படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி
-நாகேஸ்வரி அண்ணாமலை
மைக்கேல் கோகென் என்பவர் ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர். இவர் இவ்வளவு நாட்களாக ட்ரம்ப் செய்த சில தவறுகளை மூடிமறைத்து வந்தார். இப்போது வேறு வழியில்லாமல் தான் அமெரிக்கப் பாராளுமன்ற கமிட்டியின் முன்னால் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். இதற்கு அவருக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் இம்மாதிரிக் குற்றங்கள் எல்லாம் – அதுவும் மேல் மட்டத்தில் நடந்தால் – கண்டுகொள்ளப்படாமலே போய்விடும். என்ன இருந்தாலும் கோகெனும் ட்ரம்பும் அமெரிக்காவில் இருப்பவர்கள் அல்லவா? அமெரிக்கா இன்னும் இந்தியா அளவுக்குத் தாழ்ந்து போகவில்லை.
இம்மாதிரிக் குற்றங்களைப் படித்தவர்கள் செய்யும் குற்றங்கள் (white collar crimes) என்று அழைக்கிறார்கள். இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோர்களை – அவர்கள் மேல்மட்டத்தவர் என்றாலும் – அமெரிக்கா தண்டிக்காமல் விடுவதில்லை. இருப்பினும் அவர்கள் எந்த மாதிரி சிறைச்சாலைக்குப் போக விரும்புகிறார்கள் என்ற சலுகையை அமெரிக்கா அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.
கோகென் நியூயார்க் அருகிலுள்ள ஆடிஸ்வில் என்னும் ஊரிலுள்ள ஒரு சிறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை ஒரு சிறை என்றுகூட சொல்ல முடியாது. ஒரு முகாமுக்குரிய எல்லா வசதிகளும் இங்கு உண்டு. கோகென் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த முகாம் இம்மாதிரியான மற்ற முகாம்களைவிட வசதிகள் குறைந்ததுதான். இருப்பினும் கோகென் இதைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு முக்கிய காரணம் இங்கு யூதக் குற்றவாளிகள் பலர் இருப்பதுதான். மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள் பலர், படித்தவர்கள் புரியும் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள். நியூயார்க் மாநில சட்டசபையின் பெரும்பான்மை கட்சித் தலைவர் ஷெல்டனும் இவர்களில் ஒருவர்.
இன்னொரு காரணம், யூதர்கள் உண்ண விரும்பும் ஒரு வகையான இறைச்சி. இதை இந்தச் சிறையில் கொடுக்கிறார்கள். யூதர்கள் ஒரு குறிப்பிட்ட சடங்கு செய்துமாடுகளையும் மற்ற மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அந்த இறைச்சியைத்தான் உண்ணுவார்கள். இன்னொரு காரணம், பெரும்பான்மையான யூதக் குற்றவாளிகளால் மதகுருவாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இங்குள்ள யூதக் கோவில்களில் மத சம்பந்தப்பட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள். இவர்கள் வெளியே இருந்தபோது மதகுருவாக வேலை பார்த்தவர்கள். தினம் மூன்று முறை இம்மாதிரி கூட்டங்கள் நடத்த வசதி இருக்கிறது.
மேலும் வாரம் ஒரு முறை – வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததிலிருந்து சனிக்கிழமை சூரியன் மறையும்வரை – யூதர்கள் வேலை செய்யாத விதியைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த விதியைக் கடைப்பிடிக்கவும் யூதர்களுக்கு இந்தச் சிறையில் அனுமதி உண்டு. யூதர்கள் பாஸோவர் (Passover) என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடுவார்கள். எகிப்திலிருந்து யூதர்களின் தலைவரான மோசஸ், அவர்களை எகிப்து அரசனின் அனுமதியோடு கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றபோது அரசன் மனம் மாறி அவர்களை மறுபடி சிறைப்பிடிக்க முயன்றபோது, அவர்கள் அவசர அவசரமாகத் தயாரித்த உணவுகளைத் தங்களோடு எடுத்துச் சென்றார்களாம். அந்த உணவுகளை இப்போதும் பாஸோவர் அன்று சாப்பிடுகிறார்கள். இந்த உணவுகளைச் சிறையிலேயே தயாரித்துக்கொள்வதற்கும் அங்கு வசதி இருக்கிறதாம்.
