படக்கவிதைப் போட்டி – 198
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
குடியிருப்பு
சி. ஜெயபாரதன், கனடா
செங்கல்
கோட்டையும், கீற்றுக்
குடிசையும்
எங்க தெருவிலே ஒன்றாய்க்
குடியிருப்பு !
செங்கல் வீட்டுக்கு
அத்திவாரம் ஆழத்தில் !
குடிசைக்கு புயலடித்தால்
இறக்கை முளைத்து விடும் !
வீட்டு
வேலைக்காரி நான் !
மாத வாடகை
குடிசை இடத்துக்கு
ஆயிரம் ரூபாய் !
தென்னங் கீற்று
என்னது !
மாத சம்பளத்தில்
பத்து ரூபாய் கொடுப்பேன் !
என் வாரக் கூலியோ
நூறு ரூபாய் !
ஆறு வாய்களுக்கு அதிலே
சோறு போடணும் !
இந்தக் கூரை வீடு
என் கோயில் !
இது போதும் எனக்கு !
++++++++++++++
நிறைவு…
காட்டில் பொறுக்கிய சுள்ளியுடன்
கட்டாந் தரையில் அடுப்புவைத்த
நாட்டுப் புறத்து சமையலிலே
நிறைந்திடும் வயிறும் மனமும்தான்,
வாட்டம் வாழ்வில் வந்தாலும்
வெளியே காட்டிடா நிறைவிதுவே,
ஆட்டம் காட்டிடும் நாகரிகம்
அசைக்க முடியா வாழ்விதுவே…!
செண்பக ஜெகதீசன்…
பொங்கல்
குடிசைக் கோவில் கட்டி
குழந்தை வேண்டி என் வழிபாடு
கும்பிடுவோம் வாருங்கள்
குலசாமி நாகத்தை -என்
ஓட்டு வீட்டுக்கு முன்னே
ஓரமாய் பாம்புப் புற்று
வெள்ளிக்கிழமை தோறும்
விடிகாலை பொங்கலிட்டு
மணக்கும் பொங்கச்சோற்றை
மண் தரையில் இட்டு உண்டால்
மழலைச் செல்வம் வந்து
மடியில் தவழுமென்று
சாமியாடி சொன்ன குறியை
சரிவர நான் செய்கின்றேன்.
வயல்காட்டை அடுத்த
வாய்க்கால் அருகே என் வீடு
வந்து விட்டுப் போங்களேன்
வாழை இலையில் விருந்துண்ண
வாசனைப் பொங்கலுடன்
வடை சாம்பார் சட்டினியும்
அவியல் பொறியலுடன்
அவித்துவைத்த இட்லியையும்
உண்டு மகிழ்ந்து தமிழச்சி என்னை
உளமார வாழ்த்துங்கள்
வெயில் ஏறுமுன்னே
வேகமாய் வாருங்கள்
நிறைமனம்..
………………………..
-ஆ. செந்தில் குமார்.
நல்லநல்லத் தென்னங்கீத்த.. நேத்தியாக நான்பின்னி..
சீட்டுக்கட்டு அதுமாதிரி.. சேத்துசேத்து அடுக்கிக்கட்டி..
எனக்காக நான் கட்டடுன குடிசயிது..!!
கழனிக்கு நான்போயி.. கஷ்டப்பட்டு நாள்முழுக்க..
களையெடுத்து நாத்துநட்டு.. களப்போட வரும்போது..
ஓஞ்சிசித்த ஒக்கார.. ஒதவிசெய்யும் எங்குடிச..!!
சுட்டெரிக்கும் வெயிலடிச்சா.. சடசடன்னு மழபெஞ்சா..
எட்டநின்னு பாதுகாப்பா.. எப்பவுமே எனக்குநல்லா..
அண்டிக்கிட வசதிதரும்.. அருமையான எங்குடிச..!!
வசதியாஒரு வாசலுந்தான்.. கடலாட்டம் கெடக்குதுங்க..
வேணும்போது வெறகுவச்சி.. தீமூட்டி சமச்சித்திங்க..
அம்சமா ஒருஅடுப்பு.. அந்தப்பக்கம் இருக்குதுங்க..!!
படுத்துத்தூங்க கயித்துக்கட்டில்.. இல்லாட்டி கோரப்பாயி..
மாடிமேல மாடிகட்டி.. கட்டில்மேல மெத்தபோட்டு..
படுத்தாகூட கெடைக்காதுங்க இந்த சுகம்..!!
பழமை மறந்த பாரதம்
இருக்க ஒரு இடம் வேண்டும் என்று எண்ணி
கட்டிடங்கள் கட்டி வைத்தோம்
பாதுகாப்பு என்று எண்ணி கதவுகளை பூட்டி வைத்தோம்
அக்கம் பக்கம் எது நடந்தாலும் தட்டி கேட்க மறந்தோம்
காந்தி சொன்னதை போல் அத்தனையும் மூடியே வளர்ந்தோம்
உடுத்தும் உடையில் காதி மறந்தோம்
சமைக்க மறந்து உண்ணும் உணவில் கிடைக்கும் பலனை மறந்தோம்
அடுப்பில் எரிவாய்வு தீர்ந்து போக
பின்னங்கதவு திறந்து பார்க்கையில்
கடந்து வந்த பாதை கணவாய் தெரிந்ததே
மழையோ வெயிலோ ஒதுங்க ஒரு இடமாய் இருந்த குடிசை
கால் கடுக்க தண்ணீர் கொண்டு வந்த நெகிழி குடம்
சமையல் செய்த மண்சட்டியும் கரண்டியும்
உலை கொதிக்க உதவிய விறகுகளும் மண் அடுப்பும்
என் வீட்டு தோட்டத்தில்
கடற்கரையில் விட்டு சென்ற காலடி சுவடுகளாய் மாற்றம் என்ற பெயரில் மறந்துதான் போனோமே