-மேகலா இராமமூர்த்தி

வரிசைகட்டி நிற்கும் நெகிழிப் புட்டிகளின் அருகே முறுவலோடு மலர்க்கரம் நீட்டி நமை மயக்கும் சுட்டிக் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்திருப்பவர் திரு. அண்ணாகண்ணன். படக்கவிதைப் போட்டிக்கு ஏற்றது இப்படம் என்றிதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

மகிழ்வோடு நாம் பயன்படுத்திய நெகிழிப் பொருள்கள் நம் மண்ணுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குபயக்கும் தன்மையன; மக்காத் தன்மை கொண்ட இவற்றை அழித்தலும் இயலாது என்றுணர்ந்த பின்னும் அவற்றைப் பயன்படுத்துதல் அறிவுடைமை ஆகாதென்னும் விழிப்புணர்வை மாந்தரிடம் ஏற்படுத்தி அவற்றுக்கு விடைகொடுத்தனுப்புவதே நம் கடமையாகும்.

இனி, இந்நிழற்படத்துக்குப் பொருத்தமான கவிதைகள் வடிக்கக் காத்திருக்கும் கவிஞர்களை அழைப்போம்! அவர்தம் நன்மொழி கேட்போம்!

*****

”மழைக்காக வானம் பார்த்து வாழும் கூட்டம் ஒருபுறம்; குடிநீருக்கு(ம்) கேடு வந்ததால் அதனைக் காசுகொடுத்து வாங்கிடும் கூட்டம் இன்னொருபுறம்; வயிறுபுடைக்க உண்டதனால் நீர் குடிக்க இடமின்றி அதனை வீணடிக்கும் கூட்டம் மறுபுறம் என்று விதவிதமான மனிதர்கள் மத்தியில் தாகம் தணித்திடும் நீர்ப்புட்டிகளை வேண்டுவோருக்கு வழங்கக் காத்திருக்கும் குழந்தைகள் இவை!” என வியக்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

ஈரம் கொண்ட பிஞ்சு மனம்

மாதம் மும்மாரிப் பொழிந்த
காலம் போய்
வானம் பார்த்து வாழும் ஒரு கூட்டம்
கால் கடுக்க வெகு தூரம் நடந்து சென்று
கால்வாய்களில் கொண்டு வந்த தண்ணீர்
கால் வயிற்றுக் கஞ்சி காய்ச்சிட
காலியாகிப் போனதே
நீரைத் தேடி மீண்டும் கால்கள் நடந்ததே
மீளாத துயரம் இன்றும் தொடர்ந்ததே
நிலத்தடி நீரை உறிஞ்சி குளித்துக்
குடிக்கும் நீரைக் காசு கொடுத்து வாங்கி
வாழும் ஒரு மக்கள் கூட்டம்
அன்போடு தேவை அறிந்து பரிமாற நேரமின்றி
ஆடம்பரத்திற்கு அடிமையாகி
அடைத்து வைத்த தண்ணீரைக்
கட்டாயமாய் வழங்கிடும் ஒரு கூட்டம்
அதிகம் உண்டு நீர் குடிக்க இடம் இன்றி
தாகம் தீர்க்கும் தண்ணீரை
செய்வது அறியாது வீணாக்கிடும் ஒரு கூட்டம்
முழுதும் முடியாத கட்டிடத்தில்
அதிகம் வளராத பிள்ளைகள்
வியக்க வைக்கும் சிந்தனையுடன்
வீணாகும் நீரைச் சேமித்து
சிலரது தீராத தாகத்தைத் தணித்திட
புன்னகையோடு வழிகாட்டி நின்றனரே!

*****

”நெகிழிக் குடுவையே போய் வா; நீர் வளம் இங்கு பெருகட்டும்” என்கிறார் திருமிகு. லட்சுமி.

நீர் வளம் பெருகிடவே
நிறைந்த மனதாய்
நெகிழி குடுவையே!
போய் வருவாயோ!

பந்தி முடிந்தபின்பும் அகலாது குந்தியிருந்த குப்பிகளை வைத்துத் தொடர்வண்டி செய்த சிறுமியர், தாங்கிநிற்கும் மேசையையே அதற்குத் தண்டவாளம் ஆக்கிவிட்டனர் என்று கற்பனைச் சுவை மிளிரக் கவியெழுதியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

உணவுப் பந்தியில் உதித்த சிறுமியரின் தொடர்வண்டி…
தொடர்வண்டி செய்திடுவோம்.. தோழி..
தொடர்வண்டி செய்திடுவோம்..
அழகழகுக் குப்பிகளை.. தோழி..
அருகருகே நிற்கவைத்து.. (தொடர்வண்டி…)

பந்தி முடிந்த பின்னாலே.. தோழி..
பல குப்பிகளைச் சேகரித்து..
பந்திமேசை அதன்மீது.. தோழி..
பாங்குடனே அடுக்கிவைத்து.. (தொடர்வண்டி…)

இழுவையொன்று செய்திடவே.. தோழி..
இயன்றவழியைச் சொல்வாயா..?
இங்கிருக்கும் பொருளொன்றை.. தோழி..
இழுவையாக நாம்மாற்றி.. (தொடர்வண்டி…)

தொடர்வண்டி செய்தாச்சு.. தோழி..
தண்டவாளம் என்னாச்சு..?
தாங்கிநிற்கும் மேசையிதையே.. தோழி..
தண்டவாளமாய்க் கொள்வோமே.. (தொடர்வண்டி…)

நாம் செய்த தொடர்வண்டி.. தோழி
நீண்டதொலைவு சென்றிடுமே..
நாமிருவரும் அதிலேறி.. தோழி
நினைத்தபடியே செல்வோமே.. (தொடர்வண்டி…)

*****

”ஆறுகளையும் குளங்களையும் மனிதன் கூறுபோட்டதனால் நீர்வளம் குன்றிப்போய் குப்பிகளில் குடியேறியது குடிநீர் ” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

மாற்றம்…

ஆறு குளமும் கேணியென
அத்தனை வகையாய் நீர்நிலைகள்,
ஊறும் நீரின் வளத்தாலே
உலகம் வாழ்ந்ததே யந்நாளில்,
கூறு போடும் மனிதராலே
குன்றிப் போனது நீர்வளமும்,
ஆறாய்ப் போன நீர்மறந்தே
அடைத்ததைக் குப்பியில் காண்கிறோமே…!

*****

”கெட்டவரையும் புண்படுத்தாது பண்படுத்தும் இயல்புடைய தமிழராகிய நாம், மக்காது புவிவாழ் மக்களையும் மாக்களையும் வதைக்கும் நெகிழிகளுக்கும் ஒரு நினைவுதினம் நடத்துவோம் வாரீர்!”  என்றழைக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

நினைவு தினம்!

வாரீர் எம் தமிழர்களே
வழியனுப்பு விழாவிற்கு!
நெகிழிப்பை பயன்படுத்த
நாளை முதல் தடையாம்
பிறந்தது முதல் தொட்டிலாய்
பாலுண்ணும் குமிழியாய்
பகிர்ந்து உண்ணும் தட்டாய்
பருக உதவிய குவளையாய்
விளையாட்டுப் பொம்மையாய்
விரும்பி ஆடும் ஊஞ்சலாய்
குளிக்கும் வாளியாய்
பல வருடம் வித விதமாய்
பவனி வந்த நெகிழி பற்றி
புரிந்து கொண்டோம்
நாளை முதல் ஒவ்வொன்றாக
நன்மை கருதிப் புறந்தள்ளுவோம்
உருக்கி வடிவுமாற்றி மீண்டும்
உபயோகிக்க முடிந்தவை தவிர
மக்கிப் போகாது இப்புவிவாழ்
மக்களையும் மாக்களையும்
வாட்டி வதைக்கும் நெகிழிகளுக்கு
வழியனுப்பு விழா இன்று!
புவிவளம் காக்க அவைகளை
புறம் ஒதுக்க விழைந்தாலும்
கெட்டவரையும் புண்படுத்தாத
குணம் கொண்ட தமிழர் யாம்
நிறைவு பெறாக் கட்டிடத்தில்
நிறை மனதோடு கொண்டாடுவோம்
நெகிழிப் பைக்கொரு நினைவுதினம்!

*****

”மட்பாண்டக் குவளைகள் எல்லாம் மரியாதையுடன் மனையேறட்டும்; மக்காத நெகிழி நச்சுகளெல்லாம் மலையேறி வெளியேறட்டும்” என்று மாற வேண்டியதையும் நாம் மாற்ற வேண்டியதையும்  அழகாய்த் தன் கவிதையில் பதிவுசெய்துள்ளார் திரு. யாழ் பாஸ்கரன்.

மாறுவோமே மாற்றுவோமே!