கோஷர் இறைச்சி, தினந்தோறும் மூன்று முறை வழங்கப்பட்டாலும் மௌனம் இருக்கும் சனிக்கிழமையன்றும் பாஸோவர் தினத்தன்றும் அந்தத் தினங்களுக்கு உரிய உணவுகளைச் சமைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. யூதர்கள் அணியும் தலைக்குல்லா, அவர்கள் அருந்தும் ஒரு வகைப் பானம், ஒரு வகையான ரொட்டி ஆகியவையும் இவர்களைப் பார்க்க வருபவர்களைச் சந்திக்கும் அறையில் விற்கப்படுகின்றனவாம். அவை கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் சிறையில் கிடைக்கிறதே என்று இந்தச் சிறையில் இருக்கும் யூதர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
இவ்வளவு வசதிகள் இருந்தாலும் இந்தச் சிறை ஒன்றும் பிக்னிக் போகும் இடமல்ல என்கிறார், இங்கு பதினெட்டு மாதங்களைக் கழித்த ஒரு யூதர். ஒவ்வொரு நாள் காலையும் ஆறு மணிக்கு அங்குள்ளவர்களின் எண்ணிக்கையைப் பட்டியல் போடும்போது எல்லோரும் எழுந்திருக்க வேண்டும். சிறைக் காவலாளிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகளின் அறைகளுக்குள் வரலாம். அந்தரங்கம் கிடையாது. குறட்டை விடும் பலருக்கு அருகில்தான் தூங்க வேண்டும் என்றால் அதைத் தவிர்க்க முடியாது. மதவழிபாட்டைப் பின்பற்றுவதால் இந்தக் கஷ்டங்களை ஓரளவு தாங்கிக்கொள்ள முடிகிறதாம். இப்படி இந்தச் சிறையில் மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். மற்ற சிறைச்சாலைகளில் நிலைமை நேர் எதிர்.
இங்குள்ள யூதர்களில் பலர், பெரிய பதவிகளில் இருந்தவர்கள். உதாரணமாக பலர் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், நிதி ஆலோசகர்கள், வணிகர்கள், மதகுருக்கள். இந்த மதகுருக்கள் பலர், பல வகையான மோசடிகள் புரிந்திருக்கிறார்கள். மதகுருக்கள் சிலருக்கு யூதர்களின் வேதமான தோராவின் உரையான டால்முட் (Talmud) தலைகீழ்ப் பாடம். ஆனாலும் எப்படி இவ்வகையான குற்றங்கள் புரிந்தார்கள் என்று தெரியவில்லை. இப்படிக் குற்றங்கள் புரிந்தவர்களே சிறைக்கு வந்ததும் மனம் மாறி மற்றவர்களுக்கு வேதத்தைப் போதிக்க ஆரம்பிக்கிறார்கள்.
அமெரிக்க சமூகம் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வசதியானவர்கள் செய்யும் குற்றங்களைக் (white collar offences) கண்டித்து அவர்களையும் சிறைக்கு அனுப்பித் தண்டிக்கிறதே என்ற வியப்பு ஒரு பக்கம். தங்கள் மதத்தின் வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்களும் பெரிய பெரிய ஊழல்களும் பணம் சம்பந்தப்பட்ட மோசடிகளும் புரிந்திருக்கிறார்களே என்ற வியப்பு இன்னொரு பக்கம். வேதங்களை முழுமையாகப் படித்துவிட்டு இவர்களால் எப்படி இப்படிப்பட்ட குற்றங்களைப் புரிய முடிகிறது? பின்னால் சிறையில் மறுபடி எப்படி மத போதகர்களாக மாற முடிகிறது? அங்கும் இவர்களைப் பின்பற்றுவதற்கு பலர் இருக்கிறார்களே. இவற்றையெல்லாம் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.
குற்றங்கள் சூழ்நிலலைகளின்பாற்பட்டவை, சில குற்றங்கள் தமது அறிவின் வலிமையை ,ஆழத்தை சோதிப்பதற்காகவே நடைபெறுகின்றது.