்த்து வேறு எந்தப் புது வரியும் செலுத்த வேண்டாம்.
இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாமல் கல்வெட்டை அழிப்பவர்களை நன்றாக வாட்டி வதைத்து, தலையில் குத்தி, கீழே இழுத்துப் போடுவோம் என்று எச்சரிக்கின்றனர். வலங்கை இடங்கையில் இடம்பெறாமல் இருப்பதால் தான் செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர், இடையர், வலையர், கண்மாளர், பறையர் என்போர் தனித்துக் காட்டப்பட்டார்களோ அல்லது இவர்கள் ஊழியத் தொழில் ஆற்றுவோர் என்பதால் இவர்கள் குறைவான வரி செலுத்தினால் போதும் என்று தனியே காட்டப்பட்டார்களா?
மொத்தத்தில் இக்கல்வெட்டில் பறையர் பிற சாதிமாரோடு சரிநிகராக வைக்கப் படுவது, 15 ஆம் நூற்றாண்டில். இவர்கள் தாழ்த்தப்படவோ, ஒடுக்கப்படவோ இல்லை. தீண்டாமைக்கு ஆட்படவும் இல்லை எனத் தெரிகின்றது.
பார்வை நூல்:
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி III பக்கம் 15, 2010, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு
தொடர்ந்து பார்க்க :
https://groups.google.com/d/msg/vallamai/T2f6jaDgP1A/Xz6AaOauGQAJ