பச்சைத் தலைப்பாகட்டி பளபளக்க வரிசையிலே
பச்சைத் தண்ணீர் நெகிழிப் போத்தல்கள் – நாம்
எச்சிலாக்கி எறிந்தபின் மக்கி நெகிழாமல்
பசுமைத் தாய்நிலத்தின் நலம் சாய்க்கும் பகைவர்கள்

வழக்கம் மாறினால் வானமே எல்லை நெகுநெகு நெகிழிகளை
வழியனுப்பி வைப்போம் பிள்ளைகள் நாங்கள்
வாழும் பூமிக்கோளம் மாசின்றி மலர்ச்சியுற
வையகம் வாழ வழிமுறை காண்போம்

மடமடவென மண்பானைத் தண்ணீரைக் குடித்துவிட்டு
மளமளவென மண்வெட்டியால் நிலம் கொத்திய
முப்பாட்டன் காலத்தின் சூழல் நோக்கி முழுமனதுடன்
முதல் அடியை எடுத்து வைப்போம்

மண்பாண்டக் குவளைகள் எல்லாம்
மரியாதை பெற்றே மனையேறட்டும்
மக்காத மாசான நச்சுக் குப்பைகள் எல்லாம்
மனம் மாறி மலையேறி வெளியேறட்டும்

மாசில்லா உலகே மகிழ்வான சுவனம்
மக்காத பொருளாலே நிகழுமே உயிர்களின் மரணம்
மனம் நெகிழ்ந்தே நெகிழிகளை ஒழிப்போம்
மண்ணுயிர்க்கு வாழ்வளித்து மகிழ்வோம்

மனிதனின் தேவைக்குத் தாயாகும் இயற்கை
மாறாத அவன் பேராசைக்குப் பாலியாகுது இது செயற்கை
மாறுவோமே மாற்றுவோமே இனி மண் சிரித்துப் பொன்னாகும்
மரம் வளர்ப்போம் உலகு அழகாகும்!

*****

சிந்தனைக்கு விருந்தான சீரிய கவிதைகளைப் படைத்திருக்கும் புலவர் தோழர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

நெகிழிப் பொருட்களைத் தவிர்த்திடுவோம்…மண்ணின் வளத்தைக் காத்திடுவோம்..!!

நெகிழிக் குப்பிகள் ஒவ்வொன்றாய்..நெருக்கமாய் அடுக்கி வரிசையாக்கி..
நெஞ்சம் மகிழ விளையாடும்.. நெருங்கியத் தோழிகள் இருவருக்கும்..
நெருக்கடிச் சூழலை உணர்த்துகிறேன்.. சிரத்தையாய் அதற்குச் செவிமடுப்பீர்..!!

நெடுங்கழுத்து உள்ள நாரைகளும்.. நெடுந்தூரம் செல்லும் பறவைகளும்..
நெடுங்கடல் வாழும் உயிரினமும்.. நெகிழிப் பொருட்களை விழுங்குவதால்..
நெடுதுயில் கொள்வதை உணர்வீரா..? இவற்றின் துன்பம்போக்க முனைவீரா..?

நெடுஞ்சாலை நீர்நிலை எங்கெங்கும்.. நெகிழிக் குப்பைகள் நிறைந்திருக்கு..
நெடுகிலும் குவியும் குப்பைகளால்.. நெருப்பாய்த் தகிக்குது நம்பூமி..
நெஞ்சம் பதறுது அதையெண்ணி.. உணர்வீர் செல்லக் குழந்தைகளே..!!

நெல்லைத் தந்திடும் பூமியெங்கும்.. நெருஞ்சில் தைத்த வலியாக..
நெகிழிக் குப்பைகள் படிவதனால்.. நெடிதுய்க்கும் மண் வளங்கள்..
நெஞ்சம் பதறிடக் குன்றிடுதே.. நெடுங்கதையாய் இது தொடர்கிறதே..!!

நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நிலத்தடி நீரின் குறைபாடு..!!
நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நாட்டின் தூய்மைக்கு இடர்ப்பாடு..!!
நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நம் சுற்றுச்சூழலின் சீர்கேடு..!!

மனதில் இவற்றை இருத்திடுவோம்.. மண்ணின் வளத்தைக் காத்திடுவோம்..!!
மக்கா நெகிழிக் குப்பைகளை.. மண்ணில் எறிவதைத் தவிர்த்திடுவோம்..!!
நெகிழிப் பைகளைத் தவிர்ப்போமே.. நெய்த துணிப்பைகளைக் கொள்வோமே..!!

”நெகிழிப் பொருட்களின் பயன்பாடு, நிலத்தடி நீரின் குறைபாடு; நெகிழிப் பொருட்களின் பயன்பாடு, நாட்டின் தூய்மைக்கு இடர்ப்பாடு” என்று நெகிழிப் பொருள்களால் விளையும் தீமைகளைச் செல்லக் குழந்தைகளுக்குத் தன் பாட்டில் அழகாய்ப் பட்டியலிட்டு விளக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 197-இன் முடிவுகள்

  1. இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தெரிவு செய்தமைக்கு என் நன்றிகளையும், பங்கெடுத்த கவிஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